மொழி ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி போலவே புள்ளிவிவரக் கணக்கியலும் ஒரு முக்கியமான ஆராய்ச்சியாகும். புள்ளியியல் துறையில் புகழ் பெற்றவர் வங்காள அறிஞர் பிரசாந்த் சந்திர மகாலானோபிஸ். இவர் இந்தியப் புள்ளியியலின் தந்தை எனப் போற்றப்படுபவர்.

                Prasanta Chandra Mahalanobisமேற்கு வங்கத் தலைநகரான கொல்கத்தாவில் 29.06.1893-ஆம் நாள், பிரபோத சந்திரர் - நிரோத்பாஷினி வாழ்விணையருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். பிரம்மோ ஆண்கள் பள்ளியில் கல்வி பயின்றார். பின்னர் கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்து இளங்கலைப் பட்டம் பெற்றார். இங்கிலாந்தின் தலைநகரமான லண்டன் மாநகரம் சென்று அங்குள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பயின்று கணிதத்திலும், இயற்பியலிலும் உயர் தகுதி பெற்றார்.

                தாயகம் திரும்பிய மகாலானோபிஸ் ‘இந்திய கல்விப்பணி’யில் சேர்ந்தார். தாம் பயின்ற கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராகப் பணிபுரிந்து கல்லூரி முதல்வராக ஓய்வு பெற்றார்.

                கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்றபோது அங்கிருந்த ‘அரசர் கல்லூரி’ நூலகத்தில் படித்த ‘பயோமெட்ரிக்’ (க்ஷiடிஅநவசiஉ) எனும் அறிவியல் இதழ் அவரது வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. வானிலை ஆய்வுக்கும் மானிடவியலுக்கும் இடையிலான ஒருவிதப் பொருத்தத்தினை விளக்கி அவ்விதழ்த் தொகுப்புகளுடன் இந்தியா திரும்பினார்.

                இந்திய அறிவியல் பேரவை நாக்பூரில் 1920-ஆம் ஆண்டு நடத்திய மாநாட்டில், ‘கொல்கத்தாவில் வாழும் ஆங்கிலோ இந்தியர் ஜனத்தொகை மீதான மானிடவியல் அளவீடுகள்’ என்னும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரையைப் படித்தார். அக்கட்டுரையில், ஆங்கிலோ இந்திய இன மக்கள்தொகை, கலாச்சார விரிவாக்கம், திருமண ஒப்பந்தங்கள், இனமாற்ற ஏற்பாடுகள், மொழித் தொடர்புகள், முதலிய பல்வேறு அடிப்படைத் தகவல்களைத் திரட்டி, அவற்றை வகைப்படுத்தி சில அரிய முடிவுகளை வெளியிட்டார். மானிடவியல் கணக்கெடுப்பில் இவரது கண்டுபிடிப்பான ‘மகாலானோபிஸ் இடைவெளி’ இன்றும் சிறப்பிடம் வகித்து வருகிறது.

                கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரி பேராசிரியராகப் பணியாற்றிய போது 1922 முதல் 1926 வரை கொல்கத்தா வானிலை ஆய்வகத்தின் அறிவியல் வல்லுநராகவும் விளங்கினார்.

                வடக்கு வங்காளத்தில் 1922-ஆம் ஆண்டு பெருவெள்ளம் ஏற்பட்டு மிகுந்த சேதம் விளைந்தது. அரசு நியமித்த நிபுணர் குழுவில் இடம் பெற்றார். கடந்த ஐம்பது ஆண்டு கால மழை அளவு, வெள்ளப் பெருக்க அளவு ஆகியவற்றைத் தொடுத்து சில முடிவுகைள வெளியிட்டார். அவர், வடக்கு வங்காளத்தில் நீர்த்தேக்கம் அமைத்து நீரை சேமிப்பதைவிட, போதுமான அளவு வடிகால் வசதிகள் கட்டப்பட வேண்டும் என்பதை அரசுக்கு பரிந்துரை செய்தார்.

                ஒரிசா மாநிலத்தில் உள்ள பிராமணி நதியில் 1926-ஆம் ஆண்டு பெருவெள்ளத்தினால் பலத்த சேதம் ஏற்பட்டது. எதிர்காலத்தில், அந்த நதியில் ஏற்படும் வெள்ளப் பெருக்கைத் தடுப்பதற்காக அமைக்கப்பட்ட நிபுணர் குழுவில் இடம் பெற்று, தமது பரிந்துரையில் முறையான அணைக்கட்டுகள் கட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

                வெள்ளச் சேதம் தடுப்பு, நீர்ப்பாசனம், மின்னாற்றல் முதலியவற்றிற்கு உதவும் வகையில் பல திட்டங்களைத் தயாரித்து அளித்தார். ஹிராகுட் நீர்மின்சாரத்திட்டம் 1957-ஆம் ஆண்டு உருவாகிட மகாலானோபிஸின் மழையளவு புள்ளிவிவரங்கள் அடிப்படையாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கச் செய்தியாகும்.

                கொல்கத்தாவில் இந்திய புள்ளியியல் ஆய்வு நிறுவனம் 1931-ஆம் ஆண்டு நிறுவப்பட பெரு முயற்சி செய்தார். ‘சங்க்யா’ (எண்) எனும் இந்தியப் புள்ளிவிவர இதழுக்கு பொறுப்பாசிரியராக விளங்கினார்.

                இவர், 1937-ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் அளித்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அரசு சணல் உற்பத்திக்கு புதிய திட்டம் தயார் செய்து வெளியிடப்பட்டது. கொல்கத்தாவில் 1938-ஆம் ஆண்டு புள்ளிவிவர ஆய்வு மாநாட்டை சிறப்பாக நடத்தினார். இந்திய அரசு நிறுவிய மத்திய புள்ளி விவர ஒருங்கமைப்பின் கௌரவ ஆலோசகராக 1949-ஆம் ஆடு நியமிக்கப் பெற்றார்.

                புள்ளிவிவரக் கணக்கியல் குறித்த முன்னூறுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை இதழ்களிலும், கருத்தரங்குகளிலும் வெளியிட்டுள்ளார்.

                லண்டன் ராயல் சொசைட்டி, அமெரிக்க பொருளாதார அளப்பியற் சங்கம், இங்கிலாந்து அரசவை புள்ளிவிவர ஆய்வுச் சங்கம், கேம்பிரிட்ஜ் ‘அரசர் கல்லூரி’ இரஷ்ய அறிவியல் கழகம் முதலிய நிறுவனங்களில் ஆய்வாளராகவும், கௌரவத் தலைவராகவும் திகழ்ந்தார்.

                இலண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் ‘வெல்டன் பதக்கமும்’, செக்கோஸ்லோவாகிய அறிவியல் கழகத்தின் தங்கப்பதக்கமும், நமது நாட்டு, ‘சர்தேவி பிரசாத சர்வாதிகாரி தங்கப்பதக்கமும், ‘துர்க்கா பிரசாத கெய்த்தான் தங்கப்பதக்கமும்’ பெற்றார். கொல்கத்தா, புதுடெல்லி, ஸ்டாக்ஹோம், சோஃபியா முதலிய பல்கலைக் கழகங்கள் கௌரவ முனைவர் பட்டம் அளித்துச் சிறப்பித்தன.

                மகாலானோபிஸ் இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் தலைவராக சிறப்பாகச் செயல்பட்டார்.

                மகாகவி இரவீந்திரநாத் தாகூருடன் இணைந்து ‘விசுவபாரதி’ காலாண்டிதழின் ஆசிரியராகவும், அப்பல்கலைக் கழகத்தின் பொதுச் செயலாளராகவும் விளங்கினார். இந்தியாவின் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டக் குழுவிலும் உறுப்பினராக விளங்கினார். இந்திய அரசு 1968-ஆம் ஆண்டு மகாலானோபிசுக்கு ‘பத்மபூஷன்’ விருது அளித்துச் சிறப்பித்தது.

                இந்திய புள்ளிவிவர ஆய்வுத் தந்தையாக விளங்கிய மகாலானோபிஸ் தமது எழுபத்தொன்பதாவது வயதில், 28.06.1972-ஆம் நாள் இயற்கை எய்தினார். அவர் மறைந்தாலும், அவரின் புள்ளிவிவர ஆய்வுமுறை வழிகாட்டியாக விளங்கும்.                

- பி.தயாளன்

Pin It