சலீம் அலி மேற்கொண்ட பறவைகள் குறித்த ஆய்வுகளில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுவது அவர் கேரளாவில் மேற்கொண்ட ஆய்வுகளே ஆகும். பல்லுயிர்ப்பரவல் (biodiversity) செழுமையாகக் காணப்படும் ஒருபக்கம் அரபிக்கடலாலும், மற்றொரு பக்கம் இயற்கை எழில் கொஞ்சும் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர்களாலும் சூழப்பட்டுள்ள கேரளா எப்போதுமே இயற்கை வளங்களுக்குப் புகழ்பெற்றது ஆகும். 44 நதிகளால் நீர்வளம் மிக்கதாக விளங்கும் இந்த மாநிலம் சுதந்திரத்திற்கு முன்பு குறுநில மன்னர்களால் ஆளப்பட்டு வந்தது. திருவிதாங்கூர், திருக்கொச்சி, மலபார் பிரதேசங்கள் இவ்வாறு குறுநில மாகாணங்களாக விளங்கி வந்தன. சலீம் அலி இவற்றில் எல்லா இடங்களுக்கும் சென்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். மகாத்மா காந்திஜியால் “தெய்வநகரம்” என்று போற்றப்பட்ட திருவனந்தபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இன்று அந்த மாநிலம் ஒரே மாநிலமாக விளங்கி வருகிறது. எங்கும் பசுமை நிறைந்த நீர்நிலைகளும், காயல்களும், பசுமைமிக்க தென்னந்தோப்புகளும், வயல்வெளிகளும் நிறைந்த காட்சிகள் கண்களுக்கும், உள்ளத்திற்கும் குளிர்ச்சியை வாரி வழங்குபவை ஆகும்.
தான் மேற்கொண்ட ஆய்வுகளிலேயே 1930-க்கும் 1950-க்கும் இடையில் நடத்திய பறவைகள் பற்றிய ஆய்வுகளே மிகச் சிறந்தது என்று சலீம் அலி கூறியுள்ளார். திருவிதாங்கூர் மற்றும் திருக்கொச்சி மாகாணங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளே தனக்கு மிகவும் பயனுடையவையாக அமைந்த ஆய்வுகள் என்று அவர் கருதினார். 18-ஆம் நூற்றாண்டு முதலே பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவில் பல பகுதிகளிலும் பறவைகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு இருந்தனர். A.O. ஹியூம் அவர்களில் முக்கியமானவர் ஆவார். ஆனால், இந்தியாவில் பறவைகளைப் பற்றி அறிவியல்பூர்வமாக ஒரு முழுமையான ஆய்வை முதல்முதலில் மேற்கொண்டவர் சலீம் அலியே ஆவார். பறவைகளைப் பற்றிய ஆய்வுகள் அதற்கு முன் மேற்கொள்ளப்படாமல் இருந்த பிரதேசங்களிலும் ஆய்வுகளை நடத்தி இந்தத் துறையில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது அவரே ஆவார். அதனால்தான் சலீம் அலியை இந்தியாவின் பறவை மனிதன் என்று உலகம் கொண்டாடுகிறது.
1933-இல் ஆய்வுகள் தொடங்கின. மூன்று பிரிவுகளாக இருந்த கேரளாவில் மலபார் பிரதேசம் மதராஸ் பிரசிடென்சியின் கீழ் இருந்தது. பிரிட்டிஷ்காரர்களின் ஆளுமையின் கீழ் இருந்த மலபார் பிரதேசத்தில் பறவைகள் குறித்த ஆய்வுகள் முன்பே நடந்து கொண்டிருந்தன. இந்தியாவில் பறவைகளைப் பற்றிய முதல் புத்தகமான “The Birds of India” என்ற முதல் புத்தகத்தை எழுதியவர் T.C. ஜெர்டன் 1847 முதல் 1851 வரை கன்னூரில் தலச்சேரியில் வாழ்ந்தார். அந்தக் காலத்தில் அவர் அங்கே பறவைகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார். லெப்டினன்ட் கர்ணல் H.R. பேக்கர், லெப்டினன்ட் கர்ணல் பிசிசியன் ஆதம்ஸ், டேவிசன், மோர்கன் போன்றவர்கள் பறவைகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு இருந்தனர். ஆனால், திருவிதாங்கூரிலும், கொச்சியிலும் இது போன்ற எந்த ஆய்வும் சலீம் அலியின் காலத்திற்கு முன்பு மேற்கொள்ளப்படவில்லை.
திருவிதாங்கூரில் உள்ள அருங்காட்சியகத்தின் இயக்குநராக இருந்த H.S. சர்க்கசன் பம்பாய் இயற்கை வரலாறு சங்கத்தின் சஞ்சிகையில் “The Birds of Travancore with notes on their nidification” என்ற பெயரில் ஆய்வுக்கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். ஆனால் அது ஒன்றும் ஒரு முழுமையான ஆய்வுக்கட்டுரையாகக் கருதப்படவில்லை. சலீம் அலி மனைவி டெஹ்மினாவுடன் திருவிதாங்கூர் பிரதேசத்தில் 14 இடங்களை மையமாகக் கொண்டு ஆய்வுகளை நடத்தினார். ஆய்வின்போது டெஹ்மினா சலீம் அலியின் தனிச்செயலாளராக (personal secretary) பணியாற்றினார். வரவு செலவு கணக்குகளை எல்லாம் டெஹ்மினாவே கையாண்டார்.
திருவிதாங்கூர் ஆய்விற்கு ரூ.2000-மும், கொச்சி ஆய்விற்கு ரூ.1200-மும் ஒதுக்கப்பட்டிருந்தது. அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்த இந்தத் தொகை ஆய்விற்காக அல்லாமல் ஒரு பைசா கூட வீணாக்க சலீம் அலியும், டெஹ்மினாவும் விரும்பவில்லை. 1933 ஜனவரியில் கோத்தகிரியில் இருந்து கிளம்பிய சலீம் அலியும், அவரது குழுவினரும் மறையூரில் இருந்து ஆய்வுகளைத் தொடங்கினர். ஆய்விற்கு அப்போது திருவிதாங்கூர் அருங்காட்சியகத்தில் இயக்குநராக இருந்த N.G. பிள்ளை என்பவரும் பெரும் துணையாக இருந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இருந்து விலங்கியல் துறையில் பட்டம் பெற்று இருந்த அவர் விரைவிலேயே ஆய்வின் முக்கியப் பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தார். அதன் மூலம் சலீம் அலிக்கு மிகவும் நெருங்கியவராகவும் அவர் மாறினார். மறையூர், மூணாறு, சாந்தன்பாறா, தட்டேக்காடு, கோட்டயம், பீருமேடு, குமிலி, தேரமலா, ராஜம்பாறா, தென்மலா, திருவனந்தபுரம், கேப் கோமரின், ஆரம்போலி, பாலமூர் எஸ்டேட் (estate) போன்ற 14 இடங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டன.
இவற்றில் சில பிரதேசங்கள் இப்போது தமிழகத்தில் உள்ளன. பிறகு கொச்சி குறுநில மாகாணத்திற்குச் சென்றனர். இந்த ஆய்வுகளில் பிள்ளை அவர்கள் சில இடங்களுக்கு வந்து அதிகாரப்பூர்வமற்ற விதத்தில் சலீம் அலிக்கு உதவி புரிந்தார். பின்னர் மீனர்ட் ஷாஜன் என்ற பறவையியல் ஆய்வாளருடன் ஆப்கான் சென்றபோது சலீம் அலி பிள்ளையை உடன் அழைத்துச் சென்றார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. தன் சுயசரிதையான “சிட்டுக்குருவியின் வீழ்ச்சி” என்ற நூலில் சலீம் அலி பிள்ளையைக் குறித்து பல இடங்களிலும் குறிப்பிட்டுள்ளதும் இங்கு நினைவுகூரத்தக்கது. எர்ணாகுளத்திற்குச் செல்லும்போது எல்லாம் சலீம் அலி பிள்ளையின் வீட்டில் தங்குவது வழக்கம். கொச்சியில் நெல்லியாம்பதி குன்றுகளில் A.M. கிங்லோக் என்பவர் முன்பே பறவைகளைப் பற்றிய ஆய்வைச் செய்திருந்தார். அது தவிர வேறு எந்த ஆய்வும் அங்கு மேற்கொள்ளப்படவில்லை.
சலீம் அலியும், குழுவினரும் குடியாங்குட்டி, வடக்கான்சேரி, தென்மாறா, பாடகிரி, கருவடனா ஆகிய இடங்களில் விரிவான ஆய்வுகளை நடத்தினர். திருவிதாங்கூர் மற்றும் கொச்சி ஆகிய இடங்களில் ஆய்வுகள் முடிவடைந்தபோது டெஹ்மினாவின் கணக்கு நோட்டில் ரூ.2458 செலவாகி இருந்தது. காசு பணம் கிடைக்கும் என்பதற்காக அல்லாமல் அதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் சலீம் அலியும், அவருடைய குழுவினரும் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர். இந்த இரண்டு இடங்களிலும் சேர்த்து மொத்தமாக 19 இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. கேரள அரசின் வனத்துறை 2009-ஆம் ஆண்டில் சலீம் அலி பறவைகளைப் பற்றி ஆய்வு செய்த அதே நாளில் தொடங்கி அதே பிரதேசங்களில் மறுபடியும் ஒரு ஆய்வை மேற்கொண்டது. இது குறித்து “Along the trail of Salim Ali” என்ற பெயரில் ஒரு ஆய்வறிக்கையைத் தனிச்சுற்றாகக் கேரள வனத்துறை வெளியிட்டது. இதன் மூலம் சலீம் அலி 1930-களில் மேற்கொண்ட பறவைகள் பற்றிய கணக்கெடுப்பிற்கும், 2009-ஆம் ஆண்டில் காணப்படும் பறவைகள் மற்றும் அவற்றின் எண்ணிக்கைக்கும் உள்ள வேறுபாடுகளை அறிந்து கொள்ள முடிந்தது.
திருவிதாங்கூர் ஆய்விற்கு இடையில் ஒரு அரியவகைப் பறவை சலீம் அலிக்குத் தற்செயலாகக் கிடைத்தது. சாலக்குடியில் கொச்சின் forest tramway-யில் பரம்பிக்குளம் முனையத்திற்கு அருகில் அப்போது சலீம் அலியும், அவருடைய குழுவினரும் ஆய்வு நடத்திக் கொண்டிருந்தனர். அங்கே அப்போது இருந்த ஒரு விமானப்படையைச் சேர்ந்த ஒருவர் அரியவகையைச் சேர்ந்த ஒரு பறவையை சலீம் அலியிடம் கொண்டு வந்து கொடுத்தார். தலையில் குடுமி போன்ற அமைப்பைக் கொண்ட அந்தப் பறவையைப் பற்றி அதிகம் அப்போது எவருக்கும் தெரியவில்லை. பிறகு அது பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. விரிவாக ஆராயப்பட்ட அந்தப் பறவை கால்விரல்களில் சிறகுகள் உள்ள ஒரு அரியவகைப் பருந்து என்று தெரியவந்தது. உலகில் பறவைகளின் சேகரத்தில் மிகவும் அபூர்வமான ஒரு பறவை ஆகும் இது என்று பறவையியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். இந்த நிகழ்ச்சி கேரளாவில் சலீம் அலி மேற்கொண்ட பறவைகள் குறித்த ஆய்வில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
சலீம் அலி எழுதிய கேரளாவில் உள்ள பறவைகள் பற்றிய நூலில் (Birds of Kerala) 219 இனப் பறவைகள் இடம்பெற்றுள்ளன. இன்று கேரளாவில் 519 இனப் பறவைகள் உள்ளதாக அறியப்படுகிறது. சலீம் அலியின் ஆய்வுகளுக்குப் பிறகு உலகின் கவனம் கேரளாவில் உள்ள பறவைகளைப் பற்றி அதிகம் அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. 1935 - 1937 காலகட்டத்தில் பம்பாய் இயற்கை வரலாறு சங்கத்தின் சஞ்சிகையில் சலீம் அலி கேரளாவில் மேற்கொண்ட பறவைகள் பற்றிய ஆய்வைக் குறித்து விரிவாக எழுதியிருந்தார். “Ornithology of Travancore & Cochin” என்ற பெயரில் 246 பக்கங்கள் கொண்ட ஒரு ஆய்வுக்கட்டுரையாக அது வெளிவந்தது. உலகம் முழுவதும் உள்ள பறவையியல் நிபுணர்களின் பாராட்டுகள் இதன் பின் சலீம் அலிக்குக் குவிந்தன. அன்று திருவிதாங்கூர் திவானும், திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்தின் சான்சலராகவும் இருந்த சர். சி. பி. ராமசாமி ஐயர் சலீம் அலியின் ஆய்வறிக்கையைப் பார்க்க நேர்ந்தது. அதை ஒரு புத்தகமாக வெளியிட அவர் முயற்சி செய்தார். 1953-ஆம் ஆண்டில் “Birds of Travancore & Cochin” என்ற பெயரில் சலீம் அலியின் கேரளப் பறவைகள் ஆய்வு புத்தக வடிவம் பெற்றது. முதல் பதிப்பு வெளிவந்தவுடனேயே விற்றுத் தீர்ந்து போனது.
1969-ஆம் ஆண்டில் இந்தப் புத்தகம் “Birds of Kerala” என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இரண்டாம் பதிப்பாக இது வெளிவந்தது. 1985-ஆம் ஆண்டில் இதன் மூன்றாவது பதிப்பும் வெளிவந்தது. பசுமை நிறைந்த எழில் கொஞ்சும் கேரளாவை சலீம் அலி மிகவும் நேசித்தார். நேரம் கிடைக்கும்போது எல்லாம் அவர் கேரளாவிற்கு வந்து பறவை ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 1947-ஆம் ஆண்டில் திருவனந்தபுரம், பொன்முடி, மெர்க்கிஸ்ட்டின், கேப் கோமரின், பாலமூர், முதுகுழி, தென்மலா, கோட்டயம், முன்டக்கயம், பீருமேடு, சவுன்ட்டன் எஸ்டேட், வண்டிப் பெரியாறு, தேக்கடி, தட்டேக்காடு, மூணாறு, ஆனைமுடி, தேவிகுளம், சாலக்குடி, காவாளம் காடுகள் tramway, பரம்பிக்குளம் ஆகிய இடங்களை மையமாகக் கொண்டு பறவை ஆய்வை சலீம் அலி மேற்கொண்டார். 1962 - 1963 காலகட்டத்தில் கொச்சின், எடநாடு, கனிநாடி, குட்டநாடு, பொள்ளாச்சி, பரம்பிக்குளம், மலம்புழா, வாலையாறு அணைக்கட்டு, அமரம்பலம், R.S. மானந்தவாடி, வயநாடு, கன்னூர், வடகரா, பழநி, திருச்சூர், கோட்டயம் வழியாகத் தட்டேக்காடு ஆகிய இடங்களில் எல்லாம் ஆய்வுகளை மேற்கொண்டார்.
பாதிராமணலிலும், பெரியாறு தடாகத்திலும், நெய்யாறு அணைக்கட்டிலும், சவுன்ட்டன் எஸ்டேட்டிலும், எடநாட்டிலும் சலீம் அலி ஆராய்ச்சிகளைச் செய்தார். 1977-ஆம் ஆண்டில் அவர் அமைதிப் பள்ளத்தாக்கிற்கு வருகை புரிந்தார். கேரளாவில் இந்த அளவிற்கு வேறு எவருமே பறவைகளைப் பற்றி ஆராய்ந்தது இல்லை. சலீம் அலியின் காலடிகள் பதியாத இடங்கள் இந்தியாவிலேயே இல்லை என்று சொல்லலாம். எர்ணாகுளம் மாவட்டத்தில் கோதமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட தட்டேக்காடு பகுதியில் இருக்கும் பறவைகளின் புகழை உலகம் அறியச் செய்தவர் சலீம் அலியே ஆவார். 1970-ஆம் ஆண்டில் 170 இனங்களைச் சேர்ந்த பறவைகள் இருப்பதாக அவர் கணக்கெடுத்தார். இந்தியாவிலேயே மிகவும் பல்லுயிர்த்தன்மை வாய்ந்த ஒரு பிரதேசம் ஆகும் தட்டேக்காடு என்று சலீம் அலி கருதினார். அந்தப் பிரதேசத்தை ஒரு பறவைகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் என்று கோரினார். 1983 ஆகஸ்ட் மாதத்தில் கேரளாவில் முதல் பறவைகள் சரணாலயமாகக் கேரள அரசு தட்டேக்காடை அறிவித்தது. சலீம் அலி என்ற இந்த மகத்தான மனிதரின் பெயரில்தான் இந்தப் பறவைகள் சரணாலயம் இப்போது அழைக்கப்படுகிறது. சலீம் அலியின் பெயரைச் சொல்லும் நிரந்தர நினைவாலயமாகத் தட்டேக்காடு பறவைகள் சரணாலயம் இன்றும் விளங்குகிறது.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்