girl child 600

‘உங்க பையன் பரவாயில்லையே! சொன்னா சொன்னபடி கேட்கிறானே! ஐயோ, என் பையனா இருந்தா இந்நேரம் இந்த இடத்தையே ரெண்டா ஆக்கிருப்பான்’, ‘உங்க குழந்த நேரா நேரம் ஒழுங்காச் சாப்பிடுதே, என் குழந்தைக்குச் சோறு ஊட்டுறதுக்குள்ள, உயிர் போயிரும்’ – இப்படிப்பட்ட வார்த்தைகளை நாம் பல இடங்களில் கேட்டிருப்போம். நாமே கூடச் சில இடங்களில் சொல்லியிருப்போம். பொதுவாகப் பார்த்தால் குழந்தைகள் தவறு செய்கின்றன என்று தெரிந்தாலும் உண்மையில் பெற்றோர்கள் அந்தத் தவறுகளுக்குப் பொறுப்பாகிறார்கள் என்பது அந்தந்தச் சூழலை ரூம் போட்டு யோசித்தால் தெரிந்து விடும். தவற்றைச் செய்தவர்கள் வேண்டுமானால் குழந்தைகளாக இருப்பார்கள்; ஆனால் அந்தத் தவற்றை அவர்களிடம் தூண்டியதோ விதைத்ததோ பெற்றோராகிய நாமாகத் தான் இருப்போம். அப்படியானால், நாம் முதலில் தவறில் இருந்து விடுபட்டு குழந்தைகளை நன்றாக வளர்ப்பது எப்படி?

குழந்தைகளைக் குழந்தைகளாகப் பாருங்கள்

‘பாட்டி வடை சுட்ட கதை’யும் அதில் காக்கா வடையைச் ‘சுட்ட கதையும் நம் எல்லோருக்குமே தெரியும். அந்தக் கதையை நம்முடைய கோணத்தில் பார்த்தால், பாட்டியிடம் இருந்து காக்கா வடையைத் திருடி விட்டது. காக்காவின் கோணத்தில் இருந்து பார்த்தால்? காக்கா தனக்குப் பசிக்கும் போது பசியைத் தீர்க்கத் தேவையான உணவை எடுத்துக் கொண்டது – திருடவில்லை. ஏனென்றால் காக்காவிற்குத் திருட்டு என்றால் என்னவென்றே தெரியாது. இது நல்லது, இது கெட்டது, இதைச் செய்யலாம், இதைச் செய்யக்கூடாது என்பதெல்லாம் ஆறறிவு படைத்த நமக்குத் தானே தவிர, பிற விலங்குகளுக்கோ உயிரினங்களுக்கோ அந்த விதியெல்லாம் பொருந்தாது. சரிதானே!

இதே விதிதான் குழந்தைகளுக்கும்! குழந்தைகளுக்கும் ‘இது நல்லது, இது கெட்டது என்றெல்லாம் அவர்களுக்குப் பிரித்துப் பார்க்கத் தெரியாது. அப்படித் தெரியாமல் தானே, சூடான பாத்திரத்தில் கை வைப்பது, அயன்பாக்சில் கை வைப்பது என்று செய்கிறார்கள்.

ஆபிசிற்குத் திடீரென தவிர்க்க முடியாத ஒரு முக்கிய வேலை காரணமாக லீவு எடுக்கிறீர்கள். மறுநாள் ஆபிசில் நுழைந்த உடன், ‘என்ன சார்! இப்படித் திடீரென சொல்லாமல் கொள்ளாமல் லீவு எடுத்து விட்டீர்கள், இதனால் ஆபீஸ் வேலை எவ்வளவு பாக்கி இருக்கிறது தெரியுமா?’ என்று உங்கள் மேலதிகாரி கேட்கிறார். ‘சே, என்ன இவர், நாம் எவ்வளவு முக்கியமான வேலைக்காக லீவு எடுத்தோம், அதைப் புரிந்து கொள்ளாமல் இப்படிப் பேசுகிறாரே!’ என்று நினைப்பீர்கள் அல்லவா? அதாவது, பெரியவர்களாகிய நாமே, ‘நம் பிரச்சினைகளை நம்முடைய கோணத்தில் இருந்து’ மேலதிகாரி பார்க்க வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இது சரி என்றால், குழந்தைகள் செய்யும் வேலைகளையும் அவர்கள் கோணத்தில் இருந்து புரிந்து கொள்வது தானே சரியாக அமையும்?

அப்படி இல்லாமல், நாம் எதிர்பார்ப்பதை எல்லாம் குழந்தைகள் மீது திணிக்கத் தொடங்கினால், அந்த உறவு, நமக்கும் மேலதிகாரிக்கும் உள்ள உறவு போல ‘பில்டிங் ஸ்டிராங், ஆனால் பேஸ்மென்ட் வீக்’காகப் போய் விடும். எனவே, பெரியவர்களாகிய நாம் முதலில் செய்ய வேண்டியது – குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு செயலையும் நம்முடைய கோணத்தில் இருந்து பார்ப்பதை விடுத்து, குழந்தைகளின் கோணத்தில் இருந்து பார்க்கப் பழகுவது.

இந்தப் பழக்கத்தை முதலில் நடைமுறைப்படுத்துவோம். அப்படி வரும்போது குழந்தைகள் நம்மிடம் நெருங்கி வருவார்கள். அந்த நெருக்கம், அவர்களிடம் திருத்தத்தைக் கொண்டு வரும்.

 ‘நானும் அடிக்க வேண்டாம்னு தான் பார்க்கிறேன், ஆனால் அவன் பண்ற சேட்டை தாங்க முடியாமல் சில சமயம் அடி கொடுத்தாத் தான் சரிப்படும், வேற வழியில்லாமல் அடிக்க வேண்டியதாகி விடுகிறது’ – இது தான் பெரும்பாலான பெற்றோரின் புலம்பல். ‘ஆபிசிற்கு நேரமாயிருச்சு, பஸ்சை விட்டுடுவோமோ னு அவசர அவசரமா கிளம்பிக்கிட்டு இருக்கேன், அப்பப் போய், இந்தக் கலர் சட்டையைத் தான் போடுவேன்’ னு அடம்பிடிக்கிறான். என்ன பண்றது? சுள்ளுன்னு ரெண்டு கொடுத்தேன், அமைதியாயிட்டான்’ – இது வேலைக்குப் போகும் பெற்றோரின் வாதம்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் – குழந்தைகள் செய்யும் மிகப் பெரிய தவறுகளை எல்லாம் பட்டியல் போடுங்கள். ‘இந்த டிரெஸ் வேண்டாம்’, இந்தத் தட்டில் சாப்பிட மாட்டேன், எனக்கு அப்பா தட்டில் சாப்பாடு கொடு’, ‘எனக்கு மாம்பழம் வேணும்’, - இப்படிப்பட்ட விசயங்களைத் தான் தவறுகளாகப் பட்டியலிட முடியும். ‘குழந்தை உரிமையோடு தன் அம்மாவிடமோ அப்பாவிடமோ கேட்கிறது. இது தவறா?’ என்று ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். குழந்தைகள் செய்ததில் எந்தத் தவறும் இல்லை. தவறான நேரத்தில் கேட்டது தான் தவறு.

இந்த விசயங்களைக் கையாள, நீங்கள் எடுத்துக்கொண்ட அணுகுமுறைகளை யோசித்துப் பாருங்கள் – பெரும்பாலான நேரங்களில் குழந்தை இப்படிக் கேட்டு அழும்போது அதன் போக்கில் விட்டிருப்பீர்கள். எங்கெல்லாம் குழந்தையைத் திட்டுவதோ, அடிப்பதோ நடந்தது என்பதைப் பட்டியலிட்டுப் பாருங்கள். ‘முடிந்த வரை பேசிப் புரிய வைப்பேன்; சில சமயங்களில் என்னுடைய அவசரம் புரிந்து கொள்ளாமல் குழந்தை நடந்து கொள்வதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை’ என்பது தான் அந்தப் பட்டியலில் முக்கியமான காரணமாக இருக்கும்.

ஆக, உங்களுடைய அவசரத்தைக் குழந்தை புரிந்து கொள்ளவில்லை என்பது தான் குழந்தையின் மிகப் பெரிய தவறாக இருக்கும். மற்றபடி, குழந்தைகள் செய்வது எல்லாம் அவர்களுடைய விருப்பத்தை வெளிப்படுத்துவது தான்! சரி தானே! ‘நீங்கள் ஆபிசிற்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதோ இன்று நேரமாகி விட்டது என்பதால் உங்களிடம் கேட்கக் கூடாது என்பதோ குழந்தைகளுக்குப் புரிய வேண்டும்’ என்னும் நம்முடைய எதிர்பார்ப்பு பொய்யாகும் போது தான் நமக்கு ஆத்திரமும் ஆவேசமும் வருகின்றன. ஆக, இந்தக் கோபத்திற்குக் காரணம், நம்முடைய தவறான எதிர்பார்ப்பு தானே தவிர, குழந்தைகளின் ஆசைகள் அல்ல.

மழலைக் குழந்தைகள், வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளைப் போன்றவர்கள். நீங்கள் எவ்வளவு கோபப்பட்டாலும் உங்களையே சுற்றிச் சுற்றி வருபவர்கள். உங்களுக்கு அவர்களைத் தவிர நண்பர்கள், அலுவலகம் என்று வெவ்வேறு உலகங்கள் இருக்கலாம். ஆனால் அவர்களுக்குப் பெற்றோர்களாகிய நாம் தாம் அவர்கள் பார்க்கும் முதல் உலகம், நீங்கள் தாம் எல்லாமுமே! என்பதை மறந்து விட வேண்டாம். எவ்வளவு அவசர வேலை இருந்தாலும் அதில் குழந்தைகளுக்கு என்று குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி வைப்போம். குழந்தைகளைக் குறை சொல்வதை விட்டு விட்டு, நல்ல பெற்றோராக நாம் மாறுவோம். நாம் மாறினால் தானே, குழந்தைகளும் மாறுவார்கள்.

- முத்துக்குட்டி

(கட்டுரை: புதிய வாழ்வியல் மலர் 2016 ஜூன் 1-15 இதழில் வெளியானது) 

Pin It