ரணங்கள் பாய்ந்தெழும்
தரைகளில் எனக்கான பள்ளிக்கூடம்
வான்வெளியாய் கிடக்கிறது
 
யுத்தக் கறையான்கள் தின்றுவிட்டு
எச்சமாய்ப் போட்டுக்கிடக்கும்
வகுப்பறைக் கட்டடத்தின்
கற்கள் தெருக்களையும் தாண்டி
மணல்களுக்குள் புதைந்தபடி
சிதறிக் கிடக்கின்றன
தினம் ஆயிரம் கால்கள்
பதிந்தெழும் முற்றத்தில்
புழுக்கள் கூட உயிர்வாழ
முடியாத வெப்பத்தரையாக கிடக்கிறது
 
கல்வியை உண்டு வாழ்ந்த
எங்களின் பள்ளித்தொழுவம்
துடைத்தழிக்கப்பட்டு கிடக்கிறது
யுத்தத்தால் உண்டு தொலைக்கப்பட்டுக் கிடக்கிறது
 
ஆட்கள் இருக்க முடியாதபடி
நெளிந்து கிடக்கும் நாலைந்து
நாட்காலிகள் மட்டும்
இதுதான் கல்லூரி என்று
ஒரு மூலைக்குள் முடங்கிக் கிடக்கிறது
 
மைதானத் தரைகளில்
மேவிக்கிடக்கும் மணல்களாலும் கற்களாலும்
கல்லூரியின் காலம் தொலைந்து கிடக்கின்றது
கறையான்கள் தின்றுவிட்டு போன
புத்தகத்தைப் போல் எனக்கான பள்ளிக்கூடம்
அந்தத் தரைகளில் ஏங்கிக்கிடக்கிறது
 
பள்ளி முற்றத்தில் விழுதுகள் இன்றி
விசாலங்களை மறந்து கிடக்கும்
இரண்டு ஆலமரங்களில் மட்டும்
கல்வியின் பழைய பக்கங்கள்
தொங்கிக்கொண்டு கிடக்கின்றன
புதிய கனவுகளைச் சுமந்தபடி யாருமற்றிருக்கிறது
 
(யுத்தத்தில் சிதைந்த எனது பாடசாலையான முல்லைத்தீவு மகா வித்தியாலயத்திற்குச் சென்றேன்)
Pin It