சர்வாதிகாரத்தை புத்தர் சற்றும் விரும்பவில்லை. அவர் ஜனநாயகவாதியாகப் பிறந்தார்; ஜனநாயகவாதியாகவே இறந்தார். அவர் வாழ்ந்த காலத்தில் 14 முடியரசு நாடுகளும் 4 குடியரசுகளும் இருந்தன. அவர் சாக்கிய வம்சத்தைச் சேர்ந்தவர்; சாக்கியர்களின் அரசு ஒரு குடியரசாகும். அவர் வைசாலி நாட்டிடம் மிகவும் அன்பு கொண்டு, அதைத் தமது இரண்டாவது சொந்த நாடாகக் கொண்டிருந்தார். ஏனென்றால் அது ஒரு குடியரசாகும். அவர் மகாபரிநிர்வாணம் அடைவதற்கு முன் தமது கடைசி வர்ஷாவாசத்தை வைசாலியில்தான் கழித்தார். வர்ஷாவாசம் முடிந்தபின் அவர் தமது வழக்கப்படி வைசாலியை விட்டு வேறு எங்கேனும் செல்ல முடிவு செய்தார். சிறிது தூரம் சென்ற பிறகு அவர் வைசாலியைத் திரும்பிப் பார்த்து ஆன்ந்தாவிடம் கூறினார்: "ததாகதர் வைசாலியைப் பார்ப்பது இதுதான் கடைசிமுறை''. அந்தக் குடியரசிடம் அவர் அவ்வளவு அன்பு வைத்திருந்தார்.
அவர் முழுக்க முழுக்க சமத்துவத்தைப் பின்பற்றினார். ஆரம்பத்தில் புத்தர் உள்ளிட்ட எல்லா பிக்குகளும் கிழிந்த துணிகளால் ஆன ஆடைகளை அணிந்தார்கள். பிரபுத்துவ வகுப்புகளைச் சேர்ந்தவர்கள், பிக்கு சங்கத்தில் சேர்ந்து விடாமல் தடுப்பதற்காக இவ்வாறு விதி செய்யப்பட்டது. பின்னர் மாபெரும் மருத்துவரான ஜீவகன் முழுமையான துணியால் ஆன ஆடை ஒன்றைப் புத்தரை ஏற்றுக் கொள்ளச் செய்தார். புத்தர் உடனே ஆடை பற்றிய விதியை மாற்றி எல்லாருக்கும் அது பொருந்துமாறு செய்தார்.
புத்தரின் வளர்ப்புத் தாயான மகா பிரஜாபதி கோதமி, பிக்குணி சங்கத்தில் சேர்ந்திருந்தார். ஒரு முறை அவர் புத்தருக்குக் குளிர் ஏற்பட்டிருப்பதாகக் கேள்விப்பட்டார். உடனே அவர் புத்தருக்கென தலைக்குக் கட்டும் துணி ஒன்றைத் தயாரிக்கத் தொடங்கினார். அதைச் செய்து முடித்ததும் புத்தரிடம் கொண்டு சென்று அதை அவர் அணிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால், புத்தர் அதை ஏற்க மறுத்துவிட்டார். அது ஒரு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டால், சங்கம் முழுவதற்கும் அது அன்பளிப்பாக இருக்க வேண்டும் என்றும், சங்கத்தில் ஒரு உறுப்பினருக்கு மட்டும் அன்பளிப்பாக இருக்க முடியாது என்றும் அவர் கூறினார். தாயார் எவ்வளவோ மன்றாடிக் கேட்டும் புத்தர் அதை ஏற்க முடியாதென்று உறுதியாக மறுத்து விட்டார்.
பிக்கு சங்கம் மிகவும் ஜனநாயக முறையிலான அமைப்பைக் கொண்டிருந்தது. புத்தர், பிக்குகளில் ஒருவராகத்தான் இருந்தார். அதிகபட்சமாக, அவர் ஓர் அமைச்சரவையின் உறுப்பினர்களுக்கிடையே மூத்த அமைச்சரைப் போல் இருந்தார் எனலாம். அவர் ஒரு போதும் சர்வாதிகாரியாக இருக்கவில்லை. அவர் இறப்பதற்கு முன் இரண்டு முறை, அவருக்குப் பின் சங்கத்தை நிர்வகிக்க அதன் தலைவராக ஒருவரை நியமிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார். ஒவ்வொரு முறையும் அவர் மறுத்து விட்டார். தம்மம்தான் சங்கத்தின் உயர் தளபதி என்று அவர் கூறினார். அவர் சர்வாதிகாரியாக இருக்கவோ, சர்வாதிகாரியை நியமிக்கவோ இணங்கவில்லை.
வழிவகைகளின் மதிப்பு எப்படிப் பட்டது? யாருடைய வழிவகைகள் மேலானவையாகவும் நீண்டகாலம் நிலைத்துப் பயன் தருவனவாகவும் உள்ளன?
பொதுவுடைமைவாதிகள், தங்களுடைய மதிப்பு மிக்க குறிக்கோள்களை அடைவதில் வேறு மதிப்புள்ள குறிக்கோள்களை அழித்து விடவில்லை என்று கூற முடியுமா? அவர்கள் தனிநபர் உடைமையை அழித்து விட்டார்கள். இது, மதிப்புமிக்க குறிக்கோள் என்று வைத்துக் கொண்டாலும், அதை அடையும் செயல் முறையில் வேறு குறிக்கோள் எதையும் அழித்து விடவில்லை என்று பொதுவுடைமைவாதிகள் கூற முடியுமா? தங்களுடைய குறிக்கோளை அடைவதற்காக அவர்கள் எத்தனை பேரைக் கொலை செய்திருக்கிறார்கள்? மனித உயிருக்கு மதிப்பு கிடையாதா? உடைமைகளின் சொந்தக்காரர்களின் உயிரை எடுக்காமல் உடைமைகளை மட்டும் அவர்கள் எடுத்துக் கொண்டிருக்க முடியாதா?
சர்வாதிகாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். சர்வாதிகாரத்தின் குறிக்கோள் புரட்சி நிரந்தரமானதாக இருக்க வேண்டும் என்பதே. இது ஒரு மதிப்புமிக்க குறிக்கோள். ஆனால், இந்தக் குறிக்கோளை அடைவதில் வேறு எந்த மதிப்புமிக்க குறிக்கோள்களையும் தாங்கள் அழித்துவிடவில்லை என்று பொதுவுடைமைவாதிகள் கூற முடியுமா? சர்வாதிகாரம் என்றால் தன்னுரிமை இல்லாமை அல்லது நாடாளுமன்ற அரசு இல்லாமை என்று கூறப்படுகிறது. இரண்டு விதமான பொருள்களுமே தெளிவாக இல்லை.
நாடாளுமன்ற அரசு இருக்கும்போது கூட தன்னுரிமை இல்லாமல் உள்ளது. ஏனென்றால் சட்டம் என்பது இருக்கும்போது தன்னுரிமை என்பது இல்லை. சர்வாதிகாரத்துக்கும் நாடாளுமன்ற அரசு முறைக்கும் இதில்தான் வேறுபாடு உள்ளது. நாடாளுமன்ற அரசில் தன்னுரிமையின் மீது அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளைக் குறை கூறுவதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை இருக்கிறது. நாடாளுமன்ற அரசில் உங்களுக்கென கடமையும் உரிமையும் இருக்கிறது. சட்டத்துக்குக் கீழ்ப்படிவது கடமை; அதைக் குறை கூறுவது உரிமை. சர்வாதிகாரத்தில் கீழ்ப்படியும் கடமை மட்டும்தான் உண்டு; குறை கூறும் உரிமை கிடையாது.
‘பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு' : 3 பக்கம் : 451