(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுப்பு III, 1943 ஆகஸ்ட் 13, பக்கம் 701.)

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்): ஐயா! பின்கண்ட தீர்மானத்தைப் பிரேரேபிக்கிறேன்:           

Ambedkar with MR Jayakar Tej Bahadur Sapru at Yerwada jail ‘போர்க்காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் பொறுப்பை முதலாளிகள் மீது சுமத்தவும் இந்த சுமையை ஈடுசெய்ய முதலாளிகளின் ஒப்பீட்டிற்கு தெரிவுக் குழு அறிவித்துள்ளப்படி வகை செய்யவுமான மசோதாவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளலாம்.”

            இந்த மசோதா சபையின் முன் இருந்தபோது, இந்த மசோதாவின் அடிப்படைக் கோட்பாடுகள் என்னால் ஏற்கெனவே விளக்கப்பட்டன. எனவே அதே விஷயத்தை மீண்டும் எடுத்துக் கூறுவது அவசியமில்லை. மூல மசோதாவில் தெரிவுக்குழு செய்த கோட்பாட்டின் மாற்றங்களை நான் சுருக்கமாக எடுத்துரைக்க விரும்புகிறேன்.

            தெரிவுக்குழு மூலமசோதாவில் பல மாற்றங்களை செய்திருந்த போதிலும் கோட்பாடு சம்பந்தப்பட்ட நான்கு விஷயங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டியவை என்பதை அவை கவனித்திருக்கும். முதலாவதாக, இந்த மசோதாவால் பயனடையதக்க (பயனடையும் தகுதிபெற்ற) தொழிலாளர்களின் வகையை விரிவுபடுத்தியுள்ளது; இப்பொழுது தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களையும் உட்படுத்தியுள்ளோம். இரண்டாவது மாற்றம் காப்பீட்டு நிதிக்கு செலுத்த வேண்டிய முதலாவது தவணையின் விகிதம் சம்பந்தப்பட்டது. ஒரு முதலாளியின் சம்பளப்பட்டியலில் ரூ.100க்கு எட்டு அணா என்ற விகிதத்தை மூல மசோதாவில் சர்க்கார் அனுமதித்திருந்தது; எட்டணா விகிதத்தை நான்கு அணாவாக தெரிவுக் குழு குறைத்துள்ளது. மூன்றாவது மாற்றம், காப்பீட்டு நிதியில் செலவு செய்யப்படாமல் மீதியாகியுள்ள தொகையை உபயோகிப்பது பற்றியது. மசோதாவில் முதலில் இருந்த யோசனை என்னவெனில், நிதியில் மீதியாகியுள்ள தொகை பொதுவருவாய் நிதியில் சேர்க்கப்பட்டு சர்க்காரின் பொதுநோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதாகும். தெரிவுக்குழு ஒரு மாற்றம் செய்துள்ளது; இந்த நிதிக்கு பங்களிப்பு செய்த முதலாளிகளுக்கு அவர்களின் பங்களிப்பு விகிதத்திற்கு ஏற்ப மீதித்தொகையைத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்பதாகும் அது. நான்காவது மாற்றம் ஒப்பந்த தொழிலாளர் பற்றியது. முதலாளி ஒரு ஒப்பந்தக்காரரை ஏற்பாடு செய்து, அந்த ஒப்பந்தக்காரர்தான் ஒப்பந்தக்காப்பு எடுத்து வேலையை முடிக்க தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துகிறார் எனில், அந்த ஒப்பந்தக்காரரை ஏற்பாடு செய்கிற முதலாளி இழப்பீடு தொகை கொடுப்பதற்கு பொறுப்பாளியாக இருப்பார்.

            செய்யப்பட்ட மாற்றங்களில் தெரிவுக்குழு பரிசீலித்த கோட்பாடுகள் இவை. அவை காண்பதுபோல் இந்த மசோதாவிற்கு பல திருத்தங்கள் பட்டியலில் உள்ளன. சில திருத்தங்கள் செயல்முறை சம்பந்தப்பட்ட விஷயங்கள்; தெரிவுக்குழுவின் பரிசீலனைக்குப் பின் வந்த மசோதாவிற்கு எதிராக எழுந்த விமர்சனங்களை எதிர் கொள்வதற்காக பிரதானமாக அவற்றை சர்க்கார் முன்வைத்துள்ளது; இந்த திருத்தங்கள் பற்றி அதிகம் வாதம் இருக்காது என்று நம்புகிறேன்.

            ஐயா! இந்த மசோதா பற்றி மேலும் நான் எதுவும் கூறுவது அவசியமென்று நினைக்கவில்லை. எனவே தீர்மானத்தை பிரேரேபிக்கிறேன்.

            திரு.தலைவர் (மாண்புமிகு சர் அப்துல் ரஹீம்): தீர்மானம் பிரேரேபிக்கப்படுகிறது.

            போர்க்காயங்களுக்குள்ளான தொழிலாளர்களுக்கு இழப்பீடு கொடுக்கும் பொறுப்பை முதலாளிகள் மீது சுமத்தவும், ‘தெரிவுக் குழு குறிப்பிட்டுள்ள படி, இந்தச் சுமையை ஈடுசெய்ய முதலாளிகளின் காப்பீட்டுக்கு வகை செய்யவுமான மசோதா பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.”

*           *           *

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: எந்த விரிவான பதிலும் தேவைப்படுத்துகிற மாதிரி இந்த விவாதத்தில் பங்குபெற்ற மதிப்பிற்குரிய உறுப்பினர்களால் எதுவும் எழுப்பப்பட்டது என்று நான் கருதவில்லை. கூறப்பட்ட விஷயங்களை நான் பரிசீலிக்கும் போது, இந்த மசோதா முதலாவதாக படிக்கப்பட்டபோது பொருத்தமாக இருந்திருக்கக்கூடிய சில விஷயங்கள் உள்ளன. இந்த விஷயங்கள் எழுப்பப்பட்டதை நான் ஞாபகத்தில் வைத்திருக்கிறேன்; அந்தக்கட்டத்தில் இவற்றுக்கு நான் பதிலளிக்க முயன்றதும் எனக்கு நினைவிருக்கிறது. எனவே, மீண்டும் அவற்றைப் பற்றி விவாதிப்பதற்காக மேலும் அதிக நேரத்தைச் செலவிட நான் விரும்பவில்லை.

            இந்த மசோதாவின் சில குறிப்பிட்ட பிரிவுகள் பற்றியும், நிகழ்ச்சி நிரலிலுள்ள திருத்தங்கள் பற்றியும், நேரத்தை சிக்கனமாக்கும் நலன் கருதி, இந்தக் காலக் கட்டத்தில் என் உரையின் எந்தப் பகுதியையும் செலவழிக்காமல் இருப்பது சிறந்ததாகுமென நினைக்கிறேன். இந்தத் திருத்தங்கள் பிரேரேபிக்கப்படும்சமயத்தில் இந்த விஷயம் எடுத்துக்கொள்ளப்பட்டால், உகந்ததாகவும் சரியானதாகவும் பொருத்தமானதாகவும் இருக்கும்.

            1திரு.தலைவர் (மாண்புமிகு சர்.அப்துல் ரஹீம்): திருத்தம் பிரேரேபிக்கப்படுகிறது.

(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுப்பு III, 1943 ஆகஸ்ட் 13, பக்கம் 710.)

                        “மசோதாவின் ஆறாவது விதியைக் கீழ்க்கண்டவாறு மாற்றியமைக்கவும்:

            “தொழிலாளர் இழப்பீடுச் சட்டம், 1923 பொருந்துகிற எல்லாத் தொழிலாளர்களுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும்.”

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ஐயா, இந்தத் திருத்தத்தை நான் எதிர்த்தாக வேண்டியவனாக இருக்கிறேன். எனது இந்த எதிர்ப்பு தொழிலாளர்பால் அனுதாபம் இல்லாததை அடிப்படையாகக் கொண்டதல்ல என்பதை எனது மதிப்பிற்குரிய நண்பர் திரு.ஜோஷி புரிந்து கொள்வார் என்று நினைக்கிறேன்.

            திரு.என்.எம்.ஜோஷி: அப்படி நான் கூறவில்லை.

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: அவரது தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், இந்த மசோதாவின் அனுகூலத்தை பெற உரிமை பெற்ற தொழிலாளர் எண்ணிக்கையில் நடைமுறையில் பெரிய அளவில் குறைவு ஏற்படும். ஐயா, முதலாவதாக, திரு.ஜோஷி கூறியதுபோல, இந்த விஷயத்தில் நாம் ஜாக்கிரதையாகச் செயல்பட வேண்டும்; ஏனெனில், இந்தப் பொறுப்பு சுமத்தப்படக் கூடிய, ஸ்தாபன ரீதியாக உள்ள முதலாளிகள் உள்னனர் என்பதை ஆதாரமாகக் கொண்டதுதான் இந்த சட்டம்; தவணைகளை வசூலிக்கும் பிரச்சினை இது; தெருவில் நடந்துபோகும் மக்களிடமிருந்து தவணைகள் வசூலிக்க முடியாது. ஒரு ஸ்தாபனம் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்தப் பொறுப்பை பிணைக்க முடியும்; எனவே, இந்த மசோதாவிற்கு உட்படுத்தப்படும் எண்ணிக்கையை பற்றி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இரண்டாவதாக கஷ்டம் என நான் கருதுவது என்னவெனில், உண்மையில் இந்த மசோதாவில் திரு.ஜோஷியின் திருத்தத்தை ஏற்றுக்கொண்டால் இப்பொழுது உட்படுத்தியிருக்கிற தொழிலாளர் பிரிவுகளை விரிவாக்காது. தொழிலாளர் இழப்பீடுச் சட்டத்தை நான் மிக ஜாக்கிரதையுடன் பரிசீலித்தேன்; மொத்தத்தில் ஒன்பது வேறுபட்ட வகையான தொழிலாளர்களுக்கு இந்தச்சட்டம் பயன்படுகிறது. இந்தச்சட்டத்தை எந்த பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்குப் பயன்படுத்த உத்தேசித்துள்ளோமோ, அவற்றை தொழிலாளர் இழப்பீடுச் சட்டம் எந்த பிரிவுகளைச்சேர்ந்த தொழிலாளர்களுக்கு பயன்பட்டு வருகிறதோ அவற்றோடு ஒப்பிட்டுப் பார்த்தால், ஒரே ஒரு வித்தியாசம் மட்டுமே இருப்பதாக நான் காண்கிறேன். தொழிலாளர் இழப்பீடுச் சட்டம் கட்டிட, பொதுத்துறைப் பணிகளுக்கு பயன்படுகிறது. இந்தப் பிரிவுத் தொழிலாளர்களுக்கு மட்டுமே இப்போதைய மசோதா பயன்தராது. மற்ற பிரிவினர் பொறுத்தவரை இரண்டுமே தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டமும் இந்த மசோதாவும் சமநிலையில் உள்ளன. தொழிலாளர் இழப்பீடுச் சட்டத்தை, அது உள்ளபடியே, பயன்படுத்தினோமென்றால், அத்துடன் தொழிலாளி பற்றி மேற்படிச் சட்டத்தில் போலவே விவரிக்க வேண்டிவரும் என்பது தெளிவு. எனது நண்பர் திரு.ஜோஷிக்குத் தெரியும் தொழிலாளர் காப்பீடுச் சட்டத்தில் தொழிலாளர் பற்றி கொடுத்துள்ள விவரிப்பு ஒரு வட்டத்திற்குட்பட்டதும் மட்டுப்படுத்துவதுமாகும் என்பது. தொழிலாளர் இனத்தில் அவ்வப்போது வேலைக்கு அமர்த்தப்படும் தொழிலாளர்களைச் சேர்த்துக் கொள்வதில்லை. இந்த மசோதா உட்படுத்தும் எந்த ஒரு குறிப்பிட்ட தொழிலிலும் அவ்வப்போது வேலைக்கு அமர்த்தப்படுபவர்களின் எண்ணிக்கை என்ன என்பதை ஒருவர் தெரிந்துகொள்ள முடியாது. குமாஸ்தாக்கள் அந்தஸ்த்தில் உள்ளவர்களின் பிரிவை தொழிலாளர் இழப்பீடுச்சட்டம் விளக்குகிறது என்பதையும் மதிப்பிற்குரிய எனது நண்பர் திரு.ஜோஷி ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். நிரந்தரமில்லாத சிப்பந்திகளையோ குமாஸ்தா அந்தஸ்தில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருப்பவர்களையோ இந்த மசோதா விலக்கவில்லை. திரு.ஜோஷி ஒன்றை ஒப்புக்கொள்வார் என்று நினைக்கிறேன்; அதாவது சில முக்கியமில்லாத தொழிலாளர் பிரிவு விடப்பட்டிருந்தாலும், தொழிலாளர் இழப்பீடுச் சட்டத்தில் உள்ளதைவிட, தொழிலாளர்கள் பற்றிய விவரிப்பு மிக விரிவானது. இந்த வாக்குறுதியின் மீது, மதிப்பிற்குரிய எனது நண்பர் இந்த திருத்தத்தை வாபஸ் பெறுவார் என நம்புகிறேன்.

            திரு.தலைவர் (மாண்புமிகு சர்.அப்துல் ரஹீம்):தீர்மானம் வருமாறு:

            ‘மசோதாவின் ஆறாவது விதியைக் கீழ்க்கண்டவாறு மாற்றியமைக்கவும்:

            “6. தொழிலாளர் இழப்பீடுச் சட்டம் 1923, பொருந்துகிற எல்லாத் தொழிலாளர்களுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும்.”

            தீர்மானம் ஏற்கப்படவில்லை.

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: எனது அடுத்த திருத்த எண் 5; அது பிரிவு 3ஐப் பொறுத்துள்ளது; அதைத் தள்ளி வைக்க வேண்டுமென அவை இப்பொழுது ஒப்புக்கொண்டிருக்கிறது.

            திரு.தலைவர் (மாண்புமிகு சர்.அப்துல் ரஹீம்): இது மற்ற திருத்தத்தின் மாற்றீடா? இந்தத் திருத்தம் நிறைவேறினால், அப்பொழுது பிரிவு 3க்கான 3வது திருத்தம் தேவையற்றதாகி விடும் என்று கருதலாமா?

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: இந்தத் திருத்தத்தை இப்பொழுது பிரேரேபிக்கிறேன்:

            “மசோதாவின் பிரிவு 6-ன் உப-பிரிவு(2) நீக்கப்படும்.”

            இந்தத் திருத்தத்திற்கு ஆதரவாக அதிக விளக்கம் எதுவும் தேவையில்லை. அவை ஞாபகத்தில் கொண்டால், இந்தப் பிரிவு, அதன் இப்பொழுதுள்ள வாசகம், ரயில்வே ஊழியர்களையும் விலக்குகிறது. இந்த மசோதாவின் முதல் வாசிப்பின்போது, இந்தப் பிரிவுப் பணியாளர்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது என்றாலும், தங்களின் சொந்த ஊழியர்களுக்கு இழப்பீடு கொடுப்பதற்கு சர்க்கார் போதுமான ஏற்பாட்டைச் செய்துள்ளது என்று நான் அவைக்கு எடுத்துச்சொன்னேன். துரதிருஷ்டவசமாக அவையின் சில உறுப்பினர்களுக்கு எனது உரை திருப்தியளிக்கவில்லை என்பது தெளிவு; நிர்வாக ரீதியில் பொறுப்பை எடுத்துக் கொள்வதற்குப் பதிலாக சட்ட ரீதியில் பொறுப்பு சுமத்தப்பட வேண்டுமென உறுதியாக உள்ளனர். ஐயா, இந்த ஆலோசனையை ஏற்றுக்கொள்வது சரி என்று நான் கருதினேன்; எனவே என்பெயரில் இருக்கும் பிரிவு 3க்கு திருத்தத்தை பின்பு நான் பிரரேபிக்கிறேன்.

            திரு.தலைவர் (மாண்புமிகு சர் அப்துல ரஹீம்): திருத்தம் பிரேரேபிக்கப்படுகிறது.

            ‘இந்த மசோதாவின் பிரிவு 6ன் உட்பிரிவு (2) நீக்கப்படும்”

            1திரு.தலைவர் (மாண்புமிகு சர் அப்துல் ரஹீம்): தீர்மானம் வருமாறு:

(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி III, 1943 ஆகஸ்ட் 13, பக்கம் 712)

            ‘பிரிவு 6, திருத்தப்பட்ட வடிவில், மசோதாவின் ஒரு பகுதியாகிறது.”

            தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

            பிரிவு 6, திருத்தப்பட்ட வடிவில், மசோதாவுடன் சேர்க்கப்படுகிறது.

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ஐயா, நான் பின்வருமாறு முன்மொழிகிறேன்:

            ‘மசோதாவின் பிரிவு 7ன் உபபிரிவு 5ன் பகுதி (G)யுடன் கீழ்க்கண்ட வாசகம் சேர்க்கப்படும்.

            ‘முன்பணமாகக் கொடுத்த தொகையை திருப்பிக் கொடுத்த பின் நிதியில் சேர்க்க வேண்டிய மதிப்பீட்டில், முதலாவது தவணையை விட முறையாகச் செலுத்தப்படும் தவணையின் விகிதம் அதிகமாக இல்லாதிருந்தால், பிரிவு II, உப-பிரிவு (2) கீழ் நிதிக்கு சர்க்கார் கொடுத்த தொகை பதினைந்து லட்சம் வரை இருக்கும்.”

            இந்தக் காப்பு வாசகத்தின் நோக்கம் தொழிலதிபர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களின் அச்சத்தைப் போக்கவே எந்த நோக்கத்திற்காக உத்தேசிக்கப்பட்டதோ அதற்கு நடைமுறையில் அவசியமில்லாதபோது முதலில் இந்த பிரிவில் இருந்த வாசகத்தை நாங்கள் பயன்படுத்தி எந்தத் தொகையையும் பெற்று நிதியை வளர்ப்போம் என்று அவர்கள் அச்சம்கொண்டனர். இந்த மசோதாவால் தாங்கள் பெறும் அதிகாரத்தை தேவையில்லாத நிதியைச் சேர்த்து அதன் மூலம் முதலாளிகளுக்கு ஒரு மாதிரியான சிரமத்தை ஏற்படுத்துவது சர்க்காரின் நோக்கமல்ல என்று முன்பு அவையில் வாக்குறுதி அளித்தேன். அச்சமயமும் எனது அறிக்கை அவர்களைத் திருப்திப்படுத்தவில்லை. இந்த பிரிவை சேர்ப்பதன் மூலம் அவர்களுக்குத் திருப்தியளிப்பது சிறந்தது என்று நான் எண்ணினேன். நிதியின் மீதியில் பதினைந்து லட்சம் ரூபாய் என்று வரம்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதைக் காணமுடியும்; வரி விதிப்பதற்கான சர்க்காரின் அதிகாரம் கண்டு பொறாமைப்படுபவர்களை திருப்திப்படுத்த எந்த உணர்வோடு இது செய்யப்படுகிறதோ அந்த உணர்வில் அவர்கள் இந்தத் திருத்தத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன். ஐயா, திருத்தத்தை பிரேரேபிக்கிறேன்.

*           *           *

            1திரு.தலைவர் (மாண்புமிகு அப்துல் ரஹீம்): திருத்தம் பிரேரேபிக்கப்படுகிறது.

(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி III, 1943 ஆகஸ்ட் 13, பக்கம் 713)

‘இந்த மசோதாவின் பிரிவு 9ன் உப-பிரிவு 2ல், 2வது வரியில் வரும், ‘தவறினால்’ என்ற சொல்லுக்கு பின்னால் "தேவைப்படும் அறிவிப்புக்கொடுத்து” என்ற சொற்கள் சேர்க்கப்பட வேண்டும்.

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ஏதாவது, அறிவிப்பு கொடுக்க வேண்டியது அவசியம் என்ற நியாயத்தை நான் புரிந்து கொள்கிறேன்; ஆனால், அத்தகைய அறிவிப்புக்கு மசோதாவில் வழிவகை செய்யப்பட்டிருப்பதாகத் தோன்றாவிடினும், அதற்கு ஒரு ஏற்பாடு செய்துள்ளது என்பதை மதிப்பிற்குரிய உறுப்பினருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரிவு 9ல் உள்ள முக்கியச் சொற்கள் ‘திட்டத்திற்கு ஏற்ப’ என்பதை அவர் புரிந்து கொள்வார். எனது நண்பர் பிரிவு 9-ஐ புரட்டி திட்டத்தின் விதிமுறைகளைப் பார்ப்பாரேயானால் – இந்த திருத்தத்தை அவர் முன் வைத்ததற்கு இது தான் காரணம் என வருந்துகிறேன் – அந்த ஏற்பாடு இருப்பதை அவர் காண்பார்; நகல் திட்டம் பிரிவு 1 (VIII) (ஏ) 15 நாள் அறிவிப்பு கொடுக்க வகை செய்கிறது. இந்த தகவலின்பேரில் எனது நண்பர் அவரது திருத்தத்தை திரும்பப் பெறுவார் என எண்ணுகிறேன்.

            1திரு.தலைவர் (மாண்புமிகு சர்.அப்துல் ரஹீம்): திருத்தம் பிரேரேபிக்கப்படுகிறது:

(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி III, 1943 ஆகஸ்ட் 13, பக்கம் 713)

            “மசோதாவின் பிரிவு 9ன் உட்-பிரிவு (2)ல், நாலாவது வரியில் உள்ள ‘தண்டிக்கப்படத்தக்கது’ என்ற சொல்லுக்குபின் ‘கொடுக்கப்பட வேண்டிய தேதியிலிருந்து 30 நாட்கள் கருணைக் காலத்திற்கு பின் என்ற சொற்கள் புகுத்தப்பட வேண்டும்.”

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ஐயா! திருத்தத்தை நான் எதிர்க்கிறேன். எனது நண்பர் சொல்ல விரும்புகிற விஷயத்தை ஏற்றுக்கொள்வதற்கான அவசியம் எதையும் நான் காணவில்லை. அவைக்கு நான் சுட்டிக்காட்டியபடி, அறிவிப்பிற்கு நாம் ஏற்கெனவே வழி செய்துள்ளோம்; அது 15 நாட்கள் கால அளவாகும். ஒரு பிடிவாதமான முதலாளிக்கு மேலும் அதிக கால அளவைக் கொடுக்கும் அதிகப்படியான சலுகைக்காக கற்றறிந்த எனது நண்பர் ஏன் வாதிட வேண்டுமென்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அறிவிப்புக்கு நமது திட்டத்தில் நாம் வழி வகுத்திராவிடில் கருணைக்காலம் கோருவதற்கான நியாயத்தை நான் புரிந்துகொண்டிருக்க முடியும். எனது கற்ற நண்பர் என்னைக் கூற அனுமதித்தால், அறிவிப்புக் காலத்திற்கும் சலுகை காலத்திற்கும் எந்த வேறுபாட்டையும் உண்மையில் நான் காணவில்லை.

            திரு. ஹூசேன் பாய் .லால்ஜி: ஐயா, மதிப்பிற்குரிய எனது நண்பர் திரு.அப்துல் ரஷீத் சௌதரி அளித்த வேண்டுகோள் நேர்மையானது என்று நான் நினைக்கிறேன்… என்ன செய்த போதிலும், என்ன கூறிய போதிலும், தொழில் வாழ்வில், நாம் அதிகமான பேர்களை உள்ளே கொண்டு வருவதற்கு, ஏதேனும் ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளது. 15 நாள் அறிவிப்பும் 15 நாட்கள் சலுகை காலமும் அனுமதிக்கப்பட்டால் அது பெரிய விஷயமாகாது. ‘அறிவிப்புக் காலம்’ என்பதை விட மொத்தத்தில் கருணைக்காலம் 30 நாட்கள் என்று கூறுவது எனக்குப் பிடிக்கிறது; இதற்கான எளிய காரணம், 15 நாட்கள் கருணை நாட்கள் என்பது சர்க்கார் தங்கள் கருணையில் கொடுக்கக்கூடிய ஒரு விஷயமேயாகும். எனவே, இந்த பரந்த உலகில் இந்தியாவில் மற்றவர்களைவிட நாம் அதிகம் நேர்மையற்றவர்கள் என்றும் நம்பும் நண்பர்களால் இவர் வழிநடத்தப்பட மாட்டார் என நியாய உணர்வுடன் நம்புகிறேன்.

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ஐயா! இந்தத் திட்டத்தில் கருணைக்காலம் 15 நாட்கள் அனுமதிக்கத் தயாராக இருக்கிறேன்.

*           *           *

            திரு.தலைவர் (மாண்புமிகு சர்.அப்துல் ரஹீம்): தீர்மானம் வருமாறு:

            ‘மசோதாவின் பிரிவு 11ன் உப-பிரிவு(1)ல் பின்கண்ட பிரிவு சேர்க்கப்படுகிறது:

‘தன்னால் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு இழப்பீடு கொடுப்பதற்கு மன்னர்பிரான் சர்க்காருக்கு எந்தப்பொறுப்பையும் நிறைவேற்ற நிதியிலிருந்து தொகை எதுவும் கொடுக்கப்படாமலிருந்தால்.”

            தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

            1மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ஐயா! நான் பின்வருமாறு பிரேரேபிக்கிறேன்:

(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி III, 1943 ஆகஸ்ட் 13, பக்கம் 714-15)

            “மசோதாவின் 11ன் உபபிரிவு(3) பதிலாக கீழ்க்கண்டவாறு மாற்றீடு செய்யப்படுகிறது:

            (3) நிதியிலிருந்து கொடுக்கப்பட வேண்டிய எல்லாத் தொகை களையும் கொடுக்கப்பட்டு கணக்குத் தீர்க்கப்பட்டு, நிதியிலுள்ள மீதித்தொகை நிதியாக அமைக்கப்பட்டு தொழிலாளர் நலனுக்காக, பயன்படுத்தப்பட வேண்டும்; மத்திய சர்க்காரால் நிர்வகிக்கப்பட வேண்டும்.

            நான் சுட்டிக்காட்டியதுபோல், இந்த மசோதா கொண்டு வரப்பட்டபோது ஆரம்ப நிலை என்னவெனில், மீதமுள்ள தொகை சர்க்காரின் பொது நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும், பொது நிதியில் இணைக்கப்பட வேண்டும் என்பதாக இருந்தது தெரிவுக் குழு இந்த பிரிவை மாற்றியது; மீதித் தொகை ஏதாவது இருந்தால் இந்த நிதிக்கு பங்களித்த முதலாளிகளுக்கு அவர்கள் அளித்த விகிதத்திற்கு ஏற்ப அது கொடுக்கப்பட வேண்டும் என்று மாற்றியது. நான் இப்பொழுது முன்வைத்துள்ள திருத்தம் இரண்டு நிலைகளுக்கும் நடுவழியிலுள்ள திருத்தமாகும். இந்த நிதி சர்க்காரால் பொதுநோக்கங்களுக்காக பயன்படுத்தக்கூடாது என்றும் முதலாளிகளுக்கு திருப்பித் தரக்கூடாது என்றும் இது ஆலோசனை கூறுகிறது; ஒரு அறக்கட்டளை நிதிபோன்று அது பாவிக்கப்பட்டு, தொழிலாளர் நலனுக்காக மத்திய சர்க்காரால் பயன்படுத்தப்பட்டு நிர்வகிக்கப்பட வேண்டுமென்று தெரிவுக்குழு கூறுகிறது. இது ஒரு நியாயமான சமரசம் என்றும் அவை தயக்கம் எதுவுமின்றி ஏற்றுக்கொள்ளும் என்றும் கருதினேன்; ஆனால், இந்த திருத்தம் வகுத்துக் காட்டிய நிலை பற்றி திருப்தியடையாத இந்த அவையில் சிலர் இருக்கிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. என் பெயரில் நிற்கும் இந்தத் திருத்தத்தை நான் நியாயப்படுத்தும் அடிப்படைகள் இவை: முதலாவதாக, காப்பீட்டு நிதிக்கு முதலாளிகள் எந்தெந்த பங்கை செலுத்துகிறார்களோ, நிதி இலாகாவால் அது வருவாய் என்று கருதப்பட்டு, நிதி இலாகா வரவு வைத்துக்கொள்ளும் என்பதை மறுக்க முடியாது. சாதாரண சூழ்நிலைமைகளில், வருமான வரியாகவும் உப வரியாகவும் இந்திய சர்க்காருக்குப் போக வேண்டும். எனவே, இந்த நிதியின் மிகப் பெரும்பகுதி உண்மையில் அவர்களுடையது என்று உத்தேசிக்கப்பட்டதை, அவர்கள் பெற்று பயன்படுத்துவர் என்று கூறுவதற்கு எனக்கு தயக்கம் எதுவும் இல்லை. இந்த நிலையை ஆட்சேபிப்பதற்கு முக்கியமானது எதுவும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால் நான் குறிப்பிட்டபடி, அந்த நிலையிலிருந்து பின்வாங்கி விட்டேன்; இந்த நிதியை பொதுவருவாயாகக் கருதாமல், தொழிலாளர் நலனுக்காகப் பயன்படுத்தக்கூடிய கௌரவ நிதியாகக் கருதப்படுவதை அனுமதிக்க நான் தயாராக இருக்கிறேன். நான் தாழ்வாரத்தில் கேட்ட வாதங்கள், இங்கு எடுக்கப்பட்ட நிலை பற்றி திருப்தியடையாத உறுப்பினர்கள் மீது எவை செல்வாக்கை ஏற்படுத்தினவோ அவை இதுதான் என்று எனக்குத் தோன்றுகிறது. வரப்போகும் பெரும் மாற்றங்களுக்கு வழிகோலும் சிறு மாற்றம் என்று அவர்கள் கருதுகிறார்கள் எனத் தோன்றுகிறது; அதாவது தொழிலாளர் நலனுக்காக உண்மையில் தொழில்துறை மீது வரியை சுமத்துவதற்கான முன்னோடி இது என்று கருதுகிறார்கள். இம்மாதிரியான அச்சம் கொண்டிருப்பவர்களின் மனத்தில் குடி கொண்டுள்ள தப்பெண்ணங்களை அகற்றவே நான் விரும்புகிறேன். தேவைப்படாத எந்த நோக்கங்களுக்காகவும் ஒரு நிதியைத் திரட்டுவதற்காக எந்த ஒரு தொழில்துறை மீதும் வரி விதிப்பதற்கு இந்த விதியை நியாயமற்ற முறையில் பயன்படுத்தும் எண்ணம் ஏதும் சர்க்காருக்கு இல்லை என்பதை முன்பே உறுதிபடக் கூறியிருக்கிறேன்; இந்த மாதிரி அச்சத்தை கொண்டுள்ள மதிப்பிற்குரிய உறுப்பினர்களுக்கு வாக்குறுதியளிக்கிறேன். ஒரு முன்மாதிரியை ஏற்படுத்துவதற்காக எந்த இரகசியமான முயற்சியை விரும்பவோ எடுக்கவோ சர்க்காருக்கு அவசியமில்லை. இங்கும் இங்கிலாந்திலும் சட்டங்கள் வகுக்க தேவையான அதிகாரம் உள்ளது – அதற்கான முன்மாதிரிகள் உள்ளன; இந்த அதிகாரத்தின்படி தொழிலாளர் நலனுக்காக, ஒரு விசேட வரியை விதிப்பது அரசுக்குச் சாத்தியமே. இந்த நாட்டில் நிலக்கரி வரி, கற்கரி வரி உள்ளன; அது தொழிலின் மீது விதிக்கப்படும் வரி; அது தொழிலின் நோக்கங்களுக்காகவும் அந்த தொழிலால் பயன்பெறுவோருக்குமாகவும் உபயோகப்படுத்தப்படுகிறது. இங்கிலாந்தில், நிலக்கரிச் சுரங்கங்கள் சட்டத்தில் ஒரு ஷரத்து உள்ளது; அதன்படி ஒரு விசேஷவரி அந்த தொழில் மீது விதிக்கப்பட்டது; இந்த வரியினால் வசூலிக்கப்படும் நிதி தொழிலாளர் நலனுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. ரகசியமான முன்மாதிரியை ஏற்படுத்த ஒரு ரகசியமான நோக்கம் எதுவும் இல்லை என்று மதிப்பிற்குரிய உறுப்பினர்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். எங்கள் நோக்கம் தொழிலாளருக்கு ஆதரவளிப்பது. தங்களிடம் வேலைசெய்யும் தொழிலாளர் நலனுக்காக திட்டங்களை ஆதரிக்கும் அக்கறையை எப்பொழுதும் வெளிப்படுத்திய பல முதலாளிகள் நான் முன்வைத்துள்ள இந்தத் திருத்தத்தை ஏற்றுக்கொள்ள ஏன் தயக்குகிறார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஐயா, என் திருத்தத்தை பிரேரேபிக்கிறேன்.

*           *           *

(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி III, 1943 ஆகஸ்ட் 13, பக்கம் 718)

            1மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ஐயா, மதிப்பிற்குரிய எனது நண்பர் திரு.சாப்மன் – மார்ட்டிமெர் சொன்ன விஷயம் இது என்று தோன்றுகிறது. நமது நோக்கத்தை மாற்றிக் கொண்டிருக்கிறோம் என்று அவர் கூறுகிறார். ஆரம்பத்தில், நிதி இழப்பீடு வழங்கும் நோக்கத்திற்குப் பயன்படுத்தப்படும் என்று இருந்தது. அதில் மீதமாகும் தொகையை நல்வாழ்விற்காக உபயோகிப்பது என்று இப்பொழுது எண்ணுகிறோம். நோக்கத்தில் இது ஒரு மாற்றம் என்பதில் சந்தேகமில்லை; ஆனால் இதில் முறையற்றதாக எதுவும் இல்லை என நான் இன்னமும் கூறுகிறேன். அவரை நான் சரியாகப் புரிந்து கொண்டால், அவர் நிலை இதுவென்று தோன்றுகிறது. பட்ஜெட்டில் ஏற்பாடு செய்யப்பட்டதை, அதாவது சட்டமன்றத்தில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக பணம் அங்கீகரிக்கப்பட்டால், அந்த நோக்கத்திற்கு உட்படாத மற்றொரு சேவைக்காக அதை செலவழிக்கக்கூடாது என்ற நிலைபெற்ற கோட்பாட்டை அவர் பின்பற்றுகிறார்கள் போல் தோன்றுகிறது என்பதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும். நான் முற்றிலும் உடன்படுகிறேன்; ஆனால் நிர்வாகச் செயல் சம்பந்தப்பட்ட விஷயம் இது. நிர்வாக நடவடிக்கையில் நிதியைப் பயன்படுத்துவதை நான் விரும்பவில்லை; முறையற்ற செயல் என்ற குற்றத்திற்கு உள்ளாக நான் விரும்பவில்லை என்பதால், வேறு ஒரு நோக்கத்திற்காக – அது நலன்கள் விளைவிக்கும் நோக்கம் என்பதை அவை முழுமையாக ஒப்புக்கொள்கிறது – மீதியை உபயோகிப்பதை அனுமதிப்பதை அங்கீகரிக்கக்கோரி அவைமுன் வந்துள்ளேன். நோக்கத்தை மாற்றுவதில் முறைகேடானது எதுவுமில்லை எனக் கூறுகிறேன்; ஏனெனில் நோக்கத்தில் மாற்றத்திற்காக இந்த அவையின் சட்ட ரீதியான அங்கீகாரத்தை நாம் கோரிக் கொண்டிருக்கிறோம்.

            அடுத்து, ‘சேமநலம்’ என்ற சொல், விரிவான பொருள் கொண்ட சொல் என்பது பற்றி எழுப்பப்பட்ட விஷயம்; அந்தச் சொல் விரிவான பொருள்கொண்டது என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். ‘சேமநலம்’ என்ற சொல்லில் எந்த விதமான இனங்கள் உட்படுத்தப்படும் என்பதைக் குறிப்பிட்டுக் கூறும் நிலையில் நான் இருக்கிறேன் என்பதோ இதுபற்றி அவையில் ஏகோபித்த கருத்தை எதிர்பார்க்க முடியும் என்பதோ எனக்குத் தெரியாது. எனவே, ‘சேமநலம்’ என்பதன்கீழ் எதெல்லாம் வரும் என்று குறிப்பிட்டுக் கூற முனைய மாட்டேன். ‘சேமநலம்’ என்பதன் பொருள் என்ன என்று தெரியாத மதிப்பிற்குரிய உறுப்பினர்களுக்கும், இந்த நிதியை நிர்வகிக்கும் பொறுப்பை சர்க்காருக்கு அளிக்கக்கூடாது என்று கருதும் உறுப்பினர்களுக்கும் நான் கூற விரும்புவது, இத்துடன் இந்த விஷயம் அவையின் கரங்களில் இன்னமும் விடப்பட்டுள்ளது என்பதை உணர்வார்கள் என்பதுதான். இந்த நிதியை எவ்வாறு பயன்படுத்துவது என்ற விஷயத்தை பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுப்ப அவைக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும்; ‘சேமநலம்’ என்றால் என்ன என்பதை அறிந்துள்ள பல உறுப்பினர்கள் அல்லது அதைப் பற்றி கருத்துகள் உள்ளவர்கள் பணத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை சர்க்காருக்குத் தெரிவிக்கலாம். ஐயா, எனது இந்தத் திருத்தத்தை ஏற்றுக்கொள்ளும்படி அவைக்கு ஆலோசனை கூறலாம்.

            திரு.தலைவர் (மாண்புமிகு அப்துல் ரஹீம்):

            ‘மசோதாவின் பிரிவு 3, உபபிரிவு (1) உடன் பின்கண்ட காப்பு வாசகம் சேர்க்கப்பட வேண்டும்:

‘பிரிவு 9ன் உபபிரிவு(1) கோருகிறபடி முதலாளி காப்பீட்டு ஒப்பந்தப் பத்திரம் எடுத்து, அந்தத்திட்டத்தின்படி அவரிடம் இருந்து பெற வேண்டிய தொகை முழுவதும் தவணைகள் மூலம் செலுத்தியிருந்தால், அல்லது, பிரிவு 12ன் உப பிரிவு (2)ன் விதிப்படி, முதலாளி காப்பீடு ஒப்பந்தப் பத்திரம் எடுக்க வேண்டிய தேவையில்லை என்றால், இந்த உபவிதியின் கீழ் முதலாளியின் சார்பில் அந்த முதலாளியின் இழப்பீடுத் தொகை செலுத்த வேண்டிய பொறுப்பை சர்க்கார் ஏற்று அதை நடைமுறைப்படுத்தும்.”

            தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ஐயா, நான் முன்மொழிகிறேன்:

            ‘இந்த மசோதாவின் 3வது பிரிவோடு, கீழ்க்கண்ட உப பிரிவு சேர்க்கப்பட வேண்டும்.

            “(3) இந்த பிரிவு மாட்சிமை தங்கிய மன்னர்பிரான் அரசைக் கட்டுப்படுத்தும்”

            இந்த மசோதாவின் முற்காப்பு விதிகளுக்கு மாட்சிமை தங்கிய மன்னர்பிரான் அரசை சட்டப்படி பொறுப்பாக்க நாங்கள் இப்பொழுது முயலுகிறோம் என்பதை ஏற்கெனவே விளக்கிக் கூறியுள்ளேன். இந்தத் திருத்தத்தை பிரேரேபிக்கிறேன்.

            1திரு.தலைவர் (மாண்புமிகு சர் அப்துல் ரஹீம்): திருத்தம் பிரேரேபிக்கப்படுகிறது.

            “மசோதாவின் 13வது பிரிவின் உட்பிரிவு 1ல் (பி) பகுதி நீக்கப்பட வேண்டும்.”

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ஐயா, என்னிடம் போதுமான அளவு பண்பாடு இல்லாமிருக்கலாம்; ஆனால் சராசரி அளவான அறிவுத்திறனுக்கு நான் உரிமை கோர முடியும். இந்த பிரிவுக்கு என்னிடமுள்ள அத்தகைய அறிவுத்திறனைப் பயன்படுத்துகிறேன். இதன் நோக்கத்தையும் அதற்கான அவசியத்தையும் மதிப்பிற்குரிய எனது நண்பர் முற்றிலும் தவறாகப் புரிந்துகொண்டார் என்று எண்ணுகிறேன். இந்த பிரிவின் நோக்கம் தகவலைப் பெறுவதும் தகவலைத் தேடிப் பெறுவதுமாகும். இந்த விஷயத்தில் கறாரான தகவல் ஏன் முற்றிலுமாக அவசியமாகும் என்பதை மதிப்பிற்குரிய எனது நண்பர் புரிந்துகொள்ளவில்லை. சர்க்காரின் கண்ணோட்டத்திலிருந்து மட்டுமல்லாமல் முதலாளியின் கண்ணோட்டத்திலிருந்துமே தகவல் அவசியம் என்பதை அவருக்குக் கூறவிரும்புகிறேன். உதாரணத்திற்கு ஏய்க்கும் இயல்புடைய ஒரு முதலாளி, குறையுள்ள தகவலை, பொய்யான தகவலை, அவரது சம்பளப் பட்டியலைக் குறைத்துக்காட்டும் தகவலை, அவரது கீழ் வேலை செய்யும் சிப்பந்திகளின் எண்ணிக்கையைக் குறைத்துக்காட்டும் தகவலை அளிப்பது முற்றிலும் சாத்தியமே. அவர் அளிக்கும் தகவலை ஆதாரமாகக் கொண்டுதான் காப்பீட்டுத் தவணைகள் நிர்ணயிக்கப்படும் மோசடி செய்யும் முதலாளிகள் செய்யும் தவறுக்காக நல்ல முதலாளிகள் தண்டவரிக்கும் தண்டனைக்கும் உள்ளாக்கப்படுவது சாத்தியமே. மோசடி செய்யும் முதலாளிகள் தவறான தகவல்கள் அளிப்பதன் மூலம் சட்டம் அவர்கள் மீதுசுமத்தும் பொறுப்பிலிருந்து தப்பிக்க முயலலாம். எனவே இந்தப் பிரிவு மிக முக்கியம்; முதலாளிகளின் நலன்களுக்காகவும் அவசியம். சரியான தகவல் கொடுக்கப்படவில்லை என்ற சந்தேகம் ஏற்பட்டாலோ தகவல் கொடுக்கப்படவில்லை என்ற தகவல் சர்க்காருக்கு கிடைத்தாலோ, சரியான தகவலைப்பெற சர்க்காருக்கு அதிகாரம் இருக்க வேண்டியது அவசியம் என்று சட்டம் வகை செய்வதற்கு எந்த ஆட்சேபணையும் இருக்க முடியும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சரியான தகவல் பெறுவது என்ற அடிப்படையில் தான் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. ஐயா, இந்தத் திருத்தத்தை நான் எதிர்க்கிறேன்.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)

Pin It