27-11-25 -ல் ஸ்ரீமான். ராஜகோபாலாச்சாரியார் “நவசக்தி” பத்திரிகைக்கு ஒரு வியாசம் எழுதியிருக்கிறார். அதை நவசக்தி பொய்மான் வேட்டை என்ற தலைப்பில் பிரசுரித்திருக்கிறது. இது நீண்ட வியாசமாயிருப்பதால், அதில் உள்ள முக்கிய 10 விஷயங்களை மாத்திரம் எடுத்து ஆராய்வோம்.

1. “பல காரணங்களால் உயர் பதவியடைந்த ஒரு ஜாதியாரைக்கண்டு பொறாமை கொண்டு மற்ற ஜாதியாரைச் சேர்ந்த பெரியோர்கள் அவர்களைத் தூஷித்து அவர்களை ஒடுக்குவதாக கிளர்ச்சி செய்தால் நன்மை விளைவதாக தோற்றம் காட்டலாம்; விரைவில் அப்பொய்த் தோற்றம் மறைந்துபோய் பழைய கதையாய் முடியும்”.

2. “நாட்டிலுள்ள மற்ற சமூகங்களின் வெறுப்புக்கும் துவேஷத்திற்கும் பார்ப்பனர் ஆளாகும்படி தீவிர பிரசாரம் சிலர் செய்து வருகிறார்கள். இக்கிளர்ச்சியும், இதனால் உண்டாகும் துவேஷமும், நாட்டிற்கு கேடு விளைவிக்குமென்பதில் ஐயமில்லை”.

3. “வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்றால் ஒரு ஜாதியாரேயல்லாமல் பல ஜாதியார்கள் அதிகார சபையில் இருப்பது மாத்திரம் அல்லாததோடு, பிராமணர்களை பிராமணர் மாத்திரம் தெரிந்தெடுக்க வேண்டும் என்பதும், மற்ற ஜாதியார்கள் பிராமணரல்லாதார்களைத்தான் தேர்ந்தெடுக்கலாம் என்பதும் இந்த கிளர்ச்சியின் முழுப்பொருளாம.பார்ப்பனர்களில் பெரும்பாலோர் பிராமண சமூகத்தின் பிரத்தியேக நன்மைக்காகவே தெரிந்தெடுப்பார்கள்”.

4. “சில பிரதிநிதிகள்தான் உட்புகலாம். பார்ப்பனரல்லாதவர்கள் எந்தப் பார்ப்பனனுக்கும் வாக்குக் கொடுக்க முடியாது, இவ்வகையில் தெரிந்தெடுக்கப்பட்ட சபைகள் அதிகாரம் செலுத்தி வந்தால் நாடு பிற்போக்கு அடையும் என்பதில் ஐயம் இல்லை”.

5. “வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இனி நீங்கள் நாட்டுக்குத்தொண்டு செய்யக்கூடாது என்று பார்ப்பனர்களுக்கு பெருந்தடையுண்டாக்குவதேயாகும். பல்லாயிர வருஷங்கள் நாட்டிற்கு தொண்டு செய்து வந்த ஒரு ஜாதியை இவ்வளவு எளிதில் குற்றவாளிகளாகத் தீர்மானித்து ஒடுக்கிவிட முடியாது. அறிவு, பயிற்சி, தொண்டு செய்யும் திறமை கொண்ட எவரும் நாட்டிற்கு வேண்டும்”.

6. “தற்காலத்தில் பார்ப்பனர்களின் மேல் சிலர் கொண்ட கொடுஞ்சினத்தின் காரணம் பண்டை கலை ஒழுக்கம், வேதம், சாஸ்திரம், கோயில், மடம் அனைத்துக்கும் கேடு விளையும் போல் இருக்கிறது. சமஸ்கிருத பாஷைக்கும், தமிழுக்கும் போட்டி; இத்தகைய மயக்கம் தமிழ் மக்களுக்குள் சிலர் உண்டாக்கி வருகிறார்கள்”.

7. “பார்ப்பனர்களுடன் புரியும் போரில் கோயில் வேண்டாம், நோன்பு வேண்டாம், ஹிந்து மதமே பொய், பழைய ஒழுக்கங்களே அநாகரிகம் என்ற நாஸ்திக எண்ணங்களைப் பரப்புதல் ஏழை தமிழ் மக்களுக்கு பெருங்கேடாய் முடியும்”.

8. “ஜாதிப் பொறாமையை அஸ்திவாரமாகக் கொண்ட கட்சிகள் பயன் பெறாமல் போனபின்னும் உண்மை தேசத்தொண்டு செய்து வந்த என் நண்பர்கள் சிலர் இந்த ஜாதிச் சண்டையை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்”.

9. “நின்றால் குற்றம், உட்கார்ந்தால் குற்றம் பழய புஸ்தகங்களில் இம்மாதிரி எழுதி இருக்கிறது என்ற வீண் சண்டைகள் யாதொரு நன்மையும் பயவா”.

10 .“அரசாங்க விஷயங்களில் ஜாதிப்பேச்சுகள் கூடாதென்றும், ஆனால் மத ஆசார விஷயங்களில் ஜாதி வித்தியாசத்தை ஒழிக்க தாம் போர் புரிவதாயும், ஒருவர் வீராவேசப்பேச்சுகள் பேசுகிறார். அரசாங்க விஷயத்திலாவது விஷம முறைகள் அவ்வளவு கேடு விளைவியா, மதாசார சம்பந்தமாய் சாந்தமற்ற முரட்டு முறைகளை பின்தொடர்ந்தால் துவேஷம் அளவு கடந்து பரவி நாட்டில் வேற்றுமையும், பகைமையும், தீமையுமே உண்டாகும்.”

என்ற இவைகள் முக்கியமானவைகளாகக் கருதி அவற்றிற்கு சமாதானம் சொல்லுவோம்.

இவற்றிலிருந்து, ஸ்ரீமான். ஆச்சாரியாரின் மனப்பான்மை இன்னதென்று அறிய சவுகரியமேற்பட்டு போய்விட்டது. அதாவது:-

1. பல காரணங்களால் உயர் பதவியடைந்த பிராமணர்களிடம் பொறாமை கொண்டு அவர்களை ஒடுக்குவதற்கு தீண்டாமை விலக்கு பிரசாரத்தின் பேரால் கிளர்ச்சி செய்வதாகவும், அது பலன் கொடுக்காது என்றும் பந்தயம் கூறுகிறார். இவருடைய தத்துவப்படி பார்த்தால் பல காரணங்களால் இந்தியாவை ஜயித்து தங்களது வாழ்க்கைக்கு ஆஸ்பதமான நாடாக்கி ஆண்டு வருவதைப் பார்த்து, பொறாமைப்பட்டுத்தான் சுயராஜ்யம் என்னும் பேரால் கிளர்ச்சி செய்கிறார் போலும். இவரும் பொறாமையால் தான் “இங்கிலீஷ்காரர் வாயில் மண்விழும் படியான” கதர் வேலையில் இவர் ஈடுபட்டிருக்கிறார் போலும். சீமைக்குப் போகும் பணத்தை நிறுத்துவது பொறாமைதான் போலும்.

 வெள்ளைக்காரரில் அயோக்கியனாயிருந்தாலும் பல காரணங்களால் ஜெயித்து விட்ட ஜாதியானதால் அவனைக் கண்டால் நாம் சலாம் போடவேண்டுமென்பதும், அவன் 1000, 500 ரூ. சம்பளத்துக்கு அருகன் என்பதும் நாம் எவ்வளவு யோக்கியனானாலும் நாம் கூலி என்பதும் 10, 20 ரூ. சம்பளத்துக்குத்தான் லாயக்கென்பதும் மாற வேண்டுமென்று கிளர்ச்சி செய்தால் அது பொறாமை போலும். நீயும் நானும் மனிதன் தானே தென் ஆப்பிரிக்கா வீதியில் நீ மாத்திரம் நடக்கலாம், நான் மாத்திரம் ஏன் நடக்கக் கூடாது என்பது பொறாமை போலும், இதெல்லாம் வெள்ளைக்காரரைத் தூஷித்து அவர்களை ஒடுக்கத்தான் ஸ்ரீமான்கள். ராஜ கோபாலாச்சாரியார், சத்தியமூர்த்தி போன்றார்கள் கிளர்ச்சி செய்கிறார்கள் போலும். அப்படியானால் அது கண்டிப்பாய் ஜெயம் பெறாது போலும்.

தன்னைப்போல் பிறரை நேசிக்கும் குணமோ, எண்ணும் குணமோ இருக்குமிடங்களில் இவையெல்லாம் பொறாமை என்கிற எண்ணம் உதிக்குமா?

2. நாட்டிலுள்ளவர்களின் வெறுப்புக்கும் துவேஷத்திற்கும் பிராமணர் ஆளாகும்படி சிலர் பிரசாரம் செய்கிறார்கள், இது நாட்டிற்குத்தான் கேடு என்பது, பஞ்சாபிற்கு சர்க்கார் செய்த அக்கிரமத்திற்கு மகாத்மா கிளர்ச்சி செய்து ஒத்துழையாமை ஏற்படுத்தினது வெள்ளைக்காரர் மேல் நாட்டாருக்கு துவேஷம் ஏற்படத்தான் செய்தது போலும். இக்கிளர்ச்சியால்தான் இந்தியாவுக்கு கேடு விளைந்தது போலும்.

3, 4. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்றால், பிராமணர்களைப் பிராமணர் மாத்திரம் தெரிந்தெடுக்க வேண்டுமென்பது மற்ற ஜாதியார் பிராமணரல்லாதாரைத் தெரிந்தெடுக்க வேண்டுமென்கின்ற பொருளாதலால் இவ்வகை தெரிந்தெடுப்பால், நாடு பிற்போக்கடையும் என்பது, கிருஸ்தவர்களை கிருஸ்தவர்கள் தெரிந்தெடுத்தாலும், மகமதியரை மகமதியரே தெரிந்தெடுத்தாலும், இந்துக்களை இந்துக்கள் தெரிந்தெடுத்தாலும்தான் நாடு பிற்போக்கடைந்து விட்டது போலும்; அதற்கு முன் நாடு முற்போக்கிலிருந்தது போலும்; இவற்றிலெல்லாம் ஏற்படாத பிற்போக்கு பிராமணர் களைப் பிராமணர் தேர்ந்தெடுப்பதாலும், பிராமணரல்லாதார்களை பிராமணரல்லாதார் தெரிந்தெடுப்பதினாலும் ஏற்பட்டு விடும்போலும்.

5. வகுப்புவாரி பிரதிநிதித்துவம் இனி நீங்கள் நாட்டுக்கு தொண்டு செய்யக் கூடாது என்று பார்ப்பனர்க்கு பெரும் தடையுண்டாகுவதோடு பல்லாயிரக்கணக்கான வருஷங்களாய் நாட்டுக்கு தொண்டு செய்து வந்த ஜாதியை இவ்வளவு சீக்கிரத்தில் ஒடுக்கிவிடமுடியாது என்கிற பந்தயமும், அறிவு, பயிற்சி, தொண்டு செய்யும் திறமை கொண்ட எவரும் நாட்டுக்கு வேண்டும் என்பதும், சர்க்காரை, எங்களை நாங்களே தெரிந்தெடுத்துக் கொள்ளும் பாத்தியம் கேட்பது, வெள்ளைக்காரரே நாட்டுக்கு வேண்டாம் என்று சொல்வதுதான்போலும்; அல்லாமலும் 200 வருஷம் நாட்டுக்குப் “பிராமணர் களைவிட அதிகமாகத் தொண்டு செய்த” ஒரு சர்க்காரை வெகு எளிதில் நாட்டை விட்டு போங்கள் என்று சொல்லுவது போலத்தான் போலும். அறிவு, பயிற்சி, தொண்டு செய்யும் திறமை வெள்ளைக்காரருக்கு மாத்திரம் உண்டு. மற்றவர்களுக்கு இல்லை போலும்; ஆகையால் பிராமணரை நாம் தெரிந்தெடுக்காவிட்டால் அறிவு, பயிற்சி, தொண்டுசெய்யும் திறமை உள்ளவர்கள் வேறு வகுப்பில் சுத்தமாய் கிடைக்கவே மாட்டார்கள் போலும்.

6. பார்ப்பனர்மேல் உள்ள கொடுஞ் சினத்தால் பண்டைக்கலை, ஒழுக்கம், வேதம், சாஸ்திரம், கோவில், மடம் அனைத்துக்கும் கேடு விளையும்போல் இருக்கிறது என்பதும், சமஸ்கிருத பாஷைக்கும் தமிழுக்கும் போட்டி என்பது.

வெள்ளைக்காரர் மேல் உள்ள கோபத்தால்தான் பைபிளை நமது பிள்ளைகளுக்கு நாம் வேண்டாம் என்கிறோம் போலும். நாம் படிக்கக்கூடாது என்றும் சொல்லப்படும் வேதம் நமக்கு எதற்கு? பார்ப்பான் உயர்ந்தவன் மற்றவன் சூத்திரன் தாசி மகன் என்கிற கலையும், சாஸ்திரமும் பார்ப்பனரல்லாதாருக்கு எதற்கு? பார்ப்பனர் தவிர மற்றவர் உள்ளே போவதால் கோவில் அசுத்தமாய்ப் போய்விடுமானால் பார்ப்பனர் தவிர மற்றவர் கிட்டப்போனால் சுவாமிக்கு சக்தி குறைந்தபோகுமானால், அந்த கோவில் நமக்கு எதற்கு? பார்ப்பனரல்லாதார் பணத்தை வாங்கி விபசாரத்தரகுக்கும், தாசி வேசிக்கும், கள்ளு சாராயத்திற்கும் செலவு செய்யவும் வெறும் சோம்பேறிகளுக்கு பொங்கிப்போடவும் செலவழிப்பதும் அல்லாமல் பார்ப்பனரல்லாதார் நன்மைக்கோ சுயமரியாதைக்கோ ஒரு காரியமும் நடவாதிருக்குமானால் அம்மாதிரி மடம்தான் எதற்கு? அதற்கு ஏனோ பார்ப்பனரல்லாதார் பணம் கொடுக்கவேண்டும்?

தமிழ்நாட்டு பாஷையாகிய தமிழைப் பற்றி அக்கரையில்லை. தமிழர் கொடுக்கும் வரிப் பணத்தை அள்ளி சமஸ்கிருத பாஷைக்குத்தான் செலவு செய்யவேண்டும். சமஸ்கிருதத் திற்கு சமமாகக் கூட தமிழுக்கு யோக்கியதை கொடுக்கக்கூடாது என்று சொல்வதை ஒப்புக்கொள்ளாவிட்டால் அது போட்டி போலும். தமிழ் அகராதி எழுதுவதற்கு 10´ காலமாய் லக்ஷக்கணக்கான ரூபாய் செலவு செய்து பார்ப்பனரைத்தான் வைக்கவேண்டும், அவர்கள்தான் தமிழுக்கு உரை எழுதவேண்டும், பார்ப்பனரல்லாதார் அதில் இருக்கக்கூடாது என்பதை ஒப்புக்கொள்ளாவிட்டால், அது தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் போட்டி போலும். அப்படியானால் பள்ளியில் பாடங்களை தேசபாஷையாகிய தமிழில் தான் கற்றுக்கொடுக்கவேண்டும் என்று சொல்வதுகூட இங்கிலீஷுக்கும் தமிழுக்கும் போட்டி போலும்.

7. பார்ப்பனருடன் புரியும் போரில் கோயில் வேண்டாம், நோன்பு வேண்டாம், ஹிந்து மதம் வேண்டாம், பழைய ஒழுக்கங்கள் அநாகரீகம் என்ற எண்ணங்களை பரப்புதல் ஏழைத் தமிழ் மக்களுக்கு பெரும் கேடாய் முடியும் என்பது.

பிராமணன் தவிர மற்றவன் உள்ளே போகக்கூடாது என்பதுதான் கோவிலானால் அது வேண்டவே வேண்டாம். பார்ப்பனருக்குக் கொடுப்பதுதான் புண்ணியம்; பார்ப்பனருக்குக் கொடுத்தால்தான் மோக்ஷம் என்பதுதான் நோன்பானால் அந்நோன்பு வேண்டவே வேண்டாம்.

தனது மதத்தில் இருக்கும் வரை ஒருவன் தீண்டாதவன், பார்க்கத்தகாதவன், தெருவில் நடக்கத்தகாதவன், சண்டாளன் வேறு மதத்திற்கு போனால், அவன் பரிசுத்தன் என்கிற கொள்கையை உடையதுதான் இந்து மதம் என்றால், அம்மாதிரியான இந்து மதம் வேண்டவே வேண்டாம். அந்த மாதிரி மதம் பொய்யே பொய்தான்.

திருடினாலும் பிராமணன், குடித்தாலும் பிராமணன், லஞ்சம் வாங்கி னாலும் பிராமணன், பொய் சொன்னாலும் பிராமணன், வக்கீல் வேலை செய்தாலும் பிராமணன், கொடுமை செய்யும் அரசாங்கத்திற்கு உளவாளியாயிருந்தாலும் பிராமணன் என்று சொல்வதுதான் பழைய ஒழுக்கமும், தர்மமுமாயிருக்குமானால், அவ்வித ஒழுக்கமும், தர்மமும் நமது நாட்டுக்கும், எதிரியின் நாட்டுக்கும்கூட வேண்டவே வேண்டாம். இவைதான் நாகரீகமா னால் இவையல்லாத அநாகரீகமே மேலானது. இதை ஏழை மக்களிடம் பரப்புவதால் தமிழ் மக்களுக்கு கேடு வருவதோடு நரகம் வந்தாலும் அதற்காக பயப்படுபவன் மனிதனல்ல.

8. ஜாதிப் பொறாமையை அஸ்திவாரமாகக் கொண்ட கட்சிகள் பயன்பெறாமல் போன பின்பும், உண்மை தேசத்தொண்டு செய்து வந்த என் நண்பர்கள் இந்த ஜாதிச் சண்டையை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது. இது ஜஸ்டிஸ் கட்சியையும், ஸ்ரீமான்கள். எஸ்.ராமநாதன், ஈ.வெ.ராமசாமி நாய்க்கர் முதலியோர்களை குறிப்பது.

இந்நாட்டில் தற்கால மாதிரியான பிராமண ஆதிக்கம் உள்ள வரையில் ஜஸ்டிஸ் கட்சி ஒழியவே ஒழியாது; பயன் பெறாமலும் போகாது. அதுசெய்த பயன் அளவிட்டு சொல்லமுடியாது; ஒத்துழையாமை எவ்வளவு தூரம் நாட்டு பாமர மக்களுக்கும் அரசாங்கத்தின் அக்கிரமம் விளங்கும்படி செய்து அரசாங்கத்தின் அகம்பாவம் ஒழிந்து பிரித்தாளும் தந்திரத்திலும், சூழ்ச்சியிலும் ராஜ்யபாரம் நடக்கச்செய்திருக்கிறதோ, அதுபோல் ஜஸ்டிஸ் கக்ஷி, பிராமணரல்லாத பாமர ஜனங்களுக்கு பிராமண ஆதிக்கத்தின் அக்கிரமங்களை விளங்கும் படி செய்து பிராமணர் தாங்கள் உயர்ந்த ஜாதி என்று சொல்லி ஒரு காரியத்தைச் சாதித்துக்கொள்ளும் அகம்பாவத்தை ஒழித்து பிராமணரல்லாதாரில் சிலரைச் சுவாதீனப்படுத்தி ஒருவர்மேல் ஒருவரை ஏவிவிட்டு பிரித்தாளும் தந்திரத்திலும், சூழ்ச்சியிலும் தங்கள் ஆதிக்கத்தை காப்பாற்றும்படியான நிலைமையில் இறக்கிவிட்டது.

ஆயிரக்கணக்கான வருஷங்களின் அக்கிரமங்களை பத்து வருஷத்தில் அஸ்திவாரத் தையே ஆட்டிவிட்டதானால், இனி பாக்கியுள்ள வருஷங்களில் அது எவ்வளவு வேலை செய்யக்கூடும் என்பதை ஆச்சாரியார் அறியாமலில்லை. ஆனாலும் பாமர ஜனங்களுக்கு சொல்லுவதுதானே என்கிற முறையில் சொல்லுகிறார். ஸ்ரீமான்கள். எஸ். ராமநாதனும், ஈ.வெ.ராமசாமி நாயக்கரும் செய்யும் தொண்டு, ஜாதிச் சண்டையானால் ஸ்ரீமான்கள். சீனிவாசய்யங்காரும், ஏ.ரங்கசாமி அய்யங்காரும், எம்.கே. ஆச்சாரியாரும், ளு. சத்தியமூர்த்தியின் மகந்துக்களும், லோககுருக்களும், சி.ராஜகோபாலாச் சாரியாரும் செய்யும் தொண்டுகள் என்ன பெயரை உடையதோ! வாசகர்கள்தான் அறிந்து கொள்ள வேண்டும்.

9. நின்றால் குற்றம், உட்கார்ந்தால் குற்றம் பழைய புஸ்தகங்களில் இப்படி இருக்கிறது, அப்படி இருக்கிறது என்ற வீண் சண்டை பலன் தராது என்று பந்தயம் கூறுவது. இதைக்குறிப்பாய் சொன்னால் நன்றாயிருந்திருக்கும். அம்மாதிரி மனு முதலிய பழைய புஸ்தகங்களை இவர் ஒப்புக்கொள்ளுகிறாரா அல்லது தள்ளி விடுகிறாரா? பிராமண ஆதிக்கம் வந்தால் இந்த புஸ்தகம் அமுலுக்கு வருமா வராதா? (திருப்பூர் கான்பரன்சில் ஒரு தகராரின்போது அந்த புஸ்தகங்கள்தான் இன்றைக்கில்லாவிட்டாலும் மற்றொரு நாளைக்காவது தர்மங்களை காக்க உபயோகப்படும் என்று ஸ்ரீமான் ஆச்சாரியார் சொன்னவுடன் வெள்ளைக்கார ஆட்சி அடங்கி பிராமண ஆக்ஷி ஏற்பட்ட உடன்தானே என்று ஸ்ரீமான். ஈ.வெ.ராமசாமி நாயக்கர் சொன்னதும் ஆச்சாரியார் புன்சிரிப்பு சிரித்தார். அது இப்போது ஞாபகத்துக்கு வருகிறது.)

10. அரசாங்க விஷயங்களில் ஜாதிப் பேச்சு கூடாது, ஆனால் மத ஆச்சார விஷயங்களில் ஜாதி வித்தியாசத்தை ஒழிக்க தாம் போர்புரிவதாய் ஒருவர் வீராவேச பேச்சுக்கள் பேசுகிறார். அரசாங்க விஷயத்திலாவது, விஷம முறைகள் அவ்வளவு கேடுவிளையா. மத ஆச்சார சம்பந்தமாய் தொடர்ந்தால் துவேஷம் அளவுகடந்து பரவி தீமையை உண்டாக்கும் என்பது. இது ஸ்ரீமான். ஞ. வரதராஜுலு நாயுடுவைக் குறிப்பது. ஜாதி வித்தியாசக் கொடுமையை ராஜீய விஷயத்தில் நுழைத்தால் ஸ்ரீமான்கள். ஸ்ரீனி வாசய்யங்கார், சத்தியமூர்த்தி, ஏ.ரங்கசாமி அய்யங்கார், ஆ.மு. ஆச்சாரியார் இவர்கள் “நாடு கெட்டுப் போகும்” என்று சொல்லுகிறார்கள்.

சமூக மத விஷயத்தில் நுழைத்தால் ஸ்ரீமான் . ராஜகோபாலாச்சாரியார் “நாட்டில் தீமை விளைந்துவிடும்” என்று சொல்லுகிறார். அப்படியானால் ஸ்ரீமான்கள் வரதராஜுலு நாயுடுவையும், ஈ.வெ.ராமசாமி நாயக்கரையும், ளு.ராமநாதனையும் இவர்கள் என்னதான் பண்ணச்சொல்லுகிறார்களோ தெரியவில்லை. ஒருசமயம் ஸ்ரீமான் திரு.வி.கல்யாணசுந்திர முதலியார்போல் திருகணி பீரங்கியாய் இருக்கச் சொல்லுகிறார்களோ என்னமோ தெரியவில்லை. அப்படி இருந்தால் அவரவர்கள் பத்திரிகைகளுக்குகூட வாரம் ஒருமுறை கற்பனைகள் வெளியிடக் கொடுத்து உதவுவார்கள்போல் இருக்கிறது.

(குடி அரசு - கட்டுரை - 06.12.1925)

Pin It