அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற ‘வலிமையான மக்களாட்சி' நடைபெறும் நாடுகளின் ஜனநாயகக் கோட்பாடுகளிலிருந்து, இந்தியாவின் ஜனநாயகம் வேறுபாடு உடையதாகவும், மதிப்பு வாய்ந்ததாகவும் விளங்கி வருகிறது. சுதந்திரம், மேலும் சுதந்திரம் என்ற எல்லையில்லா தனிமனித சுதந்திரத்தை வலியுறுத்துகிறது, அமெரிக்க அரசமைப்புச் சட்டம். இங்கிலாந்து நாட்டிலோ சுதந்திரம் என்பது, மக்களின் உணர்வுகளில் கலந்தது. ஏனெனில், அம்மக்களின் சுதந்திரம் என்ற உரிமை, எந்த அரசமைப்புச் சட்டத்திலிருந்தோ, எவ்வகை நிறுவனங்களிலிருந்தோ பெறப்பட்டது அல்ல. அங்கு எத்தகைய அரசும், மக்களின் சுதந்திரத்தில் தலையிட்டதில்லை. ஆனால், அரசைத் தேர்வு செய்யும் உரிமை, நவீன அரசமைப்புக் காலத்திலும்கூட மக்கள் அனைவருக்கும் அங்கு வழங்கப்படவில்லை. அரசு, பிரபுக்களின் ‘தலையாட்டி'யாக செயல்பட்டு வந்ததினால், மக்களுக்கானதாக அது அமையவில்லை. எனவே, உண்மையான மக்களாட்சி என்பது மக்களுக்கானது மட்டுமே என்ற அடிப்படையுடன் இங்கிலாந்து மக்களாட்சி உருவாக்கப்பட்டது.
ஆனால், மேற்கண்ட இரண்டிலிருந்தும் இந்திய மக்களாட்சி வேறுபட்டுக் காட்சியளிக்கிறது. சுதந்திரத்தை தனது குடிமக்களுக்கு முதன்மைத் தருபொருளாய்க் கொண்டிருந்தாலும், இந்திய அரசமைப்புச் சட்டம் சமத்துவத்தையே தீவிரமாக வலியுறுத்துகிறது. ‘சுதந்திரம்' என்ற சொல் பெரும்பான்மையான இந்தியர்களுக்குப் புரிந்துகொள்ள முடியாததாகவே இருக்கிறது. அந்நிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றபோதுகூட, இந்திய சுதந்திரம் அனைத்து மக்களுக்கும் உரியதாக இருக்கவில்லை. காரணம், இந்திய மக்களின் சமூகச் சிக்கல்களைத் தீர்க்கக் கூடியதாக அது இல்லை.
சாதிப்படிநிலைச் சமூகம் அனுமதித்த எல்லைகளையே, ஒவ்வொரு தனிமனிதனும் தனது சுதந்திரத்திற்கான அளவீடுகளாக ஏற்றுக் கொண்டிருக்கிறான். இந்து வேத இதிகாசங்கள், பொய் நம்பிக்கைகளை மக்களிடம் பதியச் செய்து, பாகுபாட்டை ஏற்றுக் கொள்ளும் அடிமைகளாக; சுதந்திரத்தை விரும்பாத ஆமைகளாக மக்களை உருவாக்கி வைத்திருக்கிறது. இன்றளவும் இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்துகிற சுதந்திரத்தை, இந்தியக் குடிமக்கள் நிராகரித்து வருகிறார்கள். ஆனால், சாதி ஒழுங்குகள் அனுமதிக்கும் சுதந்திரத்தைத் தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறார்கள். இத்தகைய கொடுநெறி கோலோச்சும் சமூக அமைப்பில், நவீன சுதந்திர வேட்கையை மக்களிடம் உருவாக்கினால்தான், சுதந்திரத்தின் முழுப் பொருளையும் மக்கள் உணர்ந்துகொள்ள முடியும். மக்களின் சிந்தனை முறையிலும், பண்பாட்டுக் கூறுகளிலும் ஆதிக்கம் செலுத்தும் பாகுபாடான, பிரிவினைக் கருத்தாக்கங்களையும், அவற்றைத் தாங்கி நிற்கும் இந்துப் படிநிலைச் சமூக ஒழுங்குகளையும் அழித்தொழிப்பதனால் மட்டுமே மக்களை விடுவிக்க முடியும்.
எனவேதான், இந்திய அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவினர், மக்களுக்கு உண்மையான சுதந்திரத்தைப் பெற்றுத்தர அரசமைப்புச் சட்டத்தின் உயிர் நாடியாக ‘மக்கள் சமத்துவம்' என்ற வார்த்தையை பதியச் செய்தனர். இந்திய அரசமைப்புச் சட்டம் முழக்கமிடும் சமத்துவம் சமூகத்தில் அநீதியான சாதி ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி வைத்திருக்கும் சாதியத்திற்கு எதிரான புரட்சியாகும். அதில் விளையும் நீதியையே இந்திய அரசமைப்புச் சட்டம், முகப்புரையில் தனது ‘நீதி'யாகப் பறை சாற்றுகிறது. சட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள சமத்துவத்தை, மக்களிடையே மலரச் செய்யவே இந்திய ஜனநாயகத்தின் உரு, விகிதாச்சார அடிப்படையிலான பிரதிநிதித்துவ ஜனநாயகமாக வடிவமைக்கப்பட்டது. அனைத்து வாய்ப்புகளிலும் குடிமக்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதே அதன் நோக்கம்.
சாதியாலும் மதத்தாலும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ள பெரும்பான்மையான இந்திய மக்களின் சமூக நிலை, மேம்பாடடைய வேண்டுமெனில் ஒரு சமனாக்கக் கருவியை அரசமைப்பு முன்மொழிந்தாக வேண்டும். அந்த ‘சமனாக்கக் கருவி'யின் மறுபெயர்தான் ‘இடஒதுக்கீடு'. இந்திய மக்களாட்சியின் முகமும் அதுதான். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சமத்துவக் கோட்பாடாக, செயல் திட்டமாக அது முன்மொழிவது இடஒதுக்கீட்டைதான். இடஒதுக்கீட்டால் மட்டுமே ஆட்சியிலும், நீதி, நிர்வாகத்திலும் பாதிக்கப்பட்ட மக்களின் பங்கேற்பை உறுதி செய்ய முடியும். வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்களுக்கு சமத்துவமான வாய்ப்புகளை உருவாக்கித் தர முடியும்.
இன்னும் ஓர் உயர்வான தளத்தில் இடஒதுக்கீடுகள் வினையாற்றுகின்றன. பாதிக்கப்பட்ட அல்லது விலக்கி வைக்கப்பட்ட மக்கள், தேசத்தின் அனைத்துக் கட்டுமானங்களிலும் பங்கேற்க அது வழிவகை செய்கிறது. ஆட்சியிலும் நிர்வாகப் பணிகளிலும் நீதி பரிபாலனைகளிலும் அம்மக்கள் பங்கேற்பை உறுதி செய்வதன் மூலம், இந்திய மக்களாட்சி உயர்ந்து நிற்கிறது. இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள், கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் ஏற்கத் தகுந்த, இத்திட்டத்திற்கு மாற்றாக எதையும் முன்மொழியவில்லை.
உலகம் முழுவதும் மக்களாட்சி குறித்து அய்ந்து வகையான கருத்துகள் நிலவி வருவதைக் காண முடியும். ஒன்று, மக்களுடைய ஆட்சி; இரண்டு, மக்களைச் செயல் இலக்காகக் கொள்ளும் ஆட்சி; மூன்று, மக்களின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் ஆட்சி; நான்கு, மக்களுக்குப் பொறுப்பேற்கிற ஆட்சி; அய்ந்து, மக்களின் உடன்பாட்டுடன் மக்களால் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி. இந்த அய்வகை மக்களாட்சியிலும் ‘மக்களின் பங்கேற்பு' மிக முக்கியமான அடிப்படையாக இருக்கிறது. இந்தியாவில் நடைபெற்று வரும் ஆட்சி, தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் நடத்தப்பட்டு வருகிறது. அரசைத் தேர்வு செய்வதிலும், பிரதிநிதிகளை தங்கள் விருப்பம் போல் மாற்றிக் கொள்வதிலும் மக்களின் பங்கேற்பு மிக முக்கியமானது. அத்தகைய பங்கேற்பு ஜனநாயகத்திற்கு, வழியை உருவாக்கித் தரும் கருவியாக ‘இடஒதுக்கீடுகள்' இருந்து வருகின்றன.
கடந்த அய்ம்பதாண்டு கால இந்திய ஜனநாயகத்தின் செயல் தன்மை, சட்டப் பாதுகாப்புடன் உயர்ந்த விழுமியங்களுடன் உருவாக்கப்பட்டிருந்த போதிலும், தரம் தாழ்ந்த ஜனநாயகமே இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஆட்சியில் அமர வைக்கப்பட்டவர்கள், மக்களாட்சி எப்படி நடைபெறுகிறது என்பதைப் பற்றி கவலை கொள்ளவில்லை. எப்படி அதைத் தக்க வைப்பது என்ற சிந்தனையில்தான் காரியமாற்றினர். இந்திய ஜனநாயகத்தைத் தக்க வைப்பதற்கு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசமைப்புச் சட்டம் கொடுத்திருக்கும் உரிமைகளைப் ‘பலி' கொடுத்தனர். அது ஒன்றே மக்களாட்சியை இந்திய மண்ணில் தொடர்ந்து நடத்துவதற்குச் சிறந்த வழி என்பதே ஆட்சியாளர்கள் முடிவு.
"தெய்வங்களுக்காக நாம் கட்டிய மிக அற்புதமான கோயில்தான் நமது அரசமைப்புச் சட்டம்; ஆனால், கடவுள்களை நாம் நிர்மாணிக்கும் முன்னரே அந்தக் கோயிலுக்குள் சாத்தான்கள் குடியேறி, அதைத் தங்கள் கையகப்படுத்திவிட்டன'' என்பார் அம்பேத்கர். அந்த ‘சாத்தான்'களின் ஆதிக்கத்திலிருந்து அரசமைப்புச் சட்டம் இன்றுவரை விடுவிக்கப்படவில்லை. ஆட்சி, நிர்வாகம், நீதித்துறை இவை மூன்றிலும் ஏழை எளிய மக்களுக்கு எதிராக எழுதி வைக்கப்பட்டுள்ள விதிமுறைகளும், துணைச் சட்டங்களும் அரசமைப்புச் சட்டத்தின் ஆட்சி நடைபெற விடாமல் தடுத்து நிறுத்துகின்றன. நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை; துணைச் சட்டங்களும் விதிமுறைகளுமே கோலோச்சுகின்றன. அவற்றை உருவாக்குபவர்கள் சட்டவிரோத, மனமுதிர்ச்சியற்ற ஊழல்வாதிகளாகவும், தரம் தாழ்ந்த அரசியல்வாதிகளாகவும் இருக்கின்றனர். விதிமுறைகளும் துணைச் சட்டங்களும் நாடாளுமன்ற, சட்டமன்ற அவைகளில் விவாதிக்கப்படுவதில்லை. எதேச்சதிகாரத்துடனும் தன்முனைப்புடனும் அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவுகளும்கூட, நாட்டின் மக்களாட்சியில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது.
அரசியல் சட்டத்திற்கு விதவிதமான மறுவிளக்கங்களையும், உள்நோக்கங்களையும் கற்பித்துத் தீர்ப்பெழுதும் நீதிபதிகளின் தீர்ப்புரைகளும் ‘சட்டத்தின் அதிகாரம்' பெற்று விடுவதால், அவையும் மக்களின் உரிமைகளைப் பொசுக்கி வருகின்றன. பெரும்பாலான தீர்ப்புரைகள், நாட்டின் குடிமைச் சமூகங்களின் உரிமைகளுக்கு எதிராக அமைந்திருப்பதையும், அரசமைப்புச் சட்டத்தின் நோக்கங்களுக்கு விரோதமாக இயங்குவதையும் ஒப்புக் கொள்கிறார், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ண(ய்யர்). அத்தகையத் தீர்ப்புரைகளையே துணைச் சட்டங்களுக்கும், விதிமுறைகளுக்கும், உத்தரவுகளுக்கும் ஆதாரமாக்கிக் கொள்கிறது அதிகார வர்க்கம்.
அரசமைப்புச் சட்டப் பிரிவுகளின் உண்மையான பொருளை எளிதாக விளக்குவதும், அந்தப் பொருளின்பால் வழக்குகளுக்குத் தீர்ப்பெழுதுவதும்தான் நீதிமன்றங்களின் பணி. திருத்தி எழுதும் நோக்கில், முறைகேடான முறையில் உள்நோக்கத்துடன் மறுவிளக்கம் செய்வதல்ல. நீதிமன்றங்களின் எல்லை மீறல்கள், பொது நோக்கமற்ற, சுயநல ஆட்சியாளர்களுக்கும், நிர்வாக அதிகாரிகளுக்கும் ஊக்கமளிப்பதாக அமைந்துவிடுகின்றன. அந்த ஊக்கம், அங்கீகரிக்கப்பட்ட சட்டத்தின் ஆட்சியை வலுவிழக்கச் செய்துவிடுகின்றன.
அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 12, அரசு என்பதற்கான விளக்கத்தை அளிக்கிறது. அது, உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் ‘அரசு' என்ற வரையறையிலிருந்து விலக்கு அளித்து அவற்றை சுதந்திரப்படுத்துகிறது. ‘சட்டத்தின் ஆட்சியை' நிலை நிறுத்தவே நீதிச் சுதந்திரத்தை நீதிமன்றங்கள் பெற்றிருக்கின்றன. ஆனால், சட்டத்தின் ஆட்சியை, சட்டம் வலியுறுத்தும் சமத்துவ ஆட்சியை நீதிமன்றங்கள் நிலை நாட்டினவா? பன்னெடுங்காலமாக வரலாற்று ரீதியில் சமூகத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் ‘இழப்பீட்டு நீதியை' அதாவது இடஒதுக்கீடுகளை ஒழிக்க, மேலாதிக்கப் பார்ப்பன - பனியாக்களின் கையாட்களாக நின்று வாள் வீசிக் கொண்டிருக்கிறார்கள் நீதிபதிகள். மக்களாட்சியின் உரிமைகளை, நீதிமன்றங்களிலேயே புதைத்து வருகிறார்கள் அவர்கள்.
இருள் விரியும்