“இலக்கணம், இலக்கியம், உரை, பதிப்பு, அகராதி, மொழிபெயர்ப்பு, புராண படனம், கண்டனங்கள் என்று விரிந்து பரந்த தளத்தில் குமாரசுவாமிப் புலவர் இயங்கி இருக்கின்றார். இவர் எழுதிய இலக்கண ஆய்வு நூல்களுள் இலக்கண சந்திரிகையும், வினைபகுபத விளக்குமும் முக்கியமானதாகும். இவை இவரது இலக்கண ஆராய்ச்சிக்கு சான்று பகர்வனவாகும்." என ஈழத்து எழுத்தாளர் த. அஜந்தகுமார் புகழ்ந்துரைத்துள்ளார்.

               A kumaraswamy pulavarயாழ்ப்பாணத்தில் உள்ள சுன்னாகம் என்னும் ஊரில் அம்பலவாணப் புலவருக்கும் சிதம்பரம் அம்மையாருக்கும் 1854 ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார்.

               தமது தந்தையிடம் ஆரம்பக் கல்வி பயின்றார். மல்லாகம் ஆங்கிலப் பாடசாலையில் சேர்ந்து ஆங்கிலம் கற்றார். தமிழ் இலக்கண இலக்கியங்களை பூ. முருகேச பண்டிதர், அ.நாகநாத பண்டிதர் ஆகியோரிடமும், சமஸ்கிருத மொழியை நாகநாத கனகசபைப் பண்டிதரிடமும் கற்றுத் தேர்ந்தார். சமயநூல்களை நமசிவாய தேசிகரிடம் கற்றார்.

               தமது பதினாறாவது வயதில் ஆறுமுக நாவலரிடம் இலக்கண, இலக்கியங்களில் தமக்கேற்பட்ட ஐயங்களைக் கேட்டு தெளிந்தார். கனகசபைப்புலவரிடம் இலக்கணம் சம்பந்தமானவற்றை கற்றறிந்தார். மேலும் சைவசித்தாந்த சாஸ்திரம் குறித்து இணுவில் நடராசையரிம் கற்றுத் தெளிவு பெற்றார். ‘பதிப்புச் செம்மல்’ சி.வை. தாமோதரம் பிள்ளையால் நிறுவப்பட்ட ஏழாலை சைவப்பிரகாச வித்தியாசாலையில் 1878 ஆம் ஆண்டு ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். பின்பு 1884 முதல் தலைமை ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டார். சின்னாச்சியம்மையாரை 1892 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

ஆறுமுக நாவலரால் நிறுவப்பட்ட வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் தலைமை ஆசிரியராகச் சேர்ந்தார். அங்கு இருபது ஆண்டுகள் பணிபுரிந்தார். ஆறுமுக நாவலருக்குப் பின் சைவப்பிரகாச வித்தியாசாலையை உயர் கல்வி நிறுவனமாக வளர்த்திட பாடுபட்டார். சைவப்பிரகாச சாiயின் ஒர் அங்கமாக நிறுவப்பட்ட காவிய பாடசாலையும் இவரது முயற்சியால் ஒரு மரபுக் கல்வி நிறுவனமாக வளர்ச்சி பெற்றது. அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த போது வாதநோயால் பாதிக்கப்பட்டு 1919 ஆம் ஆண்டு பணியிலிருந்து விலகினார்.

               ஏழாலை சைவப்பிரகாச வித்தியாசாலையில் பணியாற்றிய போது நன்னூல், தொல்காப்பியம், முல்லையந்தாதி, கம்பரந்தாதி, தணிகைப்புராணம், கந்தபுராணம், இரகுவம்சம் முதலிய நூல்களை ஆழமாகக் கற்றுணர்ந்து, அர்ப்பணிப்புணர்வுடன் கற்பித்தார்.

               சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரிடம் பயின்று பிற்காலத்தில் புகழ்பெற்ற தமிழறிஞர்களாக விளங்கியவர்கள் வித்துவசிரோமணி சி.கணேசையர், சுன்னாகம் பண்டிதர் மாணிக்க தியாகராசா, தெல்லிப்பளை பாலசுப்பிரமணிய ஐயர், பன்னாலை வித்துவான் சிவானந்தையர் ஆகியோர் ஆவர்.

               வண்ணார்பண்னை சைவப்பிரகாச வித்தியாசாலையில் இவரிடம் பயின்று பேரறிஞர்களாகத் திகழ்ந்தவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பண்டிதர் இரத்தினேஸ்வர ஐயர், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, பண்டிதர் மருதையனார், மட்டக்களப்பு புலவர் மணி பெரியதம்பிப் பிள்ளை, தென்கோவை பண்டிதர் ச. கந்தையா பிள்ளை, வவுனியா பண்டிதர் இராசையனார் ஆகியோராவர்.

               திருகோணமலை அகிலேசபிள்ளை, பழைய ஏடுகளைப் பரிசோதித்து கையெழுத்துப் பிரதியாகத் தயாரித்த திருக்கரசைப் புராணத்துக்கு அரியதோர் ஆராய்ச்சி உரை எழுதி அளித்தார். அந்நூல் 1893 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. திருவாதவூரடிகள் புராணத்தின் மூலத்தைத் திருத்திப் பதிப்பித்த புலவர், பின்னர் அதனை உரையுடன் பதிப்பித்தார். குணசேகரரால் இயற்றப்பட்ட யாப்பருங்கலத்தையும், குணவீர பண்டிதரால் ஆக்கப்பட்ட வெண்பாப் பாட்டியலையும் தாம் எழுதிய பொழிப்புரைகளுடன் 1900 ஆம் ஆண்டு பதிப்பித்து வெளியிட்டார்.

               குமரகுருபர தேசிகரின் நீதிநெறி விளக்கத்துக்கு உரை எழுதி அந்நூலையும், தண்டியலங்காரத்துக்கு புத்துரை எழுதியும், சின்னத்தம்பிப் புலவர் இயற்றிய மறைசை அந்தாதிக்கு உரை எழுதியும், தணிகைப் புராணத்தைத் தமது ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் இணைத்து பதிப்பித்தார். மேலும், காங்கேயர் என்பவர் எழுதிய வெண்பா யாப்பிற் பாடப்பட்ட 200 செய்யுள்களைக் கொண்ட உரிச்சொல் நிகண்டின் பன்னிரு தொகுதிகளையும் 1905 ஆம் ஆண்டு பதிப்பித்துள்ளார்.

               மாவை இரட்டை மணிமாலை, மாவைப்பதிகம், துணுவைப்பதிகம், ஏழாலை அத்தியடி விநாயகரூஞ்சல், மிலேச்சமத விகற்பக்கும்மி, அமராபதிபூதூர் பாலவிநாயகர் பதிகம், வதுளைக் கதிரேசர் பதிகம், வதுளை மாணிக்க விநாயகர் பதிகம், வதுளைக் கதிரேசர் சிந்து, துணைவை அரசடி விநாயகர் பதிகம், துணைவை அரசரடி விநாயகர் ஊஞ்சல், கீரிமலை நகுலேசர் ஊஞ்சல், நகுலேசர் சதகம், இராமோதந்தம், கைலாய பிள்ளையார் ஊஞ்சல் முதலிய பல நூல்களையும், இலக்கண சந்திரிகை, வினைப்பகுபத விளக்கம் என்னும் இலக்கண நூல்களையும், கண்ணகி கதை, தமிழ்ப் புலவர் சரிதம், சிவபாலசரிதம், இரகுவம்ச சரிதாமிர்தம் முதலிய உரை நடை நூல்களையும் புலவர் வெளியிட்டு உள்ளார்.

               திருக்கரைசைப் புராண பொழிப்புரை, சூடாமணி நிகண்டு சொற்பொருள் விளக்கம், தண்டியலங்காரப்புத்துரை, கலைசைச் சிலேடை வெண்பா அரும்பதவுரை, யாப்பருங்கலக்காரிகையுரை, மறைசையந்தாதியுரை என்னும் நூல்களை படைத்து அளித்துள்ளார்.

               மேகதூதக் காரிகை, ஏகவிருத்த பாரதம், இராமாணயம், பாகவாதம், இராவணன் சிவதோத்திரம் என்னும் மொழிபெயர்ப்பு நூல்களையும் எழுதி அளித்துள்ளார். மேலும் தி.கனகசுந்தரம் பிள்ளையுடன் இணைந்து இராமாயணம் பாலகண்ட அரும்பத உரை எழுதி வெளியிட்டுள்ளார். மறைசையந்தாதி அரும்பதவுரை, கல்வளையந்தாதிப் பதவுரை, முத்தக பஞ்சவிஞ்சதி குறிப்புரை முதலிய உரைநூல்கள் இவரது பரந்துபட்ட இலக்கிய ஆர்வத்தையும், ஆராய்ச்சிப் புலமையும் காட்டுவதாக அமைந்துள்ளது. ஆசாரக் கோவை, நான்மணிக்கடிகை, நகுமலைக் குறவஞ்சி நாடகம், உரிச்சொனிகண்டு முதலிய நூல்களைப் பதிப்பு வெளியிட்டுள்ளார். பிரபந்தங்களையும், தனிச்செய்யுள்கள் பலவற்றையும் எழுதி அளித்துள்ளார்.

               சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரால் இயற்றப்பட்ட சிசுபாலசரிதம், கண்ணகி கதை என்பனவும், அவரால் வெளியிடப்பட்ட நூல்களுக்கு எழுதியுள்ள உரைகளும், ‘செந்தமிழ்’, ‘தமிழ்ப் பொழில்’ முதலிய இதழ்களில் வெளிவந்த இலக்கிய இலக்கணம் தொடர்பான அவருடைய ஏராளமான கட்டுரைகளும் அவரது சிறந்த உரைநடையை விளக்குவனாக இருக்கின்றன.

               உதய தாரகை, இலங்கைநேசன், உதய பானு, இந்து சாதனம் முதலிய ஈழத்து இதழ்களிலும், செந்தமிழ், ஸ்ரீலோகரஞ்சனி, ஞானசாகரம், வைசிய மித்திரன், தமிழ் மகவு முதலிய தமிழ்நாட்டு இதழ்களிலும் இலக்கிய, இலக்கண, சமய, வரலாறு முதலியவைகள் பற்றி ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார்.

               நன்னூலார் வகுத்துக் கூறிய நட, வா, மடி, சீ முதலிய 23 வினைப்பகுபதங்களுக்கும், பகுதி விகுதி முதலிய உறுப்புகளை பகுத்துக்காட்டி, ‘வினைப்பகுபத விளக்கம்’ என்னும் நூலினையும், ‘இலக்கணச் சந்திரிகை’ என்னும் நூலையும் எழுதி அளித்துள்ளார். இவ்விரு நூல்களும் நன்னூல் கற்போருக்குப் பேருதவியாக அமைந்துள்ளனவென அறிஞர்கள் பாரட்டுகின்றனர்.

               ‘இலக்கியச் சொல்லகராதி’ என்னும் பெயரில் 1924 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அகராதி நூலானது, சங்க இலக்கியங்களைக் கற்போருக்குப் பயனுள்ளதாக விளங்குகிறது.

               மேகதூதக்காரிகை, சாணக்கிய நீதி வெண்பா, இதோபதேசம் முதலிய படைப்புகளை சமஸ்கிருத மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்து அளித்துள்ளார்.

               சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர் ‘தமிழ்ப் புலவல் சரித்திரம்’ என்னும் நூலினை எழுதி 1916 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். அந்நூலில் 182 தமிழ்ப்புலவர்களின் வரலாறு கூறப்பட்டுள்ளது.

               யாழ்ப்பாணத்தில் 1898 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினராகவும், 1902 ஆம் ஆண்டு முதல் அதன் செயலாளராகவும் அரும் பணியாற்றினார். யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம், மதுரைத் தமிழ்ச் சங்கம் ஆகிய இரண்டிலும் வித்துவ அங்கத்தினராக விளங்கினார். மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய பண்டித தேர்வுகளுக்கு தமிழ்மொழி, தமிழ் இலக்கணம் ஆகிய பாடங்களைத் தேர்வு செய்யும் குழுவில் இடம் பெற்று பணியாற்றினார்.

               யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலுமுள்ள கோயில்களிலு, பாடசாலைகளிலும் சமயம், கல்வி சம்பந்தமாக புலவர் ஆற்றிய சொற்பொழிவுகள் பொதுமக்கள் மத்தியில் சமய ஒழுக்கத்தையும் கல்வியறிவை வளர்ப்பதற்கு விழிப்புணர்வையும் உருவாக்கியது.

               கண்டனமெழுதுவதிலும் இவர் மிகத் திறமை பெற்றவராக விளங்கினார். ஆறுமுக நாவலர், முருகேச பண்டிதர், சங்கர பண்டிதர் ஆகியோரிடம் கண்டனம் எழுதும் கலையைக் கற்றார். இலக்கியம், இலக்கணம், சமயம் முதலிய துறைகளில் போலிக் கல்விமான்களையும், போலிக் கொள்கைகளையும் காரசாரமாகக் கண்டித்துள்ளார். சபாபதி நாவலர், உ. வே. சாமிநாதையர் போன்றோருக்கும் கண்டனம் எழுதியுள்ளார்.

               “காவி வேட்டியினால் கிளம்புகிற சாமிகள் மாதிரி, தமிழ்ப் பாஷையின் பேரால் புகழ் சம்பாதிக்கிற எண்ணம் புலவருக்குக் கிடையாது . தமக்குத் தாழ்வு வந்த போதும் தம்மாலே தமிழுக்குத் தாழ்வு வராமற் பாதுகாப்பதே புலவரவர்கள் வாழ்க்கையின் நோக்கமாயிருந்தது. செல்வாக்குள்ளவர்கள் தமிழுக்குச் செய்யுந் துரோகங்களுக்குப் புலவர் அவர்களின் தலை ஒன்றே ஒன்றுதான் தமிழ்நாடு முழுவதும் சாய்ந்து கொடாதது” எனப் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை புகழாரம் சூட்டியுள்ளார்.

               குமாரசுவாமிப் புலவர் 22.03.1922 அன்று தமது அறுபத்தெட்டாவது வயதில் காலமானார்.

- பி.தயாளன்

Pin It