1860 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சி உருவாக்கிய சட்டப் பிரிவு 377. ஓரினச் சேர்க்கையை குற்றம் என்று அறிவிக்கும் இந்தச் சட்டப் பிரிவை நீக்கக் கோரி அரவாணிகள், ஓரினச்சேர்க்கையாளர்கள் மனித உரிமையாளர்கள் தொடர்ந்து போராடி வந்தனர். அவர்கள் மகிழ்ச்சியடையக்கூடிய தீர்ப்பு ஒன்றை டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த ஜூலை 2 ஆம் தேதி வழங்கியுள்ளது. தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி முரளீதர் அடங்கிய அமர்வு “வயது வந்தவர்கள் - தங்களுக்கான தனிப்பட்ட பாலுறவுகளைத் தேர்வு செய்யும் உரிமையை குற்றமாகக் கருத முடியாது. அப்படி குற்றமாகக் கருதுவது அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கான பிரிவு 21, 14, 15-க்கு எதிரானவையாகும்” என்று தீர்ப்பளித்துவிட்டது. இதன் மூலம் 149 ஆண்டுகால பிரிட்டிஷ் காலனி ஆட்சியின் சட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கனவே 126 நாடுகள் ஓரினச் சேர்க்கை குற்றமாகாது என்று அறிவித்துள்ளன.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொண்டு நிறுவனம் ஒன்று இந்த பொது நலன் வழக்கைத் தொடர்ந்தபோது, இந்தியாவின் உள்துறை மற்றும் சட்ட அமைச்சகங்கள் - இந்தக் கோரிக்கைக்கு எதிராகவும், மருத்துவர் அன்புமணியின் சுகாதாரத்துறை அமைச்சகம் கோரிக்கைக்கு ஆதரவாகவும், நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்தன. எனவே இந்திய ஆட்சி நிர்வாகத்தில் இதில் கருத்தொற்றுமை இல்லாத நிலையே இருந்தது. தற்போது பதவிக்கு வந்துள்ள சட்டத்துறை, உள்துறை அமைச்சர்கள் கோரிக்கைக்கு ஆதரவாகவே உள்ளனர்.
பாலின அடிப்படையில் வேறுபாடுகள், ஏற்றத் தாழ்வுகள் எந்த வடிவிலும் நிலவக் கூடாது என்பதுதான் நாகரிக சமூகத்தின் பார்வையாகும். பாலின வேறுபாடுகள் காட்டப்பட்டதால்தான் ‘கற்பு’ என்ற ‘புனிதம்’ பெண்கள் மீது மட்டும் திணிக்கப்பட்டு, அவர்களை அடக்கியாளக் கூடிய வலிமையான ஆயுதமாக, பார்ப்பனிய மற்றும் ஆண் ஆதிக்க சக்திகளால் மாற்றப்பட்டது. அதனால் தான் பெண்ணடிமை ஒழிப்புக்கு குரல் கொடுத்த பெரியார், ‘கற்பு’, ‘ஆண்மை’ என்ற வார்த்தைகளே தமிழ் அகராதிகளிலிருந்து ஒழிக்கப்பட வேண்டும் என்றார். பால் உறவு சுதந்திரம் என்பது தனி மனித உரிமைகளைச் சார்ந்ததுதான். உணவு, உடைகளைப் போல், பால் உறவுகளைத் தேர்வு செய்யும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. இயற்கைக்கு மாறான உறவுகள் என்று எந்த வரையறையும் இல்லை.
“ஆணையும், பெண்ணையும் கடவுள் படைத்ததே - சந்ததிகளை உருவாக்குவதற்குத்தான்” என்று நம்பும் மதவிதிகள், இந்தத் தீர்ப்பைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். மதங்கள் தோற்றுவிக்கப்பட்ட காலத்தில், திணிக்கப்பட்ட விதிகளை, பழக்க வழக்கங்களை அப்படியே ஏற்றுக் கொள்ளக்கூடிய மதங்களோ, மதவாதிகளோ ஏதுமில்லை. அப்படியே வாதிட்டாலும்கூட - இந்துக் கடவுள்கள் பலவும் ஓரினச் சேர்க்கையில் பிறந்ததாகவே புராணங்கள் கூறுகின்றன. தண்டனைச் சட்டத்தின் 377வது பிரிவு ஒன்று இருந்ததே இந்துக் கடவுள்களுக்கு எதிரானதுதான். நாரதரின் 60 குழந்தைகளான வருடங்கள், அரிஹரபுத்திரன் என்ற அய்யப்பன், கணபதி, அஸ்வினி, ஜாம்பவர்தன், நரகாசுரன், இராமன் போன்ற ‘கடவுள்’, ‘தேவர்’ எல்லாம் ‘377வது’ பிரிவுக்கு எதிராகப் ‘பிறந்தவர்கள்’ தான்.
மைனர்கள் மீதும் வன்முறையாகவும் நடக்கும் பாலுறவுகள் தொடர்ந்து குற்றமாகவே கருதப்படும் என்றும், இதற்கேற்ப 377-வது பிரிவை மாற்றி அமைக்கலாம் என்ற கருத்தை உயர்நீதிமன்றம் முன் வைத்துள்ளது.
2001 ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு வந்தபோது, அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. உச்சநீதிமன்றத்துக்கு மேல்றையீடு 2004 ஆம் ஆண்டு செய்யப்பட்டபோது, மீண்டும் உயர்நீதிமன்ற பரிசீலனைக்கு உச்சநீதிமன்றம் திருப்பி அனுப்பியதில் இப்போது இத் தீர்ப்பு கிடைத்துள்ளது.
‘கடவுளுக்கு’ எதிரான தீர்ப்பு என்று மதவாதிகள் இதை எதிர்க்கிறார்கள். கடவுளுக்கு எதிரான தீர்ப்புகள் தான் மனித குலத்துக்கு ஆதரவான கருத்துகளாகும். மனித உரிமைக்கும், பாலின சுதந்திரத்துக்கும் ஆதரவான தீர்ப்புகளை இனி கடவுளே நேராக வந்து “அப்பீல்” செய்தால்தான் உண்டு! நிச்சயம் வர மாட்டார் என்பது மதவாதிகளுக்கும் தெரியும்.
இது வரவேற்கத்தக்க முற்போக்கான தீர்ப்பு!
(நன்றி : புரட்சி பெரியார் முழக்கம், ஜூலை 2009)
Pin It