சபரிமலை அய்யப்பன் கோவில் மேல்சாந்தி (அர்ச்சகர்கள்) பதவிக்கு மலையாள பிராமணர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பம் கோரி, கேரள தேவஸ்வம் போர்டு விளம்பரம் செய்திருக்கிறது. உரிய அர்ச்சகர் தகுதி படைத்த பிராமணரல்லாத அர்ச்சகர்கள் இந்த அறிவிப்பை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
பிராமணர்களாக இருப்பது மட்டுமல்லாமல் மலையாள பிராமணர்களாகவே இருக்க வேண்டும் என்பதே நீண்ட கால பழக்க வழக்கம் என்றும், எனவே கேரள தேவஸ்வம் போர்டு இந்த பழக்க வழக்கத்தை மாற்றக் கூடாது என்றும் ‘அகில கேரள தாந்திரி மண்டலம்’ என்ற பார்ப்பன புரோகித அமைப்பு தேவஸ்தான நிர்வாக அதிகாரியை சந்தித்து வலியுறுத்தியுள்ளது.
ஏற்கெனவே இந்தப் பதவிக்கு விண்ணப்பித்திருந்த 6 பார்ப்பனரல்லாத அர்ச்சகர்களின் விண்ணப்பங்களை தேவஸ்வம் போர்டு நிராகரித்துள்ளது. கேரள நீதிமன்றமும் ஏற்கெனவே பார்ப்பனரல்லாதாரும் அர்ச்சகராகலாம் என்று தீர்ப்பு வழங்கி அதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ள நிலையில் நீதிமன்றத் தீர்ப்பு எங்கே தங்களுக்கு பாதகமாக வந்து விடும் என்று பதறிய பார்ப்பன அர்ச்சகர்கள் தேவஸ்வம் போர்டுவை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள முயற்சிக்கிறார்கள். கேரளாவில் அறநிலையத் துறை அமைச்சராக இருப்பவரே பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்தான். ஆனாலும் கோவில் பழக்க வழக்கங்கள் என்ற பாதுகாப்பிற்குள் பார்ப்பனர் ஆதிக்கம் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக அர்ச்சகர் பயிற்சி பெற்ற பார்ப்பனர் அல்லாத இளைஞர்களை இன்றும் ஆகமக் கோவில்களில் அர்ச்சகர் ஆக்க முடியவில்லை. ஏற்கெனவே இரண்டு பேர் மட்டும் ஆகம விதிகள் பின்பற்றப்படாத கோவில்களில்தான் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் அர்ச்சகர் பயிற்சிப் பெற்றவர்களை அர்ச்சகர் ஆக்குவோம் என்று கூறியிருந்தாலும் 2015ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பு ஆகம விதிகளை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டு விட்ட நிலையில் இதைச் செய்வதற்கு பெரும் தடைகள் எழுந்து நிற்கின்றன. ஆகம விதிகளைப் பின்பற்றாத சிறிய கோவில்களில் மட்டும் முதல்கட்டமாக ஏற்கெனவே பயிற்சி பெற்ற தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட அர்ச்சகர்களை அர்ச்சகராக்குவதாக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்திருக்கிறார்.
கேரள தேவஸ்வம் போர்டு பார்ப்பன, பார்ப்பனரல்லாத சட்ட நிபுணர்கள் மற்றும் தொடர்புடையவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. பெரியார் கருவறை நுழைவுப் போராட்டத்தை ஏன் கையில் எடுத்தார் என்பதை இப்போது புரிந்து கொள்ளலாம். பார்ப்பன ஆதிக்கத்தின் உயிர் மய்யம் அங்கேதான் இருக்கிறது என்பது மீண்டும் மீண்டும் உறுதிபடுத்தப்பட்டு வருகிறது.
பார்ப்பனரல்லாதார் ஏற்கெனவே கோயில்களில் அர்ச்சகளாகி விட்டார்கள் என்றும் பெரியார் இயக்கத்தினர் கூறுவது பொய் என்றும் தொண்டை கிழிய கத்தும் அர்ஜுன் சம்பத்துகள் இந்த அய்யப்பன் கோவில் வழக்கை திரும்பி பார்ப்பது நல்லது.
- விடுதலை இராசேந்திரன்