உணவு, நீர் மற்றும் காற்றின் மூலம் ஏற்படும் பாதிப்புகள் பற்றி இன்னும் முழுமையாக அறியப்படாத நிலையில் மனிதர்கள் ஒவ்வொரு ஆண்டும் அரை இலட்சம் பிளாஸ்டிக் துகள்களை எடுத்துக் கொள்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. உப்பு முதல் உணவில் எல்லாப் பொருட்களிலும் இன்று நுண் பிளாஸ்டிக் துகள்கள் கலந்துள்ளன. ஒரு ஆண்டில் சராசரியாக ஒவ்வொருவரின் உடலிலும் 50,000 நுண் பிளாஸ்டிக் துகள்கள் உணவு, நீர் மூலமும் இதற்கும் அதிகமான அளவில் காற்றின் மூலமும் செல்கின்றன.

மனித உடலில் கலக்கும் பிளாஸ்டிக் நுண் துகள்களைப் பற்றி நடத்தப்பட்ட முதல் ஆய்வு இது. ஒரு சிறிய அளவு பொருட்களில் மட்டுமே ஆய்வுகள் நடைபெற்றதால் இந்த அளவு இன்னும் பல மடங்கு அதிகமாகவே இருக்கும் என்று விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர். பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரை குடிப்பதால் உடலிற்குள் செல்லும் துகள்களின் எண்ணிக்கை அதிகமாகிறது என்று ஆய்வு கூறுகிறது.

நஞ்சு உண்ணும் மனிதனின் உணவுமுறை

உடலிற்குள் செல்லும் இவை நச்சுத் தன்மையுடைய பொருட்களை வெளிவிடுகின்றன. இத்துகள்களில் சில மிக நுண்னியவை என்பதால் அவை மனித செல்களையும் ஊடுருவிச் செல்கின்றன. இதனால் நோய் எதிர்ப்பு ஆற்றலில் பெரும் பாதிப்புகள் ஏற்படும். பிளாஸ்டிக் பொருட்கள் பல காரணிகளால் சிதைவடைந்து நுண் பிளாஸ்டிக்குகள் உருவாகின்றன. இன்று இவை பூமி முழுவதும் நீக்கமற நிறைந்துள்ளன. மலைச்சிகரங்கள் முதல் ஆழ்கடல் வரை, நீர், காற்று, மண் என எங்கும் இத்துகள்கள் உள்ளன.

குழாய் நீர், பாட்டில் நீர், கடல் உணவு, இறைச்சி, பால் பொருட்களில் மட்டும் இல்லாமல் மனித உடலிலும் கலந்துள்ளன.

இந்த ஆய்வுக் கட்டுரை சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (Enviromental Science & Technology) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றி முன்பு நடத்தப்பட்ட 26 ஆய்வுகளின் தரவுகள் இந்த ஆய்வின்போது எடுத்துக் கொள்ளப்பட்டன. மீன், ஜெல் மீன், சர்க்கரை, உப்பு, பீர் மற்று நீர் ஆகியவை பரிசோதிக்கப்பட்டன. நகரங்களில் காற்றும் பரிசோதிக்கப்பட்டது. ஒரு ஆண்டில் உட்கொள்ளும் துகள்களைப் பற்றி கணக்கிட அமெரிக்க அரசின் சத்துணவியல் வழிகாட்டு நெறிமுறைகள் ஆய்விற்காகப் பயன்படுத்தப்பட்டன.

ஒரு ஆண்டில் வயது வந்தவர்கள் 50,000 துகள்களையும், குழந்தைகள் 40,000 துகள்களையும் உட்கொள்கின்றனர் என்று ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர். பல உணவுகள், பானங்கள் சோதிக்கப்படவில்லை. உட்கொள்ளப்படும் கலோரி மதிப்பில் 15% மட்டுமே ஆராயப்பட்டது. சிறிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வுகளிலேயே கண்டறியப்பட்ட இந்த முடிவுகள் அதிர்ச்சியளிக்கிறது என்று ஆய்வுக்குழு தலைவர் மற்றும் கனடா விக்டோரியா பல்கலைக்கழக ஆய்வாளர் கிரன் காக்ஸ் (Kieran Cox) கூறுகிறார்.

ரொட்டி, பதப்படுத்தப்பட்ட பொருட்கள், இறைச்சி, பால் பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றிலும் நுண் பிளாஸ்டிக் கலந்துள்ளது. தரவுகள் சிறந்த முறையில் கிடைத்த பாட்டில் மற்றும் குழாய் நீரில் விரிவாக ஆய்வுகள் நடந்தன. குழாய் நீரில் இருந்ததை விட 22 மடங்கு அதிக பிளாஸ்டிக் துகள்கள் பாட்டில் நீரில் கலந்திருப்பப்து தெரிய வந்துள்ளது. பாட்டில் நீரை மட்டுமே அருந்தும் ஒரு மனிதர் ஆண்டிற்கு 130,000 பிளாஸ்டிக் துகள்களை நீருடன் சேர்த்து அவரையும் அறியாமல் எடுத்துக் கொள்கிறார். குழாய் நீரில் இதன் அளவு 4,000 துகள்கள் மட்டுமே.

தும்மல் மற்றும் இருமல் மூலம் உடலிற்குள் நுழையும் நுண் துகள்கள் பின் உடலை விட்டு வெளியில் செல்வதில்லை என்பதால் இதனால் உண்டாகும் உடல் நல பாதிப்புகள் பற்றி ஆழமாக ஆராயப்பட்டவேண்டும் காக்ஸ் கூறுகிறார். ஒரு சாப்பாட்டின் மூலம் மட்டும் ஒரு நாளில் நூற்றுக்கணக்கான நுண் துகள்கள் உடலில் நுழைகிறது.

மேற்கித்திய உணவுப்பொருட்களில் உணவின் தரம், பாதுகாப்பு, சுவை மற்றும் நிறத்திற்காக சேர்க்கப்படும் டைட்டேனியம் டை ஆக்சைடு நுண் துகள்கள் ஏராளமாக கலந்துள்ளன. இவை ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றி முழுமையாக ஆராயப்படாத நிலையில் இந்த புதிய கண்டுபிடிப்பு நாம் நம் உணவு முறையை மாற்றியமைக்க வேண்டியதன் அவசரத் தேவையை எடுத்துக் காட்டுகிறது என்று லண்டன் கிங்ஸ் கல்லூரி மருத்துவ நிபுணர் ஸ்டெஃப்பனி ரைட் (Stepanie Wright) கூறுகிறார்.

மீளமுடியாத பாதிப்புகளை நுண் பிளாஸ்டிக்குகள் ஏற்படுத்துகின்றன என்று ஆய்வாளர்கள் தொடர்ந்து எச்சரிக்கின்றனர். ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்காக இருந்தாலும் அனைத்து வகையானவற்றையும் நம் வாழ்வில் இருந்து நீக்குவதே இதற்கான சிறந்த தீர்வு. எண்ணற்றவை உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதற்காக, மலிவானவை என்பதற்காக பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதை கைவிட்டுவிட்டு பிளாஸ்டிக்குகளில் இருந்து முற்றிலுமாக நாம் விடுதலை பெற வேண்டும். பிளாஸ்டிக்குகள் இல்லாத பழையகால வாழ்விற்கு புதிதாக திரும்ப வேண்டும்.

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.