ஜுனியர் விகடன் வார இதழில் தமிழருவி மணியன் எழுதிவரும் ‘நாம் எங்கே போகிறோம்’ தொடரில் சில செய்திப் பிழைகள் உள்ளன. அவை வெறுப்பின் வெளிப்பாடுகளாக உள்ளன என்று முரசொலியிலும், கருஞ்சட்டைத் தமிழர் இதழிலும் நான் சுட்டிக் காட்டி இருந்தேன்.

குறிப்பாக, 1998 க்கு முன்பு, மூன்று முறை முதலமைச்சராக இருந்த கலைஞர் தமிழுக்கு என்ன செய்தார் என்றும், தமிழைக் கல்வி மொழியாக்க ஏன் முயற்சி செய்யவில்லை என்றும் தமிழருவி மணியன் கேட்டிருந்தார். 1970 நவம்பர் 30 அன்று சட்டமன்றத்தில், தமிழைக் கல்லூரி வரையில் பயிற்று மொழியாக்கும் சட்ட முன்வடிவைக் கலைஞர்தான் முன்மொழிந்தார் என்பதைத் தக்க சான்றுகளுடன் நிறுவியிருந்தேன்.

முரசொலியில் அக்கட்டுரை வெளியான அன்று இரவே, தொலைபேசியில் அழைத்து, அது செய்திப் பிழைதானே தவிர, வெறுப்பின் வெளிப்பாடு அன்று எனக் கூறினார் தமிழருவி மணியன். அந்தத் தொடர் முடியும் தருணத்தில் ‘வாக்கு மூலம்’ எனனும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுத இருப்பதாகவும், அதில் இந்தப் பிழையைத் தானே வெளிப்படுத்திவிட எண்ணியுள்ளதாகவும் கூறினார்.

ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தமிழருவி மணியனின் நேர்மையான குணத்தில் எப்போதும் நம்பிக்கை உடையவன் நான்!

- சுப.வீரபாண்டியன்

Pin It