கேரளாவில் பார்ப்பனக் குடியேற்றங்கள் (கி.பி. 550- 800)

சேர நாடு எனப்படும் இன்றைய கேரளம் கி.மு. 600 – கி.பி. 150 வரையான காலகட்டங்களில் உலக அளவில் மிகவும் முன்னேறிய வளர்ச்சியடைந்த நாடாக (பழந்தமிழகம்) இருந்தது கி.பி. 150க்குப் பிந்தைய கேரள நாடு பண்டைய தமிழகம் போன்றே வீழ்ச்சியடையத் தொடங்கி ஒரு புரையோடிப்போன சமூகமாக மாறிப் போனது. அந்தச் சூழ்நிலையில் கி.பி. 250இல் ஏற்பட்ட களப்பிரர் படையெடுப்பும் அப்படையெடுப்பால் ஏற்பட்ட பேரழிவும் கொடூர வன்முறையும் இன்னபிறவும் பண்டைய தமிழகத்தில் நடந்தது போன்றுதான் பண்டைய கேரளாவிலும் நடந்தன.

Brahman settlements in keralaகி.மு. 1100 வாக்கில் டோரியர்கள் எனப்படும் இனக் குழுக்கள் கிரேக்கத்தின் மீது படையெடுத்து அனைத்தையும் அழித்தார்கள். அழிவுக்கு பிந்தைய கிரேக்கம் குறித்து, கிரிசு ஆர்மன், சாமிநாத சர்மா ஆகியவர்கள் கூறிய கருத்துகள் முன்பே சொல்லப்பட்டுள்ளன. அதுபோன்றே இனக்குழு நிலையில் இருந்த ஆரியர்களின் தாக்குதலுக்குப் பிந்தைய வட இந்தியாவின் நிலைமை குறித்து டி.டி. கோசாம்பி கூறியதும் சொல்லப்பட்டுள்ளது. களப்பிரர் படையெடுப்புக்குப் பிந்தையகாலத் கேரளச் சமூகம் அவர்கள் கூறிய நிலையில்தான் இருந்தது. ஆகவே களப்பிரர் படையெடுப்பால் ஏற்பட்ட பேரழிவுக்குப் பிந்தைய கேரளச் சமூகம் பிற்போக்கான பின் தங்கிய கிராமச் சமூகமாக மாறிப் போனது.

களப்பிரர் ஆட்சிக்காலம் என்பது சமய ஆதிக்கமிக்கக் காலமாக இருந்தது. முதலில் சமண பௌத்த மதங்களும் அதன்பின் வைதீகமும் ஆதிக்கமிக்க சமயங்களாக ஆகின. பார்ப்பனர்களுக்கு பிரம்மதேய நிலங்களும் வழங்கப்பட்டன. இவற்றின் காரணமாக கேரளச் சமூகம் சமய அடையாளங்களைக் கொண்ட சமூகமாக மாறிப்போனது. தாங்கள் தமிழர்கள் என்ற அடையாளத்தையும் கேரளச் சமூகம் இழந்து போனது. களப்பிரரின் காலத்தில் பாலி பிராகிருத மொழிகளும் சமற்கிருத மொழியும் செல்வாக்கு பெற்ற மொழிகளாக ஆகி, தமிழ்மொழி கீழ் மக்களின் மொழியாக மாற்றப்பட்டு, ஆட்சி மொழி, அறிவியல் மொழி, வணிக மொழி போன்ற தகுதிகளைத் தமிழ்மொழி முழுமையாக இழந்து போனது. களப்பிரர் படையெடுப்புக்குப் பிந்தையகாலத் தமிழ்ச் சமூகம் எந்த நிலையில் இருந்ததோ அதே நிலையில்தான் பண்டைய கேரளாவும் இருந்தது. ஏனென்றால் அது அன்று தமிழகமாகத்தான் இருந்தது. தமிழகத்தில் நடந்த அனைத்தும் பண்டைய கேரளாவிலும் நடந்தன.

சங்ககாலத்திலோ, சங்கம் மருவிய காலத்திலோ பார்ப்பனர்களுக்கு நிலதானங்கள் வழங்கப்படவில்லை(1). களப்பிரர் படையெடுப்புக்குப்பின்தான் தமிழகத்தில் முதல் முறையாக பார்ப்பனர்களுக்கு நிலதானங்கள் வழங்கப்பட்டன. தமிழகத்தின் வடக்கே தொண்டை மண்டலத்தை ஆண்ட அந்நியர்களான பல்லவர்களும் பார்ப்பனர்களுக்கு நிலதானத்தை வழங்கினார்கள்(2). கி.பி. 5ஆம் 6ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்மொழி கீழ் மக்களின் மொழியாக மாற்றப்பட்டு சமற்கிருதம் செல்வாக்கு மிக்க மொழியாக ஆகிப்போனது. களப்பிரர்களால் கேரளாவிலும் நிறைய நிலதானங்கள் பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்டன. அங்கும் சமற்கிருதமொழி செல்வாக்கு பெற்ற மொழியாக ஆகியிருந்தது. இந்தச் சூழ்நிலைகள்தான் நம்பூதிரி பார்ப்பனர்கள் கேரளாவில் குடியேறுவதற்கும் ஆதிக்கம் பெறுவதற்குமான வாய்ப்புகளை வழங்கின.

கர்நாடகத்தின் முதல் அரச வம்சமான கடம்ப வம்சத்தை கி.பி. 345இல் மயூரசர்மன் (Mayurasharma, 345-365) தோற்றுவித்தான். அவன் பார்ப்பனன். அந்த வம்சம் கி.பி. 345 முதல் கி.பி. 540 வரை இருந்தது. அதன் அரசன் விசுனுவர்மன் (Vishnuvarman, 475-485) காலத்திய எடக்கல் கல்வெட்டு (Edakkal) வடக்கு கேரளாவில் கிடைத்துள்ளது(3). கடம்பர்கள் பார்ப்பனர்கள் என்பதாலும் இவர்கள் கேரளாவின் வடக்குப்பகுதியை 5ஆம் 6ஆம் நூற்றாண்டுகளில் ஆண்டதாலும் இவர்கள் காலத்தில் முதலில் துளுப்பகுதியிலும் அதன் பின் கேரளாவிலும் பார்ப்பனர்கள் குடியேறுவதற்கு கடம்ப அரசர்கள் ஊக்குவித்தார்கள் எனக் கருதப்படுகிறது. தமிழகத்தின் பக்தி இயக்கக் காலத்தின் 108 திவ்யதேசக் கோவில்களில் (Divyadesams) 13 கோவில்கள் கேரளாவில் இருப்பதால்(4) பண்டைய கேரளமும் தமிழகமும் ஒரே தேசமாகத்தான் களப்பிரர் காலம் வரை இருந்து வந்தன என்பதை அறிய முடிகிறது. அன்று தமிழகத்தில் இருந்தும் பார்ப்பனர்கள் கேரளாவில் குடியேறினார்கள் எனக் கருதப்படுகிறது. முன்குடுமி வைத்த பார்ப்பனர்கள் சோழியர்கள் என அழைக்கப்பட்டனர். சிதம்பரத்தில் இருந்த தீட்சிதர்களும் கேரள நம்பூதிரிகளும் முன் குடுமிப் பார்ப்பனர்கள். சோழ நாட்டில் இந்த முன் குடுமிப் பார்ப்பனர்கள் அதிக அளவில் இருந்தனர். ஆகவே தமிழகத்தில் இருந்து இவர்கள் கேரளாவில் களப்பிரர் காலத்தில் குடியேறியிருக்கலாம் என ந. சுப்ரமணியன் கூறுகிறார்(5). ஆனால் களப்பிரர் காலத்தில் அல்ல அவர்கள் பல்லவர் காலத்தில் குடியேறி இருக்கலாம்.

இத்தரவுகள் களப்பிரர் காலத்தில் தமிழகத்தைவிட மிக அதிக அளவு பார்ப்பனர்கள் கேரளாவில் குடியேறினார்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றன. மேலும் களப்பிரர் காலம்(கி.பி. 550) வரை கேரளா என்பது தமிழகத்தின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது என்பதையும் திவ்ய தேசங்கள் குறித்த செய்தி நமக்குத் தெரிவிக்கிறது. கேரளாவில் கடம்பர்களும் களப்பிரர்களும் மிக அதிக அளவான நிலங்களை பிரமதேயங்களாக பார்ப்பனர்களுக்கு வழங்கியிருந்தனர். பார்ப்பனர்கள் அதிக அளவில் குடியேறியதும் அதிக அளவான நிலங்கள் அவர்களுக்கு பிரமதேயங்களாக வழங்கப்பட்டதும் அங்கு அதிக அளவில் பார்ப்பனர்கள் குடியேறுவதற்கும், சமற்கிருதம் ஒரு செல்வாக்கு மிக்க மொழியாக மாறுவதற்கும் வழிவகுத்தது. சமற்கிருத மொழியின் செல்வாக்கு அதிகரித்ததால் தமிழ் மொழி கீழ் மக்களின் மொழியாக மாறிப்போனது.

பாண்டியர்களும், பல்லவர்களும் ஒன்றிணைந்து கி.பி. 550இல் களப்பிரர் ஆட்சியை தமிழகத்தில் இருந்து விரட்டியடித்தனர். அதன்பின் தமிழகத்தின் வட பகுதி பல்லவர்களாலும் தென்பகுதி பாண்டியர்களாலும் ஆளப்பட்டது. கேரளாவிலும் இக்காலகட்டத்தில் களப்பிரர் ஆட்சி ஒழிந்து போனது. ஆனால் கேரளாவில் சேர அரச குடி வலிமையற்றுப் போனதால் சேரர் ஆட்சி அங்கு உருவாகவில்லை. அதற்குப்பதிலாக பல்வேறு சிறுகுறு ஆட்சிகள் உருவாகி இருந்தன. அவர்களுக்கிடையே தொடர்ந்து போர்களும் நடைபெற்று வந்தன. இந்தச் சூழ்நிலை பார்ப்பனர்கள் மேலும் செல்வாக்கு பெற வழி வகுத்தது.

கட்டாக்கள், பட்டாக்கள் (Cattas and Bhattas): கேசவன் வேலுதட்(Kesavan veluthat) எழுதிய கேரளாவில் பார்ப்பனக் குடியேற்றம் (Brahmana settliments in kerala) என்ற நூலில் சொல்லப்பட்டுள்ள கட்டாக்கள், பட்டாக்கள் குறித்த தரவுகளைச் சுருக்கமாகப் பார்ப்போம்(6).

வட இந்தியாவில் இருந்த குப்தப் பேரரசுக் காலத்தில் இருந்து இவர்கள் பெயர்கள் சொல்லப்பட்டு வருகின்றன. இவர்கள் அங்கு ஆயுதம் தாங்கிய உதிரிப் பார்ப்பனக் குழுக்களாக இருந்து வந்துள்ளனர். பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களில் இவர்கள் நுழையக் கூடாது என்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. சில தர்ம சாத்திரங்கள் இவர்களின் கொடுமைகளிலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டியது அரசனின் கடமை எனக் குறிப்பிடுகின்றன. ஆனால் குப்தர் ஆட்சியின் பிற்காலத்தில் கீழ் அளவிலான அதிகாரிகளாக இவர்கள் இருந்துள்ளனர். இவர்கள் ஆயுதம் தாங்கிய பார்ப்பனக் குழுக்களாக தென்னகம் வந்து பல இடங்களில் குடியெறியுள்ளனர். கேரளாவிலும், தமிழகத்திலும் இருந்த சாலை அல்லது கடிகை எனப்படும் கல்லுரிகளில் மாணவர்களாக இருந்தவர்கள் கட்டாக்கள் எனப்பட்டனர். பட்டாக்கள் என்பவர்கள் ஆசிரியர்கள். கட்டாக்கள் என்பது பிராகிருதப்பெயர். இது சமற்கிருதத்தில் சத்ராக்கள் (Chatras) எனப்படும். கட்டாக்களின் மடங்களில் ஒன்றான விசயபுரி மடத்தில் வேத சாத்திரக் கல்வியுடன் போர்க்கலைகளும் கற்பிக்கப்பட்டது என 8ஆம் நூற்றாண்டு சமண பிராகிருத நூலான உதயோதனசூரியின் காவ்யமாலா குறிப்பிடுகிறது(7).

அன்று சாலை எனப்படும் கடிகைகளில் வேதக்கல்வியோடு ஆயுதப்பயிற்சிகளும் வழங்கப்பட்டன. சோழ வேந்தன் இராசராச சோழன் படையெடுத்து வென்ற காந்தளூர்ச்சாலை என்பது இதுபோன்ற ஒரு ஆயுதப் பயிற்சிகூடம்(8). கேரளாவில் பார்த்தவபுரத்தில் இருந்த கடிகை எனப்படும் சாலை குறித்த கி.பி. 866 ஆம் ஆண்டைய செப்புத் தகடு “கட்டாக்கள் என்பவர்கள் அச்சாலையில் படித்து வரும் பார்ப்பன மாணவர்கள். அங்கு அவர்களது பாடத்திட்டத்தில் வேத சாத்திரத்துடன் மிக முக்கியமாக ஆயுதப் பயிற்சியும் வழங்கப்பட்டது” எனக் கூறுவதாக இந்நூலின் ஆசிரியர் கேசவன் வேலுதட் கூறுகிறார். அவர் மேலும் இக்கல்லூரி காந்தளூர்ச் சாலையின் மாதிரியில் அமைக்கப்பட்டது எனவும் இதுபோன்ற பல கல்லூரிகள் கேரளாவில் அன்று(9 முதல் 11 ஆம் நூற்றாண்டு) இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்(9).

17ஆம் நூற்றாண்டில் தோன்றிய பார்ப்பனர்களின் கேரளோற்பத்தி என்ற நூல் ஆயுதம் தாங்கிய பார்ப்பனர்கள் குறித்துக் குறிப்பிடுகிறது. கேரளா என்ற புதிய நிலத்தைக் கடலில் இருந்து உருவாக்கிய பரசுராமன் அதனைப் பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கிவிட்டு 10 கிராமங்களில் இருந்த 14 கோத்திரங்களைச்சேர்ந்த 36000 பார்ப்பனர்களுக்கு ஆயுதம் வழங்கினார் எனவும் அவர்கள் ஆர்த்த பார்ப்பனர்கள்(ardhabrahmanas - பாதிப் பார்ப்பனர்கள்) அல்லது சாசுட்ர பார்ப்பனர்கள் (sastrabrahmanas - ஆயுதமேந்திய பார்ப்பனர்கள்) என அழைக்கப்பட்டனர் எனவும் அந்நூல் குறிப்பிடுகிறது(10).

கேரளாவில் இருக்கும் குறிப்பிட்ட நம்பூதிரிகள் பட்டாத்திரிகள் என அழைக்கப்படுகின்றனர். அவர்கள் செய்த பணிகளுக்காக நிலங்கள் வழங்கப்பட்டன. அந்நிலங்கள் பட்டவிருத்தி நிலங்கள் என்ற பெயரைப் பெற்றிருந்தன. கட்டா மாணவர்களுக்கு ஆசிரியர்களாக இருந்த பட்டாக்கள் இடைக்கால இலக்கியங்களில் சிறந்த அறிஞர்களாகக் கருதப்பட்டு பட்டத்தனம் (pattattanam) என்ற சிறப்புப் பெயருடன் அழைக்கப்பட்டனர். காலிகட் சமோரின்கள் (Zamorins) தாலி (Tali) கோயிலில் பட்டத்தனம் என்ற சிறப்புப் பட்டத்தை வழங்கி வந்தனர்(11). ஆகவே வட இந்தியாவில் மதிப்பற்றவர்களாக கருதப்பட்ட கட்டாக்களும் பட்டாக்களும் தென்னிந்தியாவில் மதிப்புக்குரியவர்களாக ஆனார்கள். வட இந்தியாவில் ஆயுதமேந்திய உதிரிப் பார்ப்பனக்குழுக்களாக இருந்த பார்ப்பனர்கள் தென்னிந்தியாவில் முக்கியமாக கேரளாவில் மிக அதிக அளவில் குடியேறினர் என்பதை இத்தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.

கடம்ப அரசன் மயூரசர்மன் காஞ்சியில் இருந்த ஆயுதப்பயிற்சி வழங்கும் கடிகை எனப்படும் சாலை ஒன்றில் பயின்றவன். அதனால் கடம்பர்களின் ஆதரவில் ஆயுதப் பயிற்சி பெற்ற இந்த கட்டாக்கள், பட்டாக்கள் எனப்படும் பார்ப்பனர்கள் முதலில் துளு நாட்டிலும் அதன்பின் அதிக அளவில் கேரளாவிலும் குடியேறினர். அவர்கள்தான் இன்றைய நம்பூதிரிப் பார்ப்பனர்கள் எனலாம். பரசுராமன் மரபு என்பது இந்த ஆயுதமேந்திய பார்ப்பனர்களையே குறிப்பிடுகிறது. பார்ப்பன மரபில் பரசுராமன் தான் கேரளாவை பார்ப்பனர்களுக்காக உருவாக்கித் தந்தான் எனச் சொல்லப்படுகிறது. குசராத்தில் தொடங்கிய இந்த பரசுராமன் மரபுப் பார்ப்பனக் குடியேற்றங்கள் மேற்கு கடற்கரையோரமாக பரவியது.

கி.பி. 550க்குப் பின் கேரளாவில் இருந்த, வலிமையான ஆட்சியாளர்கள் இல்லாத வெற்றிட நிலைமை, இந்த வகையான ஆயுதமேந்திய பார்ப்பனக் குடியேற்றங்களை அதிக அளவில் குடியேற வைத்தது. பார்ப்பன மரபுப்படி 64 பார்ப்பனக் குடியேற்றங்கள் நடந்ததாகவும் முதலில் 32 குடியேற்றங்கள் துளு நாட்டிலும் அதன்பின் 32 குடியேற்றங்கள் கேரளாவிலும் நடந்ததாகக் கருதப்படுகிறது. கேரளாவில் நடந்த இந்த 32 பார்ப்பனக் குடியேற்றங்களும் எந்தெந்த இடத்தில் நடந்தன என்பது ஆய்வு செய்யப்பட்டு அவை கண்டறியப்பட்டுள்ளன. இந்தக் குடியேற்றங்களின் காலம் அறியப்படவில்லை. ஆனால் அவை கேரளாவில் கி.பி. 550க்குப்பின் கி.பி. 800க்குள் நடந்த குடியேற்றங்கள்தான் என நாம் கருதலாம். 32 பார்ப்பனக் குடியேற்றங்களில் 24 குடியேற்றங்கள் ஆற்றின் கரைகளில் இருந்த வளமான பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்தன (12). இவை போன்ற பல குடியேற்றங்கள் மூலம் 7ஆம் 8ஆம் நூற்றாண்டுக்குள் கேரளாவின் பெரும்பகுதிகளில் பார்ப்பனர்கள் ஒரு ஆதிக்கமிக்க சக்தியாக உருவெடுத்தனர்.

இந்தியாவில் பார்ப்பனிய ஆளும் வர்க்கமும் அதன் மேலாதிக்கமும்:

கி.மு. 187இல் புசியமித்திரன் மகத பேரரசைக்கைப்பற்றி, அதன்மூலம், பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிறுவுவதையே தனது முதன்மையான நோக்கமாகக் கொண்டிருந்தான் எனக் கூறுகிறார் அம்பேத்கர்(13). ஆகவே அந்த நோக்கத்தைச் செயல்படுத்தும் வகையில் புசியமித்திரனின் ஆட்சி தொடங்கியதிலிருந்து பார்ப்பனர் குழுக்கள் ஒன்றிணைந்து வலிமை பெறத் தொடங்குகின்றன. 150 வருட கால பார்ப்பன வம்சங்களின் ஆட்சியில் பார்ப்பனர்கள் பலவகையிலும் செல்வமும், சொத்தும், நிலபுலங்களும், ஆட்சியதிகாரமும் பெற்றவர்களாக, ஒட்டுமொத்தமாக ஆளும் வர்க்கமாக ஆகிறார்கள். வைதீக பார்ப்பனியத்தின் கருத்தியலை உருவாக்கிய அவர்கள் அதற்கான தத்துவார்த்த அடித்தளத்தை உருவாக்க பிரம்மசூத்திரம், மனுசுமிருதி, சைமினி சூத்திரம் போன்ற பல்வேறு வகையான பார்ப்பனிய இலக்கியங்களைப் படைத்தார்கள். வேதங்கள், பிராமணங்கள் முதலான பண்டைய இலக்கியங்களை வைதீக பார்ப்பனியத்திற்கான கருத்தியல்களைக் கொண்டதாக மாற்றி அமைத்தார்கள். தங்களுக்கு எதிராக இருந்த அனைத்துச் சித்தாந்த நூல்களையும் தேடிப்பிடித்து அழித்து ஒழித்தார்கள். பார்ப்பனக் குழுக்கள் ஒருங்கிணைத்து திட்டமிட்டு செயலாற்றினார்கள். வருணத்தைச் சாதியாக மாற்றி அமைத்தார்கள். பார்ப்பன அரசர்களின் ஆதரவோடும் பார்ப்பன ஆளும் வர்க்கத்தின் ஆதரவோடும் வைதீக பார்ப்பனியத்தின் ஏற்பிசைவு இல்லாமல் ஒருவன் அரசனாக ஆவதோ, நாட்டை ஆள்வது என்பதோ இயலாது என்ற சூழ்நிலையை உருவாக்கினார்கள். இந்தக் கருத்தியலை வட இந்தியா முழுவதும் கொண்டுசென்று அதனை அனைவரும் ஏற்குமாறு செய்தார்கள்.

மௌரியர்காலம்வரை இருந்த, பார்ப்பனர் அரசராக ஆகக் கூடாது என்ற மரபுமுறையிலான கருத்தியலை மாற்றியமைத்து பார்ப்பன அரசர்கள் நாடாளும் தகுதியுடையவர்கள்; நால்வருண சாதியத்தைக் காப்பாற்றுவது அரசனின் கடமை; உலகம் அனைத்திற்கும் உடமையாளன் பார்ப்பனன்; பார்ப்பனன் அரசனுக்கும் மேலானவன் போன்ற மனு சுமிருதி கூறும் கருத்துக்களைப் பரப்பி அதனைச் சமூகம் முழுவதும் ஏற்குமாறு செய்தார்கள். கலிகாலத்தில் சத்திரியர்கள் இருக்கமுடியாது என்ற புனைவுக்கருத்தைப் பரப்பி மக்களை நம்ப வைத்ததோடு, இனக்குழுத் தலைவர்களையும், பழங்குடித் தலைவர்களையும், அந்நிய அரசர்களையும் பார்ப்பனர்கள் தங்கள் வைதீகச் சடங்குகளைக் கொண்டு சத்திரியர்களாக, ஏன் பார்ப்பனர்களாகக் கூட ஆக்கமுடியும் என்ற கருத்தை பெரும்பாலான மக்கள் சமூகத்திடம் கொண்டு சென்றார்கள். அவர்கள் ஆளும் வர்க்கமாக இருந்ததால் அரசனின் ஆதரவோடு, இவை போன்ற பல்வேறு பார்ப்பனியக் கருத்தியல்களை மக்களிடம் கொண்டு சென்று, வட இந்தியா முழுவதும் பார்ப்பனியச் சிந்தனையை நிறுவுவதை வெற்றிகரமாக நிறைவேற்றினார்கள்.

இவற்றின் காரணமாக கி.மு. முதல் நூற்றாண்டிலும் அதன் பின்னரும்தான் வட இந்தியாவில் வைதீகம், பார்ப்பனியம் முதலிய கருத்தியல்கள் உருவாகின. கி.பி. முதல் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இந்தியா முழுவதும் குழப்பம் நிலவியது. அன்று அந்நிய ஆட்சியாளர்களும், இந்திய இனக்குழுக்களில் இருந்து உருவான புதிய ஆட்சியாளர்களும் நிறைய உருவாகிக் கொண்டிருந்தனர். இக்காலகட்டத்தில் புதிய ஆட்சியாளர்கள் தங்களுடைய ஆட்சியின் அங்கீகாரத்திற்கும், சட்ட ஏற்பிசைவிற்கும் பார்ப்பனர்களின் தயவை எதிர்பார்த்திருக்கும் சூழ்நிலையை பார்ப்பனர்கள் திட்டமிட்டு உருவாக்கினர். புதிய ஆட்சியாளர்களை, புதிய அரசர்களை அங்கீகரிக்கவும், அவர்களை சட்டப்படியான முறைப்படியான அரசர்களாக ஆட்சியாளர்களாக உருமாற்றுவதற்கும் பார்ப்பனர்களின் வேள்விகளும், சடங்குகளும் தேவை என்ற சூழ்நிலையை உருவாக்கியதுதான் பார்ப்பனர்களின் மிகப் பெரிய வெற்றி. தங்களின் சடங்குகள், வேள்விகள் மூலம் மட்டுமே பொதுமக்கள் அனைவரின் ஏற்பிசைவை, அவர்களின் ஒப்புதலைப் பெறமுடியும் என்ற சிந்தனையைக் கொண்டுவந்து அதில் பெருவெற்றிபெற்று அதனை அன்றைய இந்தியா முழுவதும் கொண்டு சென்றது தான் பார்ப்பனர்கள் இந்தியா முழுவதும் செல்வாக்கு பெற்றதற்கு அடிப்படைக்காரணம்.

கேரளாவில் கி.பி. 550க்குப் பின் நிறைய புதிய சிறுகுறு ஆட்சியாளர்கள் உருவாகியிருந்தனர். முன்பு கூறிய காரணங்களின் அடிப்படையில் அவர்கள் அனைவருமே பார்ப்பனர்களின் ஏற்பிசைவை அவர்களின் அங்கீகாரத்தைப்பெற விரும்பினர். பார்ப்பனர்கள் ஆயுதப் பயிற்சி பெற்றவர்களாகவும் இருந்தனர். கேரளாவில் தொடர்ந்து நிறையப்புதிய பார்ப்பனக் குடியேற்றங்களும் உருவாகிக் கொண்டிருந்தன. அவற்றிற்கு இந்தச் சிறுகுறு ஆட்சியாளர்களிடம் மிகப் பெரிய வரவேற்பும் இருந்து வந்தது. புதிதாகக் குடியேறிய பார்ப்பனர்களுக்கு நிறைய நில தானங்களும் வழங்கப்பட்டு வந்தன. கி.பி. 550க்கு முன்பே கேரளாவில் பார்ப்பனர்கள் மதிப்புக்குரியவர்களாகவும் செல்வாக்கு உடையவர்களாகவும் ஆகியிருந்தனர். இவை போன்ற பல காரணங்களால் கேரளாவில் உருவான சிறுகுறு ஆட்சியாளர்களைத் தங்களது மரபார்ந்த மதிப்பைப் பயன்படுத்தியும், தங்களது சடங்குகள் வேள்விகள் முதலியன கொண்டும்,. தங்களது சூழ்ச்சித் திறத்தைக் கொண்டும், தேவையானால் ஆயுத பலத்தைக் கொண்டும் கேரள மக்களை ஆட்டிப்படைக்கும் வலிமை கொண்டவர்களாக அடுத்த இரு நூற்றாண்டுகளில் நம்பூதிரி பார்ப்பனர்கள் ஆகிப் போனார்கள்.

பார்ப்பனியக் கருத்தியலும் உளவியலும்:

பார்ப்பனனின் அதிகாரம் மன்னனின் அதிகாரத்தை விடப் பெரியது; பார்ப்பனன் ஒப்புயர்வற்ற நிலையைப் பெற்றவன்; உலகம் அனைத்திற்கும் உடமையாளன் பார்ப்பனன்; பார்ப்பனன் அரசனுக்கும் மேலானவன்; பார்ப்பனன் மிக உயர்ந்த பிறப்புக்குரியவன்; எந்தச் சூழ்நிலையிலும் பார்ப்பனன் மிக மிக உயர்வாக மதிக்கப்பட வேண்டியவன்; பார்ப்பனன் எல்லாவிதமான பாவங்களையும் செய்திருந்தாலும் அவன் கொல்லப்படக்கூடாது; பார்ப்பனின் சொத்தை ஒரு போதும் மன்னன் எடுத்துக் கொள்ளக்கூடாது; அனைத்துச் சாதி மக்களுக்கும் பார்ப்பனனே அதிபதியாக இருக்கிறான்; பார்ப்பனனைப் பாதுகாக்க வேண்டியது அரசனின் கடமை போன்ற பல்வேறு கருத்துகளை மனு சுமிருதியும்(14), பிரமாணங்களும் இன்ன பிற பார்ப்பனிய இலக்கியங்களும் உறுதிபடக் கூறுவதன் மூலம் பார்ப்பனன் பிறப்பிலேயே மிக மிக உயர்ந்தவன் என்ற வலுவான நம்பிக்கை, ஒவ்வொரு பார்ப்பனனின் ஆழ் மனதிலும் விதைக்கப்படும் சூழ்நிலை உருவாகியதோடு அது உளவியல் அடிப்படையில் மிகப்பெரிய தன்னம்பிக்கையை அவனிடத்தில் உருவாக்கியது. வர்க்க சிந்தனை போன்று பார்ப்பன சமூகத்தின் சமூகச்சிந்தனையாக இச்சிந்தனைகள் மாறிப்போயின.

இக்கருத்தியல் உருவான காலத்தில் பார்ப்பன வம்சங்களே அரசர்களாக இருந்து வந்தனர். பார்ப்பனர்கள் ஆளும் வர்க்கமாகவும் இருந்து வந்தனர். சமூகத்தில் செல்வமும், செல்வாக்கும், அதிகாரமும், அறிவும் கொண்டவர்களாகவும், அனைத்து மக்களுக்கும் மேலானவர்களாகவும் உயர்வானவர்களாகவும் பார்ப்பனர்கள் இருந்து வந்தனர். காலங்காலமாக உலகம் தோன்றிய காலத்தில் இருந்து தாங்கள் இவ்வாறு உயர்வானவர்களாகவே இருந்து வந்தது போன்ற கருத்துக்களும் உருவாக்கப்பட்டிருந்தன. இவைகளின் காரணமாக ஒவ்வொரு பார்ப்பனனும் தன்னை இயற்கையிலேயே உயர்வானவனாக, அனைவருக்கும் மேலானவனாகக் கருதும் சூழ்நிலை உருவாகியது. இச்சிந்தனை அவனுக்கு உளவியல் அடிப்படையில் மிகப்பெரிய தன்னம்பிகையை உருவாக்கியது. இறுதியில் இச்சிந்தனைகள் அனைத்தும் பார்ப்பனிய சமூகத்தின் சமூகச்சிந்தனையாக ஆகிப்போயின.

நாளடைவில் ஒவ்வொரு பார்ப்பனனும் அவனை அறியாமையிலேயே இது போன்ற சிந்தனைகளைக் கொண்டவனாக ஆகிப்போயிருந்தான். அவனது குடும்ப, சமூகச்சூழ்நிலைகளும், பழக்க வழக்கங்களும், இன்னபிறவும் இச்சிந்தனைகளை அவன் அறியாதபோதும் அவனிடத்தில் வளர்த்தெடுத்தன. இவைகளின் காரணமாக ஒவ்வொரு பார்ப்பனனும் தன்னை இயற்கையிலேயே உயர்வானவனாக, அனைவருக்கும் மேலானவனாக எதையும் சாதிக்கும் திறன் கொண்டவனாகக் கருதும் சூழ்நிலை உருவாகியது. இதன் காரணமாக பார்ப்பனக் குழுக்கள் ஒன்றிணைந்து செயற்கரிய செயல்களைச் செய்து முடித்தன. மூன்று நான்கு நூற்றாண்டுகளுக்குள் இந்தியச் சமூகம் முழுவதும் வைதீக பார்ப்பனியக் கருத்தியல்களை ஏற்கச் செய்து, இந்தியா முழுவதும் சமற்கிருதமயமாக்கலையும் வருணத்தைச் சாதியாக மாற்றுவதையும் செய்து முடித்தன. வருணத்தை அல்லது வகுப்பை சாதியாக மாற்றுவது என்பது பார்ப்பனியத்தின் மிக முக்கிய நோக்கமாக இருந்தது. அதனை மனு சுமிருதியின் விரிவான விதிகள் உறுதி செய்கின்றன என அம்பேத்கர் கூறுகிறார் (15).

கேரளாவில் குடியேறிய பார்ப்பனர்களிடம் இருந்த இது போன்ற ஒரு பார்ப்பனியக் கருத்தியலும் உளவியலும் அவர்கள் கி.பி. 8ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள் கேரள சமூகத்தின் மிகப்பெரும் சக்தியாக உருவெடுக்கவும், வலிமை பெறவும் வழி வகுத்தது.

கேரள சமூகம் (கி.பி. 250 - 800):

கேரள சமூகத்தில் கி.பி. 250 முதல் கி.பி. 800 வரை ஏற்பட்ட நிலைமை குறித்த சுருக்கமான தொகுப்பு.

1.கி.பி.250இல் பழந்தமிழகத்தின் மீது நடைபெற்ற களப்பிரர் படையெடுப்பால் பழந்தமிழகத்தில்(கேரளத்தில்) 1000 வருட காலத்திற்கு மேல் சிறப்புற்றிருந்த பழந்தமிழர் நகர நாகரிகத்திற்கு மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டிருந்தது.

2.அப்பேரழிவுக்குப் பிந்தைய தமிழ்ச்(கேரளச்) சமூகம், சமயம் சார்ந்த ஒரு பின் தங்கிய, பிற்போக்கான கிராமச் சமூகமாக மாறிப்போயிருந்தது.

3.தமிழ்ச்(கேரளச்) சமூகம் தனது கலை, இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய அனைத்தையும் இழந்து போய் இவை சார்ந்த நூற்றுக்கணக்கான நூல்கள் வடமொழிக்கு மாற்றப்பட்டு, மூலத்தமிழ் நூல்கள் அனைத்தும் அழிந்து போனதோடு, தாங்கள் தமிழர்கள் என்ற அடையாளத்தையும் இழந்து போன நிலையில் இருந்தது..

4.களப்பிரர் ஆட்சி என்பது சமய ஆதிக்கமிக்க ஆட்சி என்பதால் முதலில் சமண, பௌத்தச் சமயங்களும் பின்னர் வைதீகச் சமயமும் ஆதிக்கமிக்கதாக ஆகி, பார்ப்பனர்களுக்கு நிறைய நிலதானங்கள் வழங்கப்பட்டன.

5.இவ்வாட்சியின் தொடக்கத்தில் பாலி, பிராகிருதமும் பின்னர் சமற்கிருத மொழியும் செல்வாக்கு பெற்றதால், தமிழ்மொழி கீழ் மக்களின் மொழியாக மாற்றப்பட்டு ஆட்சி மொழி, அறிவியல் மொழி, வணிக மொழி போன்ற தகுதிகளை முழுமையாக இழந்துபோயிருந்தது.

6.கடம்ப அரசர்களின் ஆதரவால் துளுப்பகுதியிலும் கன்னடப்பகுதியிலும் இருந்து அதிக அளவில் பார்ப்பனர்கள் கேரளத்தில் குடியேறியது போக பக்திகாலகட்டத்தின் தொடக்க காலத்தில் தமிழகத்தில் இருந்தும் பார்ப்பனர்கள் கேரளாவில் குடியேறினர். கடம்பர்களும், களப்பிரர்களும் அதிக அளவில் அவர்களுக்கு பிரமதேய நிலங்களை வழங்கி வந்தனர்.

  1. களப்பிரரின் வீழ்ச்சிக்குப்(கி.பி. 550) பின் சேர அரசு உருவாகாமல் நிறையச் சிறுகுறு அரசுகள் உருவாகி, அவர்களிடையே தொடர்ந்து போர்கள் நடந்து கொண்டிருந்தன.
  2. இந்தப் புதிய சிறு குறு ஆட்சியாளர்கள் தங்களுடைய ஆட்சியின் அங்கீகாரத்திற்கும், சட்ட ஏற்பிசைவிற்கும், பார்ப்பனர்களின் தயவை எதிர்பார்த்திருக்கும் சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டிருந்தது. அவர்களை சட்டப்படியான முறைப்படியான அரசர்களாக உருமாற்றுவதற்கும், பொதுமக்களின் அங்கீகாரத்திற்கும் பார்ப்பனர்களின் வேள்விகளும், சடங்குகளும் தேவை என்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டிருந்தது.
  3. கட்டாக்கள், பட்டாக்கள் போன்ற ஆயுதம் தாங்கிய பார்ப்பனக் குழுக்கள் கி.பி. 550க்குப்பிந்தைய கேரளாவின் அசாதாரமான சூழ்நிலையில் பெருமளவில் குடியேறி, தாங்கள் பார்ப்பனர்கள் என்பதையும், ஆயுதம் தாங்கியவர்கள் என்பதையும் காரணம் காட்டி, இந்தச் சிறுகுறு ஆட்சியாளர்களிடமிருந்து அதிக அளவில் நிலங்களைத் தானமாகப் பெற்று ஒரு ஆதிக்கமிக்க சக்தியாக உருவாகியிருந்தனர்.

10.பரசுராமன் மரபுப்படி இந்த ஆயுதம் தாங்கிய பார்ப்பனக் குழுக்கள் குசராத்தில் தொடங்கி துளு நாட்டு வழியாக கேரளாவில் பெருமளவில் இக்காலகட்டத்தில் குடியேறினார்கள். கேரளாவில் நடந்த மரபு வழியான 32 பார்ப்பனக் குடியேற்றங்களின் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

11.கி.மு. முதல் நூற்றாண்டிலும் அதன் பின்னரும் பார்ப்பனன் குறித்து வட இந்தியாவில் உருவாகிய பார்ப்பனியக் கருத்தியல் அவனிடத்தில் ஏற்படுத்திய உளவியல் அடிப்படையிலான தன்னம்பிக்கை என்பது ஒவ்வொரு பார்ப்பனனும் தன்னை இயற்கையிலேயே உயர்வானவனாக, அனைவருக்கும் மேலானவனாக எதையும் சாதிக்கும் திறன் கொண்டவனாகக் கருதும் சூழ்நிலையை தன்னம்பிக்கையை உருவாக்கியிருந்தது.

  1. மேற்கண்ட பல்வேறு காரணங்களும் இணைந்து கி.பி. 8ஆம் நூற்றாண்டுக்குள் கேரள பார்ப்பனர்கள் கேரளாவின் பெரும்பகுதிகளில் நிலபுலன்களும் செல்வவளமும் உடைய, அரசியல் அதிகாரமும், சமூக செல்வாக்கும் கொண்ட ஒரு ஆதிக்கமிக்க சமூகமாக உருவாகியிருந்தார்கள்.

பாரம்பரிய பார்ப்பனக் குடியிருப்புகள்:

கி.பி. 800க்கு முன், அதாவது புதிய சேர அரசு உருவாவதற்கு முன் பாரம்பரியமான 32 பார்ப்பனக்குடியிருப்புகள் உருவாகிவிட்டது எனவும் அவை எங்கு உருவாகின அவற்றின் பெயர்கள் முதலியன கண்டறியப்பட்டுள்ளன எனவும் கேசவன் வேலுதட் (Kesavan veluthat) கூறுகிறார்(16). அவை வருமாறு,

அ) பெரும்புழா ஆற்றுக்கும் கருமான்புழா ஆற்றுக்கும் இடையே அமைந்த 10 குடியிருப்புகள்.

1.பைய்யனூர், 2.பெரும்செல்லூர், 3.ஆலத்தூர், 4.காரந்தொலா, 5.கோகிரம், 6.பன்னியூர், 7.கரிக்காடு, 8.இசனமங்கலம், 9. திரிசிவப்பேருர் 10.பெருவனம்.

ஆ)கருமான்புழா ஆற்றுக்கும் கூர்ணி ஆற்றுக்கும் இடையே அமைந்த 12 குடியிருப்புகள்

11.காமுந்தா, 12.இருங்காத்திக்கூடல், 13.ஆவத்திப்புட்டூர் 14.பறவூர் 15.ஐராங்கிக்களம், 16.மூளிக்களம், 17.குளவூர், 18.அதவூர், 19.செங்கநாடு, 20.இளிப்பியம், 21.உளியனூர், 22.கழுடநாடு.

இ)கூர்ணி ஆற்றுக்கும் குமரி முனைக்கும் இடையே அமைந்த 10 குடியிருப்புகள்

23.ஏறுமானூர், 24.குமாரநெல்லூர், 25.காதமறுக்கு, 26.ஆறன்முழா, 27.திருவல்லா, 28.கிடங்கூர், 29.செங்கன்னூர், 30.கவியூர், 31.வெண்மணி, 32.நீர்மண்ணா.

கேரளாவின் இன்றைய நம்பூதிரி பார்ப்பனன் ஒவ்வொருவரும் இந்த 32 குடியிருப்புகளில் ஏதாவதொன்றைத் தனது பாரம்பரியப் பிறப்பிடமாகக் கருதி வருகிறான். ஆகவே கேரளோற்பத்தியில் கொடுக்கப்பட்டுள்ள இந்த 32 குடியிருப்புகளும் உண்மையான குடியிருப்புகள் என நாம் கருதலாம். கேரளாவில் உள்ள இவை அனைத்தும் பரசுராமன் தங்களுக்கு வழங்கிய வாழ்விடங்கள் என கேரள நம்பூதிரி பார்ப்பனர்கள் கருதுகிறார்கள்.

சங்ககாலத்தில் பார்ப்பனக் குடியிருப்புகள்:

கேரளாவில் பார்ப்பனக் குடியிருப்புகள் என்ற கேசவன வேலுதட் எழுதிய நூலில் செல்லூரில் சங்ககாலத்திலேயே பரசுராமன் மரபு வழியிலான ஆதிகாலப் பார்ப்பனக் குடியிருப்புகள் தோன்றிவிட்டன எனவும் அவர்கள் அன்றே செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்(17). அதற்கு மருதன் இளநாகனார் எழுதிய அகம் 220ஆம் பாடலைச் சான்றாகக் காட்டுகிறார். அப்பாடலில் செல்லூரில் பரசுராமன் வேள்வி செய்ததாக சொல்லப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகிறார். ஆனால் அப்பாடலில் குறிப்பிட்ட நெடியோன் என்பவன் பண்டைய பாண்டிய வேந்தன் எனவும் அதில் குறிப்பிடப்பட்ட வேள்வி என்பது பண்டைய தமிழ் மரபுப்படியான வேள்வி எனவும் அதற்கும் வட இந்திய யாகத்திற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை எனவும் நமது ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

நெடியோன் - பரசுராமன் அல்ல:

1.நெட்டிமையார் (புறம்-9 வரி: 10, 11): நெடியோன்

  1. மாங்குடி மருதனார் (மதுரைக்காஞ்சி, வரி: 761-763): நெடியோன்

3.குமட்டூர் கண்ணனார் (பதிற்றுப்பத்து -15, வரி: 38, 39): நெடியோன்

4.மருதன் இளநாகனார் (அகம்-220, வரி: 4-6): நெடியோன்

நெட்டிமையார், மாங்குடி மருதனார், குமட்டூர் கண்ணனார், மருதன் இளநாகனார் ஆகிய நால்வரும் தங்கள் பாடல்களில் ‘நெடியோன்’ என்ற பெயரில் பாண்டிய வேந்தன் ஒருவனைத்தான் குறிப்பிடுகின்றனர். நெடியோன் என்பவன் கி.மு. 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டிய வேந்தன் நிலம்தரு திருவிற் பாண்டியன் ஆவான். சங்க இலக்கியங்களில் சொல்லப்படும் வேந்தர்கள் அனைவரும் கி.மு. 350க்குப்பின் தான் வருகிறார்கள். ஆனால் நெடியோன் ஒருவன் மட்டுமே கி.மு. 6ஆம் நூற்றாண்டைச்சேர்ந்தவன். அவனது அவையில்தான் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது(18). அந்த நிலந்தரு திருவிற் பாண்டியனைத்தான் ‘நெடியோன்’ என மருதன் இளநாகனார் தனது அகம் 220ஆம் பாடலில் குறிப்பிடுகிறார்.

கி.மு. 4-3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நெட்டிமையார், மாங்குடி மருதனார், குமட்டூர் கண்ணனார் அகிய மூன்று சங்ககாலப்புலவர்களும் நெடியோன் என்று ஒருவரைக் குறிப்பிட்டிருக்கும் பொழுது நாலாவது சங்ககாலப்புலவரான மருதன் இளநாகனார் நெடியோன் என இன்னொருவரைக் குறிப்பிட்டிருக்க முடியாது. ஆகவே மருதன் இளநாகனார் குறிப்பிட்டது நிலந்தரு திருவிற் பாண்டியனைத்தான், பரசுராமனை அல்ல. பாடல் எழுதப்பட்டு 1000 ஆண்டுகளுக்குப்பின் வந்த உரையாசிரியர்கள் நெடியோன் என்பவனை புராணக்கண்ணோட்டத்தில் பரசுராமன் எனத் தவறாகப் பொருள் கொண்டுள்ளனர். பரசுராமன் குறித்துக் கூறும் புராணக் கதைகள் அனைத்தும் கி.பி. முதல் நூற்றாண்டுக்குப்பின் உருவானவை. அவன் வரலாற்றுக்குரியவன் அல்ல. வட இந்திய புராண இதிகாசங்களின் கட்டுக்கதைக்குரியவன். ஆனால் கி.மு. 2ஆம் நூற்றாண்டு மருதன் இளநாகனார் கூறும் நெடியோன் எனப்படும் நிலந்தரு திருவிற் பாண்டியன் வரலாற்றுக்குரியவன்.

நெடியோன் பெரும் கடற்படைகளைக் கொண்டிருந்தான். அவன் இந்தோனேசியாவிலுள்ள சாவகத்தீவை கைப்பற்றித் தனது ஆளுகையின் கீழ் கொண்டு வந்தான் என அப்பாதுரையார் குறிப்பிட்டுள்ளார்(19). அவன் தனது கடற்படைகளைக் கொண்டு செல்லுர்ப் படையின் மதம்பிடித்த யானைக் கூட்டங்களை வென்று செல்லூரின் அரசனையும், அவனது சுற்றத்தையும் அழித்து செல்லூரைக் கைப்பற்றி விழா நடத்தி, அந்த விழாவில் வேள்வி ஒன்றினைச் செய்து முடித்தான். தொல்காப்பியத்தில் 140க்கும் மேற்பட்ட புறத்திணைகள் சொல்லப்படுகின்றன. அதில் ஒன்றுதான் வேள்விநிலை. அதன்படி வேள்விநிலை என்பது ஆடு, மாடு போன்ற கால்நடைகளை ஏழைகளுக்கும், பாணர்களுக்கும், புலவர்களுக்கும் பரிசாக வழங்கும் நிகழ்வாகும்(20). பரிசாக வழங்கப்படும் ஆடு மாடுகள் தூண்களிலும், மரங்களிலும் கட்டி வைக்கப்பட்டிருக்கும். அவை வேள்வித்தூண்கள் எனப்படும். இதற்கும் வட இந்திய வேள்வி எனப்படும் யாகத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. வட இந்திய யாகத்தில் கால்நடைகள் அக்னிக் குண்டத்தில் போடப்பட்டு உயிரோடு எரிக்கப்பட்டு பலியாக்கப்படும்.

அகம்- 220, பாடல் வரிகள் 3-6:

கெடாஅத் தீயின் உருகெழு செல்லூர்க்,

கடாஅ யானைக் குழூஉச் சமம் ததைய,        .   

மன்மருங்கு அறுத்த மழுவாழ் நெடியோன்

முன்முயன்று அரிதினின் முடித்த வேள்வி

பாடல் வரிகளின் பொருள்: “அறிவு, ஞானம் ஆகியனவற்றை அழியாது காக்கும் பெருமைமிகு செல்லூர். அங்கு மதம் பொருந்திய யானையின் கூட்டம் எல்லாம் போர் முனையிலேயே அழியுமாறு அரசனின் சுற்றத்தை அழித்தான் மிகச்சிறந்த எஃகு வாளைக் கொண்டிருந்த நெடியோன் பாண்டியன். அங்கு அவன் வேள்வி ஒன்றினைச் செய்து முடித்தான்”.

கழகத் தமிழ் அகராதி கூறும் பொருள் விளக்கம்:

தீ – அறிவு, ஞானம்;  உருகெழு - பெருமைமிகு

மன்மருங்கு, மன் - அரசன், மன்னன்; மருங்கு – குலம், சுற்றம்.

மழு – பழுக்கக் காய்ச்சிய இரும்பு, எஃகு.

ஆகவே மருதன் இளநாகனார் அகம் 220ஆம் பாடலில் குறிப்பிடும் நெடியோன் என்பவன் பரசுராமன் அல்ல. அவன் சங்ககால வரலாற்றில் சொல்லப்படும் நிலந்தரு திருவிற் பாண்டியன் எனப்படும் நெடியோன். அவன் வரலாறு அறிந்த முதல் பாண்டிய வேந்தன்.

பார்ப்பனச்சேரி - அகம் 216:

ஐயூர் முடவனார் எழுதிய அகம் 216ஆம் பாடலில் குறிப்பிடப்படும் சேரி என்பது பார்ப்பனச்சேரி என பேராசிரியர் ‘எலம்குளம்’(Elamkulam) குறிப்பிடுவதாகக் கேசவன் கூறுகிறார்(21). அது தவறான தகவல்.

அகம் 216 குறிப்பிடும் சேரி என்பது அப்பாடலில் குறிப்பிடப்படும் தலைவியும் தலைவனும் வசிக்கும் சேரி. அது பார்ப்பனச்சேரி அல்ல. தமிழகத்தில் பார்ப்பனர்கள் கீழ் மக்கள் எனப்படும் நாலாம் வகுப்புக்குரியவர்களாகத்தான் இருந்தார்கள். பேராசிரியர் எலம்குளம் தலைவி வசிக்கும் சேரியைப் பார்ப்பனச்சேரி எனக் குறிப்பிடுவது தவறு. செல்லூர்க் கோமகன் ஆதன் எழினி என்பவன் அதியமான் மரபினன். அந்த செல்லூரில் வசிக்கும் கோசலர்கள் வடுகர்களில் ஒரு இனப்பிரிவைச் சேர்ந்தவர்கள். ஆகவே அன்று தமிழகத்தில் பார்ப்பனக் குடியேற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை. அன்று தமிழகம் இந்தியாவிலேயே வளமும் செல்வமும் மிகுந்த வளர்ச்சிபெற்ற நகர்மைய அரசுகளைக்கொண்ட பகுதியாக இருந்தது. அதனால் யவனர்கள் எனப்படும் மேற்குலக நாட்டு மக்கள் கூட இங்கு வந்து அரண்மனைகளில் காவல்பணி போன்ற பணிகளைச் செய்து வந்தனர். யவனர்களின் குடியிருப்பும் இருந்துள்ளது. அதுபோன்றே வடநாட்டு மக்கள் பலரும் இங்கு வந்து பல பணிகளைச்செய்து வந்தனர். யானைகளைப் பயிற்றுவித்தல், கல்வெட்டுகள் பொறித்தல், வணிகம் செய்தல், பல்வேறு கூலிவேலைகளைச்செய்தல் போன்றவை அவர்கள் செய்யும் வேலைகளாக இருந்து வந்தது.

பார்ப்பனர்களும் இங்கு வந்து தங்கி இங்குள்ள வடநாட்டு மக்களுக்கு குடும்ப சடங்குகள் செய்து வந்தனர். வேறுபல வேலைகளும் செய்தனர். சங்ககாலத்தில் அவர்கள் தமிழக மக்களால் மதிக்கத் தக்கவர்களாகவோ, செல்வாக்கு மிக்கவர்களாகவோ இருக்கவில்லை. அந்தணர்கள் தான் மதிக்கத் தக்கவர்களாக இருந்தனர். அந்தணர்கள் தமிழ்ச் சான்றோர்கள். அந்தணர்கள் வேறு, பார்ப்பனர்கள் வேறு. சங்க இலக்கியத்தில் பல இடங்களில் அந்தணர் என்பது பார்ப்பனர் என திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. தொல்காப்பியத்தில் அந்தணர்பாக்கம் என்பது பார்ப்பனர்பாக்கம் எனத் திருத்தப்பட்டுள்ளது. திருக்குறளில் கூட அந்தணர் என்பது பார்ப்பனர் என திருத்தப்பட்டுள்ளது(22). இடைக்காலத்தில் உரை எழுதிய பேராசிரியர்கள் பலரும் பார்ப்பனர்களாகவும், வைதீக மதச்சிந்தனை கொண்டவர்களாக இருந்ததாலும், வரலாறு அறியாததாலும் இத்திருத்தங்களை மேற்கொண்டனர். பழந்தமிழ் இலக்கியங்களைத் திருத்துவதும் இடைச்செருகல்கள் செய்வது என்பதும் கி.பி. 6ஆம் நூற்றாண்டில் இருந்தே தொடங்கிவிட்டது எனலாம்.

பார்வை:

1, 2. தி.சு. நடராசன், தமிழகத்தில் வைதீக சமயம், NCBH, 2008, பக்: 128-132. & தமிழ்நாட்டுச் செப்பேடுகள், ச.கிருசுணமூர்த்தி, தொகுதி 1, மெய்யப்பன் பதிப்பகம், 2002, பக்: 161,162, 172,173, 233-235.
3. Brahmana settliments in kerala, Kesavan veluthat, Sandhya Puplications, Calicut University, Kerala, Page: 15.
4.History of Kerala, Prehistoric to the Present, Rajan Gurukkal/Ragh Varierava, Orient Black Swan, 2020, Page: 77.
5.தமிழகத்தில் பார்ப்பனர்கள், ந. சுப்ரமணியன், தமிழாக்கம் – பேராசிரியர் மு.வி. சோமசுந்தரம், பெரியார் சிந்தனை உயராய்வு மையம், 2018, பக்; 54.
6. Brahmana settliments in kerala, Kesavan veluthat, Sandhya Puplications, Calicut University, Kerala, Page: 102-115.
7. “ “ “ Page: 104.
8, 9. “ “ “ Page: 103.
10, 11. “ “ “ Page: 106.
12. Formation of kerala society and culture, B.A. History, vi semester, Study materials, University of Calicut(241), Prepared by Dr.N. Paadmanabhan, 2011, page: 8
13. பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி - 7, பக்: 163-172.
14. “ “ “ பக்: 167, 168, 174-179, 182-186.
15. “ “ “ பக்: 186 -188, 194-200, 210-214, 244-250.
16. Brahmana settliments in kerala, Kesavan veluthat, Sandhya Puplications, Calicut University, Kerala, Page: 32-43.
17. Brahmana settliments in kerala, Kesavan veluthat, Sandhya Puplications, Calicut University, Kerala, Page: 23-28.
18.பழந்தமிழக வரலாறு, கணியன் பாலன், தமிழினி, 2018, பக்: 280, 281.
19. கா.அப்பாத்துரை, தென்னாட்டுப் போர்க்களங்கள், பூம்புகார் பதிப்பகம், சூலை 2003. பக்: 43 – 48 & பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன் பாலன், எதிர்வெளியீடு, 2016, பக்: 149.
20.தொல்காப்பியம், பொருளதிகாரம், உரையாசிரியர் சுபாசு சந்திரபோசு, இயல், 2016, பக்: 36-70. & தொல்காப்பியம், பொருளதிகாரம், உரையாசிரியர் கி.இராசா பாவை, டிசம்பர்-2007, புறத்திணையியல் - பக்: 31-61 & மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு, கணியன்பாலன், தமிழினி பதிப்பகம், 2018, பக்: 192.
21. Brahmana settliments in kerala, Kesavan veluthat, Sandhya Puplications, Calicut University, Kerala, Page: 24.
22.திருவள்ளுவர் 2050 – ஆய்வுகள், அடைவுகள், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு, 2019, பக்: 699, 700.

- கணியன் பாலன்

Pin It