(மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுப்பு I, 1943 பிப்ரவரி 11, பக்கம் 128-131)

      மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்): மதிப்பிற்குரிய திரு.பாஜோரியா இந்த ஒத்திவைப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்ததற்கு நான் உண்மையிலேயே மிக மகிழ்ச்சியடைகிறேன்; இந்த நாட்டில் காகித நிலைமை பற்றிய உண்மைகளை இந்த அவையின் முன்பு வைக்க இது அரசுக்கு வாய்ப்பளிக்கிறது. ஐயா! இந்த அவையில் ஆற்றப்பட்ட உரைகளில், அரசாங்கம் பற்றி மிகக் கடுமையான விஷயங்கள் கூறப்பட்டன. உணர்ச்சியற்றதாக, சுயநலம் வாய்ந்ததாக, கடின உள்ளம் கொண்டதாக அரசாங்கம் இருப்பதாக அதன்மீது குற்றம் சாட்டப்பட்டது; கல்வி நிறுவனங்களுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. எக்காரணங்களால் இந்த ஆணையை அரசாங்கம் ஏன் பிறப்பிக்க வேண்டி வந்தது என்பது பற்றிய விவரங்களையும், நிலைமையை உடனடியாகவும் எதிர்காலத்திலும் தளர்த்துவதற்காக சர்க்கார் எடுத்துக் கொண்ட நடவடிக்கைகளையும் அவையில் எடுத்துரைக்க விரும்புகிறேன்.

     ambedkar 456அரசு வெளியிட்ட ஆணையின் தன்மை பற்றி சில தவறான கருத்துகள் எழுந்துள்ளன என்பதுபற்றி அவைக்கு சுட்டிக் காட்டிவிட்டு துவங்க விரும்புகிறேன். அரசாங்கத்தால் பிறப்பிக்கப்பட்ட ஆணை உண்மையில் காகித உற்பத்தியில் 90 சதவிகிதத்தை சர்க்கார் உரிமை கொண்டாடுகிறது என்பதையே காட்டுகிறது என உறுப்பினருக்குபின் உறுப்பினர் எழுந்து கருத்துத் தெரிவித்தனர். இது முற்றிலும் தவறான கருத்து என்பதை அவைக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன். காகிதக் கட்டுப்பாட்டு அதிகாரி வெளியிட்ட ஆணை தேவைக்கோரிக்கை ஆணையல்ல. காகித உற்பத்தியாளர்கள் அவர்கள் உற்பத்தி செய்யும் காகிதத்தில் 90 சதவிகிதத்தைச் சர்க்காரிடம் ஒப்படைக்கக் கட்டுப்பட்டவர்கள் என்று அந்த ஆணை குறிப்பிடுகிறது. இந்த ஆணையை ஒரு குறிப்பிட்ட நிலையில் காகித இருப்பைக் கட்டுப்படுத்தும் ஆணை என்று கூறலாம். நான் தெரியப்படுத்தும் வித்தியாசம் உண்மையான வித்தியாசம் என்று அவைக்குக் கூற விரும்புகிறேன்; இப்போதைய ஆணை கூறுவதெல்லாம், காகித உற்பத்தியாளர்கள் அவர்களின் உற்பத்தியில் 10 சதவிகிதத்திற்கு மேல் பொதுமக்களிடம் விற்பனைச் செய்யக் கூடாது என்பதே. மாறாக 90 சதவிகித காகிதத்தை, சர்க்காரிடம் ஒப்படைக்க வேண்டுமென்று அது கூறவில்லை. அது அடிப்படையான மிக உண்மையான தனித் தன்மைகொண்டது என்று நான் கருதுகிறேன்; இதை அவை கவனத்தில் கொள்ள வேண்டும்.

     பண்டிட் லட்சுமி காந்த மைத்ரா (ராஜதானிப் பிரிவு: முகமதியரல்லாத கிராமப்புறம்): நடைமுறையில் வித்தியாசம் என்ன?

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: 10 சதவிகிதத்திற்கு மேலும் சர்க்கார் விடுவிக்கலாம்.

     பாபூர் மைஜ்நாத் பஜோரியா: எவ்வாறு?

      டாக்டர் பி.என்.பானர்ஜி: சர்க்காருக்கு எப்பொழுது விவேகம் உதிக்கிறதோ அப்பொழுது?

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ஆணை எப்படியுள்ளதோ அப்படியே கூறினேன். ஆணைக்குப் பொருள் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கவில்லை நான். ஆணையின் ஷரத்துக்களை வரிசைக் கிரமமாக விளக்கிக் கொண்டிருக்கிறேன்.

     (ஒரு குறுக்கீடு இருந்தது, பல உறுப்பினர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.)

     தலைவர் (மாண்புமிகு சர்.அப்துல் ரஹீம்): ஒழுங்கு, ஒழுங்கு.

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: அவை கவனத்திற் கொள்ள வேண்டுமென்று நான் விரும்பும் இரண்டாவது விஷயம், இந்த ஆணை காகிதமில்களிடம் வழங்கப்பட்டுள்ளது. அது சரக்குச் சேமிப்பாளர்களிடம் சேர்ப்பிக்கப்படவில்லை. ஏற்கெனவே இவர்கள் சேமிப்புக் கிடங்குகளில் அதிகமான கையிருப்புகளை வைத்திருக்கிறார்கள். இரண்டாவதாக, இந்த ஆணை பிறப்பிக்கப்படும் முன்பு சேமிப்பாளர்களிடம் சேமிக்கப்பட்ட, அவர்களால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள காகித சேமிப்பிலிருந்து பெற்று தமது தேவையைப் பொதுமக்கள் பூர்த்தி செய்து கொள்வது இன்னமும் சாத்தியம். இந்த ஆணை பற்றி அவைக்கு ஞாபகப்படுத்த விரும்பும் மூன்றாவது விஷயம் இதுதான்: இந்த ஆணையின்படி, 10 சதவிகிதத்திற்கு மேல் விற்பனைசெய்ய காகிதக்கட்டுபாட்டு அதிகாரி மில்களை அனுமதிக்க முடியும். நவம்பர் 5 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஆணை இருந்தபோதிலும், பொதுமக்களின் தேவைக்கு 10 சதவிகிதத்திற்கு மேல் காகிதத்தை விடுவிப்பது சாத்தியம் என்று காகிதக் கட்டுப்பாட்டு அதிகாரி காண முடியுமென்றால், இந்த ஆணையின்படி அவர் அனுமதிப்பது சாத்தியம். அதற்குத் தடை எதுவுமில்லை. கட்டுப்பாடு, இடைஞ்சல் எதுவும் கிடையாது. அவ்வாறு செய்வதற்கு இன்னமும் வழி இருக்கிறது. சர்க்கார் வெளியிட்ட ஆணையில் உண்மையில் சம்பந்தப்பட்டது என்ன என்பதை அவைக்கு விளக்கி கூறிவிட்டதால், இந்த ஆணையை வெளியிட சர்க்காரை நிர்ப்பந்தித்த உடனடியான சூழ்நிலைமைகளை இந்த அவைக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.

     சுருக்கமாக, உண்மைகள் இவையே. முதல் ஆறு மாதங்களில் – அதாவது ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை, மத்திய எழுது பொருள்கள் அலுவலகம் முன்வைத்த காகிதத்திற்கான நமது தேவை 34,000 டன்கள் ஆகும். மத்திய எழுது பொருள்கள் அலுவலகத்தின் சார்பில் சர்க்காருக்கு 16,000 டன் காகிதத்தை மில்கள் ஏற்கெனவே ஒப்புவித்துள்ளன என்று தெரியவந்தது. 25,900 டன் வழங்க வேண்டுமென்று காகிதமில்களோடு நாம் ஒப்பந்தம் செய்துள்ளோம் என்பதை அவை கவனத்தில் கொள்ள வேண்டும். கொஞ்சம் கணிதத்தை அவை பயன்படுத்தினால், நம்முடைய மதிப்புகளின் படி முதல் ஆறு மாதங்களுக்கு நம்முடைய ஒப்பந்தப்படி காகித மில்களிலிருந்து கிடைக்க வேண்டியது 9,000 டன்கள் மட்டுமே என்பதைக் காணமுடியும்; இன்னமும் ஆறு மாதங்கள் கடக்க வேண்டும். இதன் விளைவாக, சர்க்கார் செய்தது இதுதான்: கடந்த 6 மாதங்களில் தெரியவந்த சூழ்நிலைகளின் வெளிச்சத்தில், தன் மதிப்பீட்டை சர்க்கார் மாற்றியமைத்தது. சர்க்கார் செய்த இரண்டாவது விஷயம் என்னவெனில், காகிதத் தேவைக்கான கோரிக்கை பற்றிய வழிமுறையை வலுப்படுத்தியது; இந்த ஆணை பிறப்பிக்கப்படும் முன்பு, சர்க்கார் சார்பில் காகிதத்திற்கான தேவையை முன்வைப்பதற்கு இரு வழிமுறைகள் இருந்தன என்பதை அவைக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்; ஒன்று மத்திய எழுதுபொருள் அலுவலகத்தின் கோரிக்கை – இது மத்திய சர்க்கார், மற்றும் வங்காளம், ஒரிஸ்ஸா, அஸ்ஸாம், வடமேற்கு எல்லை மாகாணம், மத்திய மாகாணங்கள் சார்பில் மற்றது மத்திய எழுதுபொருள் அலுவலகம் அல்லாத கோரிக்கை; மத்திய எழுதுபொருள் அலுவலகத்திற்கு உட்படாத மாகாணங்கள் மேற்படி மத்திய அலுவலகத்திற்கு அப்பால் சுதந்திரமாக வைக்கப்படுபவை – இந்திய சமஸ்தானங்கள், பாதுகாப்பு அச்சகம், வினியோக இலாகா, அரசு ரயில்வேக்கள் அல்லாதவை. சர்க்காருக்கு தேவையான காகிதத்திற்கான கோரிக்கையை இந்த இரு சுதந்திரமான முறைகளில் வைப்பது, காகிதத்தின் மொத்த தேவையைக் கறாராக கணிப்பதில் பல சிரமங்களை ஏற்படுத்தியது. இதனால், எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கை தேவைக்கு இருவழிகளில் உள்ள முறையை ஒரே முறையாக உறுதிப்படுத்துவதாகும்; மொத்த விஷயமும் மத்திய எழுது பொருள்களின் அலுவலகத்திடம் ஒருமுகப்படுத்தப்பட்டுள்ளது.

     அவையிடம் ஏற்கெனவே நான் தெரிவித்தபடி, காகிதத்தை அளவுக்கு அதிகமாக உபயோகிப்பதன் ஒப்பந்த அளவைவிட நடைமுறையில் அதிகமாக எடுத்துக்கொண்டதன் காரணமாக நெருக்கடிபோன்ற நிலைமை ஏற்பட்டுள்ளதைத் தெரிந்து கொண்டதும், நாங்கள் மதிப்பீட்டை மாற்றி அமைத்து, கோரிக்கை வைப்பதை மையப்படுத்தினோம்; அக்டோபர் இறுதியில் உள்ள நிலைமைப்படி நிர்ணயிக்கப்பட்ட புள்ளி விவரங்கள் வருமாறு:

 

டன்கள்

மத்திய எழுதுபொருள்கள் அலுவலகத்தின் கோரிக்கை அடுத்த ஆறு மாதத்திற்கு, அக்டோபர் முதல் 1943 மார்ச் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது

32,00

மத்திய எழுதுபொருள்கள் அலுவலகமில்லாத கோரிக்கை

9,500

மொத்தம்

41,500

     அந்த ஆண்டு மில்களின் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு, அக்டோபர் – மார்ச் இடைப்பட்ட காலத்தில், மில்கள் 47,575 டன் உற்பத்தி செய்யும் என்று கணக்கிடப்பட்டது; சர்க்காரின் தேவையான 41,500 டன் மில்களின் ஆறுமாத உற்பத்தில் 87 சதவிகிதமாகும். குத்துமதிப்பாக அது 90 சதவிகிதம்; எனவேதான் 90 சதவிகிதம் என்ற அளவை ஆணை கொண்டிருந்தது. நவம்பரில் இந்த ஆணையைப் பிறப்பிக்க வேண்டியது ஏன் அவசியமாயிற்று என்று அவை புரிந்து கொள்ளும். காகித உற்பத்தியை அதிகரிக்க என்ன நடவடிக்கைகளை சர்க்கார் எடுத்துள்ளது என்பதை அவைக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

     காகிதமில்கள் உற்பத்தியை அதிகரிப்பதை சாத்தியமாக்க அதிகப்படியான யந்திரங்களை இறக்குமதி செய்வதில் உதவுவது சர்க்காருக்கு சாத்தியமல்ல என்பதை அவை புரிந்துகொள்ளும் என்பது நிச்சயம். கப்பலில் கொண்டு வருவதன் கஷ்டம் நன்கு தெரிந்ததே; இது விஷயத்தில் ஏதாவது செய்வது என்பது சர்க்காரின் அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டது. எனவே, நமக்கு கிடைக்கக் கூடிய வசதிகளுக்கு உட்பட்டு காகித உற்பத்தியை அதிகரிக்க நாம் செய்யக் கூடியவற்றை நாம் திட்டமிட வேண்டும்; சர்க்கார் மேற்கொண்டுள்ள மூன்று விஷயங்கள் பற்றி அவையின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன்; உற்பத்தியை அதிகரிக்க, சர்க்கார் செய்த பயனுள்ளவை என்று குறிப்பிடக்கூடிய மூன்று நடவடிக்கைகள் பற்றி சபையின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். காகித உற்பத்தி அதிகாரி ஒருவரை சர்க்கார் நியமித்துள்ளது; எந்த வழிகள் மூலம் காகித உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்பதை கண்டறிய வேண்டியது அவருடைய பணி…

     மதிப்பிற்குரிய ஓர் அங்கத்தினர்: அந்தக் கணவான் யார்?

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: திரு.பார்க்கவா. இரண்டாவதாக, அத்தியாவசியமில்லாத உயர்ரக காகிதத்தை நிறுத்திவிட்டு சர்க்காரின் தேவைகளை சுலபமாக நிறைவேற்றக் கூடிய சாதாரண ரகங்கள் சிலவற்றை உற்பத்தி செய்வதுடன் சர்க்கார் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டது. மூன்றாவதாக, ஒவ்வொரு குறிப்பிட்ட மில்லும் தன்னிடமுள்ள யந்திரங்கள், உபகரணங்களுக்கு ஏற்ப எந்த ரகமான காகிதத்தை அதிக அளவில் உற்பத்தி செய்ய முடியும் என்பதைக் கண்டறிய அவை ஒவ்வொன்றுடனும் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளோம்.

     நிலைமையைத் தளர்த்துவதற்காக சர்க்கார் மேற்கொண்ட நடவடிக்கை, காகிதத்திற்கான பல்வேறு இலாக்காக்களின் கோரிக்கைகள் மீது தேவைக் குறைப்பைத் திணிப்பது, தன்னிச்சையாக குறைப்பைத் திணிப்பது, இந்தத் தேவைக் குறைப்புகள் வருமாறு: மாகாண மற்றும் சமஸ்தானங்களின் தேவைகள் தன்னிச்சையாக (அவற்றைக் கலந்து கொள்ளாமல்) 10 சதவிகிதம் குறைக்கப்பட்டது; இது 950 டன்னை மிச்சப்படுத்தும். மத்திய சர்க்காரைப் பொறுத்தவரை, காகிதத்தை பயன்படுத்தும் பல்வேறு இலாக்காக்கள் அளித்த வரவு செலவு திட்டத்தை அவற்றின் மதிப்பீட்டிலிருந்து திருத்தி கணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளது என்பதை எடுத்துக்காட்ட கீழ்க்கண்ட புள்ளி விவரங்களை அவையின் முன் வைக்கிறேன். பொதுத்துறை சார்ந்த இலாக்காக்களின் ஆரம்ப மதிப்பீடு 11400 டன்னாக இருந்தது; ஆறுமாத காலத்திற்கு அது 4600 டன்னாக குறைக்கப்பட்டது. பாதுகாப்பு இலாக்காவின் ஆரம்ப மதிப்பீடு 15,000 டன்னாக இருந்தது. அது 10,000 டன்னாக குறைக்கப்பட்டது. கிழக்கிந்தியக் குழு வழங்கீட்டுக் கவுன்சிலின் முதல்மதிப்பீடு 9400 டன்னாக இருந்தது; அது 7900 டன்னாகக் குறைக்கப்பட்டது; வினியோக இலாக்காவின் தேவை 3100 டன்னிலிருந்து 4500 டன்னாக உயர்த்தப்பட்டது; இது தொழிற்சாலைகளுக்கு உபயோகப்படுத்தப்படும் வர்த்தகக் காகிதம். இலாக்காக்களின் ஆரம்ப மதிப்பீடு, நான் குறிப்பிட்டிருந்தபடி, 39,100 டன்; ஆனால் திருத்தி அமைக்கப்பட்ட மதிப்பீடு 27,600 டன்னாகும். நான் ஏற்கனவே சுட்டிக்காட்டியபடி, மாகாணங்கள் மற்றும் சமஸ்தானங்களின் தேவைகளை குறைப்பதன்மூலம் 950 டன் மிச்சப்படுத்தப்பட்டது என்பதை அவை தயவு செய்து கவனத்தில் கொள்ள வேண்டும். அத்துடன் பல்வேறு இலாக்காக்களின் மதிப்பீடுகளை மாற்றியமைத்ததால் 11900 டன் பெற முடிந்தது. மொத்தம் மிச்சமானது 12850 டன். இப்பொழுது இந்தியாவில் பயன்படுத்தப்படும் காகிதத்தோடு இதை ஒப்பிட்டுப் பாருங்கள். திட்டவட்டமான புள்ளி விவரங்கள் இல்லை; அம்மாதிரி புள்ளிவிவரங்களை பெறுவதும் சாத்தியமல்ல. ஆனால் சர்க்கார் கொடுத்திருப்பதுபோல் இத்தகைய புள்ளி விவரங்கள் காண்பிப்பது என்னவெனில், இந்தியாவில் வருடத்திற்குப் பயன்படுத்தப்படும் காகிதம் சுமார் ஒரு லட்சம் டன்; 6 மாதத்திற்கு அது 50,000 டன் ஆகிறது. அச்சகக் கண்காணிப்பாளர் வெளியிட்ட ஆணையின்படி ஏற்கனவே 10 சதவிகிதம் பொதுமக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்பது சபையின் கவனத்தில் இருக்கும். அது பொதுமக்களுக்கு 5,000 டன்னை அளிக்கிறது. இப்பொழுது மீதப்படுத்தப்பட்ட அல்லது நான் எடுத்துக்காட்டியபடி குறைக்கப்பட்டதெனில் மிச்சமாகும் 12,850 டன்னையும் சேர்த்தால், மொத்தம் விடுவிக்கப்படும் காகிதம் 17,850 டன்; சமாதானகாலத்தில் பொதுமக்கள் உபயோகத்தில் இது 33 சதவிகிதமாகிறது என்பதை அவை காணமுடியும்.

     திரு.தலைவர் (மாண்புமிகு சர்.அப்துல் ரஹீம்): மாண்புமிகு உறுப்பினரின் நேரம் கடந்து கொண்டிருக்கிறது; வேறுவழி இல்லை.

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: வீணடிப்பை தவிர்ப்பதற்காக நாங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி அடுத்துக் குறிப்பிட விரும்பினேன். எனது நேரம் ஆகிக் கொண்டிருப்பதால், இந்த விவரங்களுக்குள் நான் போக விரும்பவில்லை. அவையின் கருத்து அதுவானால் நான் அவற்றைப் பத்திரிக்கைகளுக்கு அனுப்ப முடியும்.

     மதிப்பிற்குரிய அவைக்கு அடுத்து நான் குறிப்பிட்டுக் கூறப்போவது, அடுத்த ஆண்டிற்கு நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதாகும். அடுத்த ஆண்டிற்கு மதிப்பீடு 70,000 டன். அதில் நாம் செய்துள்ளது இது; காகிதம் தேவைப்படும் ஒவ்வொரு இலாகாவிற்கும் நாங்கள் கோட்டாவை நிர்ணயித்துள்ளோம். உதாரணத்திற்கு, செய்தி ஒலிபரப்புக் கட்டுப்பாட்டு அதிகாரியிடம் 260 டன்னுக்கு மேல் அவருக்கு கிடைக்காது என்று கூறியுள்ளோம். எதிர் பிரசாரத்துறை இயக்குனர் அலுவலகத்திற்கு 100 டன்தான் கிடைக்கும்; தேசிய போர்முனைக்கு 350 டன் கிடைக்கும். பொதுச் செய்தித் துறைக்கு 300டன். எனக்கு நேரம் கிடைத்திருந்தால், மற்ற விவரங்களையும் அவைக்கு அளித்திருக்க முடியும். அவைக்கு நான் கூற விரும்புவதெல்லாம் என்னவெனில், சர்க்கார் மெத்தனப்போக்கோடு நடந்துகொள்கிறது என்று கூறுவது நியாயமாகாது. மிச்சப்படுத்துவதற்கு போதுமான வாய்ப்பு இன்னமும் இருக்கலாம் என்பதை நான் மறுக்கவில்லை; மேற்கொண்டு எவ்வாறு சிக்கனம் கையாளப்படலாம் என்று பல்வேறு யோசனைகள் வழங்கிய அவை உறுப்பினர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். நடவடிக்கை எடுக்கப்படுவதற்காக இந்த யோசனைகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு நிச்சயமாக அனுப்பிவைப்பேன். சாத்தியமான நடவடிக்கைகளை சர்க்கார் எடுத்து வருகிறது என்று மதிப்பிற்குரிய உறுப்பினர்கள் திருப்தி கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)

Pin It