விண்வெளியில் எடுக்கப்பட்ட உலகின் முதல் திரைப்படம் சமீபத்தில் ரஷ்யாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் விண்வெளி வரலாற்றில் ரஷ்யா மீண்டும் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. விண்வெளிப் பயணம் முதல் ஆராய்ச்சிகள் வரை உலகில் முதல் நாடு என்ற பெருமைக்குரிய ரஷ்யா விண்வெளியில் திரைப்படம் எடுப்பதிலும் அதை வெற்றிகரமாக வெளியிடுவதிலும் முதலிடம் பெற்றுள்ளது.

தி சேலஞ்ஜ்

தி சேலஞ்ஜ் (the Challenge) என்ற இப்படம் பூமியைச் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தின் (ISS) ரஷ்யப் பகுதியில் எடுக்கப்பட்டது. விண்வெளி நடத்தலின்போது (space walk) காயமடைந்த ஒரு வீரரை பூமியில் இருந்து செல்லும் மருத்துவக் குழு காப்பாற்றும் காட்சிகளே அங்கு படம் பிடிக்கப்பட்டன. இவை அக்டோபர் 2021ல் படமாக்கப்பட்டன.

2020ல் பிரபல ஹாலிவுட் திரைப்பட நடிகர் டாம் க்ரூஸ் (Tom Cruise) நாசா மற்றும் இலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விண்வெளியில் படமெடுப்பதாக இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. அதற்கு முன்பே ரஷ்யாவில் படம் வெளிவந்து சாதனை படைத்துள்ளது. ரஷ்ய அதிபர் விலாடிமெர் புடின் இந்த சாதனையைப் பெருமிதத்துடன் பாராட்டியுள்ளார். விண்வெளி ஆய்வுகளில் உலகின் முதல் நாடு என்ற ரஷ்யாவின் பட்டியலில் இப்போது இத்திரைப்படமும் சேர்ந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

yulia peresild12 நாட்கள் விண்வெளியில்

படக்குழுவினர் 12 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து காட்சிகளை எடுத்தனர். இந்தப் படத்தில் 38 வயதான பிரபல ரஷ்ய நடிகை யூலியா பேரிசில்ட் (Yulia Peresild) அறுவை சிகிச்சை நிபுணராக நடித்துள்ளார்.

39 வயதான திரைப்படத்தின் இயக்குனர் க்ளிம் ஷைப்பன்கோ (Klim Shipenko) ஒலி ஒளி மற்றும் கேமராவையும் கவனித்துக் கொண்டார். விண்வெளி நிலையத்தில் 30 மணி நேரம் படமாக்கப்பட்டன.

இதில் 50 நிமிடக் காட்சிகள் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டன. ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு விண்வெளி வீரருடன் விண்வெளிக்குச் செல்லும் முன் இருவரும் சாயூஸ் (Soyuz) விண்கலனில் நான்கு மாதம் பயிற்சி எடுத்தனர். படப்பிடிப்பின்போது ஆய்வு நிலையத்தில் இருந்த மூன்று ரஷ்ய வீரர்களும் படத்தில் இடம் பெற்றுள்ளனர். ஈர்ப்பு விசையற்ற நிலையில் பொன்னிற முடி மிதந்து கொண்டிருக்க யூலியா, நிலையத்தின் குறுகிய இடத்தில் நகர்ந்து செல்வது போன்ற காட்சிகள் படத்தில் காட்டப்படுகின்றன.

திரைப்படம் வெளியிடப்படும் முன்பு படக்குழுவினர் பூமிக்குப் பயணம் செய்த கலன் மத்திய மாஸ்கோ நகரில் பொதுமக்கள் காட்சிக்காக வைக்கப்பட்டது. திரைப்படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாகவும், நாங்கள் ரஷ்யர்கள் எப்போதுமே எல்லாவற்றிலும் முதலிடத்தில் இருப்போம் என்றும் யுஃபா (Ufa) என்ற நகரில் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் 45 வயதான பெண் தொழிலாளி டட்டியானா குலியோவா (Tatyana Kuliova) மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

ஒரு பில்லியன் ரூபிளுக்கும் குறைவான செலவில் ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு அமைப்பான ரஸ்காஸ்மோஸ் (Roscosmos) அந்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி அலைவரிசையான சேனல்1 அலைவரிசை நிறுவனத்துடன் இணைந்து இந்தப் படத்தை எடுத்துள்ளது. 'நாம் அனைவருமே ஈர்ப்பு விசையின் குழந்தைகள். பல தடைகளைத் தாண்டி படம் முடிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சி தருகிறது' என்று தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் கான்ஸ்டன்டின் எர்ன்ஸ்ட் (Konstantin Ernst) கூறியுள்ளார்.

இதற்கு முன்பு விண்வெளிக் காட்சிகளுடன் ஹாளிவுட் படங்கள் வெளிவந்துள்ளன என்றாலும், அவை செயற்கையான ஈர்ப்பு விசையற்ற நிலையில் பூமியில் எடுக்கப்பட்டவையே. இதுவே விண்வெளியில் உண்மையான ஈர்ப்பு விசையற்ற நிலையில் எடுக்கப்பட்ட உலகின் முதல் திரைப்படம். திரைப்படம் என்ற காட்சி ஊடகத்தின் சரித்திரத்தில் இது ஒரு திருப்புமுனை என்பதில் ஐயமில்லை.

மேற்கோள்: https://www.theguardian.com/world/2023/apr/20/star-quality-russia-premieres-first-feature-film-shot-in-space?CMP=Share_AndroidApp_Other

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It