அன்றைய வங்காளத்தில் ஜெஸ்ஸீர் மாவட்டத்தில் ராருவி என்னும் கிராமத்தில் அரிச்சந்திர ரே – புவனமோகின தேவி தம்பதியினரின் மகனாக 02.08.1861 ஆம் நாள் பிறந்தார் பி.சி.ரே.

வகுப்பறையைச் சிறைச்சாலையாக எண்ணி வெளியுலகில் சுதந்திரமாகப் பறந்து திரிந்து அந்தச் சிறுவன் ஒன்பதாவது வயதில் கொல்கத்தாவில் உள்ள ஹேர் பள்ளியில் சேர்க்கப்பட்டான். ஆங்கிலம், வங்காளம், இலத்தீன், கிரேக்கம் முதலிய மொழிகளை கற்றுத் தேர்ந்தான். பலநாட்டு வரலாறுகளைப் படித்து தனது அறிவை வளர்த்துக் கொண்டான்.

‘பிரம்ம சமாஜம்’ என்ற அமைப்பு நடத்திய ஆல்பெர்ட் பள்ளியில் 1874 ஆம் ஆண்டு சேர்ந்து பயின்றான். பிரம்ம சமாஜத்தின் சமூசச் சீர்திருத்தக் கொள்கைகள் பி.சி.ரேயின் சிந்தனையை வெகுவாகப் பாதித்தன. மக்களுக்குத் தொண்டு புரிய வேண்டும், நாட்டிற்காகத் தியாகம் செய்ய வேண்டும் என்னும் உயரிய சிந்தனை உள்ளத்தில் ஏற்பட்டது. நன்கு பயின்று பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பின்னர், பண்டித ஈஸ்வர சந்திர வித்யாசாகர் நிறுவிய ‘மெட்ரோபாலிட்டன்’ என்னும் கல்வி நிறுவனத்தில் சேர்ந்து பயின்றார். அங்கு பயிலும் போது நாட்டுப் பற்றும், சுதந்திர உணர்வும் ரேயின் மனதில் தேசபக்தி அனலாய்ச் சுடர்விட்டெறிந்தது.

கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் முதன்மைக் கலை வகுப்பில் வேதியியல், இளங்கலைத் துறையில் வேதியியலும், இயற்பியலும் என ஒரே சமயத்தில் புறமாணவராகச் சென்று கல்வி பயின்றார். வேதியியல் பேராசிரியர் அலெக்சாண்டர் பெட்லரின் விரிவுரைகள் பி.சி.ரேயின் மனதில் அறிவியல் கண்ணோட்டத்தை வளர்த்தன.

குறைந்தது நான்கு மொழிகளேனும் அறிந்தவர் மட்டுமே கலந்து கொள்ளக்கூடிய போட்டித் தேர்வு. அத்தேர்வில், வங்காளம், சமஸ்கிருதம், ஆங்கிலம் இலத்தீன், கிரேக்கம் முதலிய மொழிகளில் பயிற்சிமிக்க பி.சி.ரே, ‘கில்கிறிஸ்ட் பரிசு’த் திட்டத்தின்மூலம் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற்றார். இதன் மூலம், பி.சி.ரே. இங்கிலாந்து நாட்டிற்குச் சென்று உயர் கல்வி பயிலும் வாய்ப்புப் பெற்றார்.

இலண்டன் மாநகருக்கு 1882 ஆம் ஆண்டு சென்றடைந்தார். அங்கு அவரை இந்திய தாவரவியல் அறிவியலாளர் ஜகதீச சந்திர போஸ் வரவேற்று உபசரித்தார். பிறகு, அங்குள்ள எடின்பரோ பல்கலைக் கழகத்தில்வேதியியல் இளங்கலை வகுப்பில் சேர்ந்து பயின்றார்.

கல்வி பயிலும் போதே பல்கலைக் கழகம் அறிவித்த ‘சிப்பாய்க் கலகத்தின் முன்னரும் பின்னரும் இந்தியா” எனும் தலைப்பில் கட்டுரைப் போட்டியில் கலந்துகொண்டார். பி.சி.ரேக்கு பரிசு கிடைக்கவில்லை. ஆயினும் தகுதியுள்ள கட்டுரையாக, பல்கலைக் கழக முதல்வர் சர்.வில்லியம் மியூரின் மதிப்பினைப் பெற்றது. அடிமை இந்தியாவில் அந்நியர் ஆதிக்கம் குறித்து அங்கத உணர்வுடன் சுவைபட எழுதப்பட்ட கட்டுரை அது. பின்னர், 1886 ஆம் ஆணடு ‘இந்திய குறித்த கட்டுரை’ எழுதி வெளியிட்டார்.

வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற கடுமையாக உழைத்து டி.எஸ்.சி. பட்டம் பெற்றார்.

மாங்னீசிய சல்ஃபேட்டுகளின் ஓரினக் கலவைகள் மற்றும் மூலக் கூறுக் கூட்டமைப்புகள் குறித்த இவரது ஆய்விற்கு பல்கலைக் கழகம் ‘ஹோப்’ பரிசுக்கான கல்வி உதவித் தொகை வழங்கியது. உதவித் தொகை மூலம் தமது ஆய்வை மேலும் ஓராண்டு தொடர்ந்து மேற்கொண்டார். பி.சி.ரே. பல்கலைக் கழக வேதியியல் சங்க இணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1888 ஆம் ஆண்டு தாயகம் திரும்பினார். இந்தியாவில் பணி கிடைக்காமல் பல தொல்லைகளை எதிர்கொண்டார். கடும் முயற்சிகளுக்குப் பின்னர், கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் வேதியியல் துறையில் உதவிப் பேராசிரியராகச் சேர்ந்தார். மாணவர்களுக்கு வேதியியல் குறித்து விரிவாக எடுத்துரைத்து, புதிய கண்டுபிடிப்புகளில் துணிவுடன் ஈடுபடத் தூண்டினார்.

பி.சி.ரே. அறிவியலாளர் மட்டுமல்ல, மிகச் சிறந்த இலக்கிய ஆர்வலர். சேக்ஸ்பியர், எமர்சன், மைக்கேல், இரவீந்திரநாத் தாகூர் முதலியர்வகளின் இலக்கியப் படைப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கி, இலக்கியத்தின் மீது ஈடுபாடு கொள்ளச் செய்தார்.

கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியின் நூலகம், இவருக்கு தகவல் களஞ்சியமாகவும், அரும்புதையலாகவும் விளங்கியது.

பி.சி.ரே.1896 ஆம் ஆண்டு ‘மெர்க்குரஸ் நைட்ரேட்’ என்ற வேதிப்பொருளை கண்டுபிடித்தார். மேலும், தமது ஆராய்ச்சிகள் மூலம் பல்வேறு ‘நைட்ரேட்டு’ உப்புகள் தயார் செய்தார். ஆதனால், இவரை பிரஞ்சு வேதியியலாளர் எச்.இ.ஆர்ம்ஸ்ராங், ‘நைட்ரேட்டுகளின் தலைவர்’, என மதிப்பீடு செய்து அறிவித்தார்.

இந்தியாவின் பழங்கால ஓலைச் சுவடிகளிலிருந்தும், இலண்டனில் உள்ள இந்திய அலுவலக ஆவணங்களிலிருந்தும் அறிவியல் வரலாற்றுக் குறிப்புகளைத் திரட்டி ‘இந்து வேதியியல் வரலாறு’ எனும் நூலை வெளியிட்டார்.

கல்விச் சுற்றுலாவிற்காகவும், 1912 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பேரரசின் பல்கலைக் கழகப் பேரவை மாநாட்டிற்காகவும் இருமுறை அய்ரோப்பியப் பயணம் செய்தார். துர்ஹாம் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டமும், பிரிட்டிஷ் அரசின் சி.ஜ.இ. எனும் ‘இந்தியப் பேரரசின் உறுதோழன்’ விருதும் வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.

இந்திய வேதியியல் துறையின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டார். கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியின் வேதியியல் துறைத் தலைவராகவும் பணியாற்றினார்.

இங்கிலாந்து நாட்டு ‘செயல்வீரன்’ விருது 1919 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது. இவரது கடும் முயற்சியினாலும், அயராத உழைப்பினாலும், 1924 ஆம் ஆண்டு ‘இந்திய வேதியியல் கழகம்’ உருவானது.

தம் வருங்கால வருமானம் முழுவதையும் அறிவியல் தொழில் நுட்ப பல்கலைக் கழகக் கல்லூரியின் வேதியியல் துறை வளர்ச்சிக்கு வழங்கினார். தாம் பணியிலிருந்து 1936 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற போது கிடைத்த ஒரு இலட்சத்து எண்பதாயிரம் ரூபாயை இந்திய வேதியியல் கழகத்திற்கு நன்கொடையாக வழங்கினார். மேலும், ‘இந்திய ரசவாதி நாகர்ஜீனர்’ பெயரில் வேதியியல் பாடத்தில் சிறந்து விளங்கும் ஒரு மாணவருக்குத் தங்கப்பதக்கமும், ரொக்கப்பரிசும் வழங்க அறக்கட்டளையை நிறுவினார். தாவரவியல், உயிரியியல் ஆராய்ச்சிக்கு ‘சர் அகத்தோஷ் முகர்ஜி’ பெயரில் பத்தாயிரம் ரூபாய் அளித்து அறக்கட்டளை நிறுவினார்.

‘ஒரு வங்காள வேதியியலரின் வாழ்வும் அனுபவங்களும்’ எனும் சுயசரிதை நூலை எழுதினார் பி.சி.ரே. தனிமங்கள் ஆவர்த்தன அட்டவணை தயாரித்த இரஷ்ய வேதியியலர் மெண்டலிஃப் தமது அறிவியல் கண்டு பிடிப்புகளை தம் தாய் மொழியிலேயே தொகுத்தளித்தார். பிரெஞ்சு, இத்தாலி முதலிய நாடுகளில் அறிவியல் அவரவர் தாய்மொழியிலேயே கற்பிக்கப்படுகிறது. இக்கருத்தினை வலியுறுத்திய பி.சி.ரே. வங்காள மொழி வளர்ச்சிக்கும் அரும்பாடுபட்டார். ‘வங்காள இலக்கிய மாநாட்டுப்’ பொதுத் தலைவராகவும் செயல்பட்டார். “அறிவு நூல்கள் யாவும் அவரவர் தாய் மொழியில் படைக்கப்பட்டிருந்தாலே எவருக்கும் எளிதில் புரியும்” என்பதை ஓயாமல் பறைசாற்றியவர் பி.சி.ரே.!

“அறிவியலுக்காகப் பொறுத்திருக்கலாம், சுயராஜ்யத்திற்காகக் காத்திருக்க இயலாது” - என்னும் முழக்கத்துடன் வெள்ளையரை எதிர்த்து நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட வேதியியல் அறிவியலாளர். பி.சி.ரே. 16.06.1944 ஆம் நாள் இயற்கை எய்தினார். இவரது அறிவியல் பணி இந்திய அறிவியல் வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும்!

Pin It