பிராமணர்கள் சமுதாயத்தை நான்கு பகுதிகளாக, வர்ணங்களாக, பிரித்தனர். பிராமணர்கள், ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்ற பிரிவுகள் அவை. இது சமுதாயத்தை நான்கு வர்ணங்களாகப் (ஜாதிகளாக) பிரித்துச் சமுதாயத்தில் பெரிய ஏற்றத் தாழ்வுகளை உண்டு பண்ணியது. பிராமணர்கள். பிரம்மாவின் வாயிலிருந்து சூத்திரர்கள் அவரது கால்களிலிருந்தும் பிறந்தனர் என்று அவர்கள் சொன்னார்கள்.
புத்த மதம் தோன்றிய பின்னர் சூத்திரர்கள் ஆட்சிக்கு வந்ததை இந்திய வரலாறு வெளிப்படுத்துகிறது. இது ஜனநாயகமும் சோஷலிச பாணி சமுதாயமும் இந்தியாவில் தோன்றுவதற்கு உண்மை யாகவே வழிவகுத்தது. இத்தகைய உயர்ந்த இடத்தை பெற்றிருந்த புத்தமதம் எப்படி இந்தியாவிலிருந்து மறைந்தது என்பது புரியாத புதிர்.
கி.மு. 274க்கு முன்னால் புத்த மதம் எப்படி இருந்தது என்பதைக் காட்ட எந்த ஆதாரமும் நம்மிடம் இல்லை. இருந்த போதிலும் அசோகரின் ஆட்சிக்காலத்தில் புகழின் உச்சியில் அது இருந்தது. இத்தகைய பிரபலமான மாபெரும் மதம் மறைந்து போனது ஒரு வேதனையான விஷயம் மெளரிய வம்சத்தின் கடைசி மன்னன் அவரது தலைமைத் தளபதியாலேயே கொல்லப்பட்ட பின் புத்த மதத்துக்குப் பெரிய எதிர்ப்புத் தோன்றியதாகத் தெரிகிறது. பிராமணர்கள் தங்கள் மதத்தைக் காத்துக் கொள்ள அவர்களுக்குக் கிடைத்த சட்டப் பூர்வ சம்பவம் இது.
ஆனால் இந்தச் சம்பவத்துக்கு வரலாற்றாசிரியர்கள் தகுந்த முக்கியத்துவம் கொடுக்க வில்லை. புத்த மத இலக்கியங்களை நான் படித்துப் பார்த்த போது, புத்தரின் சீடர்களில் 90 சதம் பேர் பிராமணர்கள் என்று கண்டேன். பிராமணர்கள் புத்தரிடம் விவாதம் நடத்தவும் வாதம் புரியவும் வந்தனர். அவர்கள் வாதத்தில் தோற்றபோது புத்தருக்கு ஆதரவாளர்களாக மாறினர். இறுதியில் புத்த மதத்தை ஏற்றுக்கொண்டனர். புத்த மத இலக்கியங்கள் இத்தகைய பல சம்பவங்களை நமக்கு எடுத்துச் சொல்கின்றன.
இவ்வாறாக, பிராமணர்கள் பெரும்பாலாரின் மத்தியிலே தழைத்துச் செழித்திருந்த புத்த மதம் எப்படி பிராமணர்களாலேயே அழிக்கப்பட்டது என்பது புரியவில்லை. இதற்குப் பிரதானமான காரணம் குலதெய்வ வழிபாடுதான் என்று நான் நினைக்கிறேன். இந்தியாவில் கிராம தெய்வம், தேசிய தெய்வம் ஆகியவை தவிர, குடும்ப தெய்வங்கள் இருக்கின்றன. பிராமணர்கள் மூலம் இந்தத் தெய்வங்கள் வழிபாடு செய்யப்படுகின்றன. இந்த தெய்வங்களுக்குப் பூசை செய்வதற்காகச் செல்கின்ற பூசாரிகள் இராணிகளின் மூலமாக அரசாங்க விஷயங்களில் செல்வாக்குச் செலுத்தத் தொடங்கினர்.
புத்த மதத்தைத் தழுவிய அசோகர் இந்தப் பழக்கத்தை ஒழித்து இக்கடவுளர்களின் சிலைகளையும் அகற்றிவிட்டார். “ஞானம் பெற்றவரான புத்தரை நான் வழிபடுவதால் வேறு தெய்வங்களை வழிபடத் தேவையில்லை” என்று அசோகர் சொன்னார். அசோகரின் இந்தச் செய்கையால் அநியாயமாக பெற்று வந்த தமது வாழ்க்கை வருமானத்தை இழந்த பிராமணர்கள் கோபமுற்றனர். தமது இந்த இழப்புக்கு அவர்கள் பழிவாங்க உறுதி கொண்டனர்.
குலபூஜை முறை ஒழித்துக் கட்டப்பட்டதால் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருந்த பிராமணர்கள், ஆலோசகர்களாக மட்டுமே இருப்பது என்ற தமது கொள்கையை விட்டுவிட்டு ஆட்சியைக் கைப்பற்ற முயன்றனர். இவர்களது நலம் விரும்பிகளான Bத்திரியர்களுடன் சேர்ந்து, புத்த மதத்துக்கு எதிராகப் பிராமணர் - Bத்திரியக் கூட்டணியை உருவாக்கினர். பிராமணியம் மேல் நிலைக்கு வந்ததால் புத்த மதம் வீழ்ச்சியுற அது ஒரு காரணமாயிற்று.
- இலங்கை கொழும்புவில் 1950 ஆம் ஆண்டு மே 25 முதல் ஜூன் 6 வரை நடைபெற்ற பெளத்தர்களின் உலகத் தோழமை மாநாட்டில் ஜூன் 6 ல் தோழர் அம்பேத்கர் ஆற்றிய உரைகளின் சுருக்கம்.