இரிக் வேத காலம்:

ஆரியர்கள் கி.மு. 1500 முதல் இந்தியா வந்தனர் எனினும் இரிக் வேதகாலம் என்பது கிட்டைட் – மிட்டானி ஒப்பந்தத்துக்கு(கி.மு.1380) பிற்பட்டதுதான்(1) எனக் கொண்டு அதன் காலம் கி.மு. 1200 முதல் கி.மு. 1000 வரை எனவும் யசூர், சாம, அதர்வண வேதங்களின் காலம் கி.மு. 1000 முதல் கி.மு. 800 வரை எனவும் வரையறை செய்யப்பட்டுள்ளது. ஆரிய இனக் குழுக்கள் இந்தியா வந்த பொழுது அவை திரேதாயுகத்தின் இறுதியில், துவாபர யுகத்தின் தொடக்கத்தில் இருந்தன. அன்று இணைமணம் இருந்தது. ஆடுமாடு மேய்ப்பவர்களாக அவர்கள் இந்தியாவில் நுழைந்தனர். அன்றே ஆடுமாடு வடிவத்தில் சொத்துரிமை இருந்ததால் ஆண்வழிச்சமூகம் உருவாகி இருந்தது. ஆனால் கண அமைப்பும் அகமணமுறையும் இருந்து வந்தன. இந்த நிலை கி.மு. 1200க்கு முன்பிருந்து கி.மு. 800 வரை நீடித்தது.

rig vedakaala ariyargalவேளாண்மையும் உலோகப் பயன்பாடும் அதிகரித்துத் தொழில்கள் வளர்ச்சியடைந்த நிலையில்தான் இதில் மாற்றங்கள் தோன்றின. கண அமைப்பும் அகமணமுறையும் அழியத் துவங்கி இணைமணம் ஒருதார மணமாக மாறத்தொடங்கியது. தொழில் பிரிவுகளும், வகுப்பு என்ற வருணமும் உருவாகத் தொடங்கின. ஆனால் இரிக் வேத காலத்தில் இவை இருக்கவில்லை. இரிக் வேத காலத்தில் கண அமைப்பும், அகமணமுறையும், இணைமணமும், ஆண்வழிச்சமூகமும் இருந்து வந்தது என்பதை இரிக்வேத காலப்பாடல்கள் உறுதி செய்கின்றன. அன்று கண அமைப்பும், அகமணமுறையும் வலிமையாக இருந்தன. அதனால் அன்று இருந்த இணைமணக் குடும்ப அமைப்பிலும் சமூகத்திலும் பெண் ஆணுக்குச் சமமான உரிமை பெற்றவளாக இருந்து வந்தாள். கண அமைப்பும், அகமண முறையும் இல்லாதுபோய் ஒருதார மணக்குடும்பம் உருவாகி, கற்பு புனிதமானதாகக் கட்டமைக்கப்பட்ட பொழுதுதான் அவள் ஆணுக்கு அடிமையானாள்.

கிரேக்க, உரோம இனக்குழு கால மக்கள் அமைப்புகள்:

அரசு உருவாவதற்கு முந்தைய காலத்தில் கிரேக்க, உரோம இனக்குழுக்கள் மூன்று அதிகார அமைப்புகளைக்கொண்டிருந்தன. அவை நிரந்தர அதிகாரம் பெற்ற பேரவை (Bouli), மக்கள் மன்றம் (Agora), இராணுவத் தளபதி (பசீலியசு) ஆகியன. இந்த பசீலியசுதான் அரசனாக ஆனான். இவை பற்றி அறிவது இரிக் வேதகால மக்கள் அமைப்புகளைப் புரிந்துகொள்ள வழி வகுக்கும்.

நிரந்தர அதிகாரம் பெற்ற பேரவை (Bouli):

ஆதியில் இது கணத் தலைவர்களைக் கொண்டதாக இருந்தது. தொடக்கத்தில் தேர்த்தெடுக்கப்பட்டு வந்த கணத் தலைவர்கள் நாளடைவில் நியமிக்கப் பட்டார்கள். இந்த நியமன முறை பிரபுத்துவத்தன்மையை வளர்க்கவும் பலப்படுத்தவும் வாய்ப்பாக அமைந்தது. மாவீரர் காலத்தில் கணத் தலைவர்களைக் கொண்ட இப்பேரவை பிரபுக்களைக் கொண்டதாக ஆகிக்கொண்டிருந்தது இந்தப் பேரவை முக்கிய விடயங்களில் இறுதி முடிவை எடுத்தது. இந்தப் பேரவை தான் தொடர்ந்து கூடி வந்தது. மக்கள் மன்றத்தையும் இதுவே கூட்டியது. அரசு உருவான பொழுது இந்தப் பேரவை செனட் எனப்படும் பிரபுக்கள் அவையாக மாறியது.

மக்கள் மன்றம் (Agora):

இந்த மக்கள் மன்றத்தில் அனைத்து உறுப்பினர்களும் பங்கெடுக்கவும், பேசவும் உரிமை பெற்றிருந்தனர். இந்த மன்றம் எடுக்கும் முடிவு சர்வ சக்தி கொண்டது, இறுதியானது. கையைத் தூக்கிக் காட்டுவதன் மூலம் முடிவுகள் எடுக்கப்பட்டன. மக்களிடமிருந்து மேம்பட்ட, தனிப்பட்ட பொது அதிகாரம் எதுவும் இதுவரை உருவாகவில்லை என்பதையும், தொல்பழங்கால மக்களாட்சி இன்னும் முழு மலர்ச்சியில் இருந்தது என்பதையும் மக்கள் மன்றத்தின் இருப்பு தெரியப்படுத்துகிறது. ஆனால் மக்கள் மன்றம் அவ்வப்பொழுதுதான் கூட்டப்பட்டது. பேரவைதான் தொடர்ந்து இருந்து வந்தது. முக்கிய விடயங்களில் மக்களின் ஆதரவைப் பெறுவது ஒரு அவசியத் தேவையாக இருந்தது. அதன் காரணமாக, முக்கிய விடயங்களில் முடிவெடுக்க இந்த மக்கள் மன்றத்தைப் பேரவை கூட்டியது.

இராணுவத் தளபதி (பசீலியசு):

இப்பதவிக்குரியவர்கள் முதலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால், இப்பதவி பிற்காலத்தில் பொதுவாகவே தந்தை உரிமையின் கீழ் மகனுக்கு அல்லது புதல்வர்கள் ஒருவனுக்கு வழங்கப்பட்டது. அதன்பின்னர் பேரவை, மக்கள் மன்றம் போன்றவற்றால், தேர்வு உறுதி செய்யப்பட்டது. இவன் அரசன் அல்ல. இராணுவத்தளபதி மட்டுமே. கிரேக்கர்களின் தலைவனாக இலியத்தில் (lliad) வரும் அகமெம்னான் அரசனாக இல்லை. அவன் குலக்குழுக் கூட்டின் இராணுவத் தளபதியாகவே காட்சியளிக்கிறான். கிரேக்கர்களிடையே தகராறு ஏற்பட்ட பொழுது ‘ஒடினியசு’ நமக்கு ஒரு தளபதியே இருக்கட்டும் எனவும், அவனுக்குக் கட்டுப்பட்டு, நாம் அனைவரும் செயல்பட வேண்டும் எனவும் கிரேக்கர்களைக் கேட்டுக் கொள்கிறான். டிராய் நகர முற்றுகையின் போது நடைபெறும் பேரவையினுடைய மக்கள் மன்றக் கூட்ட நடவடிக்கைகள் மக்களாட்சித் தன்மை கொண்டவையாகவே இருந்தன. ஆகவே பசீலியசு என்பவன் மக்களாட்சித் தன்மை கொண்ட ஒரு குலக்குழுக் கூட்டின் இராணுவத் தளபதி மட்டுமே. அவனுக்கு இராணுவப் பணி போக, நீதிமன்ற, புரோகிதப் பணிகளும் இருந்தன. சிவில், நிர்வாகப் பணிகள் எதுவும் அவனுக்கு இருக்கவில்லை. மாவீரர் காலத்தைச் சார்ந்த பசீலியசு என்பவன் இராணுவத் தலைவன், நீதிபதி, உயர்ந்த புரோகிதன் என அரிசுடாட்டில் (Aristottle) குறிப்பிடுகிறார். ஆகவே அக்கால பசீலியசுக்கு அரசாங்க அதிகாரம் எதுவும் இல்லை(2). இராணுவத் தலைவன் தான் பிற்காலத்தில் அரசனாக ஆனான். புரோகிதர் பணியையும் அவனே தொடக்கத்தில் செய்து வந்தான். அதன்பின்தான் அது தனிப் பணியாக ஆனது.

இரிக் வேத கால மக்கள் அமைப்புகள்:

இரிக் வேதம் முதலான வேத இலக்கியங்கள் ‘விடத’, சபை, சமிதி ஆகிய அமைப்புகளைப்பற்றிக் குறிப்பிடுகின்றன. இதில் விடத என்பது மிகப்பழைய அமைப்பு. இரிக் வேத காலத்தில் ‘விடத’ என்ற அமைப்பு செல்வாக்கு பெற்று இருந்தது எனவும் பிற்காலத்தில் சபை, சமிதி ஆகியன பெருவழக்காக இருந்தன எனவும் ஆர்.எசு. சர்மா குறிப்பிடுகிறார்(3). விடத அமைப்பில் பெண்களும் கலந்து கொண்டனர். இரிக், அதர்வணம் பற்றிய நூல்கள் அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும்பொழுது, அதன் நடவடிக்கைகளில் பெண்கள் கலந்து கொண்டது குறித்து ஏழு இடங்களில் சொல்லப்பட்டுள்ளது எனவும் ‘விடத’ வின் நடவடிக்கைகள் அனைத்திலும் பெண்கள் ஈடுபட்டது நமக்குத் தெரிகிறது எனவும் அதன் நடவடிக்கைகளில் ஆடவருக்கும் பெண்டிருக்கும் சரி சமமான வாய்ப்புகள் இருந்தன எனவும், அன்றைய திருமணச் சடங்கில் பெண்ணை வாழ்த்தும் பொழுது சிறந்த மனைவியாக, தாயாக மட்டுமின்றி ‘விடத’ வில் பேசும் ஆற்றல் பெற்றவளாகவும் இருப்பாளாக எனச்சொல்லப்பட்டுள்ளதாகவும், இரிக்-அதர்வண காலங்களுக்குப் பொருந்தாப் பிற்காலத்தில் பொது வாழ்வில் பெண்கள் முக்கியப்பங்கை வகிப்பதற்கான உரிமைகளை இழந்தனர் எனவும் சர்மா கூறுகிறார்(4)..

‘விடத’ என்ற சொல்லுக்கான பொருள் குறித்து ‘எந்தவகையான அலுவலையும் கவனித்து முடிவு செய்வது’ என ஓல்டன்பர்க் கூறுகிறார் எனவும், பழங்குடி மக்களின் செயல்கள் நடைபெறுவதற்கு வேண்டிய சட்டங்களையும் அவசர சட்டங்களையும் ‘விடத’ நிறைவேற்றியது எனவும், உற்பத்திப்பொருள்களை விடத பிரித்து வழங்கியது எனவும், விடத இராணுவ நடவடிக்கைகளையும், மதச்சடங்குகளையும் செயல்படுத்தி வந்தது எனவும் விடத வில் இருந்த மக்கள்தான் போர்த்தலைவனையும் தேர்ந்தெடுத்தனர் என ஊகிக்கலாம் எனவும் ஒட்டுமொத்தமாக இராணுவம், மதம், சமுதாயம் போன்ற அனைத்தும் சம்பந்தப்பட்ட பல செயல்களில் விடத ஈடுபட்டது எனவும் பெண்களைவிட ஆண்கள் உயர்வானவர்கள் என்ற கருத்து உருவாகாத காலத்தில் மிகத் தொன்மையான சமுதாயத் தேவைகளுக்கு ஏற்ற அமைப்பாக விடத இருந்து வந்தது எனவும் இறுதியாக பிராமணர், சத்திரியர் என்ற பிரிவுகள் உருவாகாத காலத்தில், விடத ஒரு சிறந்த அமைப்பாக விளங்கிற்று எனவும் சர்மா கூறுகிறார்(5). ஆகவே விடத-வில் மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். ஆண் பெண் இருவருக்கும் சம உரிமை இருந்தது.

மக்கள் மன்றம் தான் விடத அமைப்பு:

விடத என்பது கிரேக்க, உரோம இனக்குழுக்களில் இருந்த மூன்று அமைப்புகளில் ‘மக்கள் மன்றம்’ என்ற மக்கள் அனைவரும் கலந்துகொள்ளும் அமைப்பாக இருந்தது எனக் கருதலாம். இரிக் அதர்வண காலம் வரை அதாவது கி.மு. 800 வரை விடத அமைப்பு இருந்து வந்தது. அதுவரை பெண்கள் ஆண்களுக்குச் சமமாக இருந்து வந்தனர். சொத்துரிமையால் கண அமைப்பும், அகமணமுறையும் உடையும்வரை பெண்கள் சம உரிமை உடையவர்களாகவே இருந்து வந்துள்ளனர் என்பதை விடத பற்றிய தரவுகள் தெரிவிக்கின்றன. சொத்துரிமையும் தொழில் வளர்ச்சியும் ஏற்பட்டு கணம் குலம் முதலியனவும் அதற்கு அடிப்படையாக இருந்து வந்த அகமணமுறையும் அழிவுக்கு உள்ளாகி, ஒருதார மணக் குடும்பமும், கற்பைப் புனிதமாகக் கருதும் சூழ்நிலையும் வந்த போது பெண்கள் உரிமை இழந்து ஆணுக்கு அடிமையானார்கள் என்பதை விடத அமைப்பு உறுதி செய்கிறது.

கணத்தலைவர்களின் சபை:

சபை என்ற சொல் இரிக் வேதத்தில் எட்டு தடவை வருகிறது எனவும், ‘சபாபதி’ என்ற சபைக்கு போகும் அருகதை உடைய பெண் குறித்து இரிக் வேத இறுதிக்காலப் பாடல் குறிப்பிடுகிறது என்பதால் இந்த சபைகளில் பெண்களும் கலந்துகொண்டனர் எனவும், சபை என்பது காலத்தால் மிகவும் முந்தையது, தொன்மையானது, பூர்வீகமானது எனவும் கூறுகிறார் சர்மா(6). மேலும் அவர் சபை குறித்துப் பல தரவுகளைத் தந்துள்ளார். ஆடு மாடுகளின் மூர்க்கத்தனத்தைக் குறைப்பது குறித்துச் சபையினர் விவாதித்தனர், பகடை ஆடினர், கடவுளை வழிபட்டனர், பலிகள் கொடுத்தனர். தொடக்கத்தில் அச்சபையில் மகளிரும் கலந்து கொண்டனர். பிற்காலத்தில் மகளிர் கலந்து கொள்ளும் பழக்கம் கைவிடப்பட்டது. பின்னர் சமுதாயத்தில் பெரிதும் மதிக்கப்பட்டவராகவும், உயர்குடியினராகவும் இருந்தவர்கள் சபையில் இருந்தனர். படிப்பு தோற்றம், ஒழுக்கம் ஆகியவற்றில் சிறந்தவர்கள் சபைகளில் இருந்ததால் அவர்கள் சபய, சபாகக என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டனர். நாளடைவில் குதிரையும் தேரும் உடையவர்களே அதிகாரம் வகிப்பவர்களாகவும், சபை உறுப்பினர்களாகவும் இருந்தனர். பிற்காலத்தில் அவர்கள் அரசனுக்கு ஆலோசனை கூறுபவர்களாக ஆனார்கள். சபையில் சிற்றரசர்கள் மந்தைக் கூட்டம்போலக் கூடியிருந்ததாக சதபத பிராமணம் கூறுகிறது(7). இதனைப் பிந்தைய காலம் எனலாம். உயர் குடியினர், குதிரையும் தேரும் உடையவர்கள், சிற்றரசர்கள் ஆகியோர் மட்டும் கலந்துகொண்டனர் எனில் அதனை ‘நிரந்தர அதிகாரம் பெற்ற பேரவை (Bouli)’ எனப்படும் கணத்தலைவர்களின் சபை எனக் கருதலாம்.

சபைக்கு அரசியல் அலுவல்கள் மட்டுமின்றி நிர்வாகப் பொறுப்புகளும் இருந்தன. நீதி வழங்கும் வேலைகளையும் சபை செய்து வந்தது. பெரும் பணக்காரர்களும் செல்வாக்கு உடையவர்களும் தண்டனைகளிலிருந்து தப்ப முடியவில்லை. சபையின் நீதி வழங்கும் இயல்பு பிற்காலத்திலும் தொடர்ந்து இருந்து வந்தது. சபை கூறும் அறிவுரையை அரசன் மிக முக்கியமாகக் கருதி பெரிதும் மதித்தான். சபை உறுப்பினர்களின் ஆதரவு இன்றி அவனால் இயங்க இயலாத நிலை இருந்தது எனலாம். இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும்பொழுது சபை என்பது கணத்தலைவர்களின் நிரந்தர அதிகாரம் பெற்ற பேரவை (Bouli) ஆக, அதாவது கணத்தின் தலைவர்களைக் கொண்ட அமைப்பாக சபை இருந்தது எனலாம். முதலில் கணத்தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர், பின் அப்பதவி நியமனப் பதவியாகவும் இறுதியில் பரம்பரைப் பதவியாகவும் ஆகி பிரபுக்களின் அவையாக அது மாறிப் போனது. சமிதி என்பது இரிக் வேத காலத்திற்கு பிறகு உருவானது. ஆகவே இரிக் வேத காலம் முதல் அதர்வண வேத காலம் வரை விடத, சபை ஆகிய அமைப்புகள் வலிமையோடு இருந்தன எனவும் இதில் விடத என்பது கிரேக்க உரோம இனக்குழுக்களில் இருந்த மக்கள் மன்றமாகவும் (Agora), சபை என்பது கணத்தலைவர்களின் நிரந்தர அதிகாரம் பெற்ற பேரவை(Bouli) ஆகவும் இருந்தது எனவும் உறுதிபடக்கூறலாம்.

பெண்களும் சனநாயக உரிமையும்:

விடத, சபை ஆகிய இரண்டிலுமே தொடக்கத்தில் பெண்கள் பங்கெடுத்துள்ளனர். சபை என்பது கணத் தலைவர்களின் அமைப்பு. தொடக்கத்தில் பெண்கள்(சபாபதி) கணத்தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு சபையில் கலந்து கொண்டிருந்தனர் என்பதும், பின் அப்பதவி நியமனமாகவும், பின் பரம்பரைப் பதவியாகவும் மாறிய போது அதில் பெண்கள் பங்கெடுக்கவில்லை எனவும் தெரிகிறது. ஆனால் மக்கள் மன்றத்தில் பெண்கள் அவ்வமைப்பு இருக்கும்வரை பங்கெடுத்தனர் எனலாம். இத்தரவுகள் கி.மு. 800 வரை கண அமைப்பும் அகமணமுறையும் இணை மணமுறையும் இருந்து வந்தது என்பதை உறுதி செய்கின்றன. அதன் பின்னர் வேளாண்மையும், தொழிலும் பெருகி சொத்துடமை வளர்ந்து தொழில் பிரிவுகளும், வகுப்பு என்ற வருணமும் உருவாகிய பொழுது, ஒருதார மணக் குடும்பமும், அரசும் உருவாகியது எனலாம்.

இரிக் அதர்வண வேதகாலம் வரை பெண்கள் ஆண்களுக்குச் சமமான உரிமையோடு இருந்தனர் என்பது அன்று கண அமைப்பும், அகமண முறையும் வலிமையோடு இருந்தன என்பதை உறுதி செய்கின்றன. இரிக் வேதகாலப் பாடல்கள் தொகுக்கப்பட்டவை என்பதாலும் அவை செல்வம் வேண்டியும் போரில் வெற்றி பெற வேண்டியும் பாடப்பட்டவை என்பதாலும் விடத, சபை முதலியன குறித்தப் பாடல்களும், பெண் உரிமை குறித்தப் பாக்களும் இடம் பெறாமல் இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே கி.மு. 800 வரை அதாவது இரிக் அதர்வண காலம் வரை, வருணமெனும் வகுப்பு இருக்கவில்லை. அதன் பிறகுதான் அவை உருவாகின என்பதை விடத, சபை குறித்தத் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன. அதுவரை கண அமைப்பு வலுவாக இருந்துள்ளது.

குருக்கள், மத்திரர்கள், வகிகாக்கள் ஆகியவற்றில் இருந்த பின் தங்கிய கணங்களில் உள்ள மக்கள் வருணங்களை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள், ஒருவர் ஒருநாள் பிராமணராகவும், இன்னொரு நாள் சத்திரியராகவும் வேறொரு நாள் சூத்திரராகவும் பின் அடுத்த நாள் மீண்டும் பிராமணராகவும் ஆகின்றனர் எனவும் அங்கு பெண்களுக்குச் சுதந்திரம் இருக்கிறது எனவும் எல்லோரும் உண்டு களித்து வாழ்கிறார்கள் எனவும் அவர்கள் செய்வது பாவகாரியம் என சுமிருதிகளையும், சாந்தி பர்வத்தையும் எழுதியவர்கள் கூறுகிறார்கள் எனவும் சௌபூதி, காதா கணங்களில் உள்ள பெண்கள் தங்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொள்கிறார்கள் என அலெக்சாண்டர் கால கிரேக்கர்கள் கூறுவதாகவும் எசு. ஏ. டாங்கே எழுதுகிறார்(8). வட மேற்கில், ஒரே குடும்பத்தின் சகோதரர்களில் ஒருவர் வேளாளராகவும், இன்னொருவர் படை வீரராகவும்(இழிதொழில்), நாவிதராகவும் இருந்த போதிலும் அவர் பிராமணருக்குரிய தொழிலையும் செய்வதை கிழக்கில் உள்ளவர் பழித்துரைத்தனர். வடமேற்கு எல்லைப்புறத்துப் பெண்கள் அடங்கி, ஒடுங்கி நடக்கவில்லை. புதியவர்கள் முன்னிலையில் வெட்கமோ, முதியவர்கள் முன்னிலையில் பணிவோ காட்டுவதில்லை…… ஆண் பெண் இருபாலரும் இறைச்சி உண்டனர்; கடுமையான மதுபானங்கள் பருகினர்; பலர் பார்த்து மகிழும்படி ஆடையற்ற நிலையில் ஆடல் நிகழ்த்தினர். இத்தகைய பழக்க வழக்கங்கள் எல்லாம் கிழக்கத்திய பிராமணர்களுக்கு ஆபாசமாகத் தோன்றின எனக் கூறுகிறார் டி.டி. கோசாம்பி(9).

எசு. ஏ. டாங்கே, டி. டி. கோசாம்பி ஆகியவர்கள் குறிப்பிடுகிற காலம் என்பது கி.மு. 6ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 4ஆம் நூற்றாண்டு வரையாகும். ஆகவே அக்காலகட்ட வடமேற்கு, சிந்துவெளிப்பகுதி இனக்குழுக்களில், குரு, மத்திரர் இனக்குழுக்களில், வகுப்புகளோ, தொழில் பிரிவுகளோ தெளிவாக உருவாகாத காலத்தில் இருந்த இனக்குழுக்களில் பெண்கள் ஆண்களுக்கு இணையான முழு உரிமையும், சுதந்திரமும் கொண்டவர்களாக இருந்துள்ளனர் என்பதை இச்செய்திகள் உறுதி செய்கின்றன. அன்று அங்கு வருணம் எனப்படும் வகுப்புகளோ, தொழில் பிரிவுகளோ உருவாகி இருக்கவில்லை; அனைவரும் அனைத்துத் தொழில்களையும் செய்து வந்துள்ளனர். இணைமணம்தான் இருந்து வந்துள்ளது; கண அமைப்பும், அகமணமுறையும்தான் இருந்து வந்துள்ளன. ஆகவே அங்கு ஒருதார மணமுறையோ, நவீனக்குடும்பமோ, கற்பு புனிதமானது போன்ற கருத்துகளோ உருவாகி இருக்கவில்லை. கி.மு. 4ஆம் நூற்றாண்டுவரை வடமேற்குப் பகுதிகளில், சிந்துவெளிப்பகுதிகளில் வகுப்புகளோ, தொழில் பிரிவுகளோ உருவாகவில்லை என்பதும் கண அமைப்பும், அகமணமுறையும் இருந்தது என்பதும், பெண்கள் ஆண்களுக்குச் சமமாக இருந்து வந்துள்ளனர் என்பதும், அனைவரும் அனைத்துத் தொழில்களையும் செய்து வந்தனர் என்பதும் கி.மு. 800 வரை, அதாவது இரிக் அதர்வண வேதகாலம் வரை பெண்கள் ஆண்களுக்குச் சமமான உரிமையோடு இருந்து வந்துள்ளனர் என்பதையும் அன்று கண அமைப்பும், அகமண முறையும் வலிமையோடு இருந்துள்ளன என்பதையும் உறுதி செய்கின்றன.

இரிக் வேதப் பாடல்களும் புருட சூக்தமும்

இரிக் வேதகாலப் பாடல்கள் 10 மண்டலங்களைக் கொண்டதாகவும் 191 சூக்தங்களையும், 10,522 வேதப் பாடல்களையும் கொண்டதாகவும் உள்ளது(10). இவை நாகரிக வளர்ச்சி பெற்ற மக்களின் இலக்கியத் தரமிக்க பாடல்கள் அல்ல. இவை இனக்குழு கால மக்களின் நாட்டார் பாடல்கள். இவற்றில் இருப்பது போன்ற கருத்துகளைக் கொண்ட பாடல்களை, உலகில் உள்ள வேறு சில இனக்குழு காலப் பழங்குடிச் சமூகங்களும் பாடியுள்ளன. சுமேரியருடை திருமுறைகள், பாபிலோனியப் புலம்பல் பாடல்கள், சீனர்களது வேள்விப் பாடல்கள், கிரேக்கர்களது இறை வேண்டல் பாடல்கள் ஆகியன இவற்றில் உள்ள கருத்துகளைக் கொண்டனவாக உள்ளன(11). இவற்றின் கருத்துகளை தத்துவ முதிர்ச்சியின் வெளிப்பாடுகளாகக் காண இயலாது எனக் கூறவந்த இரைசு டேவிட்சு (T.W. Rhys Davids), ‘உண்மையில் கூறப்போனால் வேத நம்பிக்கைகள் அனைத்தும் மூடத்தனமானவை, குழப்பமானவை, தத்துவ முதிர்ச்சியின் வெளிப்பாடுகளாக இவற்றைக் கருதுவது இயலாத காரியம்’ எனக் கூறுகிறார்(12). வேத காலப்பாடல்கள் ‘அறிவுத் தாகத்தால் தூண்டப்பட்டிருந்தாலும், அவர்களது சிந்தனைகள் பேதமை நிறைந்ததாகவும், பொருளற்றதாகவும், சிறுபிள்ளைத் தனமானதாகவும் இருக்கின்றன’ எனவும், ‘ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் வேதகாலக் கவிஞர்களும், முனிவர்களும் விட்டுச்சென்ற புனைவுகள் மானிடவியல் பண்பாட்டுக்குச் சிறந்த கொடை எனக் கூறமுடியாது’ எனவும் கூறுகிறார் பசாசு(13).

இந்த 10 மண்டலங்களில் இரண்டு முதல் ஏழு வரையான மண்டலங்கள் மிகப்பழமையான பாடல்களைக் கொண்டவை எனவும் முதலாம் பத்தாம் மண்டலங்களில் காணப்படும் பாடல்கள் பெரும்பாலும் பிந்தையவை எனவும் கூறுகிறார் கா. கைலாசநாத குருக்கள்(14). முதல் ஒன்பது மண்டலங்களை விட, பத்தாவது மண்டலத்தின் சொற்பிரயோகம் பிற்காலத்தைச்சேர்ந்தது என அறிஞர் அனைவரும் கருதுகின்றனர் என்கிறார் இராகுல சாங்கிருத்தியாயன்(15). ஆகவே பத்தாவது மண்டலம் பிற்காலத்தது என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். முதல் ஒன்பது மண்டலங்களில் நால் வருணங்களைப் பற்றிய குறிப்பேதும் இல்லை. ஆனால் பிற்காலத்தைய பத்தாவது மண்டலத்தின் 90ஆவது சூக்தம் நால் வருணம் பற்றிப் பேசுகிறது.

புருட சூக்தம்:

இரிசி நாராயணன் என்பவரால் எழுதப்பட்ட இந்த 90ஆவது சூக்தத்தில் 16 பாடல்கள் உள்ளன. முதல் பாடல், ‘புருடன் ஆயிரம் தலைகளும், ஆயிரம் கண்களும், ஆயிரம் கால்களும் உள்ளவன். அவன் புவியின் எல்லாத் திசைகளிலும் பரவி பத்து விரல்கள் அளவுள்ள இடத்தை ஆக்கிரமிக்கிறான் – நிரப்புகிறான்’ எனக் கூறுகிறது. இந்த புருடனிடமிருந்து இரிக், யசூர், சாம வேதங்கள் பிறந்தன எனவும் அவனிடமிருந்து வன மிருகங்களும், பிற உயிரினங்களும் பிறந்தன எனவும், அவனிடமிருந்து குதிரைகளும், கால்நடைகளும், ஆடுகளும் பிறந்தன எனவும் கூறப்படுகிறது. அதன் 12ஆவது பாடல், ‘பிராமணன் அவன் வாயாயிருந்தான், அவனுடைய கைகளிலிருந்து இராசன்யன் கற்பிக்கப்பட்டான், அவனுடைய வாமங்கள் வைசியனாயிற்று, அவனுடைய பாதங்களிலிருந்து ஏனையோர் பிறந்தனர்’ எனக் கூறுகிறது. ஆங்கிலத்தில் இப்பாடல், ‘The Brahman was his mouth, of both his arms was the Rajanya made. His thighs became the vaisya, from his feet the Sudra was produced’ எனச் சொல்லப்பட்டுள்ளது(16).

புருடன் என்பவன் பிரபஞ்சம் தோன்றியதற்கு மூலகாரணமாக இருந்தவன். பிராமணன் என்பவன் கடவுளுக்குத் துதிகளைக்கூறும் வாயாக இருந்தான். இராசன்யன் என்பவன் அதிகாரத்தையும், ஆயுதங்களையும் கையாள்பவன். வைசியன் என்பவன் வர்த்தகன், வேளாண்மை செய்பவன். ஏனையோர் என்பவர்கள் சூத்திரர்கள், திடம், வலிமை, செயல்திறன் கொண்டவர்கள், இவர்கள் உழைப்பால்தான் முழு சமுதாயமும் வாழ்கிறது எனவும், இரிக் வேதத்தில் இப்பாடல் ஒன்றுதான் வருணங்கள் குறித்துப் கூறுகிறது எனவும் விளக்கம் தரப்பட்டுள்ளது. இப்பாடல் புருச சூக்தம் என அழைக்கப்படுகிறது எனவும் இப்பாடல் வேத காலத்திற்குப் பிறகு எழுதப்பட்டிருக்கலாம் எனவும் பொருள் விளக்கத்தில் சொல்லப்பட்டுள்ளது(17).

ஆகவே 10ஆவது மண்டலம் பிற்காலத்தது என்பதும் இந்த புருட சூக்தம் வேத காலத்திற்குப்பின் எழுதப்பட்டிருக்கலாம் என்பதும் இதைத்தவிர வேறு எந்த பாடலும் வருணம் குறித்துப் பேசவில்லை என்பதும் இப்பாடல் பிற்காலத்தில் இடைச்செருகலாகச் சேர்க்கப்பட்டது என்ற கருத்தை வலியுறுத்துகிறது.

இரிக் வேத காலத்தில் தொழில்பிரிவுகள் இல்லை:

இருக்கு வேத காலத்தில் தொழில்பிரிவுகள் தோன்றியிருக்கவில்லை. நான் ஒரு கவிஞன், என் தந்தை மருத்துவர், என் தாய் அரவைக்காரி என இரிக் வேத காலத்தின் இறுதிக் காலப் பாடல்(9.112) ஒன்று கூறுகிறது(18). இரிக் வேதத்தில் புருச சூக்தம் ஒன்றைத்தவிர வேறெந்தப் பகுதியிலும் சாதி குறித்த குறிப்புகள் இல்லை எனவும் அக்காலத்தில் தந்தை தாய் மகன் ஆகிய மூவரும் வேறு வேறான தொழில்களில் ஈடுபடுவர் எனவும் அக்கால மக்கள் பரம்பரையாகத் தொழில் செய்து வந்தனர் என்ற கொள்கை பொருந்தாது எனவும் கூறுகிறார் கா. கைலாசநாத குருக்கள்(19). இரிக் வேத காலம் என்பது மேய்ச்சல் நில வாழ்வை அடிப்படையாகக் கொண்ட இனக்குழு காலம். அப்பொழுது தொழில்பிரிவுகளோ, வருணம் எனப்படும் வகுப்புகளோ தோன்றும் அளவு தொழில் வளர்ச்சி என்பது இருக்க இயலாது.

இரிக் வேத காலத்தில் மரவேலை செய்த தச்சர்களும், உலோக வேலை செய்யும் கருமான்களும், தோல் பதனிடும் தொழில் செய்வோர்களும் இருந்தனர். பாய் முடைதல், துணி நெய்தல் போன்றவற்றை பெண்கள் செய்தனர். கூத்தாடி, அம்பட்டர் போன்றோர் இருந்தனர். ஆனால் இவர்களுக்குள் ஏற்றத்தாழ்வு எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை எனக் கூறுகிறார் கா. கைலாசநாத குருக்கள்(20). அப்பொழுது பல்வேறு தொழில் செய்பவர்கள் இருந்தனர். ஆனால் அன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே, பல்வேறு தொழில்களைச் செய்பவர்களாக இருந்தனர். ஆகவே அவர்களிடையே ஏற்றத்தாழ்வுகள் இருக்கவில்லை. அன்று தொழில்கள் வளர்ச்சியடைந்து தொழில் பிரிவுகளோ, வகுப்புகளோ தோன்றி இருக்கவில்லை. இது குறித்து இராகுல சாங்கிருத்தியாயன், உபநிடத காலங்களிலும் அதன் பின்னரும் பிராமண, சத்திரியரிடையே தோன்றிய வேற்றுமை இரிக்வேத காலத்தில் இருந்ததில்லை எனவும் நான்கு வருணங்கள் குறித்த கருத்து பின்னாளில் தோன்றியதென்பது தெளிவு எனவும் தொடக்க கால ஆரிய மக்களில் பிராமணர், சத்திரியர் ஆகியோரிடையே சாப்பாட்டு விடயத்திலும், திருமண உறவு விடயத்திலும் எவ்வித வித்தியாசமும் இருக்கவில்லை எனவும் கூறுகிறார்(21).

மேலும் அவர், ஆரியரிடையே ஒற்றுமை ஏற்படுத்தும் முயற்சியை இரிசிகள் செய்து வந்துள்ளனர் எனவும், இரிக் வேதத்தின் 10ஆம் மண்டலத்தின் இறுதிப்பாடல், ‘ஆரிய மக்களின் மந்திரம் ஒன்றாக இருக்கட்டும், இவர்களின் அமைப்பு ஒன்றாக இருக்கட்டும், சித்தமும் மனமும் ஒன்றாக இருக்கட்டும்…….. உங்கள் பணி சம்மாக இருக்கட்டும், உங்கள் இதயங்கள் ஒன்றுபோல் இருக்கட்டும், உங்கள் மனங்கள் அழகாக ஒன்றிணையும்படி ஒரே நிலையில் இருக்கட்டும்’ எனக் கூறுகிறது எனவும் கூறியுள்ளார்(22). இராகுல சாங்கிருத்தியாயன் அவர்களது கருத்துப்படி உபநிடத காலங்களிலும் அதன் பின்னரும் தான் வருணம் எனப்படும் வகுப்பு வேறுபாடுகள் தோன்றி இருந்தன. உபநிடத காலத்திற்கு முந்தைய காலங்களில் வருண வேறுபாடுகளோ, வகுப்பு வேறுபாடுகளோ இருக்கவில்லை.

“இரிக் வேதம் நிலையான குடியேற்றங்களைப் பற்றியோ (சிந்துவெளி நகரங்களைத்தவிர) இயல், எழுத்து, கட்டட அமைப்பு குறித்தோ ஒன்றும் கூறவில்லை…… தாங்கள் வென்ற நகர நாகரிகங்களைவிட ஆரியர்கள் குறைந்த பண்பாடும் காட்டுமிராண்டித்தனம் நிறைந்தும் காணப்பட்டது தெளிவாகிறது” எனக் கூறுகிறார் டி.டி. கோசாம்பி(23). இரிக் வேத காலத்தில் பாரம்பரிய தொழில் செய்தல், சாதித்(வருணத்) தன்மையை உணர்த்தும் தன்மை அக்காலத்தில் அமலுக்கு வரவில்லை. ஒரே குடும்பத்திற்குள்ளும் பலவிதத் தொழில்களைச் செய்யும் தன்மை அக்காலத்தில் இருந்தது எனக் கூறுகிறார் வெண்டி டோனிகர்(24). ஆகவே இரிக் வேத காலத்தில் மக்கள் இனக்குழு நிலையில்தான் வாழ்ந்தனர் என்பதும் அன்று தொழில் பிரிவுகள் உருவாகவில்லை என்பதும் உறுதி ஆகிறது. இரிக்வேத காலம் என்பது கி.மு. 1200 - 1000 வரையான காலகட்டம். அதன்பின் வந்த யசூர் வேத காலத்திலும் வேத சமூகத்தின் அடிப்படை என்பது மேய்ச்சல் நில வாழ்வாகவே இருந்தது எனக் கூறுகிறார் டி.டி. கோசாம்பி(25). உபநிடத காலங்களிலும் அதன் பின்னரும்தான் பிராமண, சத்திரியரிடையே வேற்றுமைகள் தோன்றின எனக் கூறுகிறார் இராகுல சாங்கிருத்தியாயன்.

ஆகவே கி.மு. 800 வரை, இரும்பு உலோகம் பயன்பாட்டுக்கு வரும்வரை தொழில் வளர்ச்சியோ, தொழில் பிரிவுகளோ உருவாகாத நிலைதான் இருந்து வந்தது. இனக்குழுகால மேய்ச்சல் நில வாழ்க்கைதான் ஆரியர்களது சமூக வாழ்வின் அடிப்படையாக இருந்தது. ஆகவே கா.கைலாசநாத குருக்கள், இராகுல சாங்கிருத்தியாயன், டி.டி. கோசாம்பி போன்றவர்களின் கருத்துப்படியும், இரிக்வேதகாலப் பாடல்கள்படியும், மேய்ச்சல் நில வாழ்வை அடிப்படையாகக் கொண்ட இனக்குழு கால வாழ்நிலைப்படியும் உபநிடத காலம் வரை வகுப்புகளோ வருணங்களோ தோன்றியிருக்கவில்லை.

வேதங்களில் மாற்றங்கள்:

இரிக் வேதப்பாடல்கள் தொடக்கம் முதல் இன்றுவரை ஓரளவு அதிக மாற்றம் இல்லாது உள்ளன. ஆனால் பிராமணங்கள், அதர்வண வேதம் முதலிய வேத இலக்கியங்கள் கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்குப்பின் பெருத்த மாறுதல்களுக்கும், திருத்தங்களுக்கும் இடைச்செருகல்களுக்கும் உள்ளாகியுள்ளன என்பதில் ஐயமில்லை. ஆகவே அவற்றில் உள்ள தரவுகள் நம்பிக்கைக்குரியன அல்ல. ஆகவே இரிக் வேதப் பாடல்கள் தரும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டுதான் வேத காலம் குறித்த முடிவுகளுக்கு வரமுடியும்.

இரிக் வேத காலப் பாடல்களில் முதலாவதும், 10ஆம் மண்டலமும் பிற்காலத்தவை என்பதையும், 10ஆம் மண்டலத்தில் உள்ள புருட சூக்தம் போன்றன இடைச்செருகல்கள் என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இரிக் வேத காலப் பாடல்கள் கி.மு. 1200 முதல் கி.மு. 1000 வரையான 200 வருடங்கள் குறித்த வரலாற்றை மட்டுமே கூறுகின்றன. ஆகவே அதற்கு முந்தைய காலம் குறித்தும் அதன் பிந்தைய காலம் குறித்தும் ஒரு தெளிவான முடிவுக்கு வர இயலாத நிலைதான் உள்ளது. அக்காலகட்டம் குறித்து ஊகங்களின் மூலமே நாம் முடிவு செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். அதர்வண வேதம், ஆரண்யங்கள், பிராமணங்கள், உபநிடதங்கள், இதிகாசங்கள், புத்த சமண நூல்கள் போன்ற பல்வேறு நூல்கள் இக்காலம் குறித்து நிறையத் தரவுகளைத் தந்த போதிலும் அவற்றில் நிறையக் குழப்பங்களும் தெளிவின்மையும் நிறைந்துள்ளன. சான்றாக பிராமணங்கள் குறித்து சிலருடைய கருத்துக்களைப் பார்ப்போம்.

பிராமணங்கள்: யாகங்கள் செய்வதற்கான, செய்விப்பதற்கான விரிவான விளக்கங்களின் தொகுப்புதான் பிராமணங்கள். பிராமணர்கள் இந்த பிராமணங்களைக் கொண்டு தங்களது சமூக மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள முயன்றார்கள். யாகங்களுக்கான தத்துவ விளக்கம் அவற்றில் இல்லை. ஆனால் பிராமணங்கள், பிராமணப் புரோகிதர்களின் தகுநிலையை எட்டாத உயரத்துக்கு ஏற்றி வைத்ததோடு, கடவுளுக்குச் சமமாகவும் அவர்களை இருக்க வைத்தது எனக் கூறுகிறார் பிரேம்நாத் பசாசு(26).

பி.கே. கோசு, ‘இந்துத்துவத்தில் ஏதாவது அருமை பெருமை இருக்குமென்றால் அவை இரிக் வேதத்தில் குறிப்பால் உணர்த்தப்பட்டன. அதேவேளையில் இந்துத்துவத்தில் உள்ள அத்தனை இழிவுகளும், அருவருக்கத்தக்கவைகளும் பிராமணங்களில் வெளிப்படையாகக் கூறப்பட்டுள்ளன’ எனக் கூறுகிறார்(27). டாக்டர் தாசுகுப்தா, ‘வறட்டுத்தனமான சட்டங்கள், மனம் போன போக்கில் புனைவு செய்யப்பட்ட குறியீடுகள், வரையறையற்ற கற்பனைகள், யாக நடைமுறை பற்றிய விளக்கங்கள்’ இவைதான் பிராமணங்கள் என்கிறார்(28). லேவி என்பார், ‘பிராமணங்களின் இறையியல் கருத்துக்களைவிட, பண்பற்ற, பகுத்தறிவற்ற, ஆன்ம இழிநிலையை வெளிப்படுத்தும் வேறு ஒன்றைக் கண்பது அரிதினும் அரிது. பிராமணங்கள் கூறும் இறையியலில் ஒழுக்கப் பண்புக்கு இடமே இல்லை’ எனக் கூறுகிறார்(29). ஆகவே பிராமணங்கள் என்பன தங்கள் வருமானத்தை பெருக்கிக்vகொள்ளவும், தாங்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் எனத் தம்பட்டம் அடித்துக்கொள்ளவும், மற்றவர்களைக் கீழானவர்கள் எனக் கூறிக்கொள்ளவும் கி.மு.முதல் நூற்றாண்டுக்குப்பின்னர் பிராமணர்களால் திருத்தப்பட்ட, மாற்றப்பட்ட, இடைச்செருகல்களால் நிறைக்கப்பட்ட, மூடத்தனமான புரட்டல்களையும் புனைவுகளையும் கொண்ட நூல்கள். ஆகவே இவற்றில் உண்மைத்தரவுகளைக் காண்பது அரிது.

அகமணமுறையும் ஒருதார மணமும்:

உலகமெங்கும் இனக்குழுகாலச் சமூகங்களில் கண ஆட்சி அமைப்பும் அதற்கு அடிப்படையான அகமணமுறையும் இருந்துள்ளது. இந்த கண ஆட்சி அமைப்பும் அகமணமுறையும் இந்திய ஆரிய இனக்குழுவிலும் இருந்துள்ளது. வேத இலக்கியம் கூறும் யுகங்கள் என்பன இனக்குழு வாழ்வின் வளர்ச்சிக்கட்டங்கள். இரிக் வேதகாலம் என்பது திரேத யுகத்துக்கு பிந்தைய துவாபர யுகக் காலம். அதாவது அநாகரிக காலத்தின் இடைக்காலம். அன்று இந்திய ஆரிய இனக்குழு ஆண்வழிச் சமூகமாக இருந்த போதும், கண ஆட்சி அமைப்பும், அகமணமுறையும் வலுவாக இருந்துள்ளன. இணைமணமுறை இருந்துள்ளது. கண ஆட்சி அமைப்பும், அகமணமுறையும் வலுவாக இருக்கும் பொழுது பெண்கள் ஆண்களுக்குச் சமமான உரிமைகளைக் கொண்டவர்களாக இருப்பர். அவ்வாறு பெண்கள் சம உரிமையுடன் இருந்தனர் என்பதற்கு ஆரிய இனக்குழுவில் இருந்த விடத, சபை போன்ற மக்கள் அமைப்புகள் சான்றுகளாக இருக்கின்றன. இந்த மக்கள் அமைப்புகள் கிரேக்க உரோம இனக்குழுக்களில் இருந்த அமைப்புகளைப்போன்றவை. இந்த மக்கள் அமைப்புகளில் பெண்கள் சம உரிமை கொண்டவர்களாக பங்கெடுத்துள்ளனர் என்பதை வேத இலக்கியங்கள் உறுதி செய்கின்றன. இரிக்-அதர்வண காலம் வரை அதாவது கி.மு. 800 வரை, இவ்வமைப்புகள் வலுவோடு இயங்கி பெண்களுக்குச் சம உரிமைகளை வழங்கி வந்துள்ளன. அதன் மூலம் இந்திய ஆரிய இனக்குழுக்களிடையே கி.மு. 800 வரை கண ஆட்சி அமைப்பும், அகமணமுறையும் வலுவோடு இருந்து வந்துள்ளன என்பது உறுதியாகிறது.

இந்திய ஆரிய இனக் குழுக்களின் தொடக்ககாலம் முதல் கி.மு. 800 வரையான காலகட்டத்தில் கண அமைப்பு, அகமணமுறை ஆகியன வலுவாக இருந்தன என்பதன் மூலம், அதுவரை வருணம் எனப்படும் வகுப்புகளோ, தொழில்பிரிவுகளோ உருவாகவில்லை என்பது உறுதியாகிறது. கங்கைச்சமவெளி தவிர்த்த வடமேற்கு மாகாணங்கள், சிந்துவெளிப்பகுதி போன்றவற்றில் இந்நிலை கி.மு. 4ஆம் நூற்றாண்டுவரை இருந்து வந்தது எனலாம். சொத்துரிமையும், வகுப்புகளும், தொழில்பிரிவுகளும் உருவாகும் பொழுதுதான் கண அமைப்பும், அகமணமுறையும் அழிந்து போகிறது. இணைமண முறை இல்லாது போய் அவ்விடத்தில் நவீன ஒருதார மணக் குடும்பமும் அரசும் உருவாகின்றன. கண அமைப்பு, அகமணமுறை ஆகியனவற்றை அழித்து அதன்மேல்தான் நாகரிக கால நவீன ஒருதார மணக் குடும்பம் உருவாகிறது. ஆகையால் நாகரிக கால நவீன ஒருதார மணக் குடும்பங்களில் அகமணமுறை இருக்க வாய்ப்பே இல்லை. உலகமெங்கும் நாகரிக காலத்தில் உருவான ஒருதார மணக்குடும்பங்களில் அகமணமுறை இருக்கவில்லை. பழந்தமிழகத்தில் இருந்த சங்ககால ஒருதார மணக்குடும்பங்களிலும் அகமணமுறை இருக்கவில்லை. ஆகவே வட இந்தியாவிலும் நாகரிக காலத்தில் உருவான ஒருதார மணக்குடும்பங்களில் அகமணமுறை இருந்திருக்க முடியாது. இருக்கவில்லை.

பார்வை:

1. முற்கால இந்தியா, இரோமிலாதாப்பர், தமிழில் அ. முதுகுன்றன், NCBH, 2016, பக்: 211.
2. குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம், பி. ஏங்கெல்சு, பாரதி புத்தகாலயம், 2008, பக்: 131-133 & பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்: 201, 202.
3. பழங்கால இந்தியாவில் அரசியல் கொள்கைகள், நிலையங்கள், சில தோற்றங்கள், ஆர்.எசு.சர்மா(Ram Sharan Sharma), தமிழாக்கம் - சோமலே, NCBH, 2010, பக்: 97, 98.
4. பக்: 99 - 102.
5. பக்: 103-119.
6. பக்: 120, 121.
7. பக்: 120-129.
8. பண்டைக்கால இந்தியா, எசு.ஏ. டாங்கே, அலைகள் வெளியீட்டகம், சூன் 2003, பக்:168,170.
9. பண்டைய இந்தியா, டி.டி. கோசாம்பி(D.D.Kosambi), தமிழாக்கம் ஆர்.எசு. நாராயணன், NCBH, 2006, பக்: 260
10. இரிக் வேதம், தமிழ் – ஆங்கிலம், பகுதி-3, செவ்விதாக்கம் - வீ.அரசு, அலைகள் வெளியீட்டகம், டிசம்பர்-2004, பக்: 671.
11, 12, 13. இந்திய வரலாற்றில் பகவத் கீதை, பிரேம்நாத் பசாசு(Premnath Bazaz), கே.சுப்ரமணியன் - தமிழாக்கம், விடியல் பதிப்பகம், சனவரி -2016, பக்; 49, 50.
14. வடமொழி இலக்கிய வரலாறு, கா.கைலாசநாத குருக்கள், காலச்சுவடு பதிப்பகம், நவம்பர் - 2012, பக்:48.
15.இரிக்வேதகால ஆரியர்கள், இராகுல சாங்கிருத்தியாயன்(Ragula Sankrityayan), ஏ.ஜி. எத்திராஜுலு, அலைகள் வெளியீட்டகம், டிசம்பர் – 2004, பக்:39.
16, 17. இரிக் வேதம், தமிழ் – ஆங்கிலம், பகுதி-3, செவ்விதாக்கம் - வீ.அரசு, அலைகள் வெளியீட்டகம், டிசம்பர்-2004, பக்: 485- 489.
18. இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு, வெண்டி டோனிகர்(Wendy Doniger), தமிழில் க.பூரணசந்திரன், எதிர் வெளியீடு, 2016. பக்: 135.
19. வடமொழி இலக்கிய வரலாறு, கா.கைலாசநாத குருக்கள், காலச்சுவடு பதிப்பகம், 2012, பக்: 59.
20. “ “ “ பக்:63,64.
21, 22. இரிக்வேதகால ஆரியர்கள், இராகுல சாங்கிருத்தியாயன், ஏ.ஜி. எத்திராஜுலு, அலைகள் வெளியீட்டகம், டிசம்பர் – 2004, பக்: 39, 40.
23. பண்டைய இந்தியா, டி.டி. கோசாம்பி, தமிழாக்கம் ஆர்.எசு. நாராயணன், NCBH, 2006, பக்: 144.
24. இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு, வெண்டி டோனிகர், க.பூரணசந்திரன் – தமிழாக்கம், எதிர் வெளியீடு, சூன்-2016, பக்: 149
25. பண்டைய இந்தியா, டி.டி. கோசாம்பி, தமிழாக்கம் ஆர்.எசு. நாராயணன், NCBH, 2006, பக்:153.
26. இந்திய வரலாற்றில் பகவத் கீதை, பிரேம்நாத் பசாசு, கே.சுப்ரமணியன் - தமிழாக்கம், விடியல் பதிப்பகம், சனவரி -2016, பக்; 57, 58.
27, 28, 29. “ “ “ பக்: 59-61.

- கணியன்பாலன், ஈரோடு