மெல்லுடலிகள் என்று நத்தைகளை அழைப்பார்கள். மென்மையான உடலை பாதுகாத்துக் கொள்ள அவை உடலைச்சுற்றி சுண்ணாம்பினால் ஆகிய கடினமான சங்கினை செய்துகொள்கின்றன. நத்தைகளுக்கு மேன்ட்டில் என்று வெளித்தோல் உண்டு. வளர்ந்து கொண்டிருக்கும் சங்கின் விளிம்பினை இந்தத் தோல் தொட்டபடி போர்த்தியிருக்கும். மேன்ட்டிலின் வேலை நேற்று எப்படி விளிம்பு இருந்தது என்பதை நினைத்துப் பார்ப்பதுதான். அதனடிப்படையில் இன்றைக்கு எவ்வளவு கேல்சிய கார்பனேட்டை சங்கின் விளிம்பில் திணிக்கலாம் எப்படி நேற்று விட்ட இடத்தில் நிறங்களை சேர்க்கலாம் என்று திட்டமிடுகிறது. கிட்டத்தட்ட இது மூளை மாதிரியே செயல்படுகிறது. வயதுக்கேற்றபடி சங்கின் விளிம்பினை பெரிதாக்குவதும் இப்படித்தான். கூம்பு போன்ற வடிவம் சங்கிற்கு எப்படிக் கிடைக்கிறது என்பது இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.