“மதுரா விஜயத்தில் பாண்டியர்களின் வாளின் பெயர் சந்திரஹாசம் என்றும் இந்த வாள் ஆதிகாலம் தொட்டு பாண்டியர்களிடம் இருந்தது என்றும் இது தெய்வீக மகிமை பொருந்திய வாள் என்றும் கங்காதேவி வர்ணிக்கிறாள். பாண்டியர்கள் தங்களை சந்திரகுலத்தினர் என்று கூறிக்கொள்வதை ஆவணங்களில் காண்கிறோம். அதன்பொருட்டு குலவாளுக்கு சந்திரஹாசம் என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம்.”
உலக சரித்திரத்தில் நிகழ்ந்த கணக்கிலடங்காத வரலாற்றுப் போர்களை எத்தனையோ ஏடுகளில் பக்கம் பக்கமாகப் படித்தறிந்திருக்கிறோம். போரின் பயங்கரத்தை உணர்ந்திருக்கிறோம். ஆனால்
ஓடின புரவி வேழம் ஓடின உருளைத் திண் தேர்
ஓடின மலைகள் ஓட ஓடின உதிரப் பேர்ஆறு
ஆடின கவந்த பந்தம் ஆடின அலகை மேல்மேல்
ஆடின பதாகை ஓங்கி ஆடின பறவை அம்மா
(யுத்த காண்டம் 7444)
என்று கம்பராமாயணத்தில் கம்பன் வருணித்த யுத்தக் களத்தின் காட்சிகளை, போரின் பிரமாண்டத்தை அதன் வாள் வீச்சுகளோடும் ரத்தத் தெறிப்புகளோடும் அலறல்களும் கதறல்களுமாக அங்குலம் அங்குலமாக கண்முன் விரியும் காட்சிகளாக வண்ணங்களிலும் வடிவங்களிலும் காட்சிப்படுத்தி மிரட்டியிருக்கும் புத்தகம் சந்திரஹாசம் (முடிவில்லா யுத்தத்தின் கதை). இப்புத்தகத்தை விகடன் குழுமத்தின் விகடன் கிராபிக் தனது முதல் வெளியீடாகக் கொண்டுவந்துள்ளது. சாகித்ய அகாதெமி விருதுபெற்ற சு.வெங்கடேசனின் எளிய சொற்கட்டுகளாலான கலாபூர்வ எழுத்து மற்றும் க.பாலசண்முகத்தின் வண்ணச்சித்திரங்களால் சொல்லவியலா பரவச மனநிலையை வாசகர்க்குத் தருவிக்கும் இப்புத்தகம் தமிழில் வெளிவரும் முதல் கிராபிக்ஸ் நூல் எனப்படுகிறது. (ஏற்கெனவே தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட சில கிராபிக்ஸ் வடிவ புத்தகங்கள் வெளிவந்துள்ளன).
பாண்டிய மன்னர்களின் எழுச்சியையும் வீழ்ச்சி யையும் புனைவாக விவரிக்கும் இந்நூல் பாண்டிய மன்னனான மாறவர்மன் குலசேகர பாண்டியனின் மகன்களான சுந்தரபாண்டியன் மற்றும் வீரபாண்டியன் ஆகியோரை மையமாகக் கொண்டு புனையப்பட்ட வரலாற்றுப் புதினமாக அமையப்பெற்றுள்ளது. மார்க்கோபோலோ மற்றும் மாலிக்காபூர், ஆலப்கான் ஆகியோரின் வருகையும் துறைமுகங்களில் வந்திறங்கிய பல செல்வங்களும் என வரலாற்றுத் தகவல்களும் இடம் பெற்றுள்ளன.
வீரபாண்டியனின் வீரத்தையும் விவேகத்தையும் மதிநுட்பத்தையும் கொண்டு அவன் வெற்றிகண்ட இலங்கைப் போரையும் அதன் பின்னால் பாண்டிய நாட்டுக்கு அவன் இளவரசனாக பட்டம் சூட்டப் படுவதையும் விதந்தோதும் சித்திரங்கள் அழகிய காட்சியமைப்புகளாக விரிகின்றன.
சுந்தரபாண்டியன் தனது தாய்மாமனுடன் சேர்ந்து செய்யும் நயவஞ்சகம் சூழ்ச்சியின் இறுதி வெளிப்பாடாக தந்தையைக் கொன்றுவிட்டு தப்பிச் சென்று பாண்டிய நாட்டுடன் போரிடுவதற்காக மாலிக்காபூரை அழைத்து வரும் காட்சி வரை அதிநுட்பமான சித்திரக் காட்சிகள் வாசிக்கும் கண்களுக்கு வசீகரத்தைத் தந்தவண்ணம் நகர்கின்றன.
இப்புத்தகத்தில் பல வண்ணங்களில் வெவ்வேறு மன உணர்வுகளையும் நிலக்காட்சியமைப்புகளையும் வெளிப்படுத்தும் விதமாக தீட்டப்பட்ட சித்திரங்களே இப்புத்தகத்தின் சிறப்பை ஈர்ப்பதில் முதன்மையாக விளங்குகிறது.
கண்களை கடக்கவிடாது இறுத்திவைக்கும்படியாக ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள சித்திரங்கள் வாசகர்களின் உணர்வலைகளைத் தழுவிக்கொள்கின்றன. அனைத்து ஓவியங்களும் நேர்த்தியாகவும் செழுமையோடும் அமைந்திருந்தாலும் குறிப்பிட்ட சில சித்திரங்கள் உயிர்த் தன்மையோடு உலவுவதைக் குறிப்பிட வேண்டும்.
யானையன்று அம்புகளால் தைக்கப்பட்டு முள்ளம்பன்றியைப்போல நிற்கும் காட்சி, யானைகளின் காலில் மிதிபட்டு மாளும் போர்வீரர்கள் வீழ்ந்து கிடக்கும் காட்சி, வீரபாண்டியனின் மனைவியின் அழகிய உருவச்சித்திரம், மார்க்கோபோலோ கண்டு ரசித்த ஆடல் அரங்குக் காட்சிகள், நீலக்கடலில் துள்ளும் இரண்டு மீன்கள், அரசன் தரும் சந்திரஹாசத்தை ஏந்தி நிற்கும் இளவரசன் உரு, இளவரசனாகப் பட்டமேற்று மனைவியுடன் ஆடம்பரமாக நிற்கும் அரண்மனை அரங்கக் காட்சி, மாலிக்காபூரின் யானைப்படை ஒட்டகப்படை மற்றும் லட்சக்கணக்கான போர்வீரர்களின் சித்திரம் என கலையம்சம் நிரம்பித் ததும்புகிற சித்திரங்கள் புத்தகம் முழுதும் ஆக்கிரமித்துள்ளன.
இப்புத்தகத்தில் தரப்பட்டுள்ள ரகசியக் குறியீட்டு எண்ணைக் கொண்டு இப்புத்தகக் காட்சிகளை கிராபிக் காட்சிகளாக அலைபேசியில் மற்றும் கணினித் திரையில் காணமுடியும் என்ற தகவல் வாசகரின் மனதில் இந்நூலின் சுவாரஸ்யத்தை மேலும் கூட்டுவதாக உள்ளது, இந்தச் சித்திரங்களை கணினியில் அல்லது அலைபேசியில் பார்க்கமுடிவது சர்வநிச்சயமாக ஒரு வரலாற்றுச் சினிமாவுக்கு இணையாக இருக்குமென்பதில் ஐயமில்லை. இப்புத்தகக் காட்சிகளை கணினித்திரையில் காணமுடிந்தவர்கள் பாக்கியவான்கள்.
அட்டை முதல் அட்டை வரை அசத்தலான வடிவமைப்பு சொற்சிக்கனத்துடன் செழுமிய சித்திரங்கள் மற்றும் செய்நேர்த்திக்கு இந்நூலின் விலையான ரூ. 1499 என்பது அதிகப்படியாகத் தோன்றவில்லை. (சலுகை விலை ரூ. 999 என அறிவிக்கப்பட்டுள்ளது).
மாலிக்காபூர் படைதிரட்டி வருவதோடு கதை நின்றுவிடுகிறது. அடுத்து மதுரா வியூகம் 2 என்று இரண்டாவது பாகமாக வெளிவரும் என்று அறிவிப்பு தரப்பட்டுள்ளது.
தமிழில் கிராபிக் நாவலுக்கான சந்தை வாய்ப்பைப் பொறுத்து அடுத்தடுத்த பாகங்கள் வெளியிடலாம் என்ற எண்ணம் காரணமாக இருக்கலாம். நூலாசிரியர்களைத் தவிரவும் விகடன் நிறுவனத்தின் குழுவினரும் இதில் செலுத்தியிருக்கிற உழைப்பும் கவனமும் மதிக்கத்தக்கது.
அந்தக்கால சித்திரக்கதைப் புத்தகங்கள் மற்றும் காமிக்ஸ் புத்தகங்களை விரும்பிப் படித்தவர்கள் தத்ரூபமான போர்க்காட்சிகளில் சுழலும் வாள் வீச்சை பல வண்ணமயமான வடிவங்களில் கெட்டியான தாளில் காணும்போது கூடுதல் ரசனையை உணரமுடியும்.
தேர்ந்த ரசனையும் கலையார்வமும் உள்ளவர்கள் கண்டிப்பாகப் படிக்கவும் பாதுகாக்கவுமான புத்தகமாக இது விளங்கும் என்பது வெளிப்படை. புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டுகையில் மேலதிக கவனமாகச் செயல்படவேண்டிய அவசியத்தை இந்நூல் உண்டாக்கிவிடுகிறது. எப்போதும் படபடப்பும் பதற்றமும் கொண்டவர்களாக இருந்தாலும் இந்நூல் அவர்களை மென்மையைக் கையாள்கிறவர்களாக மாற்றிவிடும் சாத்தியங் கொண்டதாக உள்ளது என்று கூறுவதிலிருந்தே இந்நூலின் உள்ளடக்கத்தை வாசகர்கள் உணரமுடியும்.
சந்திரஹாசம் (கிராஃபிக் நாவல்)
எழுத்து: சு.வெங்கடேசன்
ஓவியம்: க.பாலசண்முகம்
விலை: 1499
விகடன் கிராபிக்ஸ்
754, அண்ணாசாலை, சென்னை -2