“ஒருவருடைய சால்பு என்பது அவர் வாழ்க்கைப் பற்றி கொண்டிருக்கும் நோக்கையும், வாழும் முறையையும் அவை சமுதாயத்துக்குப் பயன்படுமாற்றையும் அடிப்படையாகக் கொண்டே மதிப்பிடற்பாலதாகும். வாழ்க்கையின் நோக்கம் சமுதாயத்துக்குப் பயன்படுவதே என்ற கோட்பாட்டினைத் தானும் வாழந்து, பிறர் வாழ வழி காட்டியும் நிற்கும் ஒருவரே சால்புடையவராக – சான்றோராக – மதிக்கப்படுகிறார். இத்தகையோரே வரலாற்றை உருவாக்குகின்றனர். இவர்களே ‘உடையும் பாட்டும் உடையோராகி’ வரலாறும் ஆகின்றனர். இவ்வாறு எமது காலப்பகுதியில் வாழ்ந்து வரலாறு ஆகிவிட்டவர் இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை. தமிழ்க்கல்வி, ஆராய்ச்சி ஆகியவற்றுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டதே அவருடைய வாழ்வாக அமைந்தது. தன்னுடைய கருத்துக்களைப் பரப்பும் நோக்கமாக அவர் பிரமச்சாரியாகவே வாழ்ந்து தமிழாய்வு செய்வதிலும், மாணவர்களுக்கும் ஆசிரிய மாணவர்களுக்கும் கற்பிப்பதிலும் தன் பெரும்பாலான காலத்தைக் கழித்தார். சைவம், இந்து தர்மம், பண்டைய தமிழ் இலக்கியம் ஆகியன பற்றி நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதி அளித்துள்ளார். இலங்கையிலே சைவசித்தாந்தக் கருத்துக்களை வரித்துரைப்பதிலே தலை சிறந்த வல்லுனராக விளங்கினார்.

                c ganapathi pillaiசிறந்த எழுத்தாளராகவும், ஊக்கமுள்ள ஆசிரியராகவும், பேச்சாளராகவும், இலக்கிய விமர்சகராகவும், கவிஞராகவும், உரையாசிரியராகவும் இலங்கையிலும் பிற நாடுகளிலும் புகழ் பெற்றார். பெருந்தொகையான பண்டிதர்கள், தழிழறிஞர்கள் ஆகியோர் தங்கள் திறமைக்குப் பண்டிதமணியின் நெறிப்படுத்தும் திறமையே காரணம் எனக் கொள்வார்கள்.

                யாழ்ப்பாணக் கலாசாரத் தூதுவராகவும், கல்வித் தூதுவராகவும் விளங்கிய பண்டிதமணியவர்கள், ஆறுமுக நாவலரைப் போல ஈழத்தில் தமக்கென அறிஞர் குழாம் ஒன்றினை உருவாக்கியுள்ளார்.” என யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மேனாள் துணை வேந்தர் பேராசிரியர் கலாநிதி சு.வித்தியானந்தன் பண்டிதமணி குறித்து புகழ்ந்துரைத்துள்ளார்.

                யாழ்ப்பாணத்தின் அருகில் உள்ள மட்டுவில் கிராமத்தில் சின்னத்தம்பி- வள்ளியம்மை வாழ்விணையருக்கு 27.06.1899 ஆம் நாள் பிறந்தார். அன்றைய மட்டுவில் அமெரிக்க மிஷன் பாடசாலையில் ஆரம்பக் கல்வி கற்றார். அவரது தாயார் வள்ளியம்மை 1902ஆம் ஆண்டு இயற்கை எய்திவிட்டார். அவரது தந்தை சின்னத்தம்பி மகனை அழைத்துக் கொண்டு சாகவச்சேரியில் குடியேறினார். அங்கு பொன்னையா உபாத்தியாயர், பொன்னம்பலப்புலவர், பொன்னையாப்பிள்ளை ஆகியோரிடம் பாடங்கற்றார். நாவலர் பாடசாலையில் 1917 ஆம் ஆண்டு சேர்ந்து சுன்னாகம் அ.குமாரசுவாமிப் புலவர், வித்தகம் ச.கந்தையாபிள்ளை, வித்துவான் நா.சுப்பையாபிள்ளை ஆகியோரிடம் கல்வி கற்கும் வாய்ப்பு பெற்றார்.

                மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய புலவர் (பண்டிதர்) தேர்வில் 1926 ஆம் ஆண்டு தேர்ச்சியெய்தினார். பண்டிதர் தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்றமைக்காக நாவலர் பாடசாலை மேலாளர் த.கைலாசபிள்ளை பொற்பதக்கம் அணிவித்து சி.கணபதிப்பிள்ளையைப் பாராட்டினார். கோப்பாய் அரசினர் ஆசிரியர் கலாசாலையில் 1927 ஆம் ஆண்டு சேர்ந்து பயிற்சி நிறைவு பெற்றதும், 1929 ஆம் ஆண்டு திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலையில் தமிழ் விரிவுரையாளராக பணியில் சோந்தார். அங்கு மயிலிட்டி சுவாமிநாதன், பொ.கைலாசபதி ஆகியோரின் தொடர்பு ஏற்பட்டது. பொ.கைலாசபதியின் தொடர்பு சைவசமயம் மற்றும் சைவசித்தாந்தம் பற்றிய சிந்தனையைத் தூண்டியது. திருநெல்வேலி சைவாசிரியர் கலாசாலையில் பண்டிதமணி 30 ஆண்டு காலம் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றி 27.06.1959 அன்று ஓய்வு பெற்றார்.

                கலாநிலையம், அங்கிருந்து வெளியான கலாநிதி இதழ், யாழ்ப்பாணம் ஆரிய–திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம், சைவ வித்தியா விருத்திச் சங்கம், யாழ்ப்பாணம் வாலிபர் காங்கிரஸ்;, தமிழாசிரியர் சங்கம், சைவ பரிபாலன் சபை, இந்து வாலிபர் சங்கம் முதலிய அமைப்புகளில் பங்கு பெற்று பாடுப்பட்டார்.

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பரமேசுவரக் கல்லூரியில் 1951 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ் விழாவில், பண்டிதமணி தமிழ்ப்பற்றி உரையாற்றினார். இலங்கை, இந்திய இதழ்கள் பண்டிதமணியின் பொருள் பொதிந்த உரையினை மிகவும் பாராட்டி எழுதின, கல்வியாளர்கள் வியந்தார்கள். ‘பண்டிதமணி’ என்னும் பட்டம் அளித்துச் சிறப்பித்தனர்.

பண்டிதமணி படைத்தளித்துள்ள நூல்கள்:

                இலக்கிய வழி, இருவர் யாத்திரிகள், பாரத நவமணிகள், கம்பராமாயணக் காட்சி (கவிநயக் கட்டுரைகள்), கம்பராமாயணக் காட்சிகள், அன்பினைந்திணை, சைவ நற்சிந்தனைகள், கந்த புராணக் கலாசாரம், கந்த புராண போதனை, சிவராத்திரியில் சிந்திக்கத் தக்கவைகள், சமயக் கட்டுரைகள், பாஷை - இலக்கணம் இலக்கியம் கற்பித்தல், கோயில், அத்வைத சிந்தனை, சிந்தனைக் களஞ்சியம், நாவலர், சிந்தனைச் செல்வம், ஆறுமுக நாவலர், செந்தமிழ்க் களஞ்சியம், கதிர்காம வேலவன் பவனி வருகிறான், கண்ணகி தோத்திரம், கந்தபுராணம் தஷகாண்டம் உரை, நாவலரும் கோயிலும் முதலியவைகளாகும்.

                இவரது கந்தபுராணம் தஷகாண்டம் உரை என்னும் நூல் பேராதனைப் பல்கலைக் கழக இந்து மாணவர் மன்றத்தனரால் யானை மீது ஏற்றி ஊர்வலமாக பேராதனைப் பல்கலைக் கழகத்திற்கு எடுத்துவரப்பெற்று வெளியிடப்பட்டது.இவரது ‘இலக்கிய வழி’ என்னும் நூல் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் பாடநூலாக இடம் பெற்றிருந்தது.

                பண்டிதமணியின் ‘இலக்கிய வழி’ என்னும் நூலில், தமிழ்ப்புலவர் பெருமக்கள் பலரது சொல்நயம், பொருள்நயம் என்பனவற்றை எடுத்துக்காட்டி அவற்றினூடே ஒரு இலக்கிய வெளிப்பாட்டு நெறி புலப்படுவதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.          

                இலக்கியம் என்பது இலக்கினையுடையது வாழ்க்கைக்குரிய இலக்கினைக் குறிக்கும். வாழ்க்கைக்கு வழிகாட்டுவது. ‘இலக்கிய வழி’ என்ற இவரது நூல் வாழ்க்கைக்கு உறுதுணை. இலக்கிய வழியில் எடுத்தோதப்பட்ட காதைகள் சொரிவான செவிநுகர் கனிகள், மதியும் பிறையும், நாவலர் எழுந்தார், கம்பன் செய்த வம்பு, சொற் சித்திரம், புலவர் வரலாறு, நூல் வரலாறு, இலக்கியத்தின் உயிரும் உடலும் போன்ற 20 கட்டுரைகள் முக்கியமானவைகளாக விளங்குகின்றன.

                கம்பராமாயணக் காட்சிகள் என்னும் நூல் பண்டிதமணியின் நுண்மாண் நுழைபுலத்தினை வெளிப்படுத்துகின்றது. இவரது ‘சிந்தனைக் களஞ்சியம்’ படிப்பவர் சிந்தனையைத் தூண்ட வழிவகுப்பது, பல்சுவையும் மிக்கது.

                இவரது கம்பராமாயணக் காட்சி என்னும் நூலை யாழ்ப்பாணப் பல்கலைக் கழக நுண்கலைப் பீட மாணவர்களுக்கு பாடநூலாக்கினார் பேராசிரியர் கலாநிதி க.சைலாசபதி.

                “தமிழ்ச் சரித்திரத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி நாவலர் அவர்கள் சரித்திரம்;; பிற்பகுதி சி.வை.தாமோதரம்பிள்ளை சரித்தரம்; அதற்குப் பிறகுதான் டாக்டர்.உ.வே.சாமிநாதையரின் சரித்திரம்”. என ‘இலக்கிய வழி’ நூலில் பண்டிதமணி பதிப்புத்துறையில் ஈழத்துத் தமிழறிஞர்களின் வரலாற்றை தெளிவாக பதிவு செய்துள்ளார்.

                “பெயரளவில் திருவாவடுதுறையாதீனம் ஆறுமுக நாவலரைத் தந்ததேயாயினும் உண்மையை நோக்குமிடத்துப் பதினான்கு வருடக் கிருஸ்தவச் சூழலே நாவலரை நமக்குத் தந்தது. ஆப்பிரிக்க தேசமே காந்தியை மகாத்மா ஆக்கியது. பதினான்கு வருடக் கிருஸ்துவச் சூழல் அமையாதிருந்தால் ஆறுமுக நாவலர் என்றொருவர் யாழ்ப்பாணத்தில் இல்லை,” என ‘நாவலர்’ என்னும் நூலில் பண்டிதமணி பதிவு செய்துள்ளார்.

பண்டிதமணியின் கவிதை நோக்கு:

  1. நல்ல கவிதைகள் இயற்கையோடு ஒன்றித்துப் புலவன் பெற்ற உணர்வுகளைப் படிப்போனுக்கும் தருதல் வேண்டும்.
  2. கவிதைகளை இசையோடும், அபிநயத்தோடும் உணர்ந்து பாடி மகிழல் வேண்டும்.
  3. கவிதைகள் உயிர்த்துடிப்பு உடையனவாதல் வேண்டும்.
  4. தெளிவும் சொல்லோட்டமும் கவிதைகளுக்கு இன்றியமையாதவை

பண்டிதமணியின் இலக்கியம் குறித்த முன்வைப்புகள்:

“உயிருள்ள உடலே இயங்கும்; நிலைக்கும். அவ்வாறே பொருளுள்ள இலக்கியங்களே, கவிதைகளை வழங்கும் ; நிலைக்கும்; பொருளற்றவைகள் பிணங்கள். அவைகள் கால வெள்ளத்துடன் கரந்து இருந்த இடந்தெரியாமற் பெயரும் வழங்காமல் மறைந்து போகும்.” “பண்பெனப் படுவது பாடறிந் தொழுகுதல்” என்கிறது கற்றறிந்தோர் ஏத்துங் கலித்தொகை. இங்கே பாடு என்ற சொல் விசாரஞ் செய்யற்பாலது. பாடு – உலகப்பாடு அதாவது உயர்ந்தோர் சென்ற அடிப்பாடு. உலகம் - உயர்ந்தோர். ‘உலகம் என்பது உயர்ந்தோர் மாற்றே’ என்பது தொல்காப்பியம். உயர்ந்தோர் சென்ற காலடியை இறுகப் பற்றிக் கொண்டு அவர் சென்ற வழியிற் செல்வதே பாடறிந்தொழுகுதல்.

 நமது மொழி, சமயம், கல்வி, மரபு, பண்பாடு என்பவை மங்கி மறைந்த பின் பெறும் அரசியல் சுதந்திரத்தால் யாது பயனும் இல்லை. ஆத்மீக உணர்வு, விடுதலை, பண்பாட்டு விடுதலை என்பன அரசியல் விடுதலைக்கு முன்னோடியாக விளங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். எழுத்தாளர்கள் எழுத்துப் பிழை, சொற்பிழை, தொடர்பிழை, வாக்கியப் பிழை, பொருட்பிழை, மரபுப் பிழை இன்றி எழுதவும் பேசவும் வல்லவர்களாக விளங்க வேண்டும் என பண்டிதமணி எழுத்தாளர்களுக்கு வழிகாட்டிச் சென்றுள்ளார்.

 சொற்கள் கருத்துக்களின் வெளிப்பாடுகள்; கருத்தின் கனிவுகள்; குணங்கள். அகத்தின் அழகு முகத்திற் தெரிவது போலப் புலவனுடைய புலமையிற் கனிந்த கருத்தினழகு அவன் சொற்களில்; புலனாகும். உயரிய கருத்துக்களைப் பிரகாசிக்கின்ற சொற்களும் அக்கருத்து விசேடத்தால், தாமும் அவ்வாறு பிரகாசிக்கின்றன... கருத்தக்களின் எழுச்சிக்குத் தக்கவாறு சந்தங்கள் மாறியமையும்... சந்தங்கள் போலவே கருத்துக் கேற்றவாறு ஓசைகளும் வேறுபடும்... கருத்துக்களுக்குச் சந்தங்கள் ஓசைகளேயன்றி, சந்தங்கள் ஓசைகளுக்குக் கருத்துக்கள் அல்ல என்பது ஊன்றிச் சிந்திக்கற்பாலாது” என பண்டிதமணி தமது ‘இலக்கிய வழி’ என்னும் நூலில் ‘இலக்கியத்தின் உயிரும் உடலும்’ என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச்சேவை வானொலி பண்டிதமணியின் இலக்கிய உரைகளை ஒலிபரப்பியது. ஈழகேசரி, தினகரன் ஆகிய இதழ்களில் இவர் இலக்கியக் கட்டுரைகள் தொடர்ந்து எழுதியுள்ளார்.

 இவர் எழுதிய கந்தபுராணம் தஷகாண்ட உரை என்னும் நூலுக்கு இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு வழங்கப்பட்டது. பண்டிதமணி இலங்கை சாகித்திய மண்டலத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டு செயல்பட்டார்.

 முதுபெரும்புலவர், மகாவித்தவான், சைவசித்தாந்த சாகரம், செந்தமிழ்க் கடல், அறிவுக் களஞ்சியம், சைவத்தமிழ் மூதறிஞர் முதலிய பட்டங்கள் பண்டிதமணிக்கு வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.

                இலங்கைத் தமிழ் அறிஞர்களின் புலமைத் திறம் பற்றி பிற அறிஞர்களிடையே முதன்முதல் பரப்புவதற்குப் பண்டிதமணியின் இலக்கிய வழியே கதவு திறந்துவிட்டது. கந்தபுராணம் தஷகாண்ட உரை இவருடைய ஆழ்ந்த புலமைக்கும், பெருமைக்கும் என்றென்றும் சான்று பகர்கிறது. பாரம்பரியப் புலமைமிக்க இச்சான்றோருக்கு இலங்கைப் பல்கலைக் கழகம் 31.05.1978 அன்று ‘இலக்கிய கலாநிதி’ என்னும் மேன்மைமிகு பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. இலங்கை அரசு 1999 ஆம் ஆண்டு பண்டிதமணிக்கு முத்திரை (அஞ்சல் தலை) வெளியிட்டு கௌரவித்தது.

                “தமிழைப் புதிய நோக்கிலே கண்ட பண்டிதமணி சைவத்தையும், புதிய நோக்கிலே கண்டார். ஆனால், இந்தப் புதுமை பழமையைவிட்டு விலகாத புதுமையாகும். இலக்கிய ரசனையாளராக அறிமுகமாகிய பண்டிதமணி மெய்யியற் சிந்தனையாளராக மாறிவிடுகிறார். சைவசித்தாந்தி என்ற முறையிலே இவர் சமயத்தையும் மெய்யியற் சிந்தனையையும் இணைக்கின்றார். இலக்கியங்களை எடை போடுவதற்கு அறவழிக்கோட்பாட்டை வலியுறுத்தி வந்த இவர் இருபதாம் நூற்றாண்டுக்கு முன்பு தமிழ் இலக்கிய சிந்தனை நெறிகளாகக் காணப்பட்ட இயற்கை நெறி, அறநெறி, சமயநெறி, தத்துவ நெறியாவற்றையும் ஒன்றிணைத்துப் பண்டைக்கால இடைக்காலத் தமிழ் இலக்கியம் முழுவதையும் பிரதிநிதித்துவப் படுத்துபவராகக் காணப்படுகிறார். எனவே, இவரை ‘இலக்கியச் சிந்தனையாளர்’ என்றும் கூறலாம்.” என யாழ்ப்பாண பல்கலைக் கழக மேனள் தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் கலாநிதி ஆ.வேலுப்பிள்ளை புகழ்ந்துரைத்துள்ளார்.

                “பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையவர்கள் நம் செந்தமிழ் மொழிக்கும் சித்தாந்த சைவச் செந்நெறிக்கும் ஆற்றியுள்ள அரும்பணிகள் என்றும் பாராட்டப் பெறுவதற்கு உரியனவாகும்” எனத் திருவாவடுதுறை ஆதினம் சிவப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள் புகழ்ந்து உரைத்துள்;ளார்.

                “சமுதாயத்தின் பண்டைய மரபுகள், பண்பாடுகள் என்பனவற்றை ஆராய்ந்து தெளிந்து, அவற்றிற்கு விமர்சனம் தந்து அவற்றிலிருந்து எழுகின்ற சிறந்த கருத்துக்களை, வளர்ச்சி பெற்று வருகின்ற சமகாலச் சமுதாயத்தின் தேவைகள், பண்புகள், நோக்கங்கள் என்பனவற்றிற்கு ஏற்ப உருவாக்கி இணைக்கும் முயற்சிகளில் பண்டிதமணி ஈடுபாடு கொண்டார். பழமையில் பற்று வைக்கும் பண்பையும், புதுமையில் கருத்தைச் செலுத்தும் பாங்கினையும் அவர் பெற்றிருந்தார். பழமையின் அடித்தளத்திலிருந்து புதுமை பொங்கியெழ வேண்டும் என்பார். கல்வி மூலம் பழமையையும் புதுமையையும் ஒன்றிணைக்கச் செய்ய விரைந்தார்.” என யாழ்ப்பாண முதன்மைக் கல்வி அலுவலர் கு.சோமசுந்தரம் பதிவு செய்துள்ளார்.

                தமிழ் உள்ளவரை பண்டிதமணியின் பணி நிலைத்திருக்கும். அவரது தமிழ், உணர்ச்சித் தமிழ், தெய்வத்தமிழ், சங்கத்தமிழ்; சான்றாண்மைத்தமிழ்; எல்லாவற்றிற்கும் மேலாக அன்பு பொங்கி வரும் இன்பத்தமிழ். அவர் நினைவு என்றென்றும் தமிழ் கூறும் நல்லுலகில் நிலைத்து ஒளி வீசித் திகழும்” என பேராசிரியர் டாக்டர் சொ.சிங்காரவேலன் குறிப்பிட்டுள்ளார்.

                “தமிழ்ப் புலமையின் சுட்டாக அமையும் பண்டிதர்கள் பலர் அறிவோட்சிய யாழ்ப்பாணத்தில் பண்டிதர்களுக்குப் பண்டிதனாய், அதே வேளையில் ஈழத்தின் நவீன தமிழ் உரைநடை வரலாற்றில் ஒரு மைல்கல்லாகவும் அமையும் பண்டிதமணி எனப் போற்றப்பெற்ற மட்டுவில் சி.கணபதிப்பிள்ளை. ஈழத்துத் தமிழலக்கிய வரலாற்றில் பாரம்பரியத்தையும் புதுமையையும் இணைத்து நோக்கியவர் என்ற பெருமை இவருக்குண்டு.

 பண்டிதமணி ஆறுமுக நாவலர் பரம்பரையின் தொடர்ச்சியின் சின்னமாக அமைந்தவர். அதாவது சைவமும் தமிழும் என எடுத்துக் கூறப்படும் கருத்து நிலையின் அறிவுச் சுடர்களில் ஒருவர். ஈழத்துத் தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தின் சிறப்பையும் தனித் தன்மையையும் வற்புறுத்தியவர். இலக்கிய ரசனை உணர்ச்சிமிக்கவர். தனித்துவமுள்ள ஓர் இலக்கிய நடையினைக் கையாண்டவர்” என ஈழத்து மார்க்கிய இலக்கியத் திறனாய்வாளர் பேராசிரியர் கலாநிதி கா.சிவத்தம்பி தமது ஆய்வில் பதிவு செய்துள்ளார்.

 பண்டிதமணி பல்கலைக் கழகத்திற் பயிலவில்லை; பல்கலைக் கழகப் பட்டம் எதனையும் பெறவில்லை; எனினும் அவருக்குப் பல்கலைக் கழகத்தின் அதியுயர்ந்த பட்டம் கிடைத்தது. அதற்குக் காரணம் அவருடைய பெரும் புலமையும் நுண்மாண் நுழைபுலம் மிக்க ஆய்வுகளுமேயாகும். பல்கலைக் கழக அறிஞர்கள் வியக்கும் வகையில், நவீன ஆய்வு நெறிமுறைகளுக்கு அமைவாக, முன்னுதாரணமற்ற பல துறைகளில் அவர் ஆய்வுகளை மேற்கொண்டு வந்துள்ளார். அவர் இவ்வாய்வுகளில் ஈடுபடல் பட்டம் பெற வேண்டுமென்ற நோக்குக் காரணமாக அமையவில்லை. உண்மை காண வேண்டும்; பண்பாட்டுப் பெருமையை நிலைநாட்ட வேண்டும் என்ற பெருநோக்கங்களே அவர் ஆய்வுக்கு அடிப்படையாக அமைந்தன. இந்நோக்கங்கள் இளமை முதல் இறுதிவரை ஆர்வத்தீயாகக் கொழுந்துவிட்டு எரிந்தன. அவர் மேற்கண்ட ஆய்வுகளைப் பின்வரும் மூன்று துறைகளாக வகுக்கலாம்.

  1. ஈழத்து இலக்கியத்தின் தனித்தவம் மேன்மை, தொன்மை என்பனவற்றை முதன் முதலில் வரலாற்று முறைப்படி எடுத்துரைத்தமை.
  2. இந்து மெய்யியலிற் பேரறிவு பெற்றருந்ததோடு சைவசித்தாந்த மேன்மையை ஒப்பியல் முறையில் ஆராய்ந்து நிறுவியமை.
  3. நாவலர் பற்றிய தவறான கருத்துக்களைச் சான்றுகள் மூலம் மறுத்து உண்மையான நாவலர் வரலாற்றை நிலைநாட்டியமை ஆகியவைகளாகும்.

 ஈழத்துக் கல்வி, இலக்கிய வழித் தோன்றல்களின் பெருமையைப் பேணி உலகறியச் செய்தவர். பண்டிதமணி வாழ்ந்து வந்த இடத்தைக் கல்விக் கூடமாகவும், நூலகமாகவும் அமைத்து, அவர் எழுதிய நூல்கள் அங்கு வைத்து பேணிக் காத்தல் அவசியமாகும். அவரது பெயரில் நூலகம் அமைக்கப்பட வேண்டும் என்பது ஈழ்த்தமிழறிஞர்களின் கோரிக்கையாகும். பண்டிதமணி 13.03.1986 அன்று தமது 86 ஆவது வயதில் காலமானார்.       

- பி.தயாளன்               

Pin It