வீட்டில் வளர்க்கப்படும் வாத்துகளின் முன்னோடியான Mallard (Anas Platyrhynchos) என்ற இன வாத்துகள் அமெரிக்காவின் பெரும்பாலான வீட்டின் புழக்கடைகளில் மே மாதத்தில் முட்டையிட்டு அடைகாத்து குஞ்சுகள் பொரிப்பதாகத் தெரிகிறது. Mallard வாத்துகள் அளவில் பெரியவை. ஆண் வாத்துகள் கழுத்தைச் சுற்றி வெள்ளை நிற வளையம் போன்ற அமைப்புடனும், தலைப் பகுதி தனித்துவமான மரகதப் பச்சை நிறத்திலும் காணப்படும். 

Aix Sponsa எனப்படும் காட்டு வாத்துகள் (Wood Ducks) அமெரிக்காவில் உள்ள பறவைகளில் மிக அழகியவையாகக் கருதப்படுகிறது. Sponsa என்றால் Bride என்று பொருள்படும். காட்டு வாத்துகள் தலையிலிருந்து வால் சிறகுகள் வரை சுமார் 18 அங்குலம் நீளமுடையது. இவைகள் தரையிலிருந்து 20 - 30 அடி மேலே, புழக்கடையிலுள்ள மரக்கிளைகளில் கூடு கட்டி அல்லது மரப் பொந்துகளில் முட்டையிட்டு, அடைகாத்து குஞ்சுகள் பொரிப்பது வியப்பாய் இருக்கிறது.

காட்டு வாத்துகள் மற்ற வகை வாத்துகளைப் போல, வாழ்நாளின் பெரும்பகுதியை நீருள்ள ஆறுகளிலும், குளங்களிலும் கழித்தாலும், தங்குவதற்கும், முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பதற்கும் உயரமான மரங்களையே தேர்ந்தெடுக்கிறது.    

காட்டு வாத்துகள்  அமெரிக்காவின் பெரும் பகுதிகளிலும், கனடாவின் தெற்குப் பகுதியிலும் மிகுதியாகக் காணப்படுகிறது. மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை இவைகளின் இனப்பெருக்க காலம். இவைகள் வழக்கமாக வருடம் ஒருமுறை இனப்பெருக்கம் செய்கிறது. அபூர்வமாக வருடம் இரண்டு முறை முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதுமுண்டு.

பெண் வாத்துகள் அவைகள் எங்கு பிறந்து வளர்ந்தனவோ, அதே இடத்திலேயே கூடுகட்டி வாழ விரும்புகின்றன. அவைகள் தங்களுக்குப் பிரியமான அழகிய பலவண்ண ஆண் துணையுடன் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு கூட்டி வருகின்றன.

பெண் வாத்துகள் உயரமான மரக்கிளைகள், மரப்பொந்துகள் மற்றும் மனிதர்களால் செய்து மரக்கிளைகளில் வைக்கப்பட்ட, காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாக்கும் அமைப்புடன் கூடிய பெட்டிகளிலும் கூடுகள் அமைத்து 10 - 12  முட்டைகள் இடும். அதன் பின் 28  - 30 நாட்கள் அடைகாத்து குஞ்சுகள் பொரிக்கும். ஆண் துணை வாத்துகள் பெண் வாத்துகளை அடைகாக்கும் பொழுதும், உணவுக்காக தினமும் இரண்டு முறை இறங்கி வரும்போதும் உடன் சென்று கவனமாகப் பார்த்துக் கொள்ளும்.

இணை வாத்துகள் பொறித்த குஞ்சுகளை 56  - 70 நாட்கள் வரை கூட்டிலேயே பாதுகாத்து வரும். காட்டு வாத்துகள் மரக் கிளைகளில் கூடுகட்டி, குஞ்சு பொறித்து அவைகளைப் பராமரிப்பதைப் பார்ப்பது ஒரு அற்புதமான அனுபவம். அதைவிட, சுமார் 60  நாட்களுக்கு மரக் கூட்டிலேயே வளர்க்கப்பட்ட குஞ்சுகள் இரண்டும் மூன்றுமாக அதன் உயரமான கூட்டிலிருந்து கீச்சிட்டு சப்தமெழுப்பி தரையிலோ, கீழேயுள்ள நீர்ப்பரப்பிலோ படபடவென்று தாவிப் பறந்து குதிப்பதைக் காண்பது ஒரு கண் கொள்ளாக் காட்சியாகும்.

இளம் குஞ்சுகள் தாய்ப் பறவையுடன் சேர்ந்து தரையிலும், நீரிலும் சிறு பூச்சிகளையும், புழுக்களையும் உணவாகக் கொள்ளும். ஆமைகள், முதலைகள், பாம்புகள், பெரும் தவளைகள் மற்றும் கழுகு போன்ற பறவைகளுக்கு் 50 % குஞ்சுகள் இரையாக வாய்ப்புண்டு. குஞ்சுகள் தானாகப் பறந்து இரைகளிடமிருந்து தப்பிக்கும் வரை சுமார் 8  - 10 வாரங்கள் தாய்ப் பறவை கவனமாகப் பார்த்துக் கொள்ளும்.

குஞ்சுகள் வளர்ந்து பெரியதாகிப் பிரிந்ததும், அவைகள் அடுத்த பருவத்திற்குக் காத்திருந்து வம்ச விருத்தியைத் தொடரும்...

வ.க.கன்னியப்பன்   (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It