வாழ்வென்பது ஞாபகங்களால் ஆனது.

மறதி, மரணத்துக்கு சமம்தான். அதுவும் ஒரு மொத்த வாழ்வுக்கு பின் இறுதி காலத்தில் மறதி நோய் வந்தால் அதன் பின் என்ன ஆகும் என்ற கேள்விக்குறி மிகப் பெரிய வளைவை கொண்டிருக்கிறது. ஒன்றுமில்லாத சூனியத்தின் விளிம்பில் சிரிக்கலாம் அழலாம் பசிக்கலாம். ஆனால் சிரிக்க மறந்து விடும் அழ மறந்து விடும் பசித்ததையும் மறந்து விடும் கொடுங்கூற்றுப் புள்ளிக்குள் எதுவுமில்லாத நடையை நடந்து பார்க்கிறது இந்த படம்.

60 வயது மாநிறம்.

60 Vayadu Maaniramபிரகாஷ்ராஜ் அல்ஸைமர் நோயினால் பாதிக்கப்படுகிறார். கவனக்குறைவாக அவரைத் தொலைத்து விடுகிறார்கள். ஒரு பக்கம் மகன் விக்ரம் பிரபுவும், ஒரு பக்கம் டாக்டர் இந்துஜாவும் தேடி அலைகிறார்கள். தேட தேட அவர்கள் காதலில் தொலைந்து போகும் புள்ளி மிக மிக மென்மையான வரைபடங்களால் இணைகின்றது. தன் காதல் கதையை பிரகாஷ்ராஜ் அல்ஸைமர் நோய்க்குள் சென்று கொண்டிருந்த கால கட்டத்தில் டாக்டர் இந்துஜாவிடம் நிறைய முறை கூறி இருக்கிறார். அதை இந்துஜா, தேடும் படலத்தில் விக்ரம் பிரபுவிடம் கூறும் போது அந்தக் காதல் கதை வாய் மொழியாகவே நமக்குள் விரிகிறது. சில போது காட்சிப்படுத்தாமல் விட்டு நம்மையே கற்பனை செய்து கொள்ள செய்யும் யுக்தி இங்கே அற்புதமாக செவி கொடுத்திருக்கிறது. அந்தக் காதல் கதை அப்படியே விக்ரம் பிரபுவுக்கும் இறுதிக் காட்சியில் நடக்கிறது. திரைக்கதை நேர்த்திக்கு "ராதாமோகன்" அவர்களுக்கு வாழ்த்துக்களை சொல்லத்தான் வேண்டும். பிரமிக்கத்தான் வேண்டும். நீரோடையின் மீது சப்தமின்றி பயணிக்கும் ஓடத்தின் சுமைகளை நினைவுப் படுத்திக் கொண்டே செல்லும் இப்படத்தில் மறதி கூட காமெடியாக மாறி விடுகிறது. மறதி காதலின் வழியாக, காட்சிகளின் வழியாக, மானுட ஆழ் பரப்பின் மீது தூவப்பட்ட இருத்தலின் மடியாக மாறி விடுகிறது.

லைஃ ப் இஸ் பியூட்டிபுல் என்ற ஃபோல்டருக்குள் தனக்கு தானே பேசி வைத்துக் கொண்ட, தன்னை தனக்கே அறிமுகம் செய்து கொண்ட காணொளி ஒன்றை வீட்டு கணினியில் பிரகாஷ் ராஜ் வைத்திருப்பது எல்லாம் வாழ்க்கை கைவிடப்பட்ட கிளையில் அமர்ந்து கொண்டு என்ன செய்வதென்று தெரியாத நிழலின் தவிப்பின் உச்சம். ஆனாலும் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் மறந்து போகும் சூழலிலும் லைஃ ப் இஸ் பியூட்டிபுல் என்ற வாக்கியத்தை அவ்வப்போது சொல்லிக் கொண்டிருப்பது மிச்ச மீதி மூளையின் ஞாபகத்தி மண்டலத்தின் அடிச்சுரண்டல்.

அப்பாவைத் தொலைத்து விட்டு தடுமாறும் விக்ரம் பிரபு ஒரு கட்டத்தில் குடித்து விட்டு இந்துஜாவிடம் புலம்பும் காட்சி மனசாட்சி மன்றாடும் இடம். அப்பா என்பவர் நீரூற்று போன்றவர். அது வற்றாத ஜீவ நதிக்கு சொந்தமான உருவம். அது இல்லாது போகையில் தான் வறண்ட பூமியின் கால் படும் நொடியில் எல்லாம் மண்டைக்குள் எதுவோ பிளக்கும். அப்படித்தான், இருக்கையில் அவரை அலட்சியம் என்று இல்லை.....ஆனால் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் அவர் இல்லாத வெற்றிடத்தில் புரண்டு நெளியும் மகனுக்கு சூனியத்தில் எரியும் வெளிச்சம் கொதிக்கும் என்று புரிகிறது.

மறதி நோய் வந்த மனிதர்கள் இருக்கும் அந்த மருத்துவமனையில் நாம் வெறிக்க வெறிக்க மனமற்று சுற்றிக் கொண்டே இருக்கிறோம்... படம் முழுக்க.

இந்துஜாவின் கண்களும் சிரிப்பும் கொள்ளை அழகு. அவள் அன்புக்காரியாகவே மாறி விடுகிறாள். அவளால் ஒரு போதும் யாரையும் வாரி அணைக்காமல் இருக்க முடியாது. இன்றைய பொருளாதார சிக்கலில் மாட்டிக் கொள்ளும் மகனாக விக்ரம் பிரபு, அப்பாவைத் தொலைத்ததுக்கு பின் தவித்து தடுமாறும் மகனின் மனநிலையை அப்படியே பிரதிபலிக்கிறார். இதற்கிடையில் ஒரு வில்லன் கூட்டத்தின் அடியாளாக சமுத்திரக்கனி. அவரோடும் இருக்கும் அந்த சின்ன பையன். அவனுக்கு ஒரு காதல். அவர்களிடம் சென்று சேர்ந்து கொள்ளும் காணாமல் போன பிரகாஷ்ராஜ். இவர்கள் குமரவேல் வீட்டுக்குள் சென்று குமரவேல் குடும்பத்தை பிணையாக வைத்துக் கொண்டு நகரும் நாட்கள் என்று கதை கச்சிதமாக தன்னை பின்னிக் கொண்டே செல்கிறது. ஒரு கட்டத்தில் எல்லாரும் உறவுக்காரர்களாகவே ஆகி விடும் சூழல் பேரன்பின் விளிம்புகள். இன்னொரு கன்னத்திலும் அறைந்த பிறகு வேறு வழியில்லை.....அன்பைத் தவிர. மீண்டும் மீண்டும் அன்பே நிறுவப்பட்டுக் கொண்டிருக்கிறது. ராதாமோகனின் எல்லா படங்களுமே அன்பின் முடிச்சில் வாழ்வை அவிழ்ப்பவை தான். அங்கு அன்பே பிரதானமாக இருக்கிறது. வாழ்வதென்பது அன்பை சக உயிர்களுக்கு கொடுத்துக் கொண்டே இருப்பது என்று தான் திரும்ப திரும்ப சொல்கிறார்.

இங்கே கெட்டவர்கள் பிறப்பதேயில்லை. கால சூழல் தான் அவர்களின் பயணத்தை மடை மாற்றி விடுகிறது. தங்களை பிணை கைதியாக வைத்திருக்கும் சமுத்திரக்கனிக்கும் தேனீர் போட்டுக் கொடுக்கும் குமரவேல் மனைவி. சமுத்திரக்கனியின் அசிஸ்டென்ட் அந்த இளைஞனை தம்பியாக ஏற்றுக் கொள்ளும் இயல்பு. பிரகாஷ்ராஜ்க்கு மறதி நோய் என்று தெரிந்த பிறகு அவரை வீட்டோடு வைத்துக் கொண்டு கவனிப்பது. ஒரு கட்டத்தில் கொண்டு சென்று ரோட்டில் விட்டு விட்டு மனது கேக்காமல் திரும்பும் வீட்டுக்கே கூட்டிக் கொண்டு வந்து தொடர்ந்து கவனித்துக் கொள்வது. பிரகாஷ்ராஜ் தன் மகன் விக்ரம் பிரபுவை பள்ளி செல்லும் பையனாக நினைத்துக் கொண்டு அந்த காலகட்டத்திலேயே தேங்கி விட்ட ஞாபகத்தோடு நடந்து கொள்வதற்கு தகுந்தாற் போல குமரவேல் குடும்பமும் நடந்து கொள்வது என்று ஒரு அப்பாவின் இறுதிக் காலத்தை இப்படித்தான் தாங்க வேண்டும் என்று நமக்கு நினைவூட்டி விடுகிறார் இயக்குனர்.

எப்போதும் புன்னகைக்கும் முதிர்ச்சி என்று வாழ்வின் அஸ்திவாரங்களை மீண்டும் ஒரு முறை நான் சரி பார்த்துக் கொண்டேன். அங்கே அன்பு தான் அடிக்கல்.

வில்லன்கள் போலீஸ் காட்சிகள் கொஞ்சம் நாடகத்தன்மையாக இருந்தாலும்... சமுத்திரக்கனியின் மனமாற்றம்... அலைபாயும் ஆன்ம தேடலின் வழியே இங்கே நிஜத்தை நிறுவி விடுகிறது. பிரகாஷ்ராஜ் கதாபாத்திரத்தை சுற்றி இருக்கும் எல்லா பாத்திரங்களும் தங்களை தாங்களே சுத்திகரித்துக் கொள்ளும் மனநிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இந்த பேரோட்டத்தின் சாலையில் விபத்துகள் இல்லாமல் பயணிக்க வேண்டும் என்று உணர்கிறார்கள். இன்னொரு மனிதனை அவன் கண் வழியாக இவர்கள் காண்கிறார்கள். வாழ்வின் அற்புத நிகழ்வுகள்... முன் பின் தெரியாதவனுக்கு உதவுகையில் உணர முடியும் என்று மீண்டும் மீண்டும் மெய்ப்பிக்கப்படுகிறது.

தொலைந்த அப்பாவை கடைசியில் கண்டு பிடித்தார்களா இல்லையா என்று படம் பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டும். 60 வயது மாநிறம் உள்ள மனிதர்கள் உங்கள் வீட்டிலும் இருக்கலாம்.. கவனம். அவர்களுக்குத் தேவை...கொஞ்சம் ஞாபகங்களும் கொஞ்சம் நம்பிக்கையும் தான்.

கொடுக்கலாம் தானே....!

- கவிஜி

Pin It