"உலகத்துல ரெண்டே ஜாதி தான். ஒன்னு வாடகை குடுக்கற ஜாதி. இன்னொன்னு வாடகை வாங்கற ஜாதி...."

எத்தனை நிதர்சனமான உண்மை.

கூர் கத்தியை கண்களில் விட்டு வாழ்வின் பெரும் பெரும் தத்துவங்களை எல்லாம் நோண்டி வெளியே தூக்கி வீசும் புது குரலெனவும் கூறலாம். கடிகார மனிதர்கள் கனவுகளற்றவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களை நேருக்கு நேர் சந்தித்து அவர்களோடு பழகி இருந்தாலும் திரையில் சற்று தள்ளி நின்று பார்க்கையில் பரிதவிக்கும் மனதோடு கண்களும் அவ்வப்போது கலங்குவதை, ஒரு வீடும் வாசலும் எமோஷனல் தொடர்பானது என்பதை புரிந்து கொண்டவன் என்ற வகையில் தவிர்க்க முடியவில்லை.

kadikara manithargalவீட்டு சாமான்களை லாரியில் ஏற்றிய பிறகு வீட்டை வாடகைக்குத் தேடி அலையும் துயர சம்பவத்தில்தான் படம் ஆரம்பிக்கிறது. எங்கெங்கு திரும்பினும் இந்த கடிகார மனிதர்கள் பெருத்த முயற்சியோடு எதையோ கடந்து கொண்டேயிருக்கிறார்கள். அவர்களுக்கு ஓட மட்டுமே தெரிந்திருக்கிறது. நின்று நிதானமாய் இளைப்பாற எதுவுமற்ற புள்ளிக்குள் சும்மா அமர்ந்திருக்க அவர்களால் முடிவதில்லை. அப்படி நிகழும் சம்பவங்களில் அவர்கள் இல்லை. அவர்கள் தங்களின் நிழல்களை கவனிக்காதவர்கள் என்றே நம்பும் இடத்தில் தன் மூன்றாவது பையனை மறைத்துதான் கதை நாயகன் குடும்பத்துக்கு வாடகை வீடு கிடைக்கிறது.

புருஷன் பொண்டாட்டி.. ரெண்டு புள்ளைங்க இருந்தா வீடு கிடைக்கும் என்பதே வாடகை வீட்டிற்கான விதி. மிக கொடூரமான பிம்பத்தில் சித்திரம் தானே தன்னை கிறுக்கிக் கொள்வதை போல வீட்டின் உரிமையாளர் இருக்கிறார். நின்றால் குற்றம். அமர்ந்தால் குற்றம். பார்த்தால் குற்றம். பேசினால் குற்றம். அதிகமாக சிறுநீர் கழித்து விட்டாலும் குற்றம். குற்றங்களின் கழுத்து நிறைய வீட்டு உரிமையாளரின் கைகள் படர்தாமரையைப் போல படர்ந்து இருப்பதை வெறித்துப் பார்க்கையில் இனம் புரியாத ஒரு வகை பயம் நம்மை தொற்றிக் கொள்கிறது. சொந்த வீட்டுக்காரர்களுக்கு நான் சொல்லிக் கொண்டிருக்கும் பயம் புரிபட சற்று காலம் ஆகும். அல்லது புரிபடாமல் போகவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் வாடகை வீட்டில் இருப்பவர்களை உற்று கவனியுங்கள். அவர்களே தங்களை அகதிகள் போல தான் நடத்திக் கொள்வார்கள். அப்படியாகவே ஆகி விட்ட வாழ்வின் சூத்திரங்கள் அவர்களுக்கு. மனிதன் தோன்றிய போது எவனும் வீட்டோடு பிறக்க வில்லை. சிம்பிள் இசம் தான். முந்தினவர் வீட்டு உரிமையாளன். பிந்தியவர் வாடகைக்காரன். அந்த கிழவி கதாபாத்திரம்... வீதிக்கொன்று இருக்கிறது. வீட்டைக் கொளுத்தும் முதிர் மூளைக்குள் முழுக்க முழுக்க மூட்டை பூச்சிகள் அவர்கள் பெற்ற கொடும் சாபங்கள்.

மனிதன் கொண்டதிலேயே மிக மோசமான சிந்தனை வீட்டுக்கு வாடகை வாங்கியது தான். அதன் பின்னணியில் ஆழம் செல்வோமானால் அங்கு ஆண்டான் அடிமை தத்துவம் காலாட்டிக் கொண்டும் கை கட்டிக் கொண்டும் அமர்ந்திருக்கும். அந்த வகையில் இப்படி ஒரு கதையை கையில் எடுத்ததற்கு மிக பெரிய பாராட்டுக்கள் இயக்குனருக்கு..

தினமும் பேக்கரி ஐட்டங்கள் கொண்டு போக பயன் படுத்தும் பெட்டிக்குள் மூன்றாவது மகனை வைத்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்து வெளியே செல்வதும் இரவு வாசலில் யாருமில்லாத போது உள்ளே கொண்டு வருவதும்.... நாம் பேசும் தமிழன் நாம்... இந்தியன் நாம்... உலக மனிதன் நாம்....எல்லாவற்றுக்கும் பொருளே இல்லை என்று உரக்க கூவும் அதிகாலை கடிகார அலாரத்தின் முற்களின் வலிகள்.

வாழ்நாள் முழுக்க ஒரு வித நடுக்கத்தோடே வாழும் கதை நாயகன்..... இந்த வாழ்வையும் அப்படியே தான் பார்க்கிறான். இந்த வாழ்வும் அவனை அப்படியே தான் நடத்துகிறது. அவன் அதிர்ந்து கூட பேச முடியாதவனாகி விடுகிறான். அவனை இந்த வாழ்வு போட்டு அடித்து துவைக்கிறது. மனைவியின் மடியில் படுத்துக் கொண்டு அழும் போது வாடகை வீட்டில் வாழும் இந்த வாழ்வைப் போல மிக கொடுமையான செயல் இவ்வுலகில் ஒன்றில்லை என்று தாராளமாக நம்பலாம். கொம்பு முளைத்த மனிதர்களாகவே வீட்டு உரிமையாளர்கள் இருக்கிறார்கள். காசுக்கு போர்த்திய புது வித விலங்கு தோலில் இடைத்தரகர்கள் இருக்கிறார்கள். காரணமே இல்லாமலும் அழும் முகத்தை மாட்டிக் கொண்டுதான் இருக்க வேண்டும் வாடகைக்கு இருப்பவர்கள். அவர்கள் சபிக்கப்பட்டவர்கள். அகதிகளை போல அவர்களின் கழிவறை வரிசைகளில் தூக்கமும் துக்கமும் பீறிடுகிறது. எல்லாவற்றுக்கும் கடிகார முட்களின் நகர்தலே அவர்களின் வாழ்வின் நிச்சயமற்ற தனத்திற்கு காம்பவுண்டாக இருக்கிறது.

இதற்கிடையில் வீட்டு உரிமையாளரின் மகளைக் காதலித்து அந்த வீட்டுக்கே உரிமையாளாராய் மாற வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளே வரும் கருணாகரன்.. காதலில் விழுந்து காதலால் கசிந்துருகி, அப்பெண்ணின் அப்பாவான வீட்டு உரிமையாளர் ஊரெல்லாம் தேட, அந்த பெண்ணை அதே காம்பவுண்ட்க்குள் தான் குடியிருக்கும் வாடகை அறையிலேயே மறைத்து வைத்து...பின் கதை நாயகன் உதவியோடு வெளியே தப்பித்து செல்கையில் ஒரு நல்ல காதல் சாகாது என்று நம்பப்பட்டது. அந்த காதல் பகுதி சிலபோது அயற்சியைக் கொடுத்தாலும்... சீரியஸான காதல் தான் என்பதை கதை ஓட்டத்தில் நாமே நம்பி விடுகிறோம். அந்த பெண்ணின் மூக்குத்தியும் வெள்ளை சிரிப்பும்.. யாரும் காதலிக்கலாம் தான்.

சினிமா கனவோடு வந்து அதே காம்பவுண்ட்-ல் ஒரு வீட்டில் வாடைக்கு இருக்கும் அந்த மலையாள மனிதன்.... மனதளவில் பக்குவப்பட்டவன். மிகவும் நல்லவன். சினிமாவில் வெற்றி பெறாத விரக்தியில் தன்னை ஒரு கேலிச்சித்திரமாக தானே மாற்றிக் கொண்டவன். துயரத்தின் மொத்தம் வெளியே புன்னகையாகி விடும் என்பதை அவன் வரும் காட்சியில் எல்லாம் உணர்கிறோம். சினிமா கனவு என்பது புற்று நோய். அரித்தே கொன்று விடும். அப்படி கொல்வது தான் சினிமா கனவு கண்டவனுக்கும் பிடிக்கும். கருணாகரன் மூக்குத்தி பெண் காதலில்...அவனுக்கும் பெரும் பங்கிருக்கிறது. அவனும் உதவுகிறான். இன்னும் கூட செதுக்கப் பட்டிருந்தால் மிக அற்புதமான வடிவத்திற்கு வந்திருக்கும் அந்த கதாபாத்திரம். இயக்குனர்க்கு என்ன அவசரமோ தெரியவில்லை. பொருந்தாத அந்த மீசையை ஒட்டியிருக்க வேண்டாம்.

இறுதிக்காட்சி "சில்ட்ரன் ஆப் ஹெவன்" -ஐ நினைவு படுத்தினாலும்... இப்படித்தான் முடியவேண்டும் என்று தோன்றியது.

படம் பார்த்து முடிக்கையில்....எதுவோ இன்கம்ப்ளீட்டாக இருப்பதாக தோன்றியது. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால்...... மிக அற்புதமான ஒரு படத்தை தந்திருக்க முடியும்.. கதையின் கரு கொடுத்த வலிமையை திரைக்கதை தராமல் போனது சற்று வருத்தம்தான். நல்ல நடிகர்கள் எத்தனையோ பேர் வெளியே இருக்க நடிப்பென்றால் என்னவென்றே தெரியாத சிலரை கட்டாயம் தவிர்த்திருக்கலாம்.

கடிகார மனிதர்கள் - காலத்துக்கு வெளியே தான் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

- கவிஜி

Pin It