1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி படைத் தளபதி டயர் அமிர்தசரஸ் நகர் முழுக்க பீதியையும், பதற்றத்தையும் உருவாக்கும் நோக்கில், சிப்பாய்களை வைத்து அணிவகுப்பு நடத்தினான். மாலை நான்கு மணிக்கு ரவுலட் சட்டத்தைக் கண்டித்து, ஜாலியன் வாலாபாக் பூங்கா மைதானத்தில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடினர். சத்தியாக்கிரகிகள் அமைதியான முறையில் இப்போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தனர். கொடியவன் டயர் திடீரென்று ஐம்பது படைவீரர்களை வரிசையாக நிறுத்தி, எவ்வித முன்னறிவிப்புமின்றி “சுடுங்கள்” என்று உரத்த குரலில் உத்தரவிட்டான். கூட்டம் சிதறி ஓடியது. ரத்தம்... ரத்தம்... எங்கும் ரத்தம்.

udhamsinghசுமார் ஆயிரக்கணக்கானவர்கள் கை, கால்களை இழந்தனர். பிணங்களை எடுத்துச் செல்லக்கூட யாரும் வர இயலாத அளவுக்கு பயம்... பீதி... பதற்றம். இத்தனை செயல்களுக்கும் சூத்திரதாரி பஞ்சாப் மாநில கவர்னர் மைக்கேல் ஓட்வியர். முழுமூச்சுடன் செயல்படுத்தியவன் படைத்தளபதி டயர். இச்சம்பவம் உலகையே உலுக்கியது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த உத்தம் சிங் என்ற இளைஞனுக்கு இந்நிகழ்ச்சி மிகப்பெரும் மன அதிர்வை உண்டாக்கியது. உத்தம் சிங் பஞ்சாப் மாநிலம் சுனம் நகரில் 1899 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26இல் பிறந்தான். ஏழு வயதிற்குள் தன் தாய் தந்தையாரை இழந்தான். பின்னர் ஒரே சகோதரனும் எதிர்பாராமல் மரணமடைந்தான். உத்தம் சிங் ஓர் அநாதை ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டான். மெட்ரிக் தேர்ச்சி பெற்ற இவன், 1918இல் ஆசிரமத்தை விட்டு வெளியேறினான். அதன் பின்னர் பல இடங்களில் அலைந்து திரிந்த உத்தம் சிங்கிற்கு 1919 ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் நிகழ்ச்சி பேரதிர்ச்சியூட்டியது.

ஜாலியன் வாலாபாக் நிகழ்ச்சிக்கு முழுமுதற் காரணமாகவிருந்த கவர்னர் மைக்கெல் ஓட்வியர் மீதும், ஈவிரக்கமின்றி தேசபக்தர்களை சுட்டுக் கொன்ற டயரின் மீதும் உத்தம் சிங்கிற்கு அடக்கிக் கொள்ள முடியாத கோபம் இருந்து கொண்டே இருந்தது. ஷர் சிங், உத்தம் சிங், உதன் சிங், உதே சிங், உதய் சிங், பிராங் பிரேசில், ராம் முகம்மது சிங் ஆசாத் போன்ற பல பெயர்களில் உலகெங்கும் உலவினான் உத்தம் சிங்.

1920ஆம் ஆண்டு ஆப்பிரிக்கா சென்றான். 1924இல் இந்தியா திரும்பி, பின்னர் அதே ஆண்டில் அமெரிக்கா சென்றான். அமெரிக்காவில் ‘சுதார் கட்சி’ என்ற புரட்சிகரக் கட்சியில் சங்கமித்தான். இந்த இயக்கம் இந்தியாவை விட்டு வெளியே வாழும் இந்தியர்களை ஒன்றிணைத்து இந்திய விடுதலைப் போர்க்களத்தில் இறக்கும் அமைப்பாகும். நல்ல பயிற்சியும் தொடர்பும் அமெரிக்காவில் உத்தம் சிங்கிற்குக் கிடைத்தது.

1927இல் இந்தியா வந்தான். சட்டத்திற்குப் புறம்பாக ஆயுதங்கள் வைத்திருந்ததாகக் காரணம் காட்டி, காவல் துறையால் கைது செய்யப்பட்டு, நான்கு ஆண்டுகள் முழுக்க சிறைக் கொடுமையை அனுபவித்தான். மாவீரன் பகத்சிங்கின் அர்த்தமுள்ள வாழ்க்கை இவன் நெஞ்சில் ஆழப் பதிந்திருந்தது.

1931ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி உத்தம் சிங் விடுதலை செய்யப்பட்டான். இங்கிருந்து ஜெர்மனி சென்ற பிறகு, 1934இல் லண்டன் சென்றான். உத்தம் சிங்கிற்கு ஜாலியன் வாலாபாக் நிகழ்ச்சியும், தேசபக்தர்கள் கதறக் கதறக் கொல்லப்பட்டதும், கவர்னர் ஓட்வியரின் கொலை வெறிக்கட்டளையும் நெஞ்சிலிட்ட நெருப்பாகக் கனன்று கொண்டே இருந்தது.

1940ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி மாலை 3 மணியளவில் லண்டனில் உள்ள காங்டன் அரங்கில் உயர்மட்டக் கூட்டம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. இக்கூட்டத்தில் ஓட்வியரும் மேடையில் அமர்ந்திருந்த சிறப்பு அழைப்பாளர்களில் ஒருவன். அமர முடியாமல் நின்று கொண்டிருந்த பார்வையாளர்களில் உத்தம் சிங்கும் ஒருவன். கூட்டம் முடிகிற சமயத்தில் பலர் வெளியில் செல்ல எத்தனித்துக் கொண்டிருந்தபோது ஓட்வியரைக் குறிபார்த்துச் சுட்டான் உத்தம் சிங். இரண்டு குண்டுகள் பாய்ந்த நிலையில் ஓட்வியர் மரணமடைந்தான்.

உத்தம் சிங் அதே இடத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டான். நீதிமன்றம் தூக்குத் தண்டணை அளித்தது. மேல்முறையீட்டிலும் இத்தீர்ப்பு 1940 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. ஜூலை 31ஆம்தேதி உத்தம் சிங் தூக்கிலிடப்பட்டான்.

“என்னைத் தூக்கிலிட்ட பின்னர் என்னுடைய சடலத்தை இந்தியாவிற்கு அனுப்புங்கள். என் தாய் மண்ணில்தான் நான் புதைக்கப்படவேண்டும்” என்று நீதிமன்றத்தில் கூறினான். எதைப் பற்றியும் கவலைப் படாத ஆங்கிலேய அரசு, உத்தம் சிங்கின் சடலத்தை சிறை வளாகத்திற்குள் காலி இடம் ஒன்றில் புதைத்தது.

பஞ்சாப் மாநிலம் சுல்தான்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எஸ்.சாது சிங், “உத்தம் சிங்கின் எலும்புக் கூடுகளையாவது இந்தியாவிற்கு எடுத்துவர வேண்டும்” என்று மைய அரசிடம் கேட்டுக் கொண்டார். அன்றைய பிரதமர் இந்திரா காந்தி இதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், 1975 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசு உத்தம் சிங் புதைக்கப்பட்ட இடத்தை மீண்டும் தோண்டி, மிச்சம்மீதி எலும்புக்கூடுகளை பொறுக்கிக் கட்டி இந்தியாவிற்கு அனுப்பியது.

உத்தம்சிங்கின் எலும்புக்கூடுகள் ராஜமரியாதையோடு இந்தியாவில் வரவேற்கப்பட்டு, உத்தம்சிங்கின் சொந்த ஊரில் எரியூட்டப்பட்டு, சாம்பல் கங்கை ஆற்றில் கரைக்கப்பட்டது.

(நன்றி: ஸ்டாலின் குணசேகரன் எழுதிய 'வரலாற்றுப் பாதையில்')

Pin It