எங்கள் ஊர்ப் பெயர் ஒரு காரணப் பெயர். ஊரைச் சுற்றிலும் மலைகளும் காடுகளும். சிறுநகரின் எந்த மூலையிலிருந்து பார்த்தாலும் தெரியும் மலைமுகடுகள். பெரிய மலைகளை அரணாகக் கொண்டிருப்பதாலேயே பேரரண்பட்டு (பேரணாம்பட்டு) என்று அழைக்கப் பட்டிருக்கிறது. கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் நீட்சியே இம்மலைத் தொடர்.

இந்த மலைத் தொடரின் நடுவிலே இருக்கின்ற பல கிராமங்களுக்கும் போயிருக்கிறேன். இதுவரையிலும் போகாத ஒரு கிராமத்துக்கு அண்மையிலே போக நேர்ந்தது. ஆர்க்காட்டு நவாப் தனது தளகர்த்தர்களில் ஒருவருக்கு ஒரு மலையையே வெகுமதியாக அளித்திருக்கிறார். சித்திக் என்பவருக்குச் சொந்தமான அந்த ஜான்உருஸ் மலையை ஒட்டிச் செல்லும் பாதையில் வெகு தூரம் போக வேண்டும்.

ஆனந்தகிரி என்ற இடத்தில் கிளை பிரிந்து நிலங்களின் ஊடாக ஒரு கிலோ மீட்டர் நடந்தால் அக்கிராமம் வரும். வழியெல்லாம் நெல்வயல்களும், தென்னை, வாழைத் தோப்புகளும் இடையிலே ஒரு காட்டோடை. வண்டித்தடமும், வயல் வரப்பும் உருவாக்கி இருக்கின்ற ஒற்றையடிப்பாதை. இரவுகளில் மட்டுமல்ல, பகலிலும்கூட பாம்புகள் வழி மறிக்கும். மழைக்காலங்களில் நடக்கின்ற கால்கள் சறுக்கும். இவைகளைக் கடந்து சென்றால், ஓலைவேய்ந்த இருபது குடிசைகள் தெரிகின்றன. இருளர்கள் என்று அழைக்கப்படும் மலைவாழ் மக்கள் அக்குடிசைகளில் வாழ்கிறார்கள். பாதை மட்டுமல்ல, மின்விளக்குகள் இல்லை, குடிநீர் வசதிகளும் இல்லை. நவீன உலகின் வசதிகள் எட்டிப்பார்க்க வில்லை. பெயருக்கு ஏற்றார் போலவே இருளில் இருக்கின்ற இருளர்கள்!

உடல் நலக்குறைவு ஏற்பட்டாலோ, பேறுகாலங்களின் போதோ, காட்டு விலங்குகளால் தாக்கப்பட்டாலோ, பாம்புகள் கடித்தாலோ சிறுநகருக்கு வந்து சேர்வதற்குள் அம்மனிதர்களுக்கு எதுவும் நடக்கலாம். பரிதாபத்துக்குரிய உயிர்கள் என்று ஒரு ‘உச்' கொட்டலோடு மனிதத் தொடர்ச்சி ஒன்றிர்க்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடும். மழைக்காலங்களிலோ இன்னும் சிக்கல்தான். நுரைத்துச் சுழித்தபடி கரைபுரண்டு ஓடும் காட்டாறு. இரண்டு மூன்று நாட்களுக்கு வாழ்க்கையை முடக்கிவிடும்.

இத்தனை இடர்ப்பாடுகளுக்கு இடையிலே அங்கு எதற்கு வாழ்ந்து கொண்டிருப்பது? பேசாமல் நகரத்துக்கு வந்து விடலாமே? படித்த, நடுத்தட்டு மனோபõவம் கொண்ட, சிக்கல்களிலிருந்து ஓடி ஒதுங்கிக் கொள்கிற மூளைகளுக்குள்ளிருந்தெல்லாம் இப்படி சில வினாக்கள் எழும்பும். அது மிக இயல்பானதுதான். வழக்கமானதும்கூட. ஆனால், இத்தனை எளிய தீர்வு நமது நாட்டில் எந்த சிக்கலுக்காவது இருக்கிறதா என்ன? அம்மக்களுக்கு வேளாண்மை கூலி வேலைகளைச் செய்வது, விறகு சுமப்பது ஆகியவற்றைத் தவிர வேறு வேலைகளைத் தெரியாது. மேலும், நகரத்தில் எங்கே வசிப்பது? வசிப்பிடம் என்பது ஓர் அடிப்படை ஆதாரச் சிக்கல்.

இயற்கைச் சிக்கல்களை தமது மனத்தகவமைப்பின்படி எதிர்கொண்டு வாழ்ந்தாலும் அவர்களுக்கு வேறு சில சிக்கல்கள் இருக்கின்றன. அவை சாதியச் சிக்கல்கள். அந்த மலைவாழ் மக்கள் தமது குடியிருப்பைச் சுற்றியிருக்கும் வயல்களிலும், தோப்புகளிலும் சாதி இந்துக்களுக்கு வேலை செய்யாமல் போனால், வயல்களின் ஊடே போகும் ஒற்றையடிப் பாதையில் நடக்க முடியாது. குடிப்பதற்கு என வயல்களின் கிணறுகளிலிருந்து தண்ணீர் எடுக்க முடியாது. இந்திய கிராமங்களின் எண்ணற்ற எடுத்துக்காட்டுகளில் இதுவும் ஒன்று. இன்னமும் மாறவில்லை இந்திய கிராமங்கள்!

மே மாதம் 11, 12 ஆகிய நாட்களில் புதுதில்லியில் தலித் மனித உரிமைகளுக்கான தேசியப் பரப்புரை (NCDHR), தீண்டாமைக் கொடுமைகள் குறித்து இந்திய மக்கள் தீர்ப்பாயத்தை கூட்டியிருந்தது. அதில் கொடுக்கப்பட்ட அறிக்கை, இன்னமும் 50 சதவிகித கிராமங்களில் தீண்டாமை இருக்கிறது என்ற ஓர் உண்மையைச் சொல்கிறது. கிராமங்களில் சாதியமும், மதப் பழமைவாதமும், மூடக்கருத்தியல்களும் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கின்றன.

இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வன்கொடுமைக் குற்றங்களில் முக்கால் பாகத்திற்கும் மேற்பட்டவை கிராமங்களில்தான் நடந்திருக்கின்றன; அல்லது கிராமத்தின் தன்மைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளாமல், இன்னமும் பழமையின் பிடியிலேயே இருத்திக் கொண்டிருக்கிற அரை வேக்காட்டு நகரங்களில்தான் நடந்திருக்கின்றன.

சனநாயகப்பூர்வமான அரசியல் அதிகாரங்களும், கிராம மேம்பாட்டிற்கான பெருவாரியான நிதிகளும் கிராமங்களில் போய்ச் சேர்ந்திருக்கின்றன. இவைகளின் பயன்பாடு வேறுவகையிலான பலன்களை அளித்திருக்கிறது. நாடும் கிராமமும் என்ற பொருளில் தனது ஆய்வுக் கட்டுரையொன்றை தந்திருக்கும் பேராசிரியர் சுரிந்தர் ஜோத்கா, இந்திய கிராமங்களின் தன்மைகளை கேள்விக்குள்ளாக்குவதுடன், காந்தி, நேரு, அம்பேத்கர் ஆகியோர் கிராமங்கள் குறித்து எழுதியிருப்பவைகளையும் ஒப்பிட்டு ஆய்கிறார் (‘தலித் அரசியல் தொய்வு' தொகுப்பு : கோபால் குரு; டி.அய்.சி. நூல் வரிசை 1, 2005). இந்தியாவில் காலனி ஆட்சியையும், ஆட்சி யாளர்களையும் எதிர்த்த தேசியவாத இயக்கம், தேசிய அடையாளத்தோடு தம்மை ஒருங்கிணைத்துக் கொண்டது மட்டுமின்றி, பகுதிவாரியான இனங்கள் தமது அடையாளத்தை கூர்மைப்படுத்தி உருவாக்கிக் கொள்ளவும் வழி வகுத்தது என்கிறார் அவர்.

சாதி முறையும், கிராம சமூகமும்தான் இந்தியாவின் அடையாளங்கள் என்று காலனிய ஆட்சியாளர்கள் உறுதிபட நினைத்தனர். அவைகளைப் பற்றி ஆராயவும், எழுதவும் செய்தனர். விடுதலைக்குப் பிறகு கிராம தன்னாட்சி கொண்டு வரப்பட்டு, உள்ளாட்சி அதிகாரங்கள் பரவலாக்கப்பட்ட பின்னர் சாதிய சமூகங்கள் மேலும் கூர்மையடைந்து அதிகாரம், பணம் ஆகியவற்றோடு வலுப்பெற்றிருக்கின்றன. ஊராட்சித் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் பல ஆயிரம் கோடி நிதி, ஊராட்சி அதிகாரத்தில் இருப்பவர்களிடமும் திட்டங்களை செயல்படுத்தும் ஒப்பந்தக்காரர்களிடமும் சென்று சேர்ந்து, அவர்களை வளப்படுத்தியிருக்கின்றது. அதிகாரமும், உயர்நிலை அதிகாரத் தொடர்பும், போதிய பணமும் இருப்பதால் ஊராட்சிப் பொறுப்புகளில் இருப்போர் சுய சாதி மேம் பாட்டுக்குத் துணைபோவதுடன், தலித்துகளை இன்னும் கொடூரமாய் ஒடுக்கவும் துணிகின்றனர். ஒவ்வொரு உள்ளாட்சித் தேர்தலின்போதும் சாதி ரீதியாக அணிதிரளும் சமூகங்களின் தொகுப்பு, அடுத்த தேர்தல் வரை சிதறாமல் தன்னை தற்காத்துக் கொள்கிறது.

கிராமங்களில் வாழாத, கிராம அனுபவமே இல்லாத காந்தி, நேரு ஆகியோர் கிராமங்களைப் பற்றி எழுதிய கருத்துக்களே உள்ளாட்சி முறைக்கும், கிராம அதிகாரத்துக்கும் அடிப்படை என்பதை மறுப்பதற்கில்லை. கிராமங்களில் நிலவும் பஞ்சாயத்து முறையை சிறந்த நிர்வாக முறையாக காந்தியார் வியக்கிறார். ‘இந்தியாவின் முன்னேற்றம் இந்திய கிராமங்களின் முன்னேற்றத்தில்தான் இருக்கிறது' என்கிறார் அவர். மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களின் வளர்ச்சி, கிராமங்களின் சிதைவாகத் தோன்றுகிறது அவருக்கு. ‘இந்தியா ஏழு லட்சத்து அய்ம்பதாயிரம் கிராமங்களில்தான் வாழ்கிறது. நகரங்கள் கிராமங்களை சார்ந்து வாழ்கின்றன' (1966) என்கிறார் காந்தியார்.

தமிழகத்தின் குடஓலை முறை, தொன்மையான உள்ளாட்சி முறைக்கு எடுத்துக்காட்டாக சொல்லப்பட்டாலும், அதன் சாதியத் தன்மையையும் கணக்கில் கொண்டே ஆக வேண்டும். காந்தியாருக்கு கிராமங்களில் இருக்கும் சாதி தெரியாமலில்லை. கிராமங்களில் இருக்கும் தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்பதுடன், தலித்துகள் தங்களை சீர்த்திருத்திக் கொள்ள வேண்டும் என்பது அவரின் ஆலோசனை. நேருவின் பார்வை கிராமங்களை நவீனப்படுத்துவதில் குவிந்திருக்கிறது. வேளாண்மையை நவீனமாக்குவதிலும், குடிசைத் தொழில் பெருக்கத்திலும் அவருடைய ஆர்வங்கள் இருக்கின்றன. சாதியத்தை நவீன தொழில் பெருக்கமும், வளர்ச்சியும் மேற்கொண்டுவிடும் என்பது அவருடைய நம்பிக்கை.

இவ்விருவரின் பார்வைகளிலிருந்து அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் பார்வைகள் வேறுபடுகின்றன. நகரங்களின் சுரண்டலுக்கு கிராமங்களைப் பயன்படுத்துவதும், கிராமங்களைப் பஞ்சம நிலையிலேயே வைத்திருக்க எண்ணுவதும் வர்ணாசிரம தர்மத்தின் மேல்படியில் இருப்பவர்கள் வேலை என்கிறார் பெரியார். இந்தியா நவீனமடையத் தொடங்கியதும் கிராமங்களை விட்டு வெளியேறி நகரங்களில் நிலைகொண்டு, தமது அதிகாரத்தை தக்கவைத்துக் கொண்ட ‘மேல்படி' கூட்டம் யார் என்பது தெளிவு.

அது பார்ப்பனர்களன்றி வேறு சமூகமல்ல. ‘கிராமம் என்பது தீண்டப்படாத மக்களின் நிலையில்தான் இருந்து வருகிறது. கிராமத்தார் அல்லாத மற்றவர்களுக்கு உழைப்பதற்காகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் அந்த அடிப்படையை அப்படியே வைத்துக் கொண்டு, கிராமத்தை எவ்வளவு சீர்த்திருத்தினாலும் கிராமம் ‘சூத்திரன் தீண்டாத ஜாதியான்' நிலையில்தான் இருக்கும்' (‘கிராமங்கள் ஒழிய வேண்டும்' பெரியார்; பெ.தி.க. 2007).

கிராம அதிகாரிகளின் பயிற்சிப் பள்ளி ஆண்டு விழா உரையில் (1944) கிராமங்கள் பொருளாதாரத்திலும், கல்வியிலும் நவீனப்படுத்தலிலும் ஒடுக்கப்படுவதை பெரியார் சுட்டிக் காட்டுகிறார். வர்ணாசிரம படிநிலையாக்கத்தின்படி நாட்டின் வளர்ச்சியும் இருக்கிறது. மொத்த மக்கள் தொகையில் குறைவான எண்ணிக்கையிலிருப்போர் அதிகாரத்திலும் வளத்திலும் இருப்பது போல் நகரங்களும், எண்ணிக்கையில் அதிகமிருந்தும் அனைத்து வகையிலும் ஒடுக்கப்பட்டு வரும் கீழ் வர்ணத்தாரைப்போல் கிராமங்களும் இருக்கின்றன என்பது பெரியாரின் கருத்து.

கிராமங்கள் குறித்த அம்பேத்கரின் பார்வையும் ஆய்வும் முற்றிலும் வேறுவகையாக இருக்கின்றன. அம்பேத்கர் கிராமங்களை மேலும் பகுத்து ஊராகவும் சேரியாகவும் இருப்பதை தெளிவாகச் சுட்டிவிடுகிறார். கிராமத்தில் பிறந்து, கிராமத்தின் கசப்பான வாழ்வனுபவத்தினைப் பெற்று வளர்ந்தவர். இந்திய சமூகப் படிநிலையின் முற்றுப்புள்ளியிலிருந்து உருவானவர். ஆதலால் இந்தியா என்ற சொல்லின் முழுப் பொருளையும் உணர்ந்திருக்கிறார் அம்பேத்கர்.

‘இந்துச் சமூகம் தீண்டத்தகாத மக்களைப் பிரித்து வைப்பதை வலியுறுத்துகிறது. ஓர் இந்து தீண்டத்தகாதவரின் குடியிருப்பிலோ, ஒரு தீண்டத்தகாதவர் இந்துவின் குடியிருப்பிலோ வசிக்க முடியாது. இது, சமூகப் பிரிவினை மட்டுமல்ல, சமூக உறவை தடுப்பதற்கானதொரு தடை. அசுத்தமான மக்களை குகைகளில் வைத்திருப்பது போன்றதொரு வாழ்விட ஒதுக்குமுறை. எல்லா இந்து கிராமங்களும் ஒரு சேரியைக் கொண்டிருக்கின்றன. இந்துக்கள் கிராமங்களில் வாழ்கிறார்கள் (ஊரில்) தீண்டத்தகாதவர்கள் சேரிகளில் வாழ்கிறார்கள்.' இந்திய கிராமங்களைப் புரிந்துகொள்ள அடிப்படையான பார்வை இதுவன்றி வேறல்ல.

அம்பேத்கரின் பகுப்பாய்வு மேலும் நுணுகிச் செல்கிறது. ‘இந்திய கிராமங்கள் ஒரே அலகல்ல; ஊர், சேரி என்று இரு பகுதிகளைக் கொண்டவை. தீண்டத்தகாதோர் தீண்டத்தகுந்தோர் அதன் மக்கள் திரள். தீண்டத்தகுந்தோர் அதன் பெரும்பான்மை சமூகம். தீண்டத்தகாதோர் அதன் சிறுபான்மை சமூகம். தீண்டத்தகுந்தோர் ஊரின் உள்ளே வசிக்கிறார்கள். தீண்டத்தகாதோர் ஊருக்கு வெளியே வசிக்கிறார்கள். பொருளாதார ரீதியாக பலம் பெற்றோர் சாதி இந்துக்கள்.

தலித்துகள் சார்ந்திருப்போர்; மரபு வழியாக அடிமை ஏவல் ஊழியம் செய்ய கடமைப்பட்டோர். ஆதிக்கம் செய்வோர் வகுத்திருக்கும் சட்டங்களுக்கு உட்பட்டே தீண்டத்தகாதோர் கிராமத்தில் வசிக்க வேண்டும். எவ்வகையில் உடுப்பது, எந்த வீடுகளில் வசிப்பது, எந்த மொழியைப் பேசுவது, எந்த ஆபரணங்களை அணிவது என்று அந்த சட்டங்கள் தீண்டத்தகாதோருக்கு சொல்லும்.' இந்த பகுப்பாய்வைக் கொண்டு இந்திய கிராமங்களை அணுகினால், ஓர் உண்மையைப் பார்க்கலாம்.

இவற்றில் ஒன்றிரண்டு அவதானிப்புகளைத் தவிர, வேறு எதுவும் இன்று மாறவில்லை. தமது கட்டுரையில் பேரா. சுரிந்தர், அரசமைப்பு அவையில் எழுந்த விவாதத் தைச் சுட்டுகிறார். அங்கிருந்த இந்து உறுப்பினர்கள் ‘இந்திய கிராமங்களை இந்திய அரசமைப்புச் சட்டம், தமது அடிப்படை அலகுகளாக ஏற்க வேண்டும். கிராமங்கள் சொந்த சட்டம், நிர்வாகம், நீதித்துறை ஆகியவற்றுடன் தன்னாட்சி அதிகாரம் பெற்று இயங்க வேண்டும்' என்று பேசியபோது, அம்பேத்கர் மிகப் பொருத்தமாக பதிலளித்திருக்கிறார்.

‘இவர்கள் சொல்லும் கிராம தன்னாட்சி அமைப்புகள், இந்தியாவை சிதைத்துவிடும் தன்மை கொண்டவைகளாக இருக்கின்றன. கிராமங்கள் என்றால் என்ன? உள்ளூர் சுயநலத்தில் மூழ்கி, அறியாமையின் குகைகளைப் போல, குறுகிய சிந்தனையும் மதவாதமும் கொண்டிருப்பவைதானே?' அம்பேத்கர் பார்வையில் சொல்வதென்றால், கிராமத்தை மய்யப்படுத்திய சாதியொழிப்புப் பணியே இன்று முதன்மையானதாக நிற்கிறது.

*******************

‘எதைக் கண்டும் நீங்கள் பயப்படாதீர்கள்! நீங்கள் இப்போது வாழ்கின்ற வாழ்க்கையைவிட எதுவும் கொடுமை வாய்ந்ததாக இருக்கப் போவதில்லை’ அரசு ஒடுக்குமுறையின் காவலில் இருக்கும் தன் மகனுக்காகவும் அவனின் தோழர்களுக்காகவும் அணிதிரளும்படி, மக்களைப் பார்த்து ஒரு தாய் சொன்ன வார்த்தைகள் இவை. காவலர்களிடம் அடிபட்டுக் கொண்டே மக்சீம் கார்க்கியின் தாய் பெலகேயா, தன் மகன் பாவெலுக்காக இதைச் சொல்கிறார்.

இதைப்போன்றே ஒரு தாயை அண்மையில் ‘மனித உரிமைக்கான குடிமக்கள் நடுவம்' எனும் அமைப்பின் தொடக்க விழாவிலே பார்த்தேன். அவர் அற்புதம்மாள். பேரறிவாளனின் தாய். மரண தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் தன் மகனுக்காக மட்டுமின்றி, உலகெங்கிலும் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற அக்கறையுடன் பேசினார். ‘என்ன நடந்தாலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறதே இச்சமூகம்?’ என்று தன் உரையின் இடையிலே வேதனையோடு சொன்னார் அவர். இரண்டு தாய்களின் சொற்களும் அடிப்படையில் ஒரே பொருளைத்தான் கொண்டிருக்கின்றன. பெலகேயாவின் சொற்களுக்கு ரஷ்யாவின் மக்கள் திரள் செவிசாய்த்தது. இந்தியத் தாயின் சொற்கள் காற்றில் கலந்த அறைகூவலாகவே நின்று கொண்டுள்ளன.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் என் ஒன்பது வயது மகனோடு நகருக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தேன். சாலை திருப்பம் ஒன்றில், காவலர்களின் சோதனைச்சாவடி அருகிலேயே ஓர் இளைஞனை நையப்புடைத்துக் கொண்டிருந்தது ஒரு கூட்டம். நாங்கள் ஒன்றிரண்டு பேர் சொல்வதை அவர்கள் கேட்பதாயில்லை. பெரும்பாலான பொது மக்கள் வேடிக்கை பார்த்தனர். என் மகன் ‘எனக்கு பயமாய் இருக்கிறது, அழுகை வருகிறது’ என்றான். நான் உடனே வீடு திரும்பிவிட்டேன். வீட்டிற்கு வந்ததும் என் மகன் அவன் அம்மாவின் மடியில் சாய்ந்து ஓவென்று அழுதான். அவனாவது அழுகிறானே என்று எனக்கு ஆறுதலாக இருந்தது. நான் பொறுக்க மாட்டாமல் திரும்பவும் அந்த இடத்திற்குப் போனேன். தாக்கப்பட்டவன் ஆடைகளெல்லாம் கிழிந்து, பைத்தியக்காரனைப் போல் தன் இரு நண்பர்களுடன் போய்க் கொண்டிருந்தான். விசாரித்ததில் காதல் விவகாரம் என்று அறிந்து கொள்ள முடிந்தது.

தாக்குதல், அவமானப்படுத்துதல், ஒதுக்கி வைத்தல், கொல்லுதல் என எந்த மனித உரிமை மீறல்களுக்கும் இந்தியாவில் எதிர்ப்புக் குரல்கள் பெரிய அளவில் எழும்புவதில்லை. சாதியப் படிநிலைப்படுத்தப்பட்ட மதவெறியும், குறுங்குழுவாதமும் கொண்ட சமூகம் இந்தியச் சமூகம். இங்கே மனித உரிமை மீறல்களே சமூக நியதிகளாக உள்ளன. எனவேதான் அம்மீறல்கள் குற்றங்களாகக் கருதப்படுவதில்லை. பெண்களை ஒடுக்குவது, குழந்தைகளை வதைப்பது, தலித்துகளை கொல்வது அல்லது இழிவுபடுத்துவது என எல்லாமே இந்திய சனாதன சமூகத்தின் எழுதப்படாத சட்டங்கள்.

அதிகாரப்பூர்வமான அரசியல் அமைப்புச் சட்டம் இவைகளை குற்றம் என்றாலும், சட்டத்துக்கு உட்படாத சட்டங்களின்படி இவை குற்றங்களாகக் கருதப்படுவதில்லை. இந்த இழிநிலையு டன் அபாயகரமான ஓர் அம்சம் இணைந்து கொண்டுள்ளது. இந்தச் சட்டமில்லாத சட்டங்களுக்கு அரசும் நிர்வாகமும் துணை போகின்றன. இந்தச் சூழல் மனித உரிமைகளுக்கான மதிப்பற்ற சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது. இந்தியா முழுக்கவும் நாள்தோறும் நடக்கும் எண்ணற்ற மனித உரிமை மீறல்களில், ஒரு சில மீறல்களே ஊடகங்களில் வெளியாகின்றன.

கவுதம் ரவிதாஸ், ஒன்பது வயது தலித் சிறுவன். பீகாரின் அய்திரா கிராமத்தைச் சேர்ந்தவன். தன்னோடு படிக்கும் சாதி இந்து யாதவ மாணவன் ஒருவனை தவறுதலாக அடித்து விட்டதற்காக, அந்த யாதவ தந்தையால் கடுமையாக உதைக்கப்பட்டு மலத்தில் தள்ளப்பட்டான். ‘பீயைச் சாப்பிடச் செய்தே உன்னைக் கொன்று விடுவேன், சமார் மகனே!’ என்ற சொல்லிக் கொண்டேதான் உதைத்திருக்கிறான் அந்த யாதவ தந்தை.

பிட்டு, 13 வயது தலித் சிறுவன். பஞ்சாப்பில் உள்ள ஜனதா காலனியைச் சேர்ந்தவன். அவர்களின் குடியிருப்பின் வழியே பஞ்சாப் சண்டிகார் எல்லையில் சுவர் ஒன்று கட்டப்படுவதைத் தடுப்பதற்கு நடந்த போராட்டத்தில் அவனும் கலந்து கொண்டான். அவன் மத்திய சண்டிகாரைச் சேர்ந்த துணை நீதிமன்ற நீதிபதி ஒருவராலும் காவலர்களால் வீட்டுக்குள்ளிருந்து இழுத்து வரப்பட்டு தாக்கப்பட்டான்.

இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் முதலிடத்தில் வந்த அன்கூர் கார்க் என்கிற அந்த நீதிபதி அவனை உதைத்ததில், பிட்டுவுக்கு உடல் நலம் கெட்டு சிறுநீருடன் ரத்தம் கலந்து வெளியேறியது. அவனை அடித்ததோடு அல்லாமல் கலவரம் செய்ததாகவும், கொல்ல முயன்றதாகவும் வழக்குப் போட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளான் (‘தெகல்கா' மே 26, 2007). இந்த இரு நிகழ்வுகளும் படிக்காத மனிதன் முதல் மெத்தப்படித்த, உயர் பதவியில் இருக்கின்ற மனிதர்கள் வரை அப்பியிருக்கும் சாதியத் திமிரை காட்டுகின்றன.

நாட்டையே திரும்பிப் பார்க்கச் செய்த வேறொரு சம்பவம், குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள புகழ் பெற்ற மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக் கழக கல்லூரியில் நடந்திருக்கிறது. இந்து மத பழமைவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல் நிகழ்ச்சி அது. அக்கல்லூரியில் உள்ள நுண்கலைப் பாடத் துறையில் முதுகலை இறுதியாண்டு படிப்பவர் சந்திரமோகன் சிறீமன்துலா.

இவர் குஜராத் மாநில லலித் கலா அகாதெமி பரிசைப் பெற்ற ஓவியரும்கூட. அவர் தனது இறுதியாண்டு தேர்வு மதிப்பீட்டுக்காக உருவாக்கி, காட்சிக்கு வைத்திருந்த ஓவியங்களும், சிற்பமும் ஆபாசமாக இருப்பதோடு, மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக இருக்கிறது என்று சொல்லி சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவர் தாக்கப்பட்டிருக்கிறார். தாக்குதலை முன்னின்று நடத்தியவர், பாரதிய ஜனதாவின் உள்ளூர்த் தலைவரான நீரஜ் ஜென் என்பவர். மத உணர்வுகளைப் புண்படுத்தினார் என்று குற்றம் சாட்டி சந்திரமோகன் மீது வழக்குப் பதியப்பட்டு, அவர் நான்கு நாட்களுக்கு காவலிலும் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியால் அதிர்ச்சி அடைந்த மாணவர்களும், நுண் கலைத்துறை முதல்வர் சிவாஜி பணிக்கரும், இந்திய பாலுறவு ஓவியங்களையும், சிற்பங்களையும் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். சிவாஜி பணிக்கரை இடை நீக்கம் செய்து ஆணை பிறப்பித்திருக்கிறார், பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் மனோஜ் சோனி. குஜராத்தின் நிலையை அறிகிறபோது அதிர்ச்சியாக இருக்கிறது. மத உணர்வுகள், போலியான மதிப்பீடுகள், அர்த்தங்கள் மூலம் கற்பிக்கப்பட்டு வளர்க்கப்டுகின்றன. இதற்கு மாணவர்களும், இளைஞர்களும் இரையாகிக் கொண்டிருக்கிறார்கள்.

நரேந்திர மோடியின் இந்து பாசிச அரசு, எல்லா துறைகளிலும் இந்துத்துவமயமாக்கலை நிறைவேற்றியிருக்கிறது. அதற்கு பல்கலைக் கழகங்களும் தப்பவில்லை. எம்.எஸ். பல்கலைக் கழகம் மட்டுமின்றி, வேறு சில பல்கலைக் கழகத் துணைவேந்தர்களும் ஆர்.எஸ்.எஸ். சார்பு உடையவர்களாகவே நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். கல்லூரியின் தேர்வு மதிப்பீட்டுக்காக நடத்தப்பட்ட கண்காட்சியை, பொது மக்கள் பார்வையிட அனுமதியில்லை. ஆனால், துணைவேந்தர் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்களால் கண்காட்சி செய்தியும், அதில் வைக்கப்பட்டுள்ள ஓவியங்கள் குறித்த செய்தியும் வெளியே அனுப்பப்பட்டுள்ளன.

தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட தனது கல்லூரி மாணவர் சார்பாக துணைவேந்தர் நிற்கவில்லை. பல ஓவிய வரலாற்று நூல்களை எழுதியவரும், நுண்கலைத் துறையின் தலைவருமான சிவாஜி பணிக்கருக்கு வைக்கப்பட்ட தாக்குதல் குறிதான் இது என்றும் சொல்கிறார்கள். ‘தனக்கு வரம்பற்ற சுதந்திரம் உள்ளது என்று சொல்லிக் கொண்டு, ஒரு ஓவியர் மத உணர்வுகளைப் புண்படுத்துவதை பா.ஜ.க. அனுமதிக்காது’ என்று அத்வானி இதுகுறித்து சொல்லியிருக்கிறார். கலையின் குரல்வளையை நெறிப்போம் என்று எழும் மறைமுகக் குரல்தான் இது.

இந்து புராணங்கள், இதிகாசங்கள், வழிபாட்டு முறைகள், இலக்கியங்கள் என அனைத்திலும் ஆபாசமும் அருவருப்பும் நிறைந்திருக்கின்றன. தாந்திரீக மரபு வழிபாடுகளும், ஓவியங்களும் பாலுறவு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டதுதான். கோவில் சிற்பங்களும், ஓவியங்களும் ஆபாசம் என்று விலக்கத்தக்க வகைகளை கொண்டிருக்கின்றன. கஜுரோஹாவும், காமசூத்திராவும் இந்தியாவின் அடையாளங்களில் ஒன்று என்பதை மறுக்க முடியுமா? கலை வடிவங்களைப் புரிந்து கொள்ள முடியாத, சகிப்புணர்வு அற்ற கூட்டத்தினராலேயே இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

‘குஜராத்தை பொறுத்தவரை, இது வழக்கமானதுதான்' என்றிருக்கிறார் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங். பல்கலைக் கழக மானிய குழு விதிகள் 1956 (14)இன்படி, அப்பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப்படும் நிதியை முடக்கவும், வேறு சில நடவடிக்கைகளுக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், மய்ய அரசின் பிரதிநிதிகள் சொற்களை உதிர்ப்பதை மட்டுமே நடவடிக்கையாக கருதிக் கொண்டு விடுகிறார்கள்.

இதைப் போலவே வேறொரு மதவாத தாக்குதல், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடந்திருக்கிறது. அங்கு வீரேந்திர சிங் ராவனா என்ற விஸ்வ இந்து பரிசத் தலைவர் ஒருவராலும், அவரின் ஆட்களாலும் வால்டர் என்ற கிறித்துவப் பாதிரியார் கொலைவெறியுடன் தாக்கப்பட்டுள்ளார். கிறித்துவப் பாதிரியார்கள் இப்படி தாக்கப்படுவது, தமிழகத்தின் சில இடங்களிலும்கூட மெல்ல தலை தூக்கி இருக்கிறது. விடுமுறை வேதாகமப் பள்ளியை நடத்தியதற்காக, வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி, குடியாத்தம் பகுதிகளைச் சேர்ந்த சில பாதிரியார்கள் இந்து முன்னணி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். கவனத்தோடு நாமும் குறித்து வைத்துக் கொள்ள வேண்டிய செய்தி இது.

இந்தத் தாக்குதல்களையும், மனித உரிமை மீறல்களையும் நாடெங்கிலும் இருக்கின்ற மனித உரிமை ஆர்வலர்களும், செயல்பாட்டாளர்களும் கண்டித்திருக்கிறார்கள். குறிப்பாக, சந்திரமோகனின் தாக்குதலைக் கண்டித்து டெல்லி, மும்பை, பெங்களூர் எனப் பல நகரங்களில் அனைத்து துறை படைப்பாளிகளாலும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினரான மேனகா காந்தியும்கூட, தனது கண்டனத்தையும் அதிருப்தியையும் தெரிவித்து கடிதம் ஒன்றை அத்வானிக்கு எழுதியிருக்கிறார்.

தமிழகத்தின் படைப்பாளிகள், கலைஞர்கள் இடையில் மட்டுமே இறுக்கமானதொரு மவுனம் நிலவுகிறது. அது எவ்வகையான மவுனம் என்று தெரியவில்லை!