2009ஆம் ஆண்டில் மிகப்பலரை நாம் இழந்துவிட்டோம். அவர்களைப் பற்றிய குறிப்புகளைப் பதிவு செய்வது நமது கடமை.

ஈழப்போராளிகள்-மக்கள்

2009ஆம் ஆண்டு மே மாதத்தில் சிங்களப் பேரின இராணுவ அரசு, இனவிடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட போராளி களையும் ஆயிரக்கணக்கான (இதுவரை எண்ணிக்கை வெளியிடப் படவில்லை) அப்பாவிப் பொதுமக்களையும் கொன்று குவித்தது. இவர்கள்அனைவருக்கும் எங்களது அஞ்சலி.

நாடகக் கலைஞர்கள்

அகஸ்தோ போவால் (1931-2009), ஹபீப் தன்வீர் (1923-2009) ஆகிய இரு அரங்க ஆளுமைகள் மறைந்துவிட்டார்கள். பிரேசில் நாட்டுக் கலைஞரான அகஸ்தோ போவால், உலகத்தில் கலக அரங்கம்குறித்து அறிமுகப்படுத்தியவர். மனித குலத்தை ஒன்றிணைக்கும் கனவைத் தேடவேண்டும்; மனித குலத்தை ஒரே மாதிரியான மக்கள் கூட்டமாக்க அல்ல’’ என்ற கருத்தாக்கத்தில் செயல்பட்ட அரசியல் போராளி. அரசியல் போராட்டத்திற் கான ஆயுதமாக அரங்கை கையில் எடுத்தவர். ஹபீப் தன்வீர், இந்திய நாடகக்கலைஞர்களுள் குறிப்பிடத்தக்க ஆளுமை. இப்ரகாம் அல்காசி, கரந்த், உத்பல்தத் என்ற இந்திய நாடக ஆளுமைகள் வரிசையில் வருபவர். பல்வேறு அரசியல் போராட் டங்களில் பங்கு கொண்டவர். சாதாரண கிராம மக்களோடு இணைந்து அரங்கத்தில் செயல்பட்டவர். இவரது சரண்தாஸ் சோர்நாடகம் 1972இல் உருவாக்கப்பட்டது. இன்றும் தொடர்ந்து நடத்தப்படுகிறது.

ஓவியக்கலைஞர்

ஓவியக்கலைஞர் ஏ.பி. சந்தானராஜை (1932-2009) இந்த ஆண்டு இழந்துவிட்டோம். சென்னையில் உள்ள ஓவியக் கல்லூரி உலக அளவில் அறியப்பட காரணமாக இருந்த, டி.பி.ராய் சௌத்ரி, கே.சி.எஸ். பனிக்கர் வரிசையில் ஓவியர் சந்தானராஜ் அவர்களும் இணைந்துகொள்கிறார். இன்று தமிழகத்தில் செயல்படும் ஓவியக் கலைஞர்கள் அனைவருக்கும் ஏதோவொரு வகையில் உந்துதலைத் தந்த கலைஞர். ஓவியர் ஆதிமூலத்திற்குப் பின்பு சந்தானராஜ் இழப்பும் உண்மையில் ஈடுசெய்ய முடியாத இழப்பு.

இசைக்கலைஞர்கள்

மைக்கேல் ஜாக்சன் (1958-2009) டி.கே. பட்டம்மாள் (1919-2009) கங்குபாய் ஹங்கல் (1913-2009) ஆகிய மூன்று அரிய இசைக்கலைஞர்களை நாம் இழந்துவிட்டோம். மைக்கேல் ஜாக்சன் ஒரு தொன்மம். உலகத்தைக் கலக்கிய கலைஞன். மந்திர சக்தியால் மக்களை ஈர்த்தவன். ஒடுக்கப்பட்டவர்களின் குரலாகவே தனது இசையை வெளிப்படுத்தியவன். உலகத்தில் நடக்கும் போர்களை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒடுக்கப்படும் ஆப்பிரிக்க நாடுகளின் மக்களுக்காகக் குரல் கொடுத்தவன். எலிசபெத் டைலர், மர்லின் மன்றோ, சார்லி சாப்ளின் வரிசையில் வாழ்ந்த கலைஞன் மைக்கேல். தமிழக இசை வரலாற்றின் புள்ளிகளுள் ஒருவர் டி.கே.பட்டம்மாள். தமிழகத்தில் கலை வடிவங்கள் யாரால் காப்பாற்றப்பட்டது? அச்சமூகம் எப்படி அழிக்கப்பட்டது? என்ற கேள்விகளுக்கான கடைசிச் சான்று. கங்குபாய் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து உருவாகி, இந்துஸ் தானி இசை உலகில், நிகரில்லாத கலைஞராக வாழ்ந்தவர்.

கவிஞர்கள்

கமலாதாஸ் (1934-2009), இ.முருகையன்(1935-2009), சுகந்தி சுப்பிரமணியன் (1967-2009) ஆகிய கவிஞர்கள் மறைந்துவிட் டார்கள். கேரளாவில் வாழ்ந்த மாதவிக்குட்டியான கமலாதாஸ் உலகம் அறிந்த கவிஞர். மலையாளக் கவிதை, சிறுகதை ஆகியவற் றில் தன்னை வெளிப்படுத்தினார். ஆங்கிலத்தில் இவர் கவிதை களை எழுதினார். பெண் ஒடுக்குமுறைகள் அனைத்தையும் எதிர்கொண்ட கலைஞர். ஈழநாட்டின் மூத்தத் தலைமுறைக் கவிஞர் இ. முருகையன். நெடும்பாட்டு, பா நாடகம், தனிக்கவிதை என்று இவரது ஆக்கங்களை மதிப்பிடுகிறார்கள். நீலவாணன், மஹாகவி, இ-.முருகையன் என்ற வரிசை ஈழக் கவிதை வரலாற்றைச் சொல்லும். சொற்களில் மென்மையான உணர்வையும் கடலின் ஆழத்தையும் கொண்டது சுகந்தி அவர்களின் கவிதை.

எழுத்தாளர்கள்

கிருத்திகா (1916-2009), ராஜமார்த்தாண்டன் (1948-2009) நீண்ட காலம் வாழ்ந்த கிருத்திகா பாட்டி, தமிழ் எழுத்துலகில் தனக்கெனத் தனி அடையாளத்தைக் கொண்டவர். காப்பியப் பாத்திரங்களை நவீன பாத்திரங்களாகக் கட்டமைக்கும் புனைவை அவர் செய்துவந்தார். குழந்தைகள் மீது ஈடுபாடு கொண்டு, அவர்களுக்கும் எழுதினார். ராஜமார்த்தாண்டன், சமகாலத்தில் வாழும் பல பத்திரிகைகாரர்களுக்கும் நண்பர். சென்னை தினமணி பத்திரிகையில் வேலை பார்த்தபோது, பலமுறை உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. ஆத்மார்த்தமான உயிரி அவர். தமிழ்நாட்டுச் சூழல், எப்படியெல்லாம் இப்படி யான மனிதர்களை வாழச் செய்யும் என்பதற்குஅடையாளம். ராஜமார்த்தாண்டன் மறைவுகுறித்து தமிழில் வெளிவரும் அனைத்து இதழ்களிலும் எழுதினார்கள். அவர்களோடு நாங்களும் சேர்ந்துகொள்கிறோம்.

தமிழறிஞர்கள்

வ.அய்.சுப்பிரமணியன் (1926-2009), கமில் சுவலபில் (1927-2009), மு.கு. ஜகந்நாத ராஜா (1933-2009), திருமுருகன் (1929-2009) ஆகிய தமிழறிஞர்களை இழந்தோம். தமிழ்ச்சூழலில் ஆய்வு நிறுவனங்கள் இன்று செயல்படுகிறது என்றால் அது வ.அய். சு. அவர்களின் கொடை. பிரித்தானியர்கள் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தும் முறையியலை அடிப்படையாகக் கொண்டு தமிழிலும் உருவாக்க வேண்டும் என்று கனவு கண்டவர் இவர். திராவிடவியல் என்பது இந்தியவியலுள் எப்படிச் செயல்படுகிறது? என்பதை உணர்வுப் பூர்வமாக அறிந்துகொண்டவர். அதற்காக என்ன செய்யலாம்? என்று திட்டமிட்டு தனது வாழ்வை அர்ப்பணித்தவர். நிறுவன உருவாக்கமும் செயல்பாடுமே ஒரு சமூகத்தின் முகத்தை மாற்றும் கருவியாகச் செயல்பட வல்லது. தமிழ்ச்சமூகம் அந்த வகையில் இந்த மனிதருக்கு என்றும் கடன் பட்டுள்ளது.

பேரா. வ.அய்.சு.வின் கனவை உலகளவில் நனவாக்கியவர் பேராசிரியர் கமில் சுவலபில். திராவிடவியல் உலகளவில் அங்கீகாரம் பெற இவரது ஆய்வுகள் கட்டியம் கூறுகின்றன. கிழக்கு ஐரோப்பாவில் செயல்பட்ட பல்வேறு அரசியல் செயல்பாடுகளுள் தன்னை ஒரு இடதுசாரியாக அடையாளப் படுத்திக்கொண்டவர். தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் பயணம் செய்து தமிழ்மொழியை-தமிழகப் பண்பாட்டு வரலாற்றை ஐரோப்பிய மொழிகளில் பதிவுசெய்த பெருமகன். தமிழியல் ஆய்வில் இவரோடு இணைத்துச்சொல்லத்தக்க ஐரோப்பிய-அமெரிக்க ஆய்வாளர்கள் யார்? என்ற கேள்வியை எழுப்பினால் விடை அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை. அந்தப் பெருமைக்கும் சாதனைக்கும் உரிய பேராசிரியர் கமில் சுவலபில். எல்லீஸ், கால்டுவெல், எமனோ, பர்ரோ வரிசையில் இவரும் திராவிட இயலுக்குச் செய்த பங்களிப்பு ஆழமானது.

பன்மொழிப்புலவர் மு.கு. ஜகந்நாத ராஜா இந்த ஆண்டின் தொடக்கத்தில் மறைந்தார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், பிராகிருதம், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பயிற்சி உடையவர். தமிழின் செவ்விலக்கிய மரபுகளைச் சமஸ்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிசார்ந்த கண்ணோட்டங்களில் தொடர்ந்து உரையாடலுக்கு உட்படுத்தியவர். தமிழ் வளங்களைத் தெலுங்கு மொழிக்கு மிகுதியாகக் கொண்டு சென்றவர். அது அவரது தாய்மொழியும் கூட. காதா சப்த சதி’, ‘வஜ்ஜாலக்கம்’, ‘ஆமுக்த மால்யதா’, ‘தீக நியாயம்ஆகிய பிற நூல்களைத் தமிழில் கொண்டுவந்த பெருமகன். மணிமேகலை மன்றம்என்ற அமைப்பின் மூலம் பௌத்த மரபுகளை தமிழ்ச்சமூகத்தில் தேடியவர்.

பெரியவர் திருமுருகன், பாவாணர் மரபில் தமிழியல் வளத்தைப் பெருக்கியவர். பள்ளி ஆசிரியராக இருந்துகொண்டே தமது புலமையால் தமிழிசை, தமிழ் யாப்பு ஆகிய துறைகளில் அரிய பங்களிப்புச் செய்தவர். தமிழ் இலக்கிய, இலக்கண மரபுகளை இசையோடு இணைந்த மரபாக இனங்கண்டு, தமது வாழ்வுப்பயணத்தை அதற்கென மேற்கொண்டவர். தமிழிசை வரலாறு என்றும் இவரை நினைவுகொள்ளும்.

பதிப்பாளர்

லட்சுமி கிருஷ்ணமூர்த்தி(1925-2009) தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் என்றும் இடம்பெறுவார். தமிழ் நூல் வெளியீட்டு வரலாற்றில் வாசகர் வட்டம்என்பது இவரது அடையாளம். வளர்ச்சி பெற்ற ஆங்கில நூல் வெளியீடுகளைப் போல தமிழிலும் வெளியிட முடியும் என்பதை நிரூபித்துக்காட்டியவர். இன்றைக்கு தொழில்நுட்ப வளர்ச்சியால் நூல் வெளியீடு புதிய புதிய பரிமாணங்களில் செயல்பட எத்தனிக்கிறது. இவ்வகையான வளர்ச்சியற்ற சூழலிலும் அன்றைக்குக் கிடைத்த வாய்ப்பைக் கொண்டு ஆகக் கூடிய அளவில் மிக வளமான நூல் வெளியீடு என்பதைச் சாத்தியமாக்கியவர். இவரது செயல்பாட்டில் இவரது கணவர் பங்களிப்பையும் இணைத்துக்கொள்ள வேண்டும். வாசகர் வட்டம்எனும் அடையாளத்திற்குரிய இந்த மனுஷியை தமிழ்ப்பதிப்புலகம் நினைவில்கொள்ளும். 

 

Pin It