பிறப்புரிமை என்பது யாருடைய பிறப்புரிமை என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். நான் எடுத்துக் கொண்டது மனிதனுடைய பிறப்புரிமை என்பதைத்தான். தடைகள் என்பன மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட தடைகளைத்தான். "அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது' என்று பெரியோர்கள் சொன்னதாகச் சொல்லுவார்கள். நான் அதை ஒப்புக் கொள்ளாததற்கு நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். "கொடுமை, கொடுமை; மனிதராகப் பிறப்பது மிகக் கொடுமை' என்பதே எனது தாழ்மையான அபிப்பிராயம்.

உலகில் உள்ள ஜீவகோடிகள் எல்லாவற்றிலும் மனிதப் பிறப்பே மிகத் தாழ்ந்த பிறப்பு என்பதும், மனிதனைப் போல் அடிமை, உலகில் வேறு ஜீவன்கள் இல்லை என்பதும் என் அபிப்பிராயம். மனிதனைத் தவிர மற்ற ஜீவகோடிகள் எவ்வளவோ சந்தோஷத்துடனும், அடிமை உணர்வில்லாமலும் சுதந்திரமாய் வாழ்வதை நாம் பார்க்கிறோம். அவைகளில் சிலவற்றிற்குக் கஷ்டமும், அந்நியரால் கஷ்டப்படுத்தத் தக்க நிலைமையும் ஏற்பட்டு இருந்தாலும், மனிதனைப் போல் உணர்ந்து துக்கிக்கிற சக்தியாகிய கொடுமை அவற்றிற்கு இல்லை.

ஏனெனில், பகுத்தறிவென்கிற ஒரு உபத்திரவம் கொடுக்கத்தக்க குணம், அவைகளுக்கு இல்லாததால்தான். உதாரணமாக, குதிரைகளை ஜட்கா வண்டியில் பூட்டி, ஒரு முரட்டு நூல் கயிற்றை மடித்துக் கொண்டு – ஓட, ஓட, அதன் மிக மெல்லியதும், அதிக உபத்திரவம் கொடுக்கத்தக்க இடமுமாகிய மர்மஸ்தானத்தில் அடித்தாலும், நல்ல வாலிபமுள்ள காளை மாடுகளைக் கட்டித் தள்ளி, அதன் விதர்களை மரக்கட்டையின் மேல்வைத்து மரக் கொட்டாப்பிடியினால் தண்ணீர் போலக் கரையும்படித் தட்டினாலும் – அவைகளுக்குக் கஷ்டம் மாத்திரம் தோன்றுமேயல்லாது, அதற்கு தன் பிறப்புரிமை இழந்து இப்படிக் கஷ்டம் அனுபவிக்கிறோமே என்கிற உணர்ச்சி இருக்காது.

தவிரவும், அதற்கு மானம் அவமானம் என்கிற உணர்ச்சியும் இல்லை. இதோடு, நாளைக்கு வேண்டுமே என்கிற கவலையும் இல்லை. எவ்வளவு கிடைத்தாலும் போதாது என்கிற ஆசை என்னும் அடிமைத்தன்மையும் இல்லை. ஆகவே, மனிதன் மற்ற ஜீவராசிகளைவிட மானம், அவமானம் என்கிற உணர்ச்சியும், நாளைக்கு என்ன செய்வது என்கிற தன்னம்பிக்கை அற்ற தன்மையும், எவ்வளவு கிடைத்தாலும் திருப்தியடைய முடியாத ஆசை என்னும் அடிமைத் தன்மையும் உடைத்தாயிருப்பதால், மனிதத்தன்மையானது பிறவியிலேயே மிகுதியும் இழிவானதும், அடிமைத் தன்மை கொண்டதுமானதுமாய் இருக்கிறது என்பது நான் கொண்ட கருத்து.

இப்படிப்பட்ட மனித ஜீவனுக்கு, எல்லாவற்றையும்விட முக்கியமான உணர்ச்சியாக, மான – அவமானம் என்னும் தன்மானமாகிய சுயமரியாதையை தான் பிறப்புரிமையாகக் கொள்ள வேண்டியிருக்கின்றது. ஏனெனில், "மனிதன்', "மானிடன்' என்ற பதங்களே மானத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட மொழிகள் ஆதலின், மனிதன் என்பவன் மானமுடையோன். எனவே, மனிதனுக்கு மனிதத் தன்மையைக் காட்டும் உரிமையுடையது மானம்தான். அத்தன்மையாகிய சுயமரியாதையைத்தான் மனிதன் சுயமரியாதையாகக் கொண்டிருக்கிறான்.

இது, ஒவ்வொரு மனித ஜீவனுக்கும் உரிமையுடையது. திலகர் பெருமான், "சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை' என்று சொன்னாரென்றால், அவரும் வர்ணாசிரம பார்ப்பனராதலால், பார்ப்பனர்களுக்கு பிறரைத் தாழ்மையாகக் கருதுவதே பிறப்புரிமை என்று நினைக்கிற முறையில், பொருளில்லாததும், அனுபவத்தில் பெரிதும் ஏமாற்றமே பொருளாகக் கொண்ட அரசியல் சம்பந்தமான சுயராஜ்யம் என்னும் வார்த்தையை அவர் பிறப்புரிமைக்கு உபயோகிக்க வேண்டியவரானார். நாம் யாரையும் ஏமாற்றிப் பிழைக்க வேண்டியவர்கள் அல்லோம். உண்மையான மானிடத் தன்மையை அறிய வேண்டியவர்களாயிருக்கிறோம். ஆதலால், "மனிதனுக்குப் பிறப்புரிமை தன்மானந்தான்'. அதற்கு நம்முன் நிற்கும் தடைகள் என்ன என்பது இரண்டாவது விஷயம். தடைகள் இரண்டு விதம்: ஒன்று, இயற்கையாய் ஏற்பட்ட தடை; மற்றொன்று, மற்றவர்களால் ஏற்பட்ட செயற்கைத் தடை.

நாளைக்கு வேண்டும் என்று தேடும் தன்னம்பிக்கையற்ற தன்மையும், எவ்வளவு கிடைத்தாலும் போதாது என்கிற ஆசை அடிமைத் தன்மையும், மனிதனின் பிறப்புரிமையாகிய தன்மானத்திற்கு இயற்கைத் தடைகள். இத்தடைகளை நீக்குவதென்பது, முற்றுந் துறந்த துறவிகளுக்கே முடியக்கூடியது.

ஆதலால், நான் செயற்கைத் தடைகளைப் பற்றிப் பேசப் போகிறேன். இந்தச் செயற்கைத் தடை என்பது, ஒவ்வொரு தேசத்திற்கும் ஒவ்வொரு மாதிரியாகக் காணப்படுகிறது. நமது நாட்டில் நமது பிறப்புரிமையாகிய சுயமரியாதைக்கு முக்கியமாய் இரண்டு விதமான செயற்கைத் தடைகளைச் சொல்லலாம். ஒன்று, அரசியல் சம்பந்தமான பார்ப்பனர் என்னும் வகுப்பார் நம்மை ஏமாற்றி, நமது சுயமரியாதையைக் கெடுத்திருப்பது. மற்றொன்று, அதே வகுப்பார் பரமார்த்திகத்திற்கு (அடுத்த உலகத்தில் கிடைக்கப் போகின்ற இன்பத்திற்கு) என்று மதம் என்கிற பெயரால் நம்மை ஏமாற்றி, நிரந்த அடிமையாக்கி, நமது சுயமரியாதையை அடியோடு களைந்து வருவது.

– தொடரும்

"குடி அரசு' – 9.1.1927

 

Pin It