நாட்டுக்கோழி அடித்து மணக்க மணக்க மசாலா தடவி நெருப்பில் வாட்டி ருசிக்க ருசிக்க குழம்பு வைத்து விருந்து தடபுடலாக ஏற்பாடாகி விட்டது. இலை போட்டு, பரிமாறி சாப்பிட யாவரும் தயாராகி விட்டனர். நாட்டுக்கோழியின் மணம் ஊரெல்லாம் சுண்டி இழுக்கிறது. நாவில் உமிழ்நீர் சுரந்து கொண்டே இருக்கிறது. கைக்குத்தல் அரிசிச் சோறோடு கோழிக்கறியை பிசைந்து வாயில் வைக்கும் போது "அய்யோ அந்த உணவில் விஷம் கலந்திருக்கிறது. யாரும் சாப்பிடாதீர்கள்" என்று ஒருவன் கத்துகிறான். எல்லோரும் அதிர்ச்சியோடு பார்க்கிறார்கள்.

இப்போது சொல்லுங்கள், இவ்வளவு சிரமப்பட்டு செலவு செய்து விருந்து படைத்து விட்டார்கள் என்று விஷம் கலந்த உணவை யாரும் சாப்பிடுவார்களா?

kamal_vishwaroopam_370அதேபோல்தான் 'விசுவரூபம்' திரைப்படமும். 'கோடிக்கணக்கில் செலவு செய்து விட்டோம்; பெரும் பொருட்செலவில் பல நாடுகளில் படப்பிடிப்பு எடுத்து விட்டோம். ஆகவே திரைப்படம் திரையிட்டே ஆக வேண்டும்' என்று சொல்வது ஞாயமா? நல்ல விருந்தில் ஒரு சொட்டு 'விஷம்' விழுந்தாலும் உணவு முழுக்கப் பரவி உண்பவர்களை சாகடிக்கும். அதேபோல்தான் பெரும் பொருட்செலவில் திரைப்படம் எடுத்தாலும் இசுலாமிய சமூகத்திற்கெதிராக விஷத்தைக் கொட்டியிருப்பது சனநாயகத்தை, மதச்சார்பின்மையைச் சாகடிப்பதற்கு ஒப்பானதுதான்.

திரைப்படக் கலைஞர் கமல் எழுதி இயக்கியிருக்கும் 'விசுவரூபம்' திரைப்படத்தை இசுலாமிய சமூகத்தினரின் கடுமையான எதிர்ப்பால் தமிழக அரசு தடை செய்தது. கமல் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக படத்தில் காட்சிகள் இல்லை என்று கூறி தடையை நீக்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

இந்திய முஸ்லிம்களுக்கு என்று தனி கொள்கை, கோட்பாடு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இது ஒட்டுமொத்த இசுலாமிய சமூகத்தின் உணர்வுகளுக்கு எதிரானது என்று எண்ணத் தோன்றுகிறது. நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப் போவதாகக் கூறப்பட்டுள்ளது. இசுலாமிய சமூகத்தினர் பயங்கரவாதிகளாகக் காட்டப்பட்டுள்ளதாக இசுலாமிய சமூகம் மட்டுமல்ல படம் பார்த்த மற்றவர்களும் அப்படித்தான் வருத்தப்பட்டனர்.

படம் தடை செய்யப்பட்ட சூழலில் கமலுக்கு ஆதரவாக பலர் அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜி.இராமகிருஷ்ணன் மற்றும் வன்னியர் சங்கத் தலைவர் இராமதாஸ் (இனி இவரை இப்படி அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும்) ஆகியோர் 'கமல் நல்லவர், வல்லவர், சிறந்த கலைஞன்' என்றெல்லாம் கமல் மீது தங்களுக்குள்ள தனிப்பட்ட மதிப்பை வைத்து அறிக்கை விடுத்து 'விசுவரூபம்' திரைப்படத்தை வெளியிட ஒத்துழைப்புத் தர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

"உலக மகா கலைஞன் கமல். அவனது படைப்பைச் சுதந்திரமாக வெளியிட உதவுங்கள்" என்று இயக்குநர் இமயம் பாரதிராஜா உருக்கமாக கமலுக்கு சான்றிதழ் வழங்கியுள்ளார்.

கமல் என்கிற தனிமனிதனுக்காகப் பேசும் இவர்கள் கோடிக்கணக்கான இசுலாமிய சமூகத்தினரைக் கொச்சைப்படுத்தி, திரித்துக் காட்டுவதைக் கண்டிக்கவும் இல்லை; அக்காட்சிகள் தணிக்கைப்படுத்தப்பட்டு வெளியிடப்பட‌ வேண்டும் என்று கமலுக்கு அறிவுரையோ ஆலோசனையோ சொல்ல முன்வரவும் இல்லை.

விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் மட்டுமே கமலின் இசுலாமிய விரோதப் போக்கைக் கண்டித்தார். கடந்த 27.1.2013 அன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது, "கோடிக்கணக்கில் பணத்தைச் செலவு செய்து விட்டார்கள். அவர் நட்டப்படக் கூடாது என்று சொல்கிறார்கள். கோடிக்கணக்கான இசுலாமியர்களின் நன்மதிப்பைவிட, கோடிக்கணக்கான பணம் முக்கியமல்ல" என்றார். அது மட்டுமல்லாமல் தணிக்கைக் குழுவையும் கண்டித்து கட்சி, மதச் சார்பற்ற அறிவுஜீவிகளைத் தணிக்கை குழுவில் நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இச்சூழலில் 'விசுவரூபம்' திரைப்படத்தை முன்வைத்து இன்றைக்குப் பல விவாதங்களை நாம் முன்வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கமல்ஹாசன் நல்ல கலைஞர், இதற்கு முந்தைய திரைப்படங்களையெல்லாம் சிறப்பாக எடுத்திருக்கிறார் என்றெல்லாம் கமலுக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள். (உன்னைப் போல் ஒருவன் கூட நல்ல திரைப்படம்தானா?) "இது வரை நன்றாகத்தான் இருந்தான். பாவம் இப்போது புத்தி பேதலித்து விட்டது. தெரியாமல் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டான். மன்னித்து விட்டுவிடுங்கள் யுவர் ஆனர்" என்று நீதிபதியிடம் வழக்கறிஞர் பேசினால் எப்படி நீதிமன்றமே சிரிக்குமோ அப்படித்தான் இந்த உலகமே சிரிக்கும். கமல் நல்ல சமூக சிந்தனை உள்ளவராக இருந்திருந்தால் ஒட்டுமொத்த சினிமா என்ன சிந்தனையைக் கொண்டுள்ளதோ அத்தகைய இந்துத்துவ சிந்தனைகளைக் கமலும் கொண்டிருப்பாரா? இதில் என்ன முற்போக்கு என்று புரியவில்லை.

கறுப்பு எம்.ஜி.ஆர் என்று தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் விஜயகாந்த் கூட இசுலாமியத் தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டத்தான் திரைஉலகில் நுழைந்ததுபோல் பாகிஸ்தான் வரை சென்று இசுலாமியத் தீவிரவாதிகளை வேட்டையாடுவார். உச்சகட்டமாக இசுலாமியத் தீவிரவாதிகள் மதுரை அழகர் கோவிலைத் தகர்க்க சதித்திட்டம் தீட்டுவதையும், அந்தச் சதித்திட்டத்தை கள்ளழகர் 'விஜயகாந்த்' முறியடிப்பதையும் நாம் சகித்துக் கொண்டுதான் இருந்தோம். இப்படி விஜயகாந்த் மட்டுமல்ல பெரும்பாலான திரைப்படங்களில் இசுலாமியர்களைப் பயங்கரவாதிகளாக, இந்திய தேசத்திற்கே எதிரானவர்களாகத்தான் சித்தரிக்கிறார்கள்.

அண்மையில் விஜய் நடித்து வெளிவந்த 'துப்பாக்கி' படத்திலும் இசுலாமியர்களைப் பயங்கரவாதிகளாகத்தான் அப்பட்டமாகக் காட்டினார்கள். பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் வெளிவந்த 'பயணம்' திரைப்படத்தில்கூட விமானத்தை இசுலாமிய பயங்கரவாதிகள் கடத்துவதைப் போலத்தான் காட்டினார்கள்.

இது திரைக்கதைக்காகவோ அல்லது விறுவிறுப்புக்காகவோ எடுக்கப்படுவதல்ல. சமூகத்தில் மேலாதிக்கம் செய்து வரும் இந்துத்துவச் சக்திகளின் திட்டமிட்ட பரப்புரையும் சிந்தனையும்தான் இதற்குக் காரணம்.

இன்றைக்குத் திரை உலகமே இந்துத்துவ ஆதிக்கவாதிகளின் பிடியில்தான் சிக்கி இருக்கிறது. அதனால்தான் இசுலாமியச் சமூகத்தை மட்டுமல்லாமல் தாழ்த்தப்பட்ட மற்றும் கிறித்துவ சிறுபான்மை சமூகத்தையும் இழிவுபடுத்தி காட்சி அமைக்கின்றனர்.

துணி வெளுப்பவர்களைக் கிண்டல் செய்வது, முடி வெட்டுபவர்களை முட்டாள்களாகக் காட்டுவது, தாழ்த்தப்பட்டவர்களை அடிமைத் தொழில் செய்பவர்களாக அல்லது அடிமைத் தொழிலை விரும்பியோ விரும்பாமலோ செய்பவர்களாகக் காட்டுவதில்தான் பெரும்பாலான திரைப்படங்கள் போட்டி போட்டுள்ளன. தலித்துகளை மட்டுமல்லாது பெண்களை எவ்வளவு உச்சத்திலும் நின்று கேலி செய்து கொண்டிருக்கிறது சினிமா உலகம்.

மானே, தேனே, மயிலே, குயிலே என்று வர்ணித்த திரைத்துறையினர், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, தக்காளி, வெள்ளரிப் பிஞ்சு, வெள்ளரிக்கா, முத்துன மாங்கா என்றெல்லாம் பெண்களைக் காய்கறிகளை வைத்துக் கிண்டல் செய்யும் அளவிற்குச் சென்றனர். இந்த ஆணாதிக்க மனோபாவம் என்பது இந்துத்துவத்தின் உள்ளீடுதான்.

தலித்துகளைக் கூட இழிவுபடுத்தி ஏராளமான படங்களில் திட்டமிட்டும் தற்செயலாகவும் காட்சி அமைத்து வருகின்றனர்.

நகைச்சுவை நடிகர் வடிவேலு பல திரைப்படங்களில் "அட சண்டாளா" என்று பேசுவார். தாழ்த்தப்பட்டோரைப் பட்டியலிடும்போது 'சண்டாளன்' என்கிற சாதியும் உள்ளது என்பது வரலாறு அறிந்தவர்களுக்குத் தெரியும். 'சாமி' திரைப்படத்தில் நடிகர் விவேக் முற்போக்கு வைதீகனாக நடிப்பார். அதில் மற்றொரு வைதீகன் அவனுடைய மகனுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பார். அப்போது செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன் வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பான். உடனே நடிகர் விவேக், "அந்த புள்ளாண்டனுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்கக் கூடாதோ" என்பார். உடனே அந்த வைதீகன் "அவங்கள்ளாம் படிக்கக் கூடாது" என்று சாதியைக் காரணம் காட்டுவார். உடனே அந்த தாழ்த்தப்பட்ட பையனிடம் போய் என்ன படிக்க விரும்புகிறாய் என்று விவேக் கேட்பார். "லா படிக்க விரும்புகிறேன்" என்பான் அந்த தலித் பையன். "என்ன லா" என்பார் விவேக். அதற்கு 'சகிலா' என்பான். இப்படித்தான் தலித்துகளைப் பயன்படுத்தி கிண்டலும் கேலியும் செய்கிறார்கள்.

அது மட்டுமல்ல இன்றைக்கு திரைப்படங்களில் மட்டுமல்ல, கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் ஒரு வார்த்தையை சகஜமாக பழக்கத்தில் விடுகிறார்கள். 'அட்டு பிகர்' என்கிற சொல்லாடல்தான்.

இந்தச் சொல்லாடல் அனைத்துத் திரைப்படங்களிலும் பெண்களைக் கிண்டல் செய்வதற்குப் பயன்படுத்துகிறார்கள். இந்த 'அட்டு பிகர்' எங்கிருந்து வந்தது?

'Hut' என்கிற ஆங்கில வார்த்தையிலிருந்துதான் வந்திருக்க முடியும். ஏனென்றால் 'hut' என்றால் குடிசை என்று பொருள். சேரிகளெங்கும் குடிசைகள் இருப்பதனால் சேரிப் பெண்ணை அல்லது குடிசைப் பெண்ணைக் கிண்டல் செய்வதற்காக 'hut figure' அட்டு பிகர் என்று கூறுகிறார்கள். இன்றும் திரைப்படங்களில் கறுப்புப் பெண்களை அல்லது கிண்டல் செய்வதற்காகவே காட்டப்படும் பெண்களை இப்படி அழைக்கிறார்கள்.

kamal_vishwaroopam_400வில்லன்களாகச் சுட்டப்படும் பெயர்களைக் கூட பாருங்கள். ஆஸிப்கான், யூசுப்கான், அன்வர், பீட்டர், டேனியல் என்று சிறுபான்மைச் சமூகத்தைச் சார்ந்த பெயர்களையே தொடர்ச்சியாகக் காட்டி வருகிறார்கள்.

இதுவெல்லாம் திரைக்கதை ஆசிரியருக்கும் தெரிந்தே, திட்டமிட்டே வைக்கப்படுகிற காட்சிகள், பெயர் சூட்டல்கள்தான். இதை திரைப்படத்துறையினர் மிகவும் துணிச்சலாக செய்து வருகின்றனர். இதில் உலக மகா கலைஞர் கமலஹாசன் எந்தவிதத்தில் முற்போக்கு? எந்தவிதத்தில் மற்றவர்களைவிட வித்தியாசமானவர் என்று புரியவில்லை.

இது ஒருபுறம் இருக்கட்டும்.

எதற்காக சினிமா எடுக்கிறார்கள், சமூகத்தை மாற்றவா? அல்லது புரட்சி செய்து புதிய மாற்றத்தை உருவாக்கவா சினிமா எடுக்கிறார்கள்? அதுவெல்லாம் நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் காலம். விதவைத் திருமணத்தை வலியுறுத்தி திரைப்படங்கள், சமூக இழிவுகளுக்கெதிரான திரைப்படங்கள், அறிஞர் அண்ணா, கலைஞர், திருவாரூர் தங்கராசு போன்றோரின் திரைப்படங்கள் எல்லாம் சமூகத்தைப் புரட்டிப் போட்டன. அது ஒரு காலம்.

இப்போது சமூகநீதிக்கு எதிரான திரைப்படங்களைத் துணிச்சலாக எடுக்கின்றனர். இடஒதுக்கீடுதான் சமூகத்தைச் சமப்படுத்தும் என்று தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் வாழ்நாள் முழுக்கக் களமாடினார்கள். ஆனால் சினிமா மூலம் பிழைக்க வந்த அட்டக்கத்திகள் அப்போராளிகளுக்கு எதிராகவே திரைப்படம் எடுத்து வருகின்றனர். லட்சுமி நடித்த 'ஒரே ஒரு கிராமத்திலே', ஷங்கர் இயக்கிய 'ஜென்டில்மேன்', முருகதாஸ் இயக்கிய 'ஏழாம் அறிவு', அமிதாப்பச்சன் நடித்த 'ஆரக்ஷா' போன்ற படங்கள் எல்லாம் சமூகநீதிக்கு எதிரான விஷக் கருத்துக்களைக் கொண்டவை தான்.

இம்மாதிரி திரைப்படங்களை எடுப்பவர்கள் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் போன்ற தலைவர்களை விட சிறந்த சமூக சிந்தனையாளர்களா? எதுவும் இல்லை. இந்துத்துவத் கருத்தியலின் அடிமைகள்தான்.

கதாநாயகியை பாம்பு வந்து காப்பாற்றுவது, மயில் காப்பாற்றுவது, குழந்தை இல்லையென்றால் வேப்பிலை கட்டி ஒரே ஒரு பாட்டு பாடினால் குழந்தை பெற்று விடுவது, மறுபிறப்பில் வந்து பழி வாங்குவதுபோல், பிசாசு, பில்லி சூன்யம் இது போன்ற காட்சி அமைப்புகளும் கதை ஓட்டமும் இந்துத்துவ மன ஓட்டத்தில் எடுக்கப்படுவதுதான். இதுவெல்லாம் நம்பப்படுவதில்லை என்றாலும் திட்டமிட்டே நம்ப வைக்க முயற்சிக்கிறார்கள்.

திரைப்படங்கள் வணிகமயமாகி விட்டது. தயாரிப்பாளர்களுக்கு படம் ஓட வேண்டும். கதை என்னவாக இருந்தாலும் பரவாயில்லை. கதையே இல்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் லாபம் தரும்படி ஓட வேண்டும். இதுதான் இன்றைக்கு அளவுகோலாக இருக்கிறது. இதில் எங்கே வந்தது சமூகம் குறித்த அரசியல்?

சமூகம் குறித்து திரைப்படம் எடுப்பவர்கள், சமூகத்தைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். அப்படித் தெரிந்துதான் 'உலக மகா கலைஞன்' கமலஹாசன் விசுவரூபம் திரைப்படத்தை எடுத்தாரா? அவருக்கு இசுலாமியர்கள் பற்றிய பார்வை என்ன? சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சிலர் செய்கிற எதிர்வினையை பெரும் சமூகமான இசுலாமிய சமூகத்தின்மீது திணித்து, ஒட்டுமொத்தமாக பயங்கரவாதிகளாகச் சித்தரிப்பது என்ன அரசியல்?

செப்டம்பர் 11க்கு பிறகு அமெரிக்காவின் இசுலாமிய பயங்கரவாத அறிவிப்பு 'உலகமயமாகிக் கொண்டிருக்கிறது'. அதைத்தான் உலகமெங்கும் கடை விரித்து வியாபாரம் செய்யத் துணிந்துள்ளார்கள்.

இந்த வியாபாரத்தில் இசுலாமியர்களைப் பலி கொடுத்துத்தான் லாபம் பார்க்கத் துடிக்கிறார் கமல். இதைப் புரிந்துகொள்ளாமல் சிலர் 'கருத்துச் சுதந்திரம்' என்று திசைதிருப்ப முயற்சிக்கிறார்கள்.

ஒரு சமூகத்தின் பண்பாட்டையே கொச்சைப்படுத்தி அவதூறு பரப்புவதுதான் கருத்துச் சுதந்திரமா?

முதலில் ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு திரைப்படங்களை எடுப்பது நல்லது. இத்தருணத்தில் நடிகவேள் எம்.ஆர்.இராதா சொன்னதுதான் ஞாபகம் வருகிறது - "கூத்தாடிகளுக்கு எதற்கு அரசியல்?".

நடிகவேளை விட சிறந்த சமூகக் கருத்துக்களை சினிமாவில் இதுவரை யாரும் சொன்னதில்லை. இனியும் சொல்லப் போவதும் இல்லை. இப்போது அரசியலும் சமூகமும் இந்துத்துவ ஆதிக்கத்தின் உச்சமாக மாறிக் கொண்டிருக்கிறது. இதற்கு சினிமா வழி அமைத்துத் தந்து கொண்டு இருக்கிறது. வியாபாரிகளின் எண்ணமும் செயலும் லாபத்தை நோக்கித்தான். சினிமா வியாபாரிகளின் நோக்கம் பணத்தோடு இந்துத்துவக் கருத்தியலைப் பரப்புவதும்தான்.

அந்த வகையில்தான் நடிகர் கமல் இந்துத்துவ மேலாதிக்கத்தோடு இசுலாமிய விரோத திரைப்படத்தை எடுத்துள்ளார். ஆகவேதான் இப்படம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். காட்சிகளில் மட்டுமல்லாமல் கதை முழுக்கவே இசுலாமிய சமூகத்தை பயங்கரவாதிகளாகவே காட்டுகிறது.

காவி பயங்கரவாதத்தின் எதிர்வினையை முறியடிப்பது சனநாயக முற்போக்குவாதிகளின் கடமைதான். அது எந்த 'ரூபத்தில்' வந்தாலும் முறியடிக்க வேண்டும். விசுவரூபமாக இருந்தாலும் முறியடிப்பதுதான் முதல் கடமை. தயாராவோம். அனைவரையும் தயாராக்குவோம்.

- வன்னிஅரசு

Comments

30 comments

30
shaliheen
ur all words very very correct . I wish more articales.
குருநாதன் சிவராமன்
எல்லாளன், ஆணிவேர், தேன்கூடு, உச்சிதனை முகர்ந்தால், பாலை. இதுபோன்ற பல படங்கள் பல தடைகளை சந்தித்துள்ளன. சில படங்கள் கடைசிவரை திரையிடப்படவே இல்லை. இதுபோன்ற பல படங்கள் இன்னமும் தடைகளை சந்திக்கும். இந்த படங்கள் வெறும் கதையல்ல. நடந்த வரலாறு. யாரையும் புண்படுத்தும் படங்களும் அல்ல. ஆனால் அந்த படத்தின் மீதான தடை பற்றி நாம் கண்டுகொள்ள தாயாராக இல்லை. இனியாவது கண்டுகொள்வோம்.

பல கோடிகள் கொடுத்து 'உச்சிதனை முகர்ந்தால்' படத்தை பல தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்ய சொன்னார்கள். யாரும் முன்வரவில்லையே! அந்த திரையிடப்படத்தை தியேட்டர்களில் வெளியிடவும் தடுத்தார்களே!
குருநாதன் சிவராமன்
கமல் மாபெரும் நடிகன், எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவர் தமிழ் சினிமாவை உயர்த்தினார் என்று எப்படி சொல்ல முடியம்?

உதாரணத்துக்கு விஸ்வரூபம் வெளியான அதே நாளில் 'வழக்கு எண் 18/9' படமும் வெளியானால் நம் மக்கள் எதை பார்க்க கூடுகிறார்கள்?

100 கோடியை 20 புது இயக்குனர்களுக்கு பிரித்து கொடுத்திருந்தால் கண்டிப்பாக 10 நல்ல படங்கள் கிடைத்திருக்கும். 10 திறமையான இயக்குனர்கள் கிடைத்திருப்பார்கள். அதெல்லாம் இங்கு சாத்தியமில்லையே! பின்னர் எப்படி தமிழ் சினிமா உயரும்?
குருநாதன் சிவராமன்
கமல்ஹாசன் அவர்களே!
உங்கள் காட்டில் நல்ல மழை! ஊடக செலவு இல்லாமல் படத்திற்கு நல்ல விளம்பரம் கிடைத்துள்ளது. உங்களுக்கும் நல்ல Sympathy உருவாகியுள்ளது. போதாத குறைக்கு 'தமிழன்', மத சார்பு, வேறு மாநிலத்துக்கு போறேன்னு, வேறு நாட்டுக்கு போறேன்னு நல்லா கருத்தா பேசிட்டீங்க. (உங்க நண்பர் ரஜினி மாதிரி ஒரு அரசியல் அறிக்கையும் சூட்டோட கொடுங்க! ).

உங்கள் படத்தில் ஏன் ஆப்கன் தீவிரவாதத்தை காட்டினீர்கள் என்றும், முதல்வேலையாக அமெரிக்கர்களுக்கு படத்தை போட்டு காட்டினீர்கள் என்றும் புரியவில்லை. அது வருங்காலங்களில் புரியும்.
குருநாதன் சிவராமன்
கமல்ஹாசன் என்ற ஒரு கலைஞனுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைக்காக ஒவ்வொரு தமிழனும் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.
அய்யா பாரதிராஜா அவர்களே! வார்த்தையை அளந்து பேசுங்கள். எதிரிகளும், துரோகிகளும் எம்மை ஆண்டபோது நான் வெட்கித் தலைகுனிய வில்லை. ஈழத்தில் எம் இனம் அழிந்தபோதும் கண்ணீர்தான் விட்டேன். வெட்கித் தலைகுனிய வில்லை.இனியும் தமிழர்ப் பிரச்சினைகளைளுக்காக களத்தில் நின்று போராடுவேன், அல்லது கண்ணீர் வடிப்பேன். தமிழனாய் இருப்பதற்கு ஒருநாளும் வெட்கித் தலைகுனிய மாட்டேன்.
வெளியுலகில் தன்னை மாபெரும் இந்தியனாக காட்டிக்கொள்வதும், தனக்கு தமிழகத்தில் பிரச்சினை என்றதும் நானும் தமிழந்தான் என்று வீர வசனம் பேசுவதும் உங்களைப் போன்ற கூத்தாடிகளுக்கு (உதாரணம்: சின்மயி, ஜெயராம்) புதிதல்ல.
Chandar
அட்டு பிகருக்கு என்னமா விலக்கம் ! சூபர் அப்பு
raghunath
ooru rendupatta koothadiku kondatam , kothadiye rendu patta athuvum kamalna keetruvikku romba romba kondatam.
viyasan
வ‌ன்னிஅர‌சின் த‌லையில காக‌ம் எச்ச‌மிட்டாலும் அது இந்துத்துவ‌த்தின் வேலை, இந்துக்க‌ள் தான் காக‌த்திட‌ம் வ‌ன்னிஅர‌சின் த‌லையில் போய்ப்போடு என்று சொல்லிவிட்டார்க‌ள் என்பார் போலிருக்கிற‌து. :-)
viyasan
"அட்டு பிக‌ரு" (அச‌ட்டுப்பெண்) என்ற‌ வார்த்தை உண்மையில் அச‌ட்டு என்ற‌ த‌மிழ்ச்சொல்லின் திரிபு என்று தான் கேள்விப்ப‌ட்டிருக்கிறேன், ஆனால் வ‌ன்னிஅர‌சு அவ‌ர்க‌ள் அத‌ற்கு ஆங்கில‌த்தில் புது விள‌க்க‌ம் த‌ருககிறார். அச‌ட்டு > அட்டு
george joseph
The article how hindutva ideology is indoctrinated through the medium of Cinema (Vishwaruupam) is clearly articulated. It is definitely an ALTERNATIVE VIEW of the film. Not only that it tries to ALTER the dominant perspective coming through popular and powerful medium like cinema and television.
All of us have the freedom of expression as our fundamental right. However, none of our fundamental right should affect or belittle the right of the other.
I wish even in our aesthetic expressions, we don't hurt the sensibilities of 'the other'. Such sensitivity and care will go a long way in our lofty ideal of 'societal transformation' and 'national integration'.
M.T.Moorthi
The article written by vanniarasu is very very clear, precise and true.
I really appreciate the author for giving valuable facts in precise and concise .Thanks for this complete article.
M.T.Moorthi
Yangon, Myanmar
ஷாலி
காகம் கமண்டலம் கவிழ்த்தியாதால் கா...விரி ஓடியதை நம்பும் புலம்பெயர் புலிம்பிகள், வன்னி அரசின் தலையில் எச்சத்தை உமிழ்வது ஆச்சரியமல்ல.இந்த இந்து மக்கள் காவலர்கள்தான் லட்சக்கணக்கான அப்பாவி இந்துக்களை துப்பாக்கி முனையில் முள்ளிவாய்க்கால் மரண களத்திற்கு விரட்டி சிங்களனின் இரத்த தாகத்தை தனித்தவர்கள்.
இவர்களால் பாதிக்கப்பட்ட இந்துக்கள் இன்றும் முள்வேலி வதை முகாம்களில் நடைபிணமாய் அடைபட்டுள்ளனர்.புத்திசாலி புலிம்பிகள் அமெரிக்கா,கனடாவில் ஆறு கால பூஜையில் அமர்களமாக சாதி இந்துவை சமைக்கிறார்கள்.” விஸ்வம் விஷ் ணூர் வசத்காரோ...” எனும் விஸ்வரூபம் எடுக்கிறார்கள்.
ஆளூர் ஷாநவாஸ்
நல்ல பதிவு. முஸ்லிம்களின் குரலை ஓங்கி ஒலித்துள்ளது கட்டுரை. விஸ்வரூபத்தை முஸ்லிம்கள் எதிர்ப்பதற்கான உண்மையான அரசியல் நியாயம் என்ன என்பதை தெளிவாக விளக்கியுள்ளார் தோழர் வன்னி அரசு.
MOULANA RIFAYDEEN HASANI
சமிப கால திரைப்படங்கள் இஸ்லாதிற்கு எதிரான கருத்துக்களை பரப்புகின்றன என்ற உன்மையை ஆசிரியர் வன்னி அரசு அவர்கள் மண்சட்டியை உடைத்தாற் போல பளிச்சென்று சொல்லி விட்டார்.
viyasan
ஹிட்ல‌ரும், நாசிக‌ளும் கிறித்த‌வ‌ர்க‌ள் அத‌னால் அவ‌ர்க‌ள் செய்த‌ கொலைக‌ளை அட்டூழிய‌ங்க‌ளைப் ப‌ற்றிப் ப‌ட‌மெடுத்தால் அது கிறித்த‌வ‌ர்க‌ளின் ம‌ன‌தைப் புண்படுத்தும், இந்தியாவில் ம‌ட்டும‌ல்ல‌, உல‌கம் முழுவ‌துமுள்ள‌ கிறித்த‌வ‌ர்க‌ளையெல்லாம் தீவிர‌வாதிக‌ளாக‌, இன‌வெறிய‌ர்க‌ளாக‌க் காட்டும் செய‌ல் என‌ யாராவ‌து சொன்னால் அது எவ்வ‌ள‌வு ந‌கைப்புக்குரிய‌தோ அது போன்ற‌து தான் ஆப்கானிய‌ த‌லிபான் தீவிர‌வாதிக‌ளைப் ப‌ற்றி ப‌டமெடுத்தால் அது முழு "இஸ்லாமிய‌ச‌மூக‌த்துக்கெதிராக‌ விஷ‌த்தைக் கொட்டியிருப்ப‌தாகும்" என்ப‌தும். அப்ப‌டியானால் இஸ்லாமிய‌ர்க‌ள் எல்லாம் இஸ்லாமிய‌ தீவிர‌வாதத்தின் ஆத‌ர‌வாள‌ர்க‌ள் என‌ வ‌ன்னிஅரசு அவர்க‌ள் ம‌றைமுக‌மாக‌ச் சொல்கிறாரா என்ற‌ த‌விர்க்க‌முடியாத‌ உண‌ர்வு அவ‌ர‌து இந்த‌க்க‌ட்டுரையை வாசிக்கும்போது ஏற்ப‌டுகிற‌து. அப்ப‌டியானால் இஸ்லாமிய‌ தீவிர‌வாதிக‌ள் செய்த‌ அட்டூழிய‌ங்க‌ளை எல்லாம் ஒட்டு மொத்த‌ த‌மிழ்நாட்டு முஸ்லீம்க‌ளும் அங்கீக‌ரிக்கிறார்க‌ள், அதில் அவ‌ர்க‌ளுக்கு எந்த‌வித‌ ஆட்சேப‌னையுமில்லை. ஆனால் தலிபான்க‌ளைப் ப‌ற்றிய‌ உண்மைகளை பாம‌ர‌ ம‌க்க‌ளும் ப‌ட‌ங்க‌ளின் மூல‌மாக‌ அறிந்து கொள்வ‌தை ம‌ட்டும் அவ‌ர்க‌ள் விரும்ப‌வில்லை என்ப‌து தான் க‌ருத்தாகும். இதே யுக்தியைப் பய‌ன்ப‌டுத்தி, நாளைக்கு எவ‌ராவ‌து ச‌ங்ப‌ரிவாரை அல்ல‌து சிவ‌சேனாவின் ப‌ய‌ங்க‌ர‌வாதத்தைப் ப‌ற்றி ப‌ட‌மெடுத்தால், அதைத்த‌டுக்குமாறு இந்துக்க‌ள் போராடினால், அந்த‌ப்ப‌ட‌த்தை எதிர்த்து வ‌ன்னிஅர‌சு இப்ப‌டியொரு க‌ட்டுரையை எழுதுவாரா? அல்ல‌து திருமாவ‌ள‌வ‌ன் அவ‌ர்க‌ள் அந்த‌ப்ப‌ட‌த்தின் இந்து விரோத‌ப்போக்கைக் க‌ண்டிப்பாரா என்றால் அப்ப‌டிச்செய்ய‌ மாட்டார்க‌ள், ஏனென்றால் வ‌ன்னிஅர‌சுவின‌தும்,திருமாவ‌ள‌வ‌னின் குறி முஸ்லீம்க‌ளின் வாக்குவ‌ங்கியே த‌விர‌ இந்துக்க‌ளின் வாக்குவ‌ங்கி அல்ல‌. :-)
viyasan
///காகம் கமண்டலம் கவிழ்த்தியாதால் கா...விரி ஓடியதை ///
காக‌ம் க‌மண்ட‌ல‌த்தைக் க‌விழ்த்திய‌தால் காவிரி ஓடிய‌ க‌தைக‌ளைக் கேலி செய்யும் ஷாலிக‌ள் பாலைவ‌னத்தில் நின்று சாத்தானுக்குக் க‌ல்லெறிவ‌தைப் பற்றியெல்லாம் மூச்சுவிட‌க் கூடிய‌த்துணிய‌ மாட்டார்க‌ள். ஏனென்றால் இஸ்லாமிய‌ தீவிர‌வாதிக‌ள் பாட்வா அறிவித்து விடுவார்க‌ள் என்ற‌ ப‌ய‌ம். அப்ப‌டியான‌ இர‌ட்டைவேட‌ ம‌த‌ச்சார்ப‌ற்ற‌ முட்டாள்க‌ளைப் பார்த்துச் சிரித்து விட்டுப் போகும் ப‌க்குவ‌த்தை இந்தும‌த‌ம் இந்துக்க‌ளுக்குக் கொடுத்திருக்கிற‌து. அது தான் இந்தும‌தத்தின் சிற‌ப்பு. எந்த‌ப்ப‌டையெடுப்பையும், ப‌ய‌ங்கர‌வாத‌த்தையும், பய‌முறுத்த‌ல்க‌ளையும், ப‌ரிகாச‌ங்க‌ளையும் தாங்கி எதிர்த்து நிற்கும் ஆற்ற‌ல் இந்தும‌த‌த்துக்கும் இந்துக்க‌ளுக்குமுண்டு. ஷாலி போன்ற‌வ‌ர்க‌ளின் க‌ருத்துக்க‌ள், என்னைப்போன்ற‌ சாதார‌ண‌ தமிழ‌ர்க‌ளையே இந்துத்துவாக்க‌ளாக‌ மாற்றி விடும் என்று பய‌மாக‌விருக்கிற‌து. அதனால் இத்துட‌ன் நிறுத்துகிறேன். இந்து மக்களின் காவலர்கள் லட்சக்கணக்கான அப்பாவி இந்துக்களை துப்பாக்கி முனையில் முள்ளிவாய்க்கால் மரண களத்திற்கு விரட்டி சிங்களனின் இரத்த தாகத்தை தணித்தார்க‌ள் என்ப‌து முற்றிலும் உண்மை.அதிலும் த‌மிழ்பேசும் முஸ்லீம்க‌ள் த‌மிழ‌ர்க‌ளின் முதுகில் குத்தாமல் இருந்திருந்தால் அந்த‌ இந்துக்காவ‌ல‌ர்க‌ளையும் ஈழ‌த்து இந்துக்க‌ள் ச‌மாளித்திருப்பார்க‌ள் என்ப‌தும் ம‌றுக்க‌முடியாத‌ உண்மை. அதை விட‌ உண்மை என்ன‌வென்றால் பெரும்பான்மையான‌, அசைக்க‌முடியாத‌ இந்துக்க‌ளாக‌ இருந்தும் இந்தியாவிலுள்ள‌ பெரும்பான்மை இந்துக்க‌ளின் ஆத‌ர‌வைப் பெறும் முய‌ற்சியில் ஈடுப‌டாமல், சொந்த‌ மாநில‌த்திலேயே தேர்த‌லில் க‌ட்டுக்காசைக் கூட‌க் காப்பாற்ற‌ முடியாத‌ விளிம்பு நிலை திராவிட‌த்த‌லைவ‌ர்க‌ளின் சால்வைத் த‌லைப்பில் தொங்கி, பெரியாரின் இந்து எதிர்ப்புக் கொள்கையின் ஒரு அங்க‌மாக‌, அவ‌ர‌து வாலாய‌ங்க‌ளில் ஒன்றாக‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளையும், ஈழ‌விடுத‌லைப் போராட்ட‌த்தையும் இந்தியாவின் இந்துக்காவ‌ல‌ர்க‌ளும், பெரும்பான்மை இந்துக்க‌ளும் நினைக்கும் வ‌கையில் நட‌ந்து கொண்டமை தான். அந்தவ‌கையில் பார்த்தால், ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் அழிவில் இந்து எதிர்ப்பு பெரியாரிய‌, திராவிட‌க் கொள்கைக‌ளும் க‌டைசி நேர‌த்தில் காலையுண‌வுக்கும் ம‌தியுண‌வுக்குமிடையில் உண்ணாவிர‌த‌ப் போராட்ட‌ம் ந‌டத்திய‌ திராவிட‌த் த‌லைவ‌ர்க‌ளின் கைங்க‌ரிய‌ங்க‌ளுக்கும் முக்கிய‌ ப‌ங்குண்டு.
Maja
superb sir. Thank you very much. your opinion is very clear. I wish you & your articl
Rajendran
//காக‌ம் க‌மண்ட‌ல‌த்தைக் க‌விழ்த்திய‌தால் காவிரி ஓடிய‌ க‌தைக‌ளைக் கேலி செய்யும் ஷாலிக‌ள் பாலைவ‌னத்தில் நின்று சாத்தானுக்குக் க‌ல்லெறிவ‌தைப் பற்றியெல்லாம் மூச்சுவிட‌க் கூடிய‌த்துணிய‌ மாட்டார்க‌ள்.// ‌பெர்டினணட் ரஸ்ஸல் அவர்கள் நான் ஏன் கிருஸ்தவனல்ல என்று எழுதிய போது யாரும் ஏன் இந்து மதத்தையோ இஸ்லாம் மதத்தையோ எதிர்த்து எழுதாமல் கிருஸ்தவ மதத்தை மட்டும் எதிர்த்து எழுதினீர்கள் என்று வினா எழுப்பவில்லை.
viyasan
‌///பெர்டினணட் ரஸ்ஸல் அவர்கள் நான் ஏன் கிருஸ்தவனல்ல என்று எழுதிய போது ///
நான் ஏன் கிறிஸ்த‌வ‌னல்ல என்று ஒருவ‌ன் த‌ன்னிலை விளக்க‌ம் கொடுப்ப‌த‌ற்கும் அடுத்த‌வ‌னைப் பார்த்து அவ‌ன‌து ம‌த‌த்திலுள்ள‌ புராண‌க்க‌தையைச் சுட்டிக் காட்டிப் ப‌ரிகாச‌ம் செய்வ‌த‌ற்குமுள்ள‌ வேறுபாட்டை இந்த‌ ராஜேந்திர‌னால் புரிந்து கொள்ள‌ முடிய‌வில்லையே என்ப‌தை நினைக்க‌ப் பாவ‌மாக இருக்கிற‌து. :-)
Rajendran
திரு.வியாசன் அவர்களே! யார் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முயலாமல் பரிதாபப்படுவதையே தொழிலாகக் கொள்ள வேண்டாம். ரஸ்ஸல் அப்புத்தகத்தில் பைபிளில் கூறப்பட்டுள்ள கருத்துக்களையும் கிருத்துவ மதத்தினரின் தவறான போக்குகளையும் குறை கூறியும் விமர்சித்தும் தான் எழுதியுள்ளார்.
viyasan
//ரஸ்ஸல் அப்புத்தகத்தில் பைபிளில் கூறப்பட்டுள்ள கருத்துக்களையும் கிருத்துவ மதத்தினரின் தவறான போக்குகளையும் குறை கூறியும் விமர்சித்தும் தான் எழுதியுள்ளார்.//
ஒப்பிட்டு விம‌ர்சிப்ப‌த‌ற்கும், நான் ஏன் கிறிஸ்த‌வ‌ன‌ல்ல‌ என்று த‌ன‌து க‌ருத்தைத் தெரிவிப்ப‌த‌ற்கும் "காகம் கமண்டலம் கவிழ்த்தியாதால் கா...விரி ஓடியதை நம்பும் புலம்பெயர் புலிம்பிகள்" என ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் புராண‌க்க‌தைக‌ளைப் ப‌ரிகாசம் செய்வ‌த‌ற்கும் வேறுபாடுக‌ளுண்டு. இங்கு எந்த‌வித‌ ஒப்பீட்டு விம‌ர்ச‌ன‌மும் ந‌டைபெறவில்லை என்ப‌தைப் புரிந்து கொள்ள‌ முடியாத‌ ராஜேந்திர‌னைப் பார்க்க‌ப் ப‌ரிதாப‌மாக‌ இருக்கிற‌து. :-)
Rajendran
பரிதாபப்படுவதிலேயே முழு நேரத்தையும் விரயம் செய்வது என்று முடிவெடுத்து விட்டால் மற்றவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள நேரம் இருக்காது தான். இங்குள்ளவர்கள் இந்து மதப் புராணங்களை விமர்சிப்பது போல் ரஸ்ஸல் பைபிளை விமர்சித்து இருக்கிறார் என்றால் அது தன்னிலை விளக்கம் என்று மனத் திருப்தி அடைபவர் இங்குள்ளவர்களும் தன்னிலை விளக்கம் கொடுக்கிறார்கள் என்று மனத் திருப்தி அடைந்து அடைதியாக இருக்க வேண்டியது தானே? இந்து மதத்தில் உள்ள குறைகளைக் கூறினால் இஸ்லாம் மதத்தில் குறைகள் இல்லையா என்று கேட்பது ஏன்?
viyasan
//இங்குள்ளவர்களும் தன்னிலை விளக்கம் கொடுக்கிறார்கள் என்று மனத் திருப்தி அடைந்து அடைதியாக இருக்க வேண்டியது தானே?//

ராஜேந்திர‌னின் ப‌தில்க‌ளைப் பார்க்கும் போது ஆப்பிழுத்த‌ ..... க‌தை தான் நினைவுக்கு வ‌ருகிற‌து. எந்த‌ப் ப‌திலுக்கு நான் அவ்வாறு ப‌திலெழுதினேன் என்ப‌தைக்கூட‌ அவ‌ர் ச‌ரியாக‌ப் ப‌டிக்க‌வில்லைப் போலிருக்கிற‌து. "காகம் கமண்டலம் கவிழ்த்தியாதால் கா...விரி ஓடியதை நம்பும் புலம்பெயர் புலிம்பிகள்", என்று அதை எழுதிய‌வ‌ர் ஒன்றும் த‌ன்னிலை விள‌க்க‌ம் அளிக்க‌வில்லை, அவ‌ர‌து ப‌திலையும், அவ‌ர் யாருடைய‌, அத‌ற்கு முன்னைய‌ ப‌‌திலைக் குறிப்பிட்டு எழுதினார் என்ப‌தையும் அத‌ற்கும் மேலேயுள்ள‌ ப‌தில்க‌ளையும் ஆற அம‌ர‌ப் ப‌டித்து விட்டுப் பதிலெழுதிப் ப‌ழ‌குமையா.. :-)))
Rajendran
ஐயா வியாசன் அவர்களே! ரஸ்ஸலும் தன்னிலை விளக்கம் அளிப்பதற்காக அந்நூலை எழுதவில்லை. கிருத்துவ மதத்தின் மூட நம்பிக்கைகளையும் அம்மதவாதிகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளையும் விமர்சித்துத் தான் எழுதியுள்ளார்.
viyasan
அப்ப‌னே ராஜேந்திரா, இங்குள்ள‌ ப‌தில்க‌ளையும் அத‌ற்கு முன்னைய‌ ப‌தில்க‌ளின் பின்ன‌ணியையும் ப‌டித்துப் பார்க்காம‌ல், ச‌ம்ப‌ந்த‌மேயில்லாம‌ல் ர‌ஸ்ஸலை இங்கு இழுத்து வ‌ந்து விட்டு முழிக்கிற‌து ப‌த்தாதென்று, இன்னும் நான் பிடிச்ச‌ முய‌லுக்கு மூன்றுகால் தான் என்று வாதாடுவ‌தில் பய‌னில்லை. ர‌ஸ்ச‌ல் த‌ன்னிலை விள‌க்க‌ம் கொடுத்தாரா, அல்ல‌து நீர் தான் ம‌த‌ர் திரேசாவையும், மார்த்தா ஸ்ரூவட்டையும் ஒப்பிட்டுப் பார்த்துக் குழ‌ம்பி விட்டீரா என்ப‌தைப் ப‌ற்றியெல்லாம் என‌க்குக் க‌வ‌லையில்லை. எந்தப் ப‌திவுக்குப் ப‌தில‌ளிக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து என்ப‌தை முத‌லில் ப‌டித்துத் தெரிந்து கொண்டு ப‌தில‌ளிக்க‌ப் ப‌ழ‌கிக் கொண்டீரேயானால் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் உம‌க்குப் ப‌தில‌ளிப்ப‌தில் த‌ம‌து நேர‌த்தைச் செலவிடுவ‌தைத் த‌விர்க்க‌லாம். :-)
Rajendran
ஐயா வியாசன் அவர்களே! ரஸ்ஸல் தான் வாழ்ந்த சமூகத்தின் பிரச்சினைகளை முன்னிட்டு கிருத்துவ மதத்தை விமர்சித்தார். அது‌ போல் இங்குள்ளவர்கள் தங்கள் பிரச்சினைகளை முன்னிட்டு இந்து மதத்தை விமர்சிக்கின்றனர். இந்த ஒரு சிறு விஷயத்தைக் கூட புரிந்து கொள்ளாமல் இருக்க அல்லது புரியாதது போல் நடிக்க எப்படித்தான் முடிகிறதோ தெரியவில்லை.
viyasan
அப்ப‌னே ராஜேந்திரா, இங்குள்ள‌வ‌ர்க‌ள் இந்தும‌த‌த்தை ம‌ட்டும‌ல்ல‌ இப்ராகீமின் ம‌த‌த்தைக் கூட‌ விம‌ர்சிக்க‌ட்டும் அதைப்பற்றி என‌க்குக் க‌வ‌லையில்லை. இந்து ம‌த‌த்துக்கு விம‌ர்ச‌ன‌ங்க‌ளையும், விவாத‌ங்க‌ளையும் தாங்கி அழியாம‌ல் நிற்க‌க்கூடிய‌ ப‌ல‌மும், பார‌ம்ப‌ரிய‌மும் உண்டு, இந்தும‌த‌த்தை விம‌ர்சித்த‌தால் நான் ப‌திலெழுத‌வில்லை. "...... கா...விரி ஓடியதை நம்பும் புலம்பெயர் புலிம்பிகள்" என்று குறிப்பிட்ட‌தால் தான் நான் ப‌திலெழுதினேன் என்ப‌தை உம்மால் இன்னும் புரிந்து கொள்ள‌ முடியாத‌தால் தான் இப்ப‌டிப் புல‌ம்புகிறீர் போலிருக்கிற‌து. முத‌லில் ப‌டித்துப் பார்த்து விட்டுப் ப‌திலெழுதிப் ப‌ழ‌கும். இனிமேலும் உம‌க்குப் ப‌திலெழுதி என‌து நேர‌த்தை வீணாக்க‌ப் போவ‌தில்லை. :-)
Rajendran
///காகம் கமண்டலம் கவிழ்த்தியாதால் கா...விரி ஓடியதை /// காக‌ம் க‌மண்ட‌ல‌த்தைக் க‌விழ்த்திய‌தால் காவிரி ஓடிய‌ க‌தைக‌ளைக் கேலி செய்யும் ஷாலிக‌ள் பாலைவ‌னத்தில் நின்று சாத்தானுக்குக் க‌ல்லெறிவ‌தைப் பற்றியெல்லாம் மூச்சுவிட‌க் கூடிய‌த்துணிய‌ மாட்டார்க‌ள்/// ஐயா வியாசன் அவர்களே! நீ்ங்கள் தேவையில்லாமல் அல்லது ஏதோ உள்நோக்கம் கொண்டு இஸ்லாம் மதத்தை விமர்சிக்க வேண்டும் என்று கூறுவீர்கள். மற்றவர்கள் அதை அப்படியே ஒப்புக் கொண்டு மத மோதலை உருவாக்கி பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பைப் பின்னுக்குத் தள்ளிவிட வேண்டும். அப்படி அல்லாமல் வேறு வழியில் நீங்கள் சிண்டு முடிவது தவறு என்று காட்டினால் நீங்கள் புரிந்து கொள்ள மாட்டீர்கள். தங்கள் கருத்துப்படி அவர்கள் ஆப்பை அசைத்து விட்ட குரங்குகள் ... இன்னும் பல. மொத்தத்தில் எந்த மதத்திலும் இல்லாத அயோக்கியத்தனமான வர்ணாசிரம தர்மத்தைத் தூக்கிப் பிடிக்கும் இந்து மதத்திற்கும் மற்ற மதங்களுக்கும் அடிப்படையில் வேறுபாடு உண்டு. அதைப் புரிந்து கொண்டு பேசுங்கள்.
rajkumar
கமல் நல்ல நடிகன் ஆனால் மோசமான சிந்தனையாளன்.
ஊடகம் என்னும் ஆயுதத்தை தன் கையில் வைத்துக்கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக நீட்டுகிறார்.
R Chandrasekaran
அமா ராசுகுமாரு.... கமலு ரொம்ப மோசம்.... ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக எததயாவது செய்ரதே ஒரு பொள்ப்பா வச்சிக்கிட்டு இருக்காரு... அவரு கண்டியும் இல்லிய்ன்னாக்க நம்ம நாடும் ஒடுக்கபட்ட் மக்களும் எங்கயோ போய்ருவாஙக...

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.