தொடர்புடைய படைப்புகள்

மா, பலா, வாழை என்பன நம் மூதாதையர்கள் சொல்லிவிட்டுச் சென்ற முக்கனிகள். நம் அன்றாட வாழ்வில் வாழைக்கு ஒரு முக்கியப் பங்கு உண்டு. திருவிழா, வீட்டு விசேஷத்திலும், ஏன் சாப்பாட்டுக்குக்கூட வாழையிலையையே நாம் பயன்படுத்தி வருகிறோம். விழவைக்காமல் எல்லோரையும் வாழவைக்கிற ஒரு அற்புதத் தாவரம் வாழை. ஒன்றிரண்டு வாழை மரங்களை நட்டு வைத்து வளர்ப்பவர்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஏக்கர் பரப்பில் வாழையை மட்டுமே நட்டு வைத்துப் பெரிய தோப்பாக வாழையை வளர்ப்பவர்களையும் நாம் நன்கு அறிவோம். ஆனால் இந்த மனிதன் 240 வித்தியாசமான வாழை இனங்களைத் தன் கண்ணின் மணியாகப் போற்றிப் பாதுகாத்து வருகிறார். விதவிதமான வாழை ரகங்கள் செழித்து வளர்ந்து நம்மை வரவேற்கிற ஒரு வாழைத் தோட்டம் இவருடையது. ஒரு வாழை வனம். வெளிநாட்டு ரகங்கள், கேரளா தவிர மற்ற இந்திய மாநில ரகங்கள் இந்த அரிய சேகரிப்பில் உள்ளன. இது வெறும் கதையில்லை. உண்மை. இவர் தோட்டத்தில் மட்டும் இல்லை வாழை மரங்கள். இவருடைய மனதிலும் சதாசர்வகாலமும் வாழை குலை தள்ளியபடி நிற்கிறது. வாழையை ஒரு தவம் போலப் புனிதமாகச் செய்யும் இவர் நம்மில் ஒரு அபூர்வமானவர்.Banana Farmer Vinod

(Image courtesy: Atlas Obscura)

வாழையையே வாழும் காலம் முழுவதும் ஆராதித்து வரும் இந்த மனிதர் 240 வெவ்வேறு வாழை இனங்களைத் தன் செல்லக் குழந்தைகளாகப் போற்றி வளர்க்கிறார். சிலருக்குச் சில விஷயங்களில் அதிக ஈடுபாடு இருக்கும். யானை வளர்ப்பதில், பூச்செடிகளை, ஏதாவது ஒரு பழமரத்தை வளர்ப்பதில்கூட சிலருக்கு அதிக நாட்டம் இருக்கும். ஆனால் இந்த மனிதரோ 240 வகையான வித்தியாசமான இன வாழைகளைத் தன் வனத்தில் வைத்திருக்கிறார். அவற்றில் சில தேசிய இனத்தைச் சேர்ந்தவை. இந்தியாவின் பல மாநில வாழை ரகங்களும் இங்கே இருக்கின்றன. வாழையின் மீது இருக்கும் எல்லையில்லாத காதலால் இதில் மனம் நிறைய மகிழ்ச்சி காண்கிறார்.

இந்தியாவில் இருக்கும் பல ஆராய்ச்சி நிலையங்களிலும்கூட இந்த அளவுக்கு வித்தியாசமான வாழை இனங்கள் இருக்குமா என்பது சந்தேகமே. இவர் 12 வயதில் இருந்தே வாழையின் மீது பாசமும், நேசமும் கொண்டவராக வாழ்கிறார். அப்போது அவர் நட்டு வளர்த்தது நேந்திரம் வாழை. அன்று முதலே வாழை விவசாயத்தில் ஒரு கட்டுக்கடங்காத விருப்பம் இருந்தது. அன்று விதவிதமான வாழை ரகங்களைப் பற்றித் தெரிந்தவர்களோ அல்லது அதைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள வசதிகளோ எதுவுமில்லை. 1952ல் ஒரு மலையாளி எழுதிய ‘தி மோனார்க் ஆஃப் மெட்ராஸ் பனானா’ (the monarch of Madras banana) என்ற புத்தகத்தை இணையதளத்தில் இருந்து எடுத்தார். அந்தப் புத்தகத்தில் அதை எழுதியவர் 60க்கும் மேற்பட்ட வாழை ரகங்களைப் பற்றிச் சொல்லியிருந்தார். ஒவ்வொரு பிரதேசத்திலும் அன்றிருந்த வாழை ரகங்கள், சிறப்புகள் பற்றி அதில் எழுதப்பட்டிருந்தது. அவற்றைத் தேடிப் போக ஆரம்பித்தார்.

பின்னர் வலைதளத்தில் ஒவ்வொரு வாழையை, அதன் இனத்தைப் பற்றியும், அது வளரும் இடத்தைப் பற்றியும் தேடிப் பார்த்தபோதுதான் பல ரக வாழை மரங்கள் காலம்காலமாகப் பல பிரதேசங்களில் வளர்க்கப்பட்டது பற்றி அறிந்தார். பின்னர் அந்தந்தப் பகுதியில் இருக்கும் விவசாய அலுவலர்களைத் தேடிப் போக ஆரம்பித்தார். விவசாயப் பல்கலைக்கழகங்கள், விவசாயிகள் என்று ஒருவரை விடாமல் இவர் தான் கண்டறிந்த வாழை ரகங்களை அவர்களிடம் இருந்து பெறுவதற்காக முயற்சி செய்தார். வலைதளமும் இதற்கு உதவியது. வலைதளத்தை வைத்துக் கொண்டு வாழ்க்கையைப் பாழாக்கிக் கொண்டிருக்கும் இன்றைய சமுதாயத்தில் இவர் ஒரு வித்தியாசமானவர். இப்படி ஒன்று ஒன்றாகச் சேர்ந்து இந்த அளவுக்கு 240 வாழை இனங்கள் இவருடைய தோட்டத்துக்கு வந்து சேர்ந்து அந்த இடத்தை ஒரு வனமாக, வாழைக்காடாக மாற்றியது.

கேரளத்தில் இருந்து வாழை விதைகளை எடுத்துக் கொண்டு இவர் வடஇந்தியாவுக்குச் சென்று அங்கிருந்தவர்களுக்குக் கொடுத்துவிட்டு அங்கிருந்த வாழை ரக விதைகளை வாங்கி வந்து நட்டு வளர்த்தார். இந்த விதத்தில் நமது நாட்டின் ஒற்றுமையை நிலைநாட்ட முடியும் என்ற ஒரு புதுவழியை இவர் நம் எல்லோருக்கும் காட்டியுள்ளார். ஒவ்வொன்றாகச் சேர்ந்த இந்த வாழைக் குடும்பம் இப்போது 240 அங்கங்கள் கொண்ட ஒரு பெரிய குடும்பமாக ஆகியிருக்கிறது. இந்த 240 இன வாழைகளின் இயல்புகள், இந்தப் பழங்களின் சுவை, இவற்றில் பூ பூக்கும் காலம், பழம் பழுக்கும் நேரம் போன்றவற்றை எழுதிப் பாதுகாத்து வைத்திருக்கிறார். எந்த எந்த இடத்தில் எந்த எந்த இன வாழைகளை நட்டிருக்கிறார், அந்த ரகம் எங்கிருந்து கிடைத்தது போன்ற விவரங்களையும் இவர் சேகரித்து வைத்திருக்கிறார். எர்ணாகுளத்தில் கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றை இவர் நடத்தி வருகிறார். விவசாயத்துடன் எந்த ஒரு தொடர்பும் இல்லாத இவர் தான் பாசத்தோடு பல பல இடங்களில் இருந்து கஷ்டப்பட்டுச் சேகரித்து வந்த வாழை ரகங்களைப் பற்றி குறிப்புகளை எழுதி வைக்கிறார்.

வாரம் இரண்டு மூன்று தடவை மட்டுமே இவர் இதற்காகவே திருவனந்தபுரத்தில் இருக்கும் பாறசாலை தோட்டத்திற்கு வருகிறார். இந்த வாழை ரகங்கள் பற்றி எல்லாம் விரிவாக எழுதி ஒரு புத்தகமாக வெளியிட வேண்டும் என்று விரும்புகிறார். இந்த வாழை வனம் விவசாயப் பல்கலைக்கழக மாணவர்கள், சாதாரணப் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், வாழை ஆராய்ச்சியாளர்கள் போன்ற பலரும் வருகிறார்கள். அறிவைப் பெற்றுச் செல்கிறார்கள். இது இப்போது ஒரு வாழைப் பள்ளிக்கூடம். வாழைகளுக்காக ஒரு இணையதளத்தை ஆரம்பித்திருக்கிறார். அதில் வாழைமரம் ஒன்று குலையோடு நிற்கும் காட்சிக்கு அப்புறம் பல ரக வாழைகள் பற்றியும், அவற்றின் பல்வேறு சிறப்புகள் பற்றியும் விரிவாக எழுதியிருக்கிறார். வாழைக்காகத் தன் வாழ்நாள் முழுவதையுமே அர்ப்பணித்து வருகிறார். ஒரு அறிவியலாளரைப் போல ஆராய்ச்சி மனதுடன் கண்டு, செய்து வருகிறார். ஒரு விவசாயப் பல்கலைக்கழகமோ அல்லது ஒரு வேளாண் ஆராய்ச்சி நிலையமோ செய்ய வேண்டியதை இவர் ஒரு தனிநபராக இருந்து கொண்டு செய்கிறார். இது ஒரு பல்லுயிர்ப் பாதுகாப்பு.

இங்குள்ளவற்றின் பழங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு தனிச்சுவை இருக்கிறது. இலைக்காக மட்டும் போற்றப்படும் மரங்கள் இங்குண்டு. அலங்காரத்துக்காக வளர்க்கப்படும் ரகங்களும் இங்கு உள்ளன. மருந்துக்காக வளர்க்கப்படும் வாழைகளும் இந்த வாழை வனத்தில் இருக்கின்றன. அதிசயிக்க வைக்கும் ரகங்களும் இங்கு உள்ளன. இந்த வாழைத் தோட்டம் வாழைக்கே ஒரு அகராதியைப் போலப் பயன்படுகிறது.

வாழை முளைத்து வருவதற்குக்கூட வித்தியாசமான சமயங்கள் உள்ளன. நேந்திரம் என்றால் 10 முதல் 20 நாட்களுக்குள் முளைத்து வரும். கப்பை வாழை 30 முதல் 45 நாட்கள் வரை முளைக்கக் காலம் எடுத்துக் கொள்ளும். நேந்திரம் முதலில் குலை தள்ளும். சிவிரோஸ் என்ற இனம் இருப்பதிலேயே முதலில் பழங்களுடன் குலைகளாகிறது என்றாலும் நாட்டு இனமான நேந்திரம்தான் 5 முதல் 6 மாதங்களுக்குப் பின் குலையை உருவாக்கும். ஒன்பதாம் மாதத்தில் அதை வெட்டலாம். கப்பை வாழை 9 முதல் 12 மாதங்கள் வரை எடுக்கும். இதில் 12 முதல் 14 மாதங்களில் குலை வெட்டலாம். இப்படி ஒவ்வொன்றிலும் வித்தியாசமான காலநேரக் கணக்குகள் இருக்கின்றன. இரண்டரை ஏக்கர் இடமும், இதுதவிரப் புறம்போக்கு இடமும் இவருக்கு இருக்கிறது. இவருடைய வாழை வனம் 60 முதல் 70 சென்ட் இடத்தில் அமைந்துள்ளது.

திருவனந்தபுரம் சிவந்த கப்பை வாழை, திருவனந்தபுராசம் இவற்றில் சில. கர்நாடகாவில் ஒரு வாழைப் பண்ணையில் இருந்து திருவனந்தபுரம் சிவந்த கப்பை வாழை ரகம் கிடைத்தது. இதுதவிர ஒற்றை முங்கிலி என்ற இனம் மருத்துவ குணம் மிகுந்த ஒரு வாழை ரகம். இதன் ஒரு பழம் நான்கைந்து நேந்திரம் பழங்களின் சத்துகளுக்குச் சமமானதாக விளங்குகிறது. இந்த இனம்தான் ஆப்பிரிக்காவுக்குச் சென்று சான்சிபார் என்ற இனமாகித் திரும்ப இந்தியாவுக்கு வந்தது என்று நம்பப்படுகிறது. இன்னொரு இனம் படலி முங்கிலி. இவை மூன்றும் குணத்தில் ஒரே மாதிரி இருப்பவை. ஒற்றா முங்கிலி ரகத்துக்கு மிக அதிக விதைகளை உற்பத்தி செய்யும் திறன் உண்டு. ஒற்றை முங்கிலி ரகம் அகத்தியர் வனங்களில் மட்டுமே காணப்படுகிறது. வனத்துக்குள் சென்று அங்குள்ள வன அலுவலர்களிடம் பேசி அவர்களிடம் அனுமதி பெற்று நான்கைந்து நாட்கள் கழித்து வனத்தில் இருந்து இந்த ரகத்தைப் பெற்று, வளர்க்கிறார்.

பிசாங்குலிங் என்ற ஒரு இனமும் இவருடைய தோட்டத்தில் இருக்கிறது. காவேரி என்ற இனம் மலேசியாவுக்குச் சென்று பெயர் மாற்றம் பெற்று இவ்வாறு அழைக்கப்படுகிறது. காவேரி இன வாழை தற்போது கேரளாவில் உள்ளது. இது தித்திக்கும் சுவையுடையது. நல்ல வாசனையும் இதற்கு உண்டு. இதில் 7 உட்பிரிவுகள் உள்ளன. 6 அல்லது 7 மாதங்களுக்குள் இது குலைகளைத் தரும் ஒரு இனம். சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதற்குரிய பழம் இது என்று கருதப்படுகிறது. இவருடைய தந்தைக்கு மாரடைப்பு ஒரு முறை வந்துள்ளது, அவருக்கு அல்சர் வியாதியும் உண்டு. 89 வயதாகும் இவர் இப்போது முழுமையான ஆரோக்கியமுள்ளவராக இருக்கிறார். தினசரி சராசரியாக இவர் 10 முதல் 20 வாழைப் பழங்களைச் சாப்பிடுகிறார். மருத்துவர்களும், மற்றவர்களும் சொல்வதுபோல பழங்கள் நம் ஆரோக்கியத்துக்கு அடித்தளமாகப் பயன்படும் இயற்கை தந்துள்ள ஒரு வரமாகும்.

பழங்கள் மட்டுமே சாப்பிட்டு வந்தால் எந்த வியாதியும் வராமல் நீண்ட நாள் வாழ முடியும் என்று இயற்கை வழி மருத்துவமும் கூறுகிறது. நமது சித்தர்களும் அவ்வாறே வாழ்ந்திருக்கிறார்கள். குடலில் ஏதாவது பாதிப்பு வந்தால்தான் வயிற்றில் புண் வருகிறது. இதைப் போக்க கன்னம் பழம் என்ற ஒரு வாழை இனத்துடைய இலையை எடுக்கும்போது வரும் பால் போன்ற பொருளைப் புண் உள்ள இடத்தில் தடவினால் புண் இருந்த இடமே தெரியாமல் போய்விடுகிறது. வாழை இலையில் உணவு உண்டதும் அறிவியல்பூர்வமான பல உண்மைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு பாரம்பரியப் பழக்கமே. இப்போது சந்தையில் நமக்குக் கிடைக்கும் பழங்கள் பலவற்றிலும் ப்யூரிடான் என்ற வேதிப்பொருள் தெளிக்கப்பட்டுதான் விற்பனைக்கு வருகிறது என்று கூறப்படுகிறது. இதனால் அதிக எடை பழங்களுக்குக் கிடைக்கிறது. கிருமிகளும் இந்த வாழைப் பழங்களைத் தாக்காமல் நீண்ட நாள் கெடாமல் இருக்கிறது.

வாழையைப் பொறுத்தமட்டும் மூன்று விதங்கள் உள்ளன. ஒன்று தொழில் ரீதியாகச் செய்யப்படும் வாழை வளர்த்தல். அவ்வாறு செய்பவர்களுக்குத் தரமும், நியாயமான விலையும் முக்கியம் இல்லை. மாறாக லாபம் மட்டுமே இவர்களுடைய நோக்கம். அடுத்த வகை வீட்டுக்கு அவசியத்துக்காக வளர்க்கப்படும் வாழை ரகங்கள். மூன்றாவது வகை வாழைக்காகவே வாழையை வளர்ப்பது. மோனோக்ரோட்டோபாஸ் என்ற வேதிப்பொருளைத் தெளிப்பதால் பழங்களின் எடை அதிகரிப்பதோடு, புழுக்களின் தாக்குதலும் இல்லாமல் செய்யப்படுகிறது. இந்த அபூர்வ வாழை மனிதர் வீட்டில் உருவாகும் கழிவுப் பொருட்களையே வாழைக்கு உரமாக இடுகிறார். அதனால் எந்தவிதமான நோய் தாக்குதலும் வருவது இல்லை.

இந்தியாவில் இன்று அதிக பிரபலமாக இருக்கும் ஜி9 ரகம் ரோபோஸ்ட்டா இனத்தைச் சேர்ந்ததே. இந்த வாழைப்பழத்தின் சிறப்பு சாப்பிட்டவுடன் வைட்டமின்கள் உடனே உடலுக்குள் செல்கிறது. வயிற்றுப்பசி தீர்கிறது. இதன் உயரம் குறைவாக இருப்பதால், வேகமாகக் காற்று வீசும்போது அதனால் இந்த மரங்கள் பாதிக்கப்படுவது இல்லை. இந்த ரகம் மகாராட்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் வளர்க்கப்படுகிறது. வாழையைப் பொறுத்தமட்டும் கேரளாவுக்கு அடுத்தபடியாக அதிகப்படியான ரகங்கள் உள்ள மாநிலம் அஸ்ஸாம். மொந்தன் என்ற இனம் பொறியலுக்காக மட்டும் அதிகம் வளர்க்கப்படுகிறது. கறி மொந்தன், பிடி மொந்தன், பச்சா போந்தா பத்தீசா, குலு மொந்தன் போல ஏழெட்டு ரக மொந்தன் வாழைமரங்கள் உள்ளன. இதில் ஒரு சிறப்பினம் இறைச்சி வாழை ரகம். இது நீளம் அதிகமுள்ள ஒரு பழம். இந்தப் பழத்தை இறைச்சியுடன் சேர்த்துச் சமைத்தால் இறைச்சிக்கு அதிக சுவை கிடைக்கும் என்று முன்னோர் சொல்லியுள்ளனர். இந்த ரகத்தையும் இவர் குஜராத்தில் இருந்து பெற்று வளர்க்கிறார்.

சூழல் பாதுகாப்பிற்கு இவருடைய சேவை மகத்தானது. கொண்டும் கொடுத்தும் வாழையோடு வாழையடி வாழையாக வாழ விரும்பும் இவர் எதிர்காலத்தில் ஒவ்வொரு வாழை இனத்தையும் அதனதன் வகை ரீதியாக அவற்றைப் பிரித்து நட்டு வளர்த்துப் பார்க்க வரும் எல்லோருக்கும் காட்டுவதற்குத் தயாராயிருக்கிறார். வயிற்றுப் பிழைப்புக்காகச் செய்கிற பணி கம்ப்யூட்டரோடுதான் என்றாலும் இவருடைய நினைப்பும், விருப்பமும், எண்ணமும் எல்லாம் வாழையோடுதான் இருக்கிறது. அதனால்தான் இவருடைய வாழைத் தோட்டம் அல்லது வாழை வனம் எல்லோரும் வாழ்வில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய ஒரு புனித இடமாக மாறியுள்ளது. வாழையின் பிறந்த வீடாக இந்த இடத்தை மாற்றுவதே இவருடைய கனவு. தன் அகன்ற இலைக் கைகளை சந்தோஷத்துடன் ஆட்டி ஆட்டி உள்ளே நுழைந்தவுடன் நம்மை வரவேற்கும் இவருடைய வாழை வனத்தில் வெவ்வேறான உயரங்களில், வெவ்வேறான நிறங்களில், பூவும், காயும், குலைகளாகப் பழங்களும் வண்ணஜாலங்கள் காட்டி நம்மை வரவேற்கும்போது உலகின் ஒரு புனிதமான திருக்கோயிலுக்குள் நுழைந்த நினைவே நமக்குள் எழுகிறது. இந்த அனுபவத்தைப் பெற நாமும் ஒரு முறை இந்த வாழைக் கோயிலிற்குச் சென்று வருவோம். வாருங்கள்.

வாழையை வாழவைத்துக் கொண்டிருக்கும் இந்த வாழை மனிதனின் பெயர் S. வினோத். இடம் பாறசாலை, திருவனந்தபுரம், கேரளா.

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.