கடந்த நவம்பர் 7 2022 அன்று 103 ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தை ஆதரித்து உச்சநீதிமன்றம் அளித்த பெரும்பான்மை தீர்ப்பின் மூலம், ஜாதிய அடிப்படையில் ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டிற்கு உச்ச நீதிமன்றம் இறுதிச் சடங்கு செய்திருக்கிறது. ஜனவரி 9, 2019 அன்று, அதாவது வெறும் மூன்றே நாட்களில் EWS இட ஒதுக்கீடு மசோதாவை முழு மூச்சாக நிறைவேற்றிய அன்றே இறந்துவிட்டது. 10 ஆண்டுகளுக்கு முன்னர் நில உடைமை கொண்ட, வளமான, வலுவான ஜாட், பட்டிதார், மராத்தா, காபு ஜாதியினர் தங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று நாடு தழுவிய கோரிக்கையை வைத்த போதே இட ஒதுக்கீட்டுத் திட்டம் மரணப் படுகையில் விழுந்தது. இட ஒதுக்கீடு கருணையின் அடிப்படையில், தேர்தல் நலன்களுக்காக, வழங்கப்படுவது என்னும் எண்ணத்தை ஆதிக்க ஜாதியினர் ஒரு பொதுக் கருத்தாக மக்கள் மனதில் விதைத்துள்ளனர். இதுவரை உயர்சாதியினருக்கு இட ஒதுக்கீட்டில் இருந்த தடையை நீக்கி உச்சநீதி மன்றம் அவர்களின் ஏக போக ஆதிக்கத்திற்கு வழிவகை செய்திருக்கிறது. 

பொருளாதார நிலையை மட்டுமே அடிப்படையாக கொண்டு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற ஒருமனதான கருத்து, இட ஒதுக்கீடு ஜாதிய பாகுபாடுகளை களைவதற்கான கருவி என்ற பரிணாமத்தை ஒட்டு மொத்தமாக சிதைத்துவிட்டது. பொருளாதார நிலையை அனைவருக்கும் பொதுவான அளவுகோலாகப் பயன்படுத்துவதால் ஜாதிய அடிப்படையில் பாகுபாடும், பாதகமும் அடைந்தவர்களுக்கான நீதி மறுக்கப்படுகிறது.

brahmin 323இதற்கு முன்னர் வரையறுத்த 50% உச்சவரம்பை புறந்தள்ளும் உச்ச நீதிமன்றத்தின் பெரும்பான்மை முடிவு, 1921 ஆம் ஆண்டில் மெட்ராஸ் மாகாண அரசின் கம்யூனல் G.O. மூலம் வேலைவாய்ப்புகளை பலதரப்பட்ட ஜாதியினருக்கும் வகுப்பினருக்கும் வகுப்பாரி பிரதிநிதித்துவ அடிப்படையில் பிரித்துக் கொடுத்ததை பிரதிபலிக்க முயற்சிக்கிறது.

1951 ஆம் ஆண்டில் செண்பகம் துரைராஜ் வழக்கில், நீதிக்கட்சி அரசு பிறப்பித்த வகுப்புவாரி பிரதிநித்துவ ஆணையை, அனைவரும் சமம் என்னும் புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது எனக் கூறி நிராகரித்ததில் இருந்து துவங்கி, இப்போது அதன் உச்சகட்டமாக நவம்பர் 7 2022 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய EWS இட ஒதுக்கீடு செல்லும் எனச் வழங்கிய தீர்ப்பைப் பார்க்கலாம். 1950 ஆம் ஆண்டு ஜூன் மாதம், தான் ஒரு பார்ப்பன பெண் என்பதாலேயே தனக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் மறுக்கப்பட்டது என்று மனுத் தாக்கல் செய்ததை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின் படி பார்ப்பனர்களுக்கு உரிய இடங்கள் எல்லாம் அதிக மதிப்பெண் எடுத்த உயர் சாதியினருக்கு சென்று விட்டது. ஆனால் மற்ற வகுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் நிரப்பப்பட்டவர்கள் சிலரை விட, இவர் அதிகம் மதிப்பெண் பெற்றிருந்தார். இதை வைத்து, இவருக்கு ஜாதிய அடிப்படையைத் தவிர வேறு எந்த அடிப்படையிலும் இடம் கிடைக்காமல் போகவில்லை என்று மெட்ராஸ் உயர்நீதிமன்றம் நம்பியது. இதை எதிர்த்து அன்றைய மெட்ராஸ் மாநில அரசு செய்த மேல் முறையீட்டை உச்சநீதிமன்றம், இட ஒதுக்கீடு வேலை வாய்ப்புகளுக்கு மட்டுமே இருக்கிறது, கல்விக்கு இல்லை என்ற அடிப்படையில் நிராகரித்தது. அதை எதிர்த்து பெரியாரின் தலைமையில் தமிழ் நாட்டில் எழுந்த மிகப் பெரிய போராட்டத்தின் விளைவாக, அரசியலமைப்புச் சட்டத்தில் கல்வியில் இட ஒதுக்கீடு என்பது விட்டுப்போனதை, 1951 ஜூலை மாதம் முதல் அரசியலமைப்புச் சட்டதிருத்தத்தில், சட்டப்பிரிவு 15 இல் புதிதாக ஒரு உட்பிரிவு 4 சேர்க்கப்பட்டது. அதன்படி சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை முன்னேற்றுவதற்கான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த அரசுக்கு உள்ள அதிகாரம் பாதுகாக்கப்பட்டது.

இந்த 103 ஆவது சட்டத் திருத்தமும் அதே முறையை பின்பற்றி பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்சாதியினருக்கான இட ஒதுக்கீடு பாகுபாட்டினால் தான் கொடுக்கப்படுகிறது என்கிறது. ஆனாலும் இங்கே EWS இட ஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 15 இன் உட்பிரிவுகள் 4, 5 ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள வகுப்பினரைத் தவிர்த்து, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான சிறப்பு ஏற்பாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, EWS பயனாளிகள் யார் என்றால், ஏற்கனவே இட ஒதுக்கீடு பெற்றுக் கொண்டிருக்கும் SC, ST, OBC அல்லாத, பொருளாதாரத்தில் நலிவடைந்த குடிமக்கள். இந்த திருத்தத்தால் அரசியலமைப்பிற்கு எந்த குந்தகமும் இல்லை என்று உச்ச் நீதிமன்றம் கூறியதை ஆய்ந்தால், பெரும்பான்மை நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு 1951 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் வழங்கிய ஒருமனதாக தீர்ப்பின் சாரத்தை மாற்றி அமைக்கக் கூடியதாய் இருக்கிறது. வழக்குத் தொடுத்த செண்பகம் துரைராஜ் உயர்சாதி கோட்டாவிற்கு தகுதி பெறமுடிவில்லை என்றாலும் மற்ற ஜாதிய பிரிவினர்தளுக்கு வழங்கப்படும் இடங்களுக்கு போட்டி இடலாம் என்று 6 நீதிபதிகளின் சார்பாக தீர்ப்பெழுதிய நீதியரசர் சுதி ரஞ்சன் தாஸ் 1951 ஆம் ஆண்டுத் தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தார். SC, ST, OBC வகுப்பினருக்கு ஏற்கனவே இட ஒதுக்கீடு இருப்பதால், EWS இட ஒதுக்கீட்டுக்கு அவர்கள் தகுதி பெற மாட்டார்கள் என்று நீதியரசர் தினேஷ் மஹேஸ்வரி தன் இரண்டு சக நீதியரசர்களின் சார்பாக 2022 ஆம் ஆண்டுத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். EWS இட ஒதுக்கீடு ஜாதியாலோ, சமூக ரீதியாகவும் கல்வியிலும் பின்தங்கியதை அளவிடாமல், வெறும் பொருளாதார பின்னடைவை மட்டுமே அளவீடாக எடுத்துக்கொள்கிறது என்பதால் இந்தியாவின் அனைத்து குடிமக்களுக்கும் பொருந்தும் என்பதை கணக்கில் கொள்ளாமல் SC, ST, OBC வகுப்பினரை EWS இட ஒதுக்கிட்டில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளனர்.

இத்தனை போராட்டங்களுக்கு பின் இந்த EWS சட்டத்தின் முக்கிய குறிக்கோள் என்பது , இப்போது உச்சநீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட, இந்து உயர் ஜாதியினர்களுக்கான இடஒதுக்கீடு தான். இந்தியாவின் சக்தி வாய்ந்த, செல்வாக்கு மிக்க, அதிகாரம் பொருந்திய, எல்லா விதத்திலும் சொகுசாக இருப்பவர்களை தாஜா செய்யும் நீண்ட சரித்திரத்தின் ஒரு புதிய அத்தியாயம் EWS இட ஒதுக்கீடு திருத்தச் சட்டம்.

EWS திட்டத்தை மற்ற வறுமை ஒழிப்புத் திட்டங்களுடன் ஒப்பிட்டால், இது வறுமை ஒழிப்பிற்கான ஒரு வழி என்ற மாயை விலகும். சரியான தகவல்கள் இல்லாததால் 2011 ஆண்டுக்கு பிறகான வறுமை நிலையை கண்டு பிடிப்பதில் சிரமம் இருந்தாலும், மிக சமீபத்திய அனைத்திந்திய நிலவரப்படி கிராமப்புற வறுமை 972 ரூபாய்க்கு கீழேயும், நகர்ப்புற வறுமை 1407 ரூபாய்க்கு கீழேயும் கணிக்கப்பட்டுள்ளது. சராசரியாக மாதத்திற்கு ஒரு நபருக்கு 1200 ரூபாயாக இருக்கும் மாதச் செலவு எனக் கணக்கிட்டால், 5 பேர் இருக்கக்கூடிய குடும்பத்திற்கு வருடாந்திர செலவு 72,000 ரூபாயாக இருக்கிறது. அதாவது 5 பேர் இருக்கக்கூடிய குடும்பத்தின் ஆண்டு வருமானம் 72, 000 ரூபாயைத் தாண்டவில்லை என்றால், அக்குடும்பம் வறுமைகோட்டுக்கு கீழே உள்ளதாக கருதப்படும். EWS க்கு நிர்ணயித்திருக்கும் ஆண்டுக்கு 8 லட்சம் குடும்ப வருமானம் என்பது வறுமை கோட்டை விட 11 மடங்கு அதிகம். பொருளாதாரத்தில் 'நலிவடைந்தவர்கள்' என்பது நிச்சயமாக வறுமைக் கோட்டுக்கு கீழே இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. மேலும் OBC இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை, 8 லட்சம் ஆண்டு வருமானம் என்ற அடிப்படையில் ஒதுக்கப்படுகிறார்கள். EWS இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை, 8 லட்சம் ஆண்டு வருமானம் என்ற அடிப்படையில், இட ஒதுக்கீட்டிற்குள் வருகிறார்கள். தற்போதைய ஏற்றத் தாழ்வான சமூக நிலையை மறைமுகமாக ஆதரிக்கும் கருத்துக்களுக்கு எதிராக முறையான சமத்துவத்தை வலியுறுத்துவதன் மூலமும், கணிசமான சமத்துவத்தை ஊக்குவிப்பதன் மூலம் இல்லாதவர்களுக்கு நம்பிக்கையை வழங்குவதன் மூலமும் நமது அரசியலமைப்பு தொடர்ந்து போராடி வருகிறது. EWS இட ஒதுக்கீட்டின் ஆரம்பம் இந்தப் போராட்டத்தின் முடிவின் தொடக்கத்தைக் குறிக்கிறது.

- சதிஷ் தேஷ்பாண்டே, டெல்லி பல்கலைகழகப் பேராசிரியர்.

நன்றி: The Indian Express இணையதளம் (2022, நவம்பர் 9 ஆம் தேதி வெளிவந்த கட்டுரை)

தமிழ் மொழியாக்கம்: சுமதி, ஆஸ்திரேலியா

Pin It