babu actor enuyirthozanதொடர்பியல்... உயிரியல்... வேதியியல்... இயல்பியல்... என்று எந்த சித்தாந்தத்துக்குள்ளும் அடைபடாத சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன. நிகழ்பவைகளை வேறு வழியின்றி கடந்து கொண்டே இருக்கும் உடல் எனும் பெரு மந்திரம் சிலருக்கு காலத்துக்கும் வாய்ப்பதே இல்லை.

அப்படி ஒரு மனிதன் - நடிகன் "என்னுயிர் தோழன் பாபு".

ஒரு விபத்து ஒரு கனவை முப்பது வருடமாக கட்டிலில் முடக்கி போட்டிருக்கிறது என்றால்... எங்கிருந்தெல்லாமோ இரையும் துயர சப்தங்களை என்னவென்று எழுதுவது என்று தெரியவில்லை.

கால் சுளுக்கினால் 4 நாட்கள் காலி. தசை பிடிப்பென்றால் குறைந்த பட்சம் 2 நாட்கள் காலி. கால் முறிந்தால் குறைந்த பட்சம் 6 வாரங்கள் காலி. உடல்.. மிக மெல்லிசான கோட்டால் ஆன கூடு. மிக கவனமாக... பத்திரமாக காத்துக் கொள்ள வேண்டிய அரூபத்துக்கும் சற்று முந்தைய வடிவம். கரணம் தப்பினால் மரணம் என்றால் கூட சரி தான். ரணம் என்பதைத்தான் தாங்கிக் கொள்ளவே முடியாது.

காலம் மிக அற்புதமாக இந்த மனிதனை தோற்றுவித்தது. "என்னுயிர் தோழன்" படத்தில்.. வசனம் எழுதும் வாய்ப்பை கொடுத்த பாரதிராஜா ஒரு புள்ளியில் நீ தான் ஹீரோ என்றும் சொல்லி இருக்கிறார். நிகழும் அற்புதத்தின் வழியே நில்லாமல் ஓடும் உடல் வாய்த்த பாபு தனக்கான கனவைத் துரத்த ஆரம்பித்தார்.

முதல் படமே அரசியல் தொடர்பானது. அசத்தி இருக்கும் உடல் மொழியும் சென்னை தாய் மொழியும்.. அற்புத வனத்தில் பூத்த இன்னொரு அபூர்வமாக சினிமாவுக்கு கிடைத்தது... என்று தான் சொல்ல வேண்டும். படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. ஆனால் ஒரு நாயகன் உருவாகினான் என்று திரை விசிலடித்தது. இயல்பான ஒரு நாயகனை சினிமா பெற்றது. யார் வேண்டுமானாலும் திறமை இருந்தால் ஹீரோ ஆகலாம்... என்று நிரூபித்த தனுஷ் - ன் முந்தைய வெர்சன் இந்த பாபு.

எதுவெல்லாம் நடக்க இருக்குமோ அதுவெல்லாம் நடக்கும் இந்த சூனிய வாழ்வில் எதுவெல்லாம் நடக்க கூடாதோ அதுவெல்லாமும் நடக்கும் என்பது தான் அடுத்த வளைவில் வாழ்வு வைத்திருக்கும் ஆச்சரியமும் அகாலமும்.

என்னுயிர் தோழன் படத்துக்கு பிறகு விக்கிரமனின் இரண்டாவது படமான "பெரும்புள்ளி" படத்தில் ஹீரோ.

அந்த படமும் சரியாக போகவில்லை. ஆனாலும்... ஹீரோவாக மீண்டும் தன்னை நிரூபித்து தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்ட பாபுவுக்கு அடுத்தொரு படம் வந்தது. எமன் படமேறி வந்திருக்கிறான் தான் போல. மிக எளிமையானது வாழ்ந்து விடுதல். மிக மிக எளிமையானது செத்து விடுதல். ஆனால் இடையே வாழ்ந்தும் செத்தும் கிடப்பது மிக மிக கொடுமையானது.

அத்தகைய புள்ளிக்கு இந்த பெரும்புள்ளி நகர்கிறது என்று அன்று பாபுவுக்கு தெரியாது. "மனசார வாழ்த்துங்களேன்" படப்பிப்பில் மாடியில் இருந்து எட்டி குதிக்கும் ஒரு காட்சி. டூப் போடாமல் குதித்து... குறி தப்பி... இடம் மாறி விழுந்து முதுகில் பலத்த அடி.

அன்று படுத்தவர் தான்... பல கட்ட மருத்துவத்துக்கு பிறகு... மெல்ல மெல்ல... மேடேறி மீண்டும் படப்பிப்பில் கூட கலந்து கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் வந்த ஒரு நேர்காணலில் வந்த புகைப்படம் கூட இடுப்புக்கு மேலே உடற்பயிற்சி செய்து கட்டமைத்த உடல் கட்டோடு இருந்தார்.

அதன் பிறகு உடல் மீண்டும் மோசமான நிலைக்கு செல்கிறது.

விதியா... கால சதியா... வேர் வரை பிராண்டும்... வாழ்வின் கருப்பொருள் அர்த்தமற்று இருப்பதை யோசிக்கிறேன்.

அதன் பிறகு காலம் இன்னும் அவரை வதைக்க ஆரம்பித்தது. இந்த புள்ளியில் தான் கடவுளின் மீதான நம்பிக்கையின்மை மேலோங்குகிறது. மானுட திட்டமிடுதலின் மீதான அவநம்பிக்கை கூடுகிறது. பாபுவின் குடும்பம் வேறு வழியின்றி சிதிலமடைகிறது.

அப்பாவும் தம்பியும் அடுத்தடுத்து மரணிக்க... கை விடப்பட்ட உலகத்தில்... ஒரு அறைதான் வாழ்வின் சங்கிலியாக மாறி இருக்கிறது. ஒன்றிலிந்து நூறாக பெருகும் துக்கத்தின் வாயிலில் அடைபட்டு கிடக்கும் பாபுவின் சிந்தனை அச்சத்தோடு கட்டிலில் முடங்கியது. யாரை கோபித்துக் கொள்வது. பெருந்துயரை எப்படி ஆற்றுப்படுத்துவது.

படுத்த படுக்கையாக இருக்கும் பாபுவை நண்பர்களும்... சினிமா நண்பர்களும்... வயதான அவரின் தாயும் தான் இன்றுவரை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்... என்று நடிகர் பொன்வண்ணன் அவர்கள் சமீபத்திய காணொளி ஒன்றில் மிக உருக்கமாக தன் நண்பன் பாபுவைப் பற்றி பேசி உதவி கேட்டிருந்தார்.

நிஜமாகவே நிஜம் சுட்டது. சுட்ட நிஜத்தில்... திரை வடிவம் இடம் மாறி கிடை மட்டமாகி விட்டது போல உணர்ந்தேன். கைகள் மடங்கி கால்கள் சூம்பி கிடை பிணமாக கிடக்கும் பாவுவைக் காண தாங்கொணா துக்கம் சூழ்ந்தது.

ஒரு கலைஞனுக்கு வரவே கூடாத ரணம் இது. பொன்வண்ணன் கேட்ட உதவி தன் நண்பன் மீண்டும் எழுந்து நடமாடி வாழ்ந்து விட அல்ல. அந்த நம்பிக்கை எப்போதோ போய் விட்டது என்று உள்ளம் துக்கப்பட்டு... 30 வருடத்தை படுக்கையிலேயே கழித்த பாபு மிச்சம் இருக்கும் நாளில் நிம்மதியாக சாவதற்கு தான் என்றபோது உள்ளம் உடைய உருவமற்று அமர்ந்திருந்தேன்.

துடுக்குத்தனம்... கவனமின்மை... அதீதம்... ஆர்வம்... நம்பிக்கை என்று என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். நேரம் என்று கூட சொல்லலாம். நிகழ்ந்ததை மாற்றி அமைக்கவே முடியாத ஒரு வழிப் பயணம் இந்த குறு வாழ்வு. மிக கவனமாக கடந்து விட வேண்டிய பொருளில்.. பாபு எப்படியோ... எதன் நீட்சியாகவோ சிக்கிக் கொண்டதைக் கண்டு வெகு தூரத்தில் விம்மி அழும் அவரின் கனவை அச்சத்தோடு ஒளிந்து பார்க்கிறேன்.

வட்டத்தில் இருந்து விலகி விடும் எதுவும்.. தொடர்பற்று விடுகிறது. அதில் மானுட உடலும் அது கொண்ட உயிரும் மிக கடுமையான பின் பற்றிகள் எனலாம்.

கடின உழைப்பு... நேர் கொண்ட சிந்தனை எல்லாம் தாண்டி காலத்தின் கணக்கை ஒரு போதும் புரிந்துக் கொள்ளவே முடிவதில்லை. கனவுக்குள் எழும் ஒப்பாரியை தூக்கம் கூட நினைவில் வைத்துக் கொள்வதில்லை. வலைக்குள் சிக்காத மீன் நிலத்தில் இன்னும் கொடூரமாக ஒரு மரணத்தை நிகழ்த்துகிறது.

என்னுயிர் தோழன் பாபுவுக்கு நிம்மதியான தூக்கம் தேவை. அதற்கு உதவி தேவை. நண்பர்கள் உதவ வேண்டும்.

Premalatha.S
A/c 10013287586
State Bank of India
Santhome High road Branch
IFSC : SBIN0005797

- கவிஜி

Pin It