“அடுத்த பிறவி என்று ஒன்று இருக்குமேயானால் அப்பிறவியில் நான் தோட்டியாகப் பிறக்க விரும்புகிறேன்” என்று காந்தி சொன்னார். கையால் மலம் அள்ளுதல் உள்ளிட்ட துப்புரவு வேலைகளை சமூகத்தின் உயர்ந்த பணி என்று காந்தி கூறினார். ‘மனிதக் கழிவை அகற்றுவதை மாண்புமிக்க பணி’ என்று காந்தி கருதியதாலேயே சமூகத்தில் எல்லோரும் அப்படி நினைப்பார்கள் என்று கற்பனை செய்தார். அவருடைய ஆசிரமத்தில் ஒரு பார்ப்பனப் பையன் கழிப்பறையைத் தூய்மை செய்யும் வேலையை மகிழ்ச்சியுடன் செய்வதாகக் கூறி வருணாசிரமத்திற்குப் புது விளக்கமளித்து ஏமாற்ற முயன்றார், காந்தியார்.

தாழ்த்தப்பட்ட வகுப்பினரே, தோட்டிகள் என்கிற மனிதக் கழிவை அகற்றும் பணி செய்யும் பிரிவினரை இழிந்தவராகக் கருதுகின்றனர். தீண்டாமையின் உச்சக் கட்டக் கொடிய வடிவமான மனிதக் கழிவை மனிதர்களே அகற்றும் இழிநிலை இந்தியா சுதந்தரம் பெற்று 63 ஆண்டுகளுக்குப் பின்னும் நீடிப்பது வெட்கக்கேடாகும்.

1993ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ‘மனிதக் கழிவை மனிதரே அகற்றுமாறு செய்வது, உலர் கழிப்பறைகள் கட்டுவது - தடுப்புச் சட்டம்’ நிறைவேற்றப்பட்டது. உலர் கழிப்பறைகளை நவீன கழிப்பறைகளாக மாற்றுவதற்கு அரசு மானியம் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் பணத்தைக் கொண்டு, ‘மனிதக் கழிவை மனிதரே அகற்றும் கொடுமையை ஒழிப்போம்’ என்று ஊடகங்களில் விளம்பரம் செய்யப்பட்டது. சில சிற்றூர்களில் தண்ணீர் வசதிக்கோ, பராமரிப்பு வசதிக்கோ ஏற்பாடு செய்யாமல் கழிப்பிடக் கட்டடங்கள் கட்டப்பட்டுப் பணம் பாழடிக்கப்பட்டது. சிற்றூர்களில் 90 விழுக்காட்டினர் திறந்த வெளிகளில் மலம் கழிக்கும் நிலை இருக்கும்போது, இத்தகைய கழிப்பிடங்கள் கட்டப்படுவதைக் கண்டு மக்கள் மனம் குமுறினர்.

மனிதக் கழிவை மனிதர் அகற்றுவதற்கான தடைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பத்து ஆண்டுகளுக்குப் பின்னும், இலட்சக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதை எதிர்த்து மனித உரிமை அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் 2003ஆம் ஆண்டு வழக்குத் தொடுத்தன. எனவே, மனிதக் கழிவை மனிதர் அகற்றும் நிலை குறித்து மாநில அரசுகள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.

இதில் முதல் குற்றவாளி இந்திய இரயில்வே துறையாகும். பெரு நகரங்களில் தொடர்வண்டி நிலையங்களில் மனிதக் கழிவை மனிதரே அகற்றும் அவல நிலை இன்றும் இருக்கிறது. சென்னை சென்ட்ரல் நிலையத்தில் குடலை முறுக்கும்படியான கொடிய நாற்றமடிக்கிறது. தொடர்வண்டிகளில் கழிப்பறைக் கழிவுகள், நிலையங்களில் கீழே விழாதவாறு நவீன வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறான வசதிகள் பல நாடுகளில் செய்யப்பட்டுள்ளன.

உத்திரப்பிரதேச அரசு அம்மாநிலத்தில் மனிதக் கழிவை மனிதர் அகற்றும் நிலை இருக்கிறது என்று உச்சநீதிமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் தம் மாநிலத்தில் இந்நிலை இல்லை என்று தெரிவித்துள்ளன. தமிழ்நாட்டிலும் பல இடங்களில் மனிதக் கழிவைத் தாழ்த்தப்பட்ட வகுப்புப் பெண்கள் அகற்றுவதை ‘தலித் முரசு’ போன்ற இதழ்கள் படங்களுடன் வெளியிட்டுள்ளன.

16.12.2010 நாளிட்ட ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் விதிஷா மாவட்டத்தில் 200 குடும்பங்கள் மனிதக் கழிவை அகற்றும் பணியில் ஈடுபட்டிருப்பதாக விரிவான ஒரு கட்டுரை படத்துடன் வெளிவந்துள்ளது. மேலும் விதிஷா நாடாளுமன்றத் தொகுதியின் பேராளர், நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக இருக்கும் பா.ச.க. தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜ் என்பதும் அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகரங்களில் உலர் கழிப்பறை முறை இந்தியாவில் பல மாநிலங்களிலும் உள்ளது. அதனால் மனிதக்கழிவை மனிதரே அகற்றும் நிலை நீடிக்கிறது. மனிதக் கழிவைத் தாழ்த்தப்பட்ட சாதியினரே அகற்றுகின்றனர். இவர்கள் பொதுவாக வால்மீகி தலித்துகள் என்று கூறப்பட்டாலும், தமிழ்நாட்டில் அருந்ததியர், சக்கிலியர்; ஆந்திராவில ‘மாதிகா’ எனப்படுவதுபோல், ஒவ்வொரு மொழி பேசும் மாநிலங்களிலும் இவ்வாறான பெயர்கள் வழங்கப்படுகின்றன. மனிதக் கழிவை அகற்றும் தலித்துகளில் 85 விழுக்காட்டினர் பெண்பாலரேயாவர்.

உ.பி, பீகார், உத்தர்கண்ட் உள்ளிட்ட வட இந்தியாவில் ஆறு மாநிலங்களில் 2004 ஆம் ஆண்டு 6 இலட்சம் உலர் கழிப்பறைகள் இருந்தன. இவை இப்போது 2.4 இலட்சமாகக் குறைந்துள்ளன என்று நடுவண் அரசின், வீட்டுவசதி மற்றும் நகர வறுமை ஒழிப்புத் துறைக்கான அமைச்சகம் அறிவித்துள்ளது. மனிதக் கழிவை மனிதர் அகற்றுவதை ஒழிப்பதற் கான தலித் அமைப்பு (Safai Karmacharis Amdolan - SKA) பத்து ஆண்டுகளுக்கு முன்பு 13 இலட்சமாக இருந்த மனிதக்கழிவை அகற்றும் தலித்துகளின் எண்ணிக்கை இப்போது 3 இலட்சமாகக் குறைந்துள்ளது எனக்கூறி உள்ளது. இந்த அமைப்பு இந்தியாவில் பல பகுதிகளிலிருந்தும் இந்த இழிதொழிலிலிருந்து விடுபட்ட தலித்துகளைத் திரட்டி 1.11.2010 அன்று தில்லியில் பேரணி நடத்தியது.

அரியானா மாநிலத்தில் 2010 மே மாதத்தில் அம்பாலா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன், வாழ்நாள் முழுவதும் மனிதக் கழிவை அகற்றும் தொழில் செய்து வந்த தலித்துகள் 60 பேர் தாம் பயன்படுத்திய மலம் தூக்கிச் செல்லும் கூடைகளைத் தீயிட்டுக் கொளுத்தினர். இவர்களுக்கு ‘மறுவாழ்வு’ அளிக்கும் திட்டத்தின் கீழ் உள்ளாட்சிகளில் துப்புரவுப் பணியாளர்களாக இவர்கள் வேலையில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

ஆனால் அய்ந்து மாதங்கள் கழித்து துப்புரவுப் பணியிலிருந்து இவர்கள் நீக்கப்பட்டனர். அம்பாலா மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.ஸ்ரோ, “மனிதக் கழிவை அகற்றி வந்த 200 பேருக்கு மாதம் ரூ.4,400 சம்பளத்தில் உள்ளாட்சியில் துப்புரவுப் பணியாளர் வேலை கொடுத்தோம். மறுவாழ்வு திட்டத்தின் கீழ் இந்த வேலை தரப்பட்டது. ஆனால் அவர்கள் துப்புரவுப் பணியை ஒழுங்காகச் செய்யவில்லை. எனவே அவர்களை வேலையிலிருந்து நீக்கி விட்டோம்” என்று கூறினார். (தி இந்து 26.10.10). மனிதக் கழிவை அகற்றுவோருக்கான மறுவாழ்வுத் திட்டம் வேண்டா வெறுப்பாக மேல்சாதி அதிகார வர்க்கத்தால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

நகரங்களில் வீடுகளில் உள்ள உலர் கழிவறைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும். நகரங்களில் பல வீடுகளில் கழிவுத் தொட்டி அமைக்காமல், கழிவறையிலிருந்து மலம் தெருவில் உள்ள கழிவுநீர்க் கால்வாய்க்குச் செல்லுமாறு கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. நகராட்சி நிருவாகம் இவற்றைக் கண்டறிந்து ஒழிக்க வேண்டும். நடுவண் அரசின் மனிதக் கழிவை அகற்றும் குடும்பங்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டத்தை மாநிலங்கள் முறையாகச் செயல்படுத்த வேண்டும். இக் குடும்பங்களின் பிள்ளைகளுக்குக் கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு ஆகியவற்றில் சிறப்புரிமைகள் வழங்கப்பட வேண்டும்.

இந்தியாவில் மனிதக் கழிவை மனிதர் அகற்றும் நிலையை 2007 திசம்பர் மாதத்திற்குள் ஒழிப்பதென ஒரு கால எல்லை அரசால் அறிவிக்கப்பட்டது. பிறகு இது மார்ச்சு 2009, மார்ச்சு 2010 என நீட்டிக்கப்பட்டது. 25.10.10 அன்று சோனியா காந்தி தலைமையில் கூடிய தேசிய ஆலோசனைக் கூட்டத்தில் 2012ஆம் ஆண்டிற்குள் மனிதக் கழிவை மனிதர் அகற்றும் நிலையை அரசு ஒழித்திட வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

மாநகரங்களில் பாதாளச் சாக்கடைகளில் கழிவுகளை அகற்றும் பணியில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்தப் பணிக்காகப் பாதாளச் சாக்கடையில் இறங்கும் போது விஷவாயு தாக்கிப் பலர் இறக்கின்றனர். இது குறித்து சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இப் பணியில் இனி மனிதர்களை ஈடுபடுத்தமாட்டோம்; எந்திரங்கள் மூலமாக இப்பணி செய்யப்படும் என்று தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் உறுதி கூறப்பட்டது. ஆயினும் அதன்பிறகும் பாதாளச் சாக்கடையில் கழிவை அகற்றும்போது சிலர் இறந்தனர். எனவே நாராயணன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தமிழக அரசு மீது தொடர்ந்தார். 7.12.10 அன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் நேர்நின்று அய்.ஏ.எஸ். அதிகாரிகள் மூன்று பேர் விளக்கமளித்துள்ளனர். சாக்கடைப் பராமரிப்புப் பணிகள் தொடர்பாக இன்னும் 4 வாரத்துக்குள் அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர்.   (தினத்தந்தி 7.12.10)

மனிதக் கழிவை மனிதர் அகற்றும் இழிநிலை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். மாநகராட்சிகளில் பாதாளச் சாக்கடைகளில் கழிவுகள் எந்திரங்கள் மூலம் மட்டுமே அகற்றப்படும் நிலையை ஏற்படுத்த வேண்டும். இந்தியா முழுவதும் துப்புரவுப் பணியாளர்களாகத் தாழ்த்தப்பட்ட மக்களே இருக்கின்றனர். சாதி அமைப்பும் அதன் ஒடுக்கு முறையும் அப்படியே நீடிக்கின்றன என்பதற்கு இது தக்க சான்றாகும். துப்புரவுப் பணியை உடல் நலத்திற்கு ஊறுவிளைவிக்காத வகையில் நவீனப்படுத்த வேண்டும்.

Comments

6 comments

6
ulaganathan.maa..
indhiyargal kadhavai adaithukkondu sappidugirargal. aanal, thirantha veliyil malam kazhikkirargal. enru nam nattaippatriya izhivana oru kannottam ulaga nadugalidaiye undu. kazhipparai kattitharugirom enru vay kizhiyap pesi, oru vasathiyum illadha, kaiyal thallivittal keezhe vizhunthuvidum nilaiyil sila kazhipparaigalai kattivittu arasu than kadamaiyai mudithukkolgirathu.
manithar noga manithar parthu rasikkum kalam innum maravillai.
by
maa.ulaganathan.
amrudha
"இந்தியா சுதந்தரம் பெற்று 63 ஆண்டுகளுக்குப் பின்னும் நீடிப்பது வெட்கக்கேடாகும்"

விவசாயிகள், ஏன் கொள்முதல் செய்ய அரசு ஊழியர்கள் வர வில்லையென்று மறியல் செய்தால்.
போலிஸ் வந்து சரமாரியாக அடித்து நொறுகிறது. இது தாங்க சுதந்திரம் நாடு.

மனிதக் கழிவை எடுப்பவர்களுக்கா சுதந்திரம் கிடைத்துள்ளது?

நாட்டை காட்டி கொடுபவனுக்கும், மக்களை சுரண்டுபவர்களுக்கும் தான் சுதந்திரம் கிடைத்துள்ளது
Ramprabu
ithakaya ilivana sail kalai nan parthal nechayamaga kantepen.........
D. gopalakrishnan
very nice excellent every one must read this page
தேவன்
இவர்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் இவர்க்ளுக்கு மாநில அரசு செய்யரது இல்ல ஊலல்தான்
நடக்குது
Guest
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவையொட்டி 14-4-2013 அன்று கழகத்தின் சார்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் மாபெரும் இரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

சென்னை:
சென்னையில் சென்ட்ரல் இரயில் நிலையத்தில் த.பெ.தி.க தமிழக வடக்கு மண்டல அமைப்பாளர் கரு.அண்ணாமலை அவர்கள் தலைமையிலும், கழக துணைத்தலைவர் வழக்கறிஞர் செ.துரைசாமி, கழக தலைமை வழக்கறிஞர் சு.குமாரதேவன் முன்னிலையிலும் இரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தியாவில் மண் தோண்டுவதற்கு கூட இயந்திரம் வந்த பிறகும் கூட, மலம் அள்ள இன்னும் அவலநிலை உள்ளது. குறிப்பாக இந்தியா முழுவதும் துப்புரவு பணி செய்துவரும் தலித்துக்கள், குஜராத்தில் பங்கி என்றும், ஆந்திராவில் பக்சி என்றும், தமிழ்நாட்டில் அருந்ததியர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். கையால் மலமள்ளுவோர் பணிநியமனம் மற்றும் திறந்தவெளி கழிப்பிடங்கள் (தடுப்பு) சட்டம் 1993 இந்திய அரசால் நிறைவேற்றப்பட்டு, மனித மலத்தை சுமப்பது, சுத்தம் செய்வது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை மீறினால் ஓராண்டு சிறை தண்டனையும் ரூ.2000/- அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவித்த பிறகும் இந்திய அரசியல் சட்டத்தை மதிக்காமல் நடக்கும் ரயில்வே அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்து கொள்கிறோம். தொழில்நுட்ப்ப புரட்சி நடக்கும் இன்றைய நவீன காலத்தில், வேளாண் தொழில் முதல் வெட்டியான் தொழில்வரை நவீனமயமாக்கப்பட்ட பிறகும், மலம் அள்ளும் தொழிலை மட்டும் நவீன என்திரமயமாக்க மறுப்பது ஏன் என்று தந்தை பெரியார் திராவிடர் கழக துணை தலைவர் எஸ். துரைசாமி பேசினார். போராட்டத்தில் ஏ. கேசவன், செ. குமரன், ச. குமரன், கு. ஜனார்த்தனன், கண்ணதாசன், குமரேசன், செயசீலன், சோ.மதிவாணன், வல்லரசு மற்றும் 150 பேர் கலந்து கொண்டார்கள். போராட்டம் முடிந்தவுடன் அனைவரையும் பூக்கடை காவல் ஆய்வாளர் விடுதலை செய்தார்கள்.

கோவை:
கோவையில் மாநில பொதுச்செயலாளர் தோழர் கு.இராமக்கிருட்டிணன் தலைமையில் 200-க்கும் மேற்ப்பட்ட தோழர்கள் இரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.

புதுவை:
புதுவையில் மாநில தலைவர் வீர.மோகன் தலைமையில் 150-க்கும் மேற்ப்பட்ட தோழர்கள் இரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.

சேலம், திருச்சி, மதுரை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்திலும் இரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.