சிறையில் பயங்கரங்கள்:
1907ஆம் ஆண்டு ஐக்கிய மாநிலத்திலுள்ள புரட்சியாளர்கள் அலகாபாத்தில் “சுயராஜ்யா’’ என்ற பத்திரிகையைத் துவக்கினர். வங்காளத்தில் அரவிந்த கோஷ¨ம், சுவாமி விவேகானந்தரின் சகோதரர் பூவென் தத்தாவும் இணைந்து ஒரு பத்திரிகை நடத்தினர். மகாராஷ்டிராவில் “கால்’’ என்ற பத்திரிகையும், திலகரின் கேசரியும் புரட்சிகளைத் தூண்டின. இதனால் ஒன்பது பத்திரிகைகளின் அதிபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் நால்வர் அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டனர். முதல் உலகப் போர்க் காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்கெதிராக சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு நூற்றுக்கணக்கான புரட்சியாளர்கள் தண்டிக்கப்பட்டனர். இவர்களில் பலர் தூக்கிலிடப்பட்டனர். பலர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். நீண்ட தண்டனை பெற்றவர்கள் அந்தமானுக்கு நாடு கடத்தப்பட்டனர். 1907இல் அந்தமான் சிறையில் அப்போது இருந்தவர்கள் அறுபது பேர் மட்டுமே.
கைதிகள் அறுபது பேர் மட்டுமே இருந்ததால், சிறையை புரட்சியாளர்களைச் சித்ரவதை செய்யும் கூடாரமாக மாற்றினர். இதன்மூலம் இங்குவரும் புரட்சியாளர்களுக்கு பயத்தையும் பீதியையும் உண்டாக்கிட சிறை அதிகாரிகள் திட்டமிட்டனர். சிறைச்சாலையில் செக்குகளை அமைத்து அதில் மாடுகளுக்குப் பதில் கைதிகளைப் பூட்டி செக்கிழுக்கச் செய்தனர். கையில் சவுக்கோடு ஒரு சிறைவார்டன் செக்கிழுப் போரைக் கண்காணித்துச் சுற்றிவருவான். செக்கிழுப்பதில் களைப்போ, சோர்வோ ஏற்பட்டால் மனிதரை மாட்டை அடிப்பது போல் சவுக்கால் அடித்து வதைப்பார்கள்.
புரட்சியாளர்களுக்கு சிறையில் மற்றொரு வேலையும் தரப்பட்டது. கற்றாழையை வெட்டி வந்து, அதை அடித்து உரித்துக் கயிறு திரிக்க வேண்டும். இதனால் கைகள் கொப்பளங்களாகும். புண் இருந்தாலும் கட்டாயப்படுத்தி வேலை செய்யவைப்பர். சிறை அதிகாரிகளின் கொடூரச்செயல்கள் புரட்சியாளர்களிடம் பயத்தை ஏற்படுத்துவதற்குப்பதில் எதிர்த்து நிற்கும் துணிவையே ஏற்படுத்தியது. கீழ்படிந்து கேவலமாக உயிர் வாழ்வதைவிட எதிர்த்துச் செத்து மடிவதே மேல் என்று அவர்கள் முடிவுக்கு வந்தனர்.
சிறைக் கைதிகள் தங்கள் கௌரவத்தை இழந்து அதிகாரிகளுக்குத் தலைவணங்கவும் அடியோடு மறுத்து விட்டனர். இதனால் சிறை அதிகாரிகளுக்கும் கைதிகளுக்கும் பல மோதல்கள் நடந்தன. இதில் பல கைதிகள் கொல்லப்பட்டனர். லாகூர் சதிவழக்குக் கைதிகளில் ஒருவரான பந்தாசிங் வலிமையான உடல் கொண்டவர். மிகுந்த பலசாலி இவரைத் தனியாக ஒரு இருப்புக் கூண்டில் அடைத்து வைத்தனர். ஒருநாள் சிறை அதிகாரிகளும் வார்டன்களும் சேர்ந்து கூண்டிற்குள்ளிருந்த பந்தாசிங்கை அடித்தே கொன்று விட்டனர்.
மாண்டலே சதிவழக்குக் கைதியான ராமகிருஷ்ணா தனக்கு மதச்சடங்குகளைச் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து உண்ணாவிரதமிருந்தார். பிடிவாதமாகப் பலநாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தார்.
இந்து புஷன்ராய் என்ற பதினெட்டு வயதுள்ள துடிப்பும் உணர்ச்சி வேகமும் உள்ள ஒரு இளைஞன் சிறை அதிகாரி களின் கொடூரச் சித்ரவதைகளைத் தாங்க முடியாமல் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டான். இவன்தனது உறவினர் ஒருவருக்குச் கடிதம் எழுதினான். அதில், சிறை அதிகாரிகளின் அவமதிப்புகளையும் சித்ரவதைகளையும் தாங்கிக் கொண்டு உயிர்வாழ்வது ஒன்றும் உயர்ந்ததாகவோ, சிறந்ததாகவோ எனக்குப்படவில்லை என்று கூறியிருந்தான்.
உல்காங்கர் தத்தா என்பவர் மிகவும் படித்தவர். வெடிகுண்டு செய்வதில் நிபுணர். அந்தமான் சிறை வார்டன்களின் பயங்கரச் சித்ரவதைகளால் அவருக்குப் பைத்தியம் பிடித்து இறந்தார்.
கனடாவிலிருந்து கைது செய்து கொண்டு வரப்பட்ட ‘கதர்’ கட்சியினர் சிறை அதிகாரிகளுக்குக் கீழ்ப் படிய மறுத்தனர். சிறையில் பெரும் போராட்டம் நடத்தினர். இதில் ஏழுபேரை சிறை அதிகாரிகள் அடித்தே கொன்றனர். இது மிகவும் பயங்கரமான சம்பவமாகும்.
1857இல் நடந்த முதல் சுதந்திரப் போரில் மூவாயிரத்துக்கும் அதிகமான தேசபக்திமிக்க இந்தியச் சிப்பாய்களை இந்த அந்தமான சிறையில் கொண்டு வந்து அடைத்து வைத்திருந்தனர். அதில் பாரக்பூரின் பதினான்காவது சுதேசி காலாட் படையைச் சேர்ந்த “தூத்நாத்திவாரி’’ என்பவர் தனது நூற்றிமுப்பது சிப்பாய்களுடன் சிறையிலிருந்து தப்பிச் சென்று விட்டார் ஆனால் இடையிலுள்ள பெருங்கடலைக் கடந்து தாய்நாட்டை அடைவது லேசான விசயமல்ல. அக்காலத்தில் அந்தமானுக்கும் இந்தியாவுக்கும் எந்தக் கப்பல் போக்குவரத்துமில்லை. அதனால் திவாரியும் அவரது சிப்பாய்களும் தப்பிப் பிழைக்க காட்டை நோக்கி ஓடினர்.
அவர்கள் கதி சிங்கத்திடமிருந்து தப்பி வேடனிடம் சிக்கிய கதியாகிவிட்டது. காட்டில் வசித்துவந்த அந்தமானின் பயங்கரமான ஆதிவாதிகள் இவர்கள் அனைவரையும் கொன்று குவித்தனர். இந்தப்படுகொலையை விவரித்துக் கூறுவதற்கு திவாரி மட்டும் எப்படியோதப்பி மீண்டும் சிறைக்கே வந்தது சேர்ந்தார்.
மற்றொரு சம்பவத்தில் பீகாரின் தினாப்பூரைச் சேர்ந்த சிப்பாய் நாராயணன் என்பவரை சிறிய ஒருகப்பலில் ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவுக்குக் கொண்டு சென்றனர். அப்போது சிறை அதிகாரிகளிடமிருந்து தப்பிக்க கப்பலிலிருந்து நாரயணன் கடலில் குதித்துவிட்டார். நீந்திச் சென்ற அவரைச் சுட்டுக்கொன்று ஜல சமாதியாக்கிவிட்டனர். இவ்வாறு வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத எண்ணற்ற கொடுமைகள் நடந்தன. தாய்த்திரு நாட்டின் விடுதலைக்குப் போராடிய ஒரே குற்றத்திற்காக அவர்கள் சித்ரவதைக்கு ஆளாகினர். அந்தமான சிறையில் பிரிட்டிஷார் ஆடிய பேயாட்டத்தின் ஒருசிறு பகுதிதான் இங்கு கூறப்பட்டுள்ளது.
1939ஆம் ஆண்டு செல்லுலர் சிறையில் எனது உடல் நிலை மிகவும் மோசமாகிவிட்டது. மரணத்தின் வாயிலுக்கே நான் சென்று விட்டேன். காந்திஜி, ஜனாப் ஜின்னா, சவுகத் அலிஆகியோரின் பெரு முயற்சியால் நான் விடுதலை செய்யப்பட்டேன். நான் இந்திய மண்ணை மிதித்ததும் முதல்காரியமாக அந்தமான சிறையில் என் தோழர்களுக்கு ஏற்பட்ட வேதனைகள், சோதனைகள் பற்றி எழுதினேன். அவர்கள் சிறையில் படும் கொடும் துன்பங்கள் பற்றியும், அவர்களது ஆசைகள், கனவுகள், நம்பிக்கைகள் பற்றியும் விரிவான ஒரு நூலை எழுதி வெளியிட்டேன்.
எனது அந்த நூலில் அந்தமான் சிறையை நான் “இந்தியன் பாஸ்டில்’’ என்று வர்ணித்தேன். பிரெஞ்சுப் புரட்சியின் போது பிரெஞ்சுப் புரட்சியாளர்கள் அனைவரும் அந்த பாஸ்டில் சிறையில் தான் அடைக்கப்பட்டுக் கிடந்தார்கள். அந்தச்சிறை பின்னால் தகர்க்கப்பட்டு பிரெஞ்சுப் புரட்சியாளர்கள் விடுவிக்கப்பட்டனர். அதேபோல் அந்தமான் கைதிகளும் விடுவிக்கப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று எனது நம்பிக்கையையும் அதில் வெளியிட்டிருந்தேன். ஆனால் அந்தப் பொற்காலம் அத்தனை விரைவில் வந்து சிறைக் கதவைத்தட்டும் என்று சிறிதும் எதிர்பாக்க வில்லை. அதிலும் வங்காளச் சிங்கம் நேதாஜி உருவத்தில் அந்தப் பொற்காலத்தைக் கண்டபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
நான் ஆரூடம் கூறி சரியாக ஐந்தாண்டுகள் கூட ஆகவில்லை. வீரமிக்க இந்திய தேசியராணுவம் வெற்றி முழக்கத்தோடு அந்தமானில் வந்து இறங்கியது. “ஆசாத் இந்திய அரசின்’’ ஒப்பற்ற தலைவர் சுபாஷ் சந்திரபோஸ் 1943ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் நாள் அந்தமான் மண்ணிலிருந்து பின்வரும் அறிவிப்பை வெளியிட்டார்.
“பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியின் இரும்புப் பிடியிலிருந்து முதலில் விடுவிக்கப்பட வேண்டிய பூமி அந்தமான் தீவுதான்.’’ ஆங்கில ஆட்சியைத் தூக்கி எறிவதற்குக் கடுமையான போராட்டங்களில் ஈடுபட்ட பலநூறு போராளிகள் இங்குள்ள வெஞ்சிறைகளில் அடைபட்டு வதைபடுகிறார்கள். பிரெஞ்சுப் புரட்சி வெற்றி பெற்ற போது பாரிசிலுள்ள பாஸ்டில் சிறைச்சாலைதான் முதலில் தகர்க்கப்பட்டது. அங்கிருந்த புரட்சியாளர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.
அதே மாதிரி இந்திய விடுதலைப் போராட்டத்தின் அதிக முக்கியமான வீரர்கள் இங்குள்ளனர். அவர்கள் அனைவரையும் விடுவித்து வணங்க வேண்டியது நமது முதல் கடமையாகும். இனி நம் தாய் நாட்டின் இதரப் பகுதிகள் ஒவ்வொன்றாக விடுதலை செய்யப்படும். இருந்தாலும் முதலில் விடுதலை பெற்ற இப்புண்ணிய பூமிக்குத் தனி மகத்துவமுண்டு.
ஆங்கில ஆட்சியாளர்களின் பாவக் கரங்களால் வதைபட்டு பாரத நாட்டின் வீரத்தியாகிகள் பலர் அந்தமான் மண்ணில் புதைக்கப்பட்டுள்ளார்கள். அந்த மாவீரர்களின் நினைவாக இந்த அந்தமான் தீவு இனி “ஷாகீர்’’ என்ற பெயரிலும், நிக்கோபார் தீவு “சுயராஜ்யா’’ என்ற பெயரிலும் அழைக்கப்படும் என்று நேதாஜி அந்த அறிவிப்பில் கூறினார்.
அன்று செல்லுலர் சிறையிலிருந்து புரட்சி வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்களோடு முன்னூறு ராணுவ வீரர்களும் இருந்தனர். தாய் நாட்டை நேசித்த குற்றத்திற்காகப் பல மாவீரர்கள்சங்கிலியால் பிணைக்கப்பட்டு அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் அவமதித்துத் துன்புறுத்தப்பட்டனர். தொண்ணூறாண்டுகள் இந்தச் சிறைச்சாலை சித்ரவதைக் கூடமாக இருந்தது. இங்கு அடித்துக் கொல்லப்பட்ட இளைஞர்களும், சுட்டுக் கொல்லப்பட்டவர்களும், தூக்கிலேற்றப்பட்டவர்களும் ஏராளம். அவர்கள் ஈவிரக்கமின்றி அழிக்கப்பட்டார்கள்.
அத்தகைய தியாக மகத்துவமும், சிறப்பும் அந்தமான் சிறைக்கு உண்டு. அது தேசபக்தர்களுக்கு ஒரு புனித பீடம் சுற்றுலா செல்வோருக்கு ஒரு வரலாற்று முக்கியத்துவமுள்ள இடமாகும்.
இவ்வாறு விஜய் குமார் சின்கா குறிப்பிட்டுள்ளார்.
(இளைஞர் முழக்கம் பிப்ரவரி 2010 இதழில் வெளியான கட்டுரை)