கதை - கதைமாந்தர்கள் - ஸ்கிரீன் பிளேயில் உள்ள யதார்த்தம், ஒரு த்ரில்லர் கதைபாணியில் பல ட்விஸ்டுகள், பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டோர் தரப்பிலிருந்து அல்லாமல் குற்றம்சாட்டப்பட்ட ஒருவரின் மகளை கதாநாயகியாக்கி கதையை நகர்த்திய வித்தியாசம், முற்போக்கு பஞ்ச் வசனங்கள், கதாபாத்திரங்களுக்கு சூட்டிய பிரபல பெயர்கள், காட்சியில் சில அர்த்தம் பொதிந்த அடையாளக் குறியீடுகள் போன்றவை எல்லோரையும் கவர்ந்திருக்கலாம்.
இதுபோன்று பார்வையாளர்களை கவர்கிற அதாவது "கனெக்ட்" (connect - இயக்குனர் பயன்படுத்திய சொல். அவர் பயன்படுத்திய பல ஆங்கிலச் சொற்களை இதில் கையாண்டுள்ளேன். பொறுத்தருள்க) பன்ற விசயங்களையும் நிகழ்கால ட்ரெண்டிங்கில் வெற்றிப்படமாக மாற்றுகிற சூட்சமங்களையும் பல மாதங்களாக ரூம்போட்டு யோசிப்பதுதான் கதைக் காட்சி எழுத்தாக்கம் (script writing). "ரிச்சி" என்கிற முதல் பட தோல்விக்குப்பின் ஹரி என்பவருடன் சேர்ந்து இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் செய்த ஸ்கிரிப்ட் ரைட்டிங்கின் விளைவே இந்த "கார்கி". "கனெக்ட்" என்ற வலைவீசுபவனுக்கே லாபம், சிக்கும் மீன்களுக்கல்ல.
"கார்கி படத்தின் கதை, அயனாவரத்தில் நடந்த உண்மை சம்பவம் போல் இருப்பதாக சொல்லப்படுகிறதே, அதை மூலமாக வைத்து உருவாக்கினீர்களா?" என்று ஒரு வலைக்காட்சி பேட்டியில் ஒரு பெண் கேட்டதற்கு இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் இல்லை என்று பதிலுரைத்தார்.
மேலும், "அந்த மாதிரி ஒரு சம்பவத்தை வைத்து பணமாக்குவது (capitalize பண்ணுவது) தவறு. இது பல சம்பவங்களின் கூட்டு. அதாவது டில்லியில் நியு இயர் பார்ட்டி முடிந்ததும் 5-வது மாடியிலிருந்து 1-வது மாடிக்கு படியில் வந்த ஒரு பெண்ணை ரேப் பண்ணியிருந்தாங்க; பம்பாயில் ஒரு பெண் வழக்கறிஞர் அவரது "செக்யூரிட்டி கார்டால்" ரேப் பண்ணப்பட்டார்; டில்லியிலோ ஹரியானாவிலோ நடந்த ஒரு குற்றச் சம்பவத்தில் லேபரடார் நாய் விட்னஸ் ஆக இருந்தது பற்றி படித்தேன். இப்படி பல "பேப்பர் ஒர்க்"கிலிருந்து உருவான கதையே ஒழிய ஒரு சம்பவத்தை வைத்து கார்கி உருவாக்கப்படவில்லை" என்கிறார்.
உண்மை சம்பவம் ஒன்று எனில் பாதிக்கப்பட்டோர் தரப்பிடமிருந்து அனுமதி பெற வேண்டும் அல்லது சன்மானம் தர வேண்டும். பலவற்றின் பேப்பர் ஒர்க் என்றால் அத்தொல்லைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். இது ஒரு யுக்தி. (ஒரு சம்பவத்தை தழுவி படம் எடுத்து பல பிரச்சினைகளை எதிர்கொண்ட ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இவரைவிட சிறந்தவர்). மேலும், ஒன்றோ, பலவோ நடந்த உண்மை சம்பவத்தில் எதை, எப்படி எடுத்தாண்டு, என்ன சொல்லப்படுகிறது என்பதுதான் "கேப்பிட்டலைசேசனைத்" தீர்மானிக்கிறது. போலீசால் கொலை செய்யப்பட்ட பென்னிக்ஸ் ஜெயராஜ் சம்பவத்தை எடுத்து அதிகாரிகளையோ ஆட்சியாளர்களையோ அம்பலப்படுத்த இயக்குனர் துணியவில்லை (பென்னிக்ஸ் ஜெயராஜ் பெயரை போலீசிற்கு அதாவது அவர் சொல்கிறபடி 'நல்ல போலீசிற்கு' சூட்டுகிற அளவிற்கே இயக்குனருக்கு நேர்மையும் தைரியமும் உள்ளது). மாறாக, சமூகத்தில் நடந்த ஏதோ ஒரு சிறுமி ரேப் சம்பவத்தை எடுத்து லோயர் மிடில் கிளாஸ் காவலாளியை குற்றவாளியாக்கி அம்பலப்படுத்துகிறார். இதற்கு காவலாளி குடும்பத்தினரின் இன்னல்களையும் மகளின் நேர்மையையும் காட்டினால் பாவ விமோசனம் கிடைத்துவிடுமா என்ன?
பாலியல் குற்றங்களை எதிர்க்கிறவர் - தடுக்கிறவர் யாராக இருந்தாலும் சந்தேகப்படு - யோக்கியன் என நம்பிவிடாதே என்பதுதானே கார்கி சொல்கிற செய்தி? "நான் எந்த செய்தியையும் சொல்வதற்காக படம் எடுக்கவில்லை; ஒரு கதை சொல்லியிருக்கிறேன்; அதை 360 டிகிரி பார்வையில் இன்னொரு தரப்பிலிருந்து சொல்லியிருக்கிறேன், அவ்வளவுதான்" என அதே பேட்டியில் ஒரு கேள்விக்கு இயக்குனர் பதிலுரைக்கிறார். கலை கலைக்காகவே என்கிற பார்வை. அவர் படத்தை வெற்றியாக்கி கல்லா நிரப்ப வேண்டிய மந்தையாக மட்டுமே மக்களை பார்க்கும் பார்வை.
அப்புறம் திருநங்கை நீதிபதியின் பஞ்ச் வசனங்கள், பூப்புநீராட்டு விழாவில் அகல்யாவின் அறிவுரைகள் எதற்கு வைத்தாராம்? "குற்றவாளி உறவினராக இருந்தாலும் நேர்மையாக தண்டனை வாங்கித்தர வேண்டும்; குற்றம்சாட்டப்பட்டவரின் குடும்பத்தினரை சமூகம் தவறாக நடத்தக்கூடாது - என சொல்வதாக எனக்குப் பட்டது அப்படியா?" என்று அப்பேட்டியில் அப்பெண் கேட்டதற்கு மறுக்காமல் வேறு விசயத்திற்கு கடந்து போவது ஏன்?
பிறிதொரு பேட்டியில் எந்த கதைமாந்தர்களும் வழக்கமாக காட்டப்படுகிற கேரக்டரைசேசஷனாக இருக்கக் கூடாது என மெனக்கெட்டதாகக் குறிப்பிடுகிறார். குற்றவாளி இவரா என எல்லோரையும் சந்தேகப்படுகிறபடியே காட்சி அமைத்ததுதான் அந்த மெனக்கெடல் என்றால் அவரும் அவரது கதைமாந்தர்களும் முரண்பாடுடையவர்களாக இருப்பதற்கு காரணமும் அதுவேயாகும்.
தன் தந்தை இக்குற்றத்தை செய்திருக்க மாட்டார் என்று நம்பிய பொழுது அவரை சிறையில் பார்க்க மறுக்கிற கதாநாயகி, சிறுமியிடம் பேசிய பிறகு - அவர்தான் குற்றவாளி எனத் தெரிந்த பிறகு தந்தையை பார்க்க வெறுப்பவராக - எதிர்ப்பவராக நடந்து கொள்ளவில்லையே, ஏன்? தந்தையுடன் ஒன்றாக ஆட்டோவில் வந்து (இடம்மாறி அமர்ந்திருப்பது முகத்தை திருப்பிக் கொள்வது போதுமானதா) போலீசிடம் கையெழுத்து போடுகிற போது இறுதிக் காட்சியில் மட்டுமே சினிமா பாணி "ட்விஸ்ட்" கொடுத்து தனது எதிர்ப்பு நிலையை வெளிப்படுத்துகிறார். தந்தைக்கு எதிராக பேசும் தனது காதலரையும், தந்தை வேலை மாறியது பற்றி கேள்வி கேட்ட வழக்கறிஞரையும் உடனுக்குடன் எதிர்த்து வெறுப்பைக் காட்டும் கார்கி, தந்தையிடம் அத்தகைய வெறுப்பைக் காட்டவில்லை. ஏன், இந்த இயல்பை மீறிய முரண்பாடு?
அதேபோல், தாயிடம் "நான் ஆண் பிள்ளையா இருந்தா நம்பியிருப்ப?" என்று கேட்கிற கதாநாயகி, வெளியே சென்று வீடு திரும்ப தாமதமானது தம்பி என்றால் பதைபதைத்திருப்பாரா, தங்கை என்றதால்தானே பதைபதைக்கிறார்? ஏன் இந்த முரண்பாடு?
அதேபோல், தவறாக நடந்து கொண்ட ஆசிரியரை தந்தை தடுத்து அடித்து விரட்டியபோதோ, "இதுக்கெல்லாம் பயப்படலாமா? ஒரு நிமிஷம் அப்பாவை நினைச்சுக்கோ, தைரியம் தானா வரும்" என்றபோதோ மாறாத கதாநாயகி, இறுதி காட்சியில் தந்தையை குற்றவாளியென பிடித்துக் கொடுத்தப் பிறகே மாறுகிறாராம். அதாவது பெண்ணிற்கு கட்டுப்பாடு விதிக்காத - கண்டிக்காத அக்காவாக மாறிவிட்டதாக அவரது தங்கை அக்ஷரா கூறுகிறார். அதோடு அவளை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியபோது அணிந்திருந்த ஆடையின் மஞ்சள் வண்ண பயத்திலிருந்தும் - வெறுப்பிலிருந்தும் விடுபட்டுவிடுகிறாளாம். ஆக, இப்படி பெண்ணடிமைக் கட்டுப்பாடு போடுபவராக, மஞ்சள் நிறத்தால் பழைய நினைவலைகளில் பயந்தவளாக இருந்த ஒரு பெண்; "நான் ஆண்பிள்ளையா இருந்தா நம்பியிருப்ப, பல ஆண்டு காலமா எங்கப்பாவை பார்த்திருக்கேன்; எங்கப்பா அப்படிபட்டவரல்ல" என தைரியமாக வாதிடுவாரா? என்ன முரண்பாடான லாஜிக்?
தனது மகளுக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியரை அடித்து விரட்டிய தந்தையாகிய பிரம்மானந்தா, வேலையிடத்தில் எதிர் கேரக்டர் கொண்டவராக -காமுகனாக - இருந்தார் என்பதை உணர்த்த எந்தக் காட்சியும் வசனமும் பார்வையாளர்களை "கன்வின்ஸ்" பண்ண இல்லை. வாட்ச்மேனை வாட்ச் பண்ணிதான் பிடித்தோம் என்று அந்த 'நல்ல போலீசு' சொன்னதைத் தவிர.
மேலும், Co-writer ஹரி, தவறாக குற்றம்சாட்டப்பட்டவரின் மகன் தந்தையைக் காப்பாற்ற போராடுவதாகத்தான் கதைக்கு முதலில் கருவை வழங்கியதாகவும் அதை இயக்குனர், மகளாக மாற்றியதாகவும் பேட்டியில் குறிப்பிடுகிறார்; கடைசி ட்விஸ்டுக்காக தந்தையை குற்றவாளியாக்க வேண்டிவந்தது ஏன் என்பதை சொல்லாமல் நழுவிவிடுகிறார். ஆக, கடைசி ட்விஸ்ட் எந்திரகதியாக சுவராசியத்திற்காக செய்யப்பட்டதே.
அந்த ட்விஸ்ட் படம் நகர்ந்த திசை - நோக்கம் முழுமையையும் சிதைத்துவிடுகிறது. இயக்குனர் சொல்வதுபோல் அண்டைவீட்டு சராசரி மனிதனை நம்மிடம் "connect" செய்துள்ளாரா? இல்லை, குற்றவாளியாக்கி கூண்டிலேற்றி மகிழ்கிறார். குற்றம் செய்தவரின் மகள் தைரியத்தைப் பெற கதையை இயக்குனர் எதிர்திசையில் மெனக்கெட்டு நகர்த்த வேண்டிய அவசியம் என்ன?
ஒரு வலதுசாரி கருத்தை இடதுசாரி கதையம்சமுள்ள காட்சி - வசனங்களோடு விவரித்திருப்பதுதான் கார்கி. தவறை தட்டிக்கேட்பவனையும் நம்பாதே - சந்தேகப்படு என்பதை நேர்மறையில் விளக்கியிருந்தால் படம் தோல்வியடைந்திருக்கும். இது பின்நவீனத்துவவாதிகளின் யுக்தி. ரியலிசம் என்பது பின் நவீனத்துவத்தின் ஒரு பகுதியே. தெரிந்தோ தெரியாமலோ இயக்குனர் இத்தகைய பின்நவீனத்துவ பாணி அணுகுமுறையை கையிலெடுத்துள்ளார். சமூக யதார்த்தத்தில் நேர்த்தியாக கதையை டிராவல் செய்ய விட்டு, நேர்மை - நீதி - நியாயம் - பெண்ணுரிமை - திருநங்கை உரிமை போன்ற பொது மாச்சரியங்களோடு சமூகத்திற்கு எதிரான தனது கருத்தை கடைசி ட்விஸ்டில் இறக்கியுள்ளார்.
கார்கி மட்டுமல்ல சுழல் - The Vortex என்ற வெப் சீரிஸ்-ம் இதற்கு உதாரணம். கம்யூனிஸ்டை பாலியல் சுரண்டல்வாதியாகவும் கொலையாளியாகவும் கடைசி ட்விஸ்டில் காட்டுவதை மறைப்பதற்காக படத்தில் ஆங்காங்கே கம்யூனிச ஆதரவு காட்சிகள் வசனங்கள் வைக்கப்பட்டுள்ளன. எதையும் பார்வையாளர்கள் உணராத வண்ணம் கதை ட்விஸ்டுகளால் டிராவல் செய்து சுழன்றடித்துக்கொண்டே இருக்கும்.
சாய் பல்லவி நடித்த "விராட பர்வம்" என்றொரு படமும் இதற்கு எடுத்துக்காட்டு. இதே பாணியில் கடைசி ட்விஸ்டில் மொத்த படத்தின் கதையையே மாற்றிவிடும்; நக்சல்பரி ஆதரவு படம் போல் முழுத் திரைக்கதையும் நகர்ந்து கடைசி காட்சியில் எதிர்க்கருத்தைக் கக்கும்.
ட்விஸ்டுகளால் மட்டுமே கதையின் சுவராசியம் இருக்கிறது; பார்வையாளர்களை கட்டிப் போட முடியும் என நம்புகிற படைப்பாளிகள் தமிழ் திரைத்துறையில் (தென்னிந்தியா அளவிலும்) நுழைந்திருப்பது நல்ல போக்கல்ல.
- ஞாலன்