"தனி மனிதனுக்கு உணவில்லையேல்
இச் சகத்தினை அழித்திடுவோம்.."

என்றான் பாரதி. இந்த தேசத்தில் பாரதிக்கு நிகராக இந்தியாவை கண்டுணர்ந்தவர் யாருமில்லை எனலாம். பாரதி தமது “இந்தியா” பத்திரிக்கையில், இந்தியாவில் சாதியும் வறுமையும் இரண்டு குழப்பங்கள் என்று எழுதினான். அத்தகைய வறுமையினை போக்குகிற திட்டங்களை இயற்ற வேண்டிய ஆட்சியாளர்களின் கனவுத் திட்டமாக இன்றைக்கு உணவுப் பாதுகாப்பு சட்டம் முன்னிறுத்தப்படுகிறது. இத்திட்டம் உழைக்கும் நடுத்தர வர்க்கத்தினை தாக்குகின்ற பணியினையே செய்யும் என்கின்றன இடது சாரி அமைப்புகள். இன்றைய சூழலில் ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு அச்சங்கள் நிகழும் நிலையில் தான் நாம் இதுபற்றிய தெளிவிற்கு வர வண்டியள்ளது.

1996 ஆம் ஆண்டு ரோம் நகரில் நடைபெற்ற உணவிற்கான உச்சி மாநாடு 2010 ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் உணவு வழங்கிடவும் அதனை உறுதிப்படுத்திடவும் முடிவெடுத்தது. அதனை அங்கே ஏற்றுக்கொண்டு வீர சபதமிட்டு வந்த மத்திய ஆட்சியாளர்கள் அதனை அமுல்படுத்திட எவ்வித நடவடிக்கையும் எடுக்காத சூழ்நிலையில் 2001ல் உச்சநீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பில் உணவிற்கான உரிமையினை அடிப்படை உரிமையாக மாற்றிடக் கோரியது. ஆனால் மத்திய ஆட்சியாளர்கள் இது அரசின் கொள்கை முடிவென கூறி தீர்ப்பினை ஏற்க மறுத்து விட்டனர்.

2004 முதல் 2009 வரை ஆட்சிக்கு ஆதரவளித்து வந்த இடதுசாரிக் கட்சிகளின் நெருக்குதலால் உணவுப் பாதுகாப்பு என்பது குறைந்தபட்ச செயல் திட்டத்தில் சேர்க்கப்பட்டு 2001ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை அமுல்படுத்திட வேண்டிய கட்டாயத்திற்கு மத்திய அரசு தள்ளப்பட்டது.

1996ஆம் ஆண்டு ரோம் நகரில் நடைபெற்ற உணவிற்கான உச்சி மாநாடு அறிவித்தபடி உணவுப் பாதுகாப்பிற்கான சட்டம் அர்ஜென்டைனா, பிரேசில், குவாதமாலா ஆகிய நாடுகளில் உள்ளது. பிரேசில் நாடு பட்டினி இல்லாத நாடு என சட்டம் இயற்றப்பட்டு, இனி உணவிற்காக எந்த தனி நபரும் கையேந்ந கூடாது என அறிவித்துள்ளது.

ஆனால், இன்றைக்கு சோனியா காந்தி அவர்களின் கனவுத் திட்டம் என்று உணவு பாதுகாப்பிற்காக வரிந்து கட்டிக்கொண்டு களத்திலே நிற்கின்ற மத்திய ஆட்சியாளர்கள் கடந்த பத்து அண்டுகளுக்கும் மேலாக குறைந்த பட்ச செயல் திட்டத்திலிருந்தும் ஏன் இத்தனை காலம் நடைமுறைப்படுத்திட முயலவில்லை என்பதும், இந்த சட்டத்தினை விரைவில் கூட உள்ள நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் அவசர சட்டமாக அமுல்படுத்திட துடிப்பதும், குறைந்த பட்ச செயல் திட்டத்தில் சேர்த்து அமுல்படுத்திட வலியுறுத்திய இடது சாரி கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் இத்தகைய சட்டம் இந்தியாவில் நிறைவேற்றப்படுவதை ஏன் எதிர்க்கின்றன என்பதையும் நாம் உற்று நோக்கிட வேண்டியுள்ளது.

உணவுப் பாதுகாப்பு சட்டத்தினை நடைமுறைப்படுத்திட அமைக்கப்பட்ட டெண்டுல்கர் குழு இந்த சட்டத்தின் கீழ் மக்களை மூன்று பிரிவுகளாகப் பிரித்திட முடிவு செய்கிறது

Ø பொதுவானவர்கள்
Ø முன்னுரிமை பெற்றவர்கள்
Ø விலக்களிக்கப்பட்டவர்கள்

மேற்கண்ட குழு, கிராமங்களில் நாளொன்றுக்கு ரூ25ம் (46% பேர்), நகர்ப் புறங்களில் நாளொன்றுக்கு ரூ20ம் (28% பேர்)சம்பாதிக்கும் மக்களை முன்னுரிமை பெற்றவர்கள் என்றும் இவர்களுக்கு மாதம் 7 கிலோ வீதம் அதிக பட்சம் 35கிலோ அரிசி ரூ3ஃ-க்கும் அல்லது கோதுமை ரூ2ஃ-க்கும் வழங்கிடவும்,

பொதுப் பிரிவின‌ருக்கு, விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஆதரவு விலையில் பாதி விலையில் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கிறது.

இதன்மூலம் இன்றைக்கு பொது வினியோக முறையில் பயன்பெறும் மக்களில் கிராமப் புறங்களில் 54% பேரையும் நகர்ப்புறங்களில் வாழும் மக்களில் 72% பேரையும் முழுமையான பொது வினியோகத் திட்டத்திலிருந்து நீக்குவது என மத்திய அரசாங்கம் இச்சட்டத்தில் வரையறை செய்கிறது எனில் நமது கேள்வி என்பது 100% பேரையும் உணவிற்கான பாதுகாப்பின் கீழ் கொண்டுவராத சட்டம் எப்படி உணவுப் பாதுகாப்பு சட்டமாகும்? என்பதுதான்

உதாரணமாக, இந்த சட்டம் அமுல்படுத்தப்படுவதன் மூலமாக தமிழகத்தில் உள்ள 10.68 கோடி குடும்ப அட்டைகள் 6.5 கோடியாக குறைக்கப்படவும், அரிசிக்கான குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை 1.86 கோடியிலிருந்து 40லட்சமாக குறைக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாடு, கேரளா, திரிபுரா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் அரிசி, கோதுமை தவிர உணவு தானியங்கள், எண்ணெய் போன்றவை பொதுமக்களுக்கு பொதுவினியோக முறையில் வழங்கப்படுவதை தடுக்கும் இச்சட்டத்தின் காரணமாக அரிசி, கோதுமை தவிர ஏனைய பொருட்களுக்கான மான்யத்தினை மாநில அரசிற்கு தர மறுப்பதோடு இந்த சட்டத்தினை அமுல்படுத்திட மறுக்கும் மாநில அரசுகளுக்கான மானியத்தினை குறைக்கப் போவதாகவும் எச்சரிக்கிறது.

நமது தேசத்தின் ஆண்டு உணவு தானிய தேவை 268 லட்சம் மெட்ரிக் டன்னாக உள்ள நிலையில் அரசு உணவுப் பாதுகாப்பு கிடங்குகளில் 664 லட்சம் மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டுள்ள உணவு தானியத்தினை ஏழை மக்களுக்கு வழங்கிட மறுத்து செயற்கையான உணவு தட்டுப்பாட்டினை ஏற்படுத்தும் போக்கு ஆச்சரியமாக உள்ளது.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களை நிர்ணயம் செய்வதில் மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்தாமல் செருப்பிற்கு ஏற்ப காலை வெட்டும் நிலையில், நாம் மூன்றாம் வகுப்பு பாடத்தில் படித்த அக்பர் பீர்பால் கதையில் கோட்டை அழிக்காமலே சிறியதாக்கிட, கோட்டுக்கு பக்கத்திலேயே பெரிய கோடு போட்ட பீர்பாலின் புத்திசாலித்தனைத்தைப் போல அன்றாட வருமானத்தின் அளவினைக் குறைத்து இன்றைக்கு மத்திய அரசாங்கம் வறுமைக் கோட்டு பட்டியலை வெட்டி சுருக்கியதை நாம் நினைவில் கொள்ள‌ வேண்டும்.

இச்சட்டம் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள நிலையிலேயே நடைமுறைப்படுத்தப்படும் எனில் அரசு ஊதியம் பெறுபவர்கள் என்று விலக்களிக்கப்பட்டவர்கள் பட்டியலிலே முதலில் அரசு ஊழியர்கள் சேர்க்கப்பட்டு ஏதோ சர்க்கரை, மண்ணெண்ணை, தானிய வகைகள் பொது வினியோகத் திட்டத்திலே பெறுவது நிறுத்தப்படும் அபாயம் உள்ளது.

பின்னர் படிப்படியாக நிலம் உள்ளவர்கள் என்றும், வறுமைக் கோட்டிற்கு மேலுள்ளவர்கள் என்றும் சகல பிரிவினருக்கும் பொது வினியோகத் திட்டத்திலிருந்து விலக்களித்து பின்னர் முழுமையாக மூடுவிழா நடத்துவதற்கான ஏற்பாடாகவே உள்ளது இந்த அவசரச் சட்டம்.

“உங்கள் பணம் உங்கள் கையில்” என குறைந்த அளவு மக்களுக்கு மான்யத்தினை பணமாக வழங்கி, ஏனைய அனைவரையும் மான்யம் தவிர்த்து வெளிச்சந்தையிலேயே பொருட்கள் வாங்கிட பழக்கப்படுத்தி பெருவாரியாக மக்களை பொதுவினியோக முறையிலிருந்து விலக்கி வைத்துவிட்டு பின்னர் குறைவான பயனாளிகளுடன் இயங்கும் பொது வினியோக முறையினை ஒழித்திடவும், பொதுவினியோக முறையினை ஒழித்தபின்னர் விலைக் கட்டுப்பாடு என்பது நீக்கப்பட்டு வால்மார்டும் டெக்ஸ்கோவும், மான்சென்டோவும் கார்கிலும் துவங்கும் பகாசூர கடைகளுக்கு மக்கள் வருமானத்தை மடைமாற்றம் செய்வதற்குமான‌ தொலை நோக்குத் திட்டமாகவே இத்திட்டம் உள்ளது.

எனவே,

“எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போவதோ?..
நாங்கள் சாவதோ?..”

என்ற நிலையினை ஏற்படுத்தாது, இந்திய தேசத்தின் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையிலும், அரிசி, கோதுமை தவிர ஏனைய உணவுப்பொருட்களை பொது வினியோகத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் வழங்கிடவும், சில மாநிலங்களில் நடைமுறையில் உள்ள சில நல்ல அம்சங்களையும் உள்ளடக்கி இந்த சட்டத்தினை பாராளுமன்றத்தில் ஆரோக்கியமான விவாதத்திற்கு உடபடுத்தி சில திருத்தங்களை செய்வதன் மூலமாக நாடு முழுவதுக்குமான விரிவான பொது வினியோக முறையினை மக்களுக்கு வழங்கினால் மட்டுமே இச்சட்டம் வரமாக அமையும் இல்லையேல்....
 
- மு.வீரகடம்பகோபு, திண்டுக்கல்

Pin It