ஒரு வீட்டில் இரண்டு பையன்கள் பொல்லாதவர்களாக இருந்தார்கள். திருடுவது, பொய் சொல்வது, அடுத்த வீட்டுப் பையன்களை அடிப்பது என எப்போதும் பெற்றோருக்கு தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களைத் திருத்த முயன்று, தோற்றுப் போன பெற்றோர், இருவரையும் பாதிரியாரிடம் அழைத்துப் போனார்கள்.

முதலில் ஒருவனை மட்டும் உள்ளே அழைத்த பாதிரியார், இங்கே தப்பு செய்தால் மேலுலகத்தில் கடவுள் தண்டிப்பார் என்பதைப் புரிய வைக்கும் முயற்சியாக, ‘கடவுள் எங்கே இருக்கிறார்?’ என்று கேட்டார்.

அந்தப் பையன் பதில் சொல்லவில்லை.

‘எங்கே கடவுள் என்பதற்குப் பதில் சொல்’

பையன் விழித்தான்.

‘கடவுள் எங்க இருக்கிறார்ன்னு சொல்லப் போறியா இல்லையா?’

பையன் அழ ஆரம்பித்தான்.

‘சரி. நீ போ. உனது சகோதரனை உள்ளே வரச் சொல்’

அவன் வேகமாக ஓடிப்போய் தனது சகோதரனிடம் சொன்னான்.

‘டேய்! இந்த தடவை பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டோம். கடவுளைக் காணோம். நாம்தான் திருடியதாக சந்தேகப்படுகிறார்கள்’

Pin It