இந்த வாழ்வு எல்லா முடிச்சுகளையும் திரும்ப அவிழ்ப்பதில்லை. முடிச்சுகள் இல்லாத வாழ்வில் திருப்பங்கள் இல்லை.
ஒரு கோபக்கார இளைஞன்... குற்றம் காணும் போதெல்லாம் கொதித்தெழ ஒரு நோக்கம் இருந்தது. அந்த நோக்கத்தில் ஒரு தீர்க்கம் இருந்தது. அந்த தீர்க்கம் சென்னையை நோக்கி நகர செய்தது. ஆசை... .. வெறி.. லட்சியம்... . எல்லாமே ஹீரோ. அதை நோக்கிய தொடர் முயற்சியில்.. ஹீரோவாவும் ஆனார். ஒரு பக்கம் ரஜினி என்கிற சிங்கம்... . ஒரு பக்கம் கமல் என்கிற யானை... இடையில் என்ன செய்து விட முடியும். ஆனால் செய்தார். தனக்கென ஒரு பாணி.. தனக்கென ஒரு வழி.. தனக்கென ஒரு ஸ்டைல். விஜயராஜா விஜயகாந்த் ஆனார்.
SA சந்திரசேகர் உடன்... .. " நீதியின் மறுபக்கம்... ... சட்டம் ஒரு விளையாட்டு... .. சட்டம் ஒரு இருட்டறை... போன்ற படங்கள் அவருக்குள் இருக்கும் சிவப்பு மனிதனை வெளிக்கொண்டு வந்தது. தப்பு நடந்தா தட்டி கேட்பேன்டா என்ற துணிச்சல் இயல்பாகவே இருந்த மனிதர்க்கு அதே போல் அமைந்த கதாபாத்திரங்கள் ஒரு காத்திர தன்மையை அவருள் விதைத்தது. நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோமோ அது தான் நாம். அவர் ஹீரோவாக இருந்தார். ஒரு ஹீராவாகவே தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.
ஒரு கட்டத்தில்... ஹீரோவாக வாய்ப்பில்லை. 'முரட்டுக்காளை' படத்துக்கு ரஜினிக்கு வில்லனாக நடிக்க அழைப்பு வருகிறது. சினிமாவில் இப்படி நேருக்கு மாறாக என்னவெல்லாமோ நடந்து விடும். மனம் இங்கே எதற்கு வந்தோம் என்ற லட்சியத்தை பற்றி மீண்டும் சுழல்கிறது. வாழ்வில் இரண்டு வகை. ஒன்று.. கிடைத்ததை வைத்துக் கொண்டு வாழ்வது. இன்னொன்று இதுதான் வேண்டும் என்ற தீர்மானத்தோடு அதற்காகவே வாழ்வது. இவர் இரண்டாம் வகையை தேர்ந்தெடுத்தார்.
"நான் ஹீரோ மெட்டீரியல். வில்லன் என்ற பேச்சுக்கே இடமில்லை" என்றார்.
அந்த நேரத்தில் தான்.. பிலிம் இன்ஸ்டிட்டியூட்-ல் இருந்து புதிய சிந்தனை கொண்ட மாணவர்கள் வெளியே வந்தார்கள். புது வகை சினிமாவை எடுக்க போகும் லட்சியத்தோடு அவர்கள் வேலை பார்த்தார்கள். "ஊமை விழிகள்" என்றொரு நவீன பாணி திரில்லர் படம். அதில் ஒரு போலீஸ் கதாபாத்திரம். என்ன மாதிரி சினிமாவாக வரும் என்ற எந்த மாதிரியும் இல்லை. புது பசங்களை நம்பலாமா வேண்டாமா என்ற அனுபவம் சார்ந்த தயக்கம் வேறு. ஆனாலும்.. நண்பர் சந்திரசேகர் சொல்லி கதையை கேட்கிறார். நடிக்கிறார். படம் ஹிட். வழக்கமான ரூட் இல்லைதான். ஆனாலும்... இனி வழக்கத்துக்கு வர போகிற ரூட்... என்று புரிகிறது.
அதன் பிறகு "உழவன் மகன்... . செந்தூர பூவே" என்று அவர் அடித்தாடியது எல்லாம் அதகளம். எனக்கு தெரிந்து தரையில் ஓடுவது போல சுவற்றில் ஏறி... அப்படியே திரும்பி காலால் உதைத்து சண்டையிடத் தெரிந்த... .முடிந்த... பலம் வாய்ந்த நடிகர் அவராகத்தான் இருக்க முடியும். சண்டைக் காட்சியில்... எத்தனை ரிஸ்க் எடுக்க முடியுமா அத்தனை ரிஸ்க் எடுத்தார். உதவி என்று யார் கேட்டாலும்... . அவர் கதவு திறந்து இருந்தது. வெள்ளந்தி மனிதன். கோபமோ அன்போ அப்போதே வெளிப்படும்.
"ராஜநடை"யில்... மனைவி சாக போகிறாள் என்று தெரிந்து அழும் விஜயகாந்தை அத்தனை சீக்கிரத்தில் மறக்க முடியாது. அவர் அழுதால் படம் பார்க்கும் தாய்மார்கள் அழுவார்கள். அழுதார்கள். "செந்தூரப்பாண்டி"யில் நம்ம தளபதியை என் தம்பிடா என்று பட்டி தொட்டியெல்லாம் கூட்டி சென்று அறிமுகப் படுத்திய மேன்மை குணம் கொண்ட சினிமா மைந்தன். "கேப்டன் பிரபாகர"னை விடுத்து அவரை முழுமையாக பேசவே முடியாது. அது மைல்கல். இளம் ரத்தம் செல்வமணியுடன் சேர்ந்து ஆடிய ஆட்டம்... வீரபத்திரனையும்... அவன் பின்னால் இருந்த அரசியல் குள்ளநரிகளையும் சாலைக்கு இழுத்து வந்து கேள்வி கேட்டது. அதுவும் இறுதிக் காட்சியில் பேசும் வசனங்கள் எல்லாம்.. நான் ஏழாவது படிக்கையில் பார்த்தது. ஆனாலும் இன்னமும் ஆழமாய் மனதுக்குள் பதிந்திருக்கிறது. படம் ஆரம்பித்து கிட்டத்தட்ட இடைவேளை காட்சியில் ஹீரோ அறிமுகம் என்பதே ஒரு வித்தியாசமான முயற்சி. மிரள விட்ட அதிரி புதிரி சினிமா. நண்பர் சரத்குமாருக்கு வாழ்வு கொடுத்த படம்.
பெரிய மருது... .. கோயில் காளை... ... திருமூர்த்தி... ... ஏழைஜாதி... ... பூந்தோட்ட காவல்காரன்... என்று எங்களூரில் இருந்த நான்கு தியேட்டர்களிலும் மாறி மாறி பார்த்திருக்கிறேன். கண்கள் சிவக்க விஜயகாந்த் திரையில் சண்டையிட ஆரம்பித்தால்... உள்ளிருந்து ஒரு புரட்சிக்காரன் எங்களுக்குள் எழுவான். "தப்பு பண்ணினா தட்டி கேளு" என்ற பாடத்தை அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன் என்றால் சினிமா தாண்டிய திரைக்கதை நிஜத்தில் இருக்கிறது என்று நம்புவோம்.
வைதேகி காத்திருந்தாள்... ... அம்மன் கோயில் கிழக்காலே... .. என் ஆசை மச்சான் என்று R.சுந்தர்ராஜனோடு சேர்ந்து நடிப்பில் தனக்கு இன்னொரு பக்கம் இருக்கிறது என்றும் நிரூபித்தார். "என் ஆசை மச்சான்" படத்தில்... ஒரு காட்சியில் ரேவதியை மூச்சு விட கூடாது என்று சொல்ல அவர் நிஜமாகவே மூச்சு விடாமல் இறந்து போக இறந்து போன ரேவதிக்கு அழுகையை அடக்கிக் கொண்டே தாலி கட்டும் காட்சிக்கெல்லாம்... .. அப்போது எங்கள் வீதி பெண்கள் கண்ணீரை சமர்பித்தார்கள். வாரம் முழுக்க வீதிகளில் அது பற்றிய பேச்சு இருந்தது. விக்ரமனின் "வானத்தை போல" மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சண்டைக்காட்சி மட்டுமல்ல.. அன்புக் காட்சிக்கும் விஜயகாந்த் கச்சிதமாக பொருந்துவார் என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்தார்.
தளபதியை எப்படி ஊருக்கெல்லாம் கூட்டி சென்று அறிமுகப் படுத்தினாரோ... அப்படி சூர்யாவையும் ஊரெல்லாம் கூட்டி சென்று "இவன் நல்லா நடிப்பான்... கொஞ்சம் கவனிங்க" என்று சொல்லாமல் சொல்லிய "பெரியண்ணா" வுக்கு காலத்துக்கும் சூர்யா நன்றிக்கடன் பட்டிருக்க வேண்டும். "புலன் விசாரணை" இன்னும் நம்மை அதிர செய்யும். "திரும்ப வரணும்... பழைய பன்னீர் செல்வமா திரும்ப வரணும்... " என்று திலகன் சொல்லும் "சத்ரியன்" விஜயகாந்த் என்று முழு நடிகனை உலகுக்கு காட்டியது. எ கம்ப்ளீட் ஆக்டர்.
"சிறையில் பூத்த சின்ன மலர்" என்ற படத்தில் முதல் சண்டையில் கைகளை உபயோகிக்காமல் கால்களாலேயே சண்டை செய்திருப்பார். கால்களில் மட்டும் அல்ல மனதிலும் பலம் உள்ள மனிதன். "ரமணா" வாய்ப்பையெல்லாம் மிக அற்புதமாக பயன் படுத்திக் கொண்டார். அந்த ப்ரஃபஸர் கதாபாத்திரம் கச்சிதமாக பொருந்தியது ஒரு பக்கம் என்றால்.. மனைவி மகளை எரித்த பிறகு... சம்பந்தப்பட்ட அலுலகத்துக்குள் புகுந்து கதவை சாத்திவிட்டு பழைய ஹேர் ஸ்டையிலில் இருக்கும் விஜயகாந்த் சுளுக்கெடுக்கும் காட்சி... காலத்துக்கும் தேவையான சண்டை.
ராம்கியும் நிரோஷாவும் சந்திரசேகரும்.. ஓடிக் கொண்டிருக்கும் ரயிலில் அடித்து பிடித்து ஏறி இருப்பார்கள். வர வேண்டிய "கேப்டன்" இன்னும் வரவில்லை. ரயிலில் இருந்து பார்க்கையில்... . தூரத்தில்... காட்டுக்குள்... கேப்டன் ஓடி வந்து கொண்டிருப்பார்.
"கேப்... ... ட்ட்டன்... ... .. கேப்... ... ட்ட்டன் " என்று இவர்கள் கத்துகிறார்கள். மனோஜ் கியானின் இசையில்... காட்டுக்குள் இருந்து ஒரு சிங்கத்தை போல ஓடி வரும் விஜயகாந்தை திரை அதிர நாம் ரசித்தோம். இன்றும் அந்த காட்சி மனதை விட்டு அகலவில்லை. இந்தப்பக்கம் ரயில் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்தப்பக்கம் அடியாட்களின் கொடூரமான துரத்தல். அவர்களோடு சண்டையிட்டுக் கொண்டே ரயிலை பிடிக்க ஓடி வந்து கொண்டிருப்பார். மயிர் கூச்செரியும் காட்சி. என்னாகுமோ ஏதாகுமோ என்ற பரிதவிப்பு ரயில் சத்தத்தோடு மனதின் சத்தம் நமக்கு பரபரக்கும். காடு... .. மேடு... ... ரயில் செல்லும் பாலத்தின் மேற்பரப்பு... ரயிலின் மேற்கூரை என்று ரயிலோடு தொடர்ந்து ஓடிக் கொண்டே சண்டையிட்டு வரும் கேப்டனை ஒரு சாகச மனிதனாகத்தான் அந்த வயதில் பார்த்தேன். அந்த கதாபாத்திரத்தில் வாழ்வை சம நிலைப்படுத்தும் ஓர் அர்த்தம் இருப்பதை இப்போது உணர்கிறேன்.
எடுத்த காரியத்துக்காக இறுதி வரை போராடும் சாகச திரைக்கதைகள்... . காலத்தால் அழிக்கவே முடியாத காட்சி அமைப்புகள் விஜயகாந்த் சினிமாக்களில் மிக அழகாக அரிதாரம் பூசின. செந்தூர பூ என்று ஒரு பூ இல்லை என்று கங்கை அமரன் ஒரு முறை சொல்லி இருக்கிறார். ஆனால் எப்போதும் நம் மனதில் வேர் விட்டு பூத்து குலுங்கும் செந்தூர பூ மரம் விஜயகாந்த். அற்புதங்களை அழகாக்கி அவரின் புன்னகையாக்கி விட்ட அவரின் சினிமாக்களை மீண்டும் மீண்டும் நாம் ரசித்துக் கொண்டுதானிருக்கிறோம். நல்ல கலைஞனை சினிமா ரசிகன் ஒரு போதும் கை விடுவதில்லை.
"சின்ன மணி குயிலே... . மெல்ல வரும் மயிலே... "என்று நெற்றி மறைக்க அரை வட்ட கற்றை முடியோடு சிரிக்கும் விஜயகாந்த் என்ற மாபெரும் நடிகனை "பாட்டுக்கொரு தலைவன்" என்று ஆராதிக்கிறேன்.
2001 ம் ஆண்டு கலைமாமணி விருது வாங்கினார். இன்னும் வந்திருக்க வேண்டிய விருதுகள் ஏராளம். பழைய பன்னீர் செல்வமாக திரும்பி வரணும் என்பது தான்... அவரை அணு அணுவாக ரசித்த ஒரு ரசிகனின் ஆசை. திரும்ப பழைய பன்னீர் செல்வமா வரணும். வருவார். நம்புவோம்.
- கவிஜி