புதுடெல்லியில் இயங்கிவரும் ‘அறிவியல், தொழிலக ஆய்வுக்குழுமம்’ எனும் அமைப்பினை தோற்றுவித்த மூலவர் பேராசிரியர் சாந்தி சொருப் பட்னாகர்.

shanti swarup bhatnagarபஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஷாஹ்பூர் மாவட்டத்தில் பேரா என்னும் கிராமத்தில் 1894 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21 ஆம் நாள் பிறந்தார். தந்தையார் பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலம், வரலாறு முதலிய பாடங்களைக் கற்பிக்கும் பேராசிரியராகப் பணிபுரிந்தார். தாயார் ஸ்ரீமதி பார்வதி பட்னாகர், ரூர்க்கி கல்லூரியின் முதல்வராக விளங்கியவர்.

சாந்தி சொரூப் பட்னாகர் தமது ஏழாம் வயதில் ‘மக்தாவ்’ எனும் தனியார் பள்ளியிலும், பின்னர் சிக்கந்தராபாத் ஏ.வி.உயர்நிலைப் பள்ளியிலும், லாகூர் தயால்சிங் உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். உருது மொழி இலக்கணத்திலும், கவிதை இலக்கியத்திலும் புலமை பெற்றார். படிக்கும் காலத்திலேயே இலண்டன் ராயல் கழகச் சான்றோனாகவும் (FRS) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமது பதினேழாம் வயதிலேயே ‘லீடர்’ (Leader) எனும் இதழில் முதல் ஆய்வுக் கட்டுரையை எழுதி வெளியிட்டார். மின்கலன்களில் கரித்துண்டுக்கு பதிலாக எஞ்சிய இரும்புச்சாறு மற்றும் கரிப்பொருள் மிகுந்த கசடுகளிலிருந்து வெப்ப அழுத்த முறையில் தயாரித்த மாற்றுப் பொருளினைப் பயன்படுத்தலாம் என்பதை இளம் வயதிலேயே தெரிவித்தார்.

லாகூர் தயால்சிங் கல்லூரியில், பல்கலைக்கழகக் கல்வி உதவித்தொகை பெற்று மேற்படிப்பைத் தொடர்ந்தார்.

லாகூரில் இயங்கிவந்த சரஸ்வதி நாடகக்குழுவில் சேர்ந்து நாடகக் கலைஞராகவும், உருது நாடக ஆசிரியராகவும் புகழ் பெற்றார். இவர் எழுதிய ‘காமதி’ (அதிசய ஊழியன்) எனும் ஓரங்க நாடகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அரங்கேறியது. அந்த நாடகத்திற்கு 1912 ஆம் ஆண்டின் சிறந்த நாடக விருது சாந்தி சொரூப் பட்னாகருக்கு கிடைத்தது.

கலை இலக்கிய ஈடுபாடு தமது அறிவியல் ஆராய்ச்சிக்கு இடையூறாக இல்லாமல் பார்த்துக் கொண்டார். ‘மாதுளம் பழச்சாறு கொதித்தல்’ குறித்து 1912 ஆம் ஆண்டு இவர் எழுதிய ஆய்வுரை ‘ரௌஷ்னி’ என்னும் இதழில் வெளியிடப்பட்டது.

பஞ்சாப் பல்கலைக் கழக இடைநிலைத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்றார். ஃபோர்மன் கிறித்துவக் கல்லூரியில் சேர்ந்து இயற்பியலும், வேதியியலும் கற்று 1916 ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டம் பெற்றார்.

மேல்நாட்டு அணுநுட்ப ஆய்வியல் நிபுணர்களான கே.டி.காம்ப்டன், பி.எச்.காம்ப்டன் முதலியவர்களுடன் இணைந்து ஆராய்ச்சி அனுபவமிக்க பேராசிரியர் ஜே.எம்.பெனாடே (பிரின்ஸ்டன்) நெறிமுறைப்படி வேதியியல் ‘பரப்புவிசை’ (Surface Tension) குறித்து வேதியியல் முதுகலை ஆய்வு செய்தார். இவரது வேதியியல் ஆசான் பேராசிரியர் பி.கார்டர் ஸ்பீயர்ஸ் ஆவார்.

பேராசிரியர் ஆர்.ஆர்.சஹானி உதவியினால் தயால்சிங் கல்லூரி அறக்கட்டளையின் உதவித் தொகை பெற்று 1919 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லண்டனுக்குச் சென்றார். அங்கு பல்கலைக் கழகக் கல்லூரிப் பேராசிரியர் எஃப்.ஜி.டோனன் என்பவருடன் இணைந்து ஆய்வுகள் மேற்கொண்டு அறிவியல் முனைவர் (D.Sc...) பட்டம் பெற்றார். மேலும் இங்கிலாந்து நாட்டு அறிவியல் தொழிலியல் ஆய்வுத்துறை (D.S.I.R) யின் உதவித்தொகை பெற்று தமது ஆய்வுகளைத் தொடர்ந்தார்.

லண்டனில் பயின்று கொண்டிருந்தபோது, கல்லூரி விடுமுறையின்போது ஜெர்மனியில் பெர்லின் நகரில் உள்ள கெய்சர்-வில்ஹெல்ம் நிறுவனத்திலும், பாரிசில் ‘சார்பான்’ (Sorbonne) பரிசோதனைக் கூடத்தில் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். அங்கு ஆல்பிரட் ஐன்ஸ்டீன், பிளாங்க் முதலிய உலகப் புகழ் பெற்ற அறிவியலாளர்களின் தொடர்பும், நட்பும் பட்னாகருக்கு வாய்த்தது.

தாயகம் திரும்பிய பட்னாகர், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராக 1921 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். பின்னர், பஞ்சாப் பல்கலைக் கழகத்தின் இயற்பு வேதியியல் பேராசிரியராகவும், பல்கலைக் கழக வேதியியல் ஆய்வுக் கூட இயக்குநராகவும் பணிபுரிந்தார். ஆய்வுக் கூடத்தில், கூழ்ம வேதியியல், காந்த வேதியியல் துறைகளிலும், தொழிலக வேதியியலிலும் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டார்.

இலண்டன் ஸ்டீல் சகோதரர் கம்பெனி (Messers steel Brothers & co) எனும் நிறுவனம், ராவல்பிலர்டியில், ‘அட்டோக் எண்ணெய் துரப்பண’ நிலையத்தில் (Attock oil company) “சேற்றுப் பிரச்சனை” எழுந்தது. அதாவது ஆழ்துளையிடும் குழாய் வழி அதிவேகத்தில் வெப்பச் சேற்றினைச் செலுத்தி எண்ணெய் எடுக்கும் முயற்சியின்போது பூமிக்கடியில் உள்ள உப்பு நீரில் கலங்கி அந்தச் சேறு இறுகிக் கெட்டியாகிவிடும். இதனால் எண்ணெய் மேல்நோக்கிப் பீச்சப்பெறாது. இந்தச் சிக்கலைத் தவிர்க்க, குழாய் வழி பாய்ச்சிடும் சேற்றில் ஒருவித பிசின் பொருளைக் கரைத்துவிட வேண்டும். ஏனெனில், சேற்றுத் துகள்கள் ஒவ்வொன்றும் வழுவழுப்பான பிசின் மூடி மேற்பரப்பு வழுக்கென்றிருக்கும். ஒன்றோடொன்று ஒட்டாது. ஆதலினால் அவை இறுகி கெட்டியாவதில்லை. பெட்ரோலியத் துரப்பணத்தின் இந்த அரிய சாதனைக்காக பட்னாகருக்கு, அந்தக் காலத்திலேயே ஒன்றரை இலட்ச ரூபாய் பரிசளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அறிவியல் பணி மக்களுக்காக! அறிவியலை பணத்துக்காக விலை பேச முடியாது! அறிவியல் சமுதாயத்தொண்டு! இதில் இலாபம் ஈட்ட முயலுவது மனித நாகரிகமில்லை! என்றும் கொள்கையில் உறுதி கொண்டவர் பட்னாகர்! அவர், தமக்குக் கிடைத்த அன்பளிப்புத் தொகையை பல்கலைக் கழகத்திற்கு அளித்துவிட்டார்.

இவரது தீவிர முயற்சியால் பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் பெட்ரோலியத் தொழிலக ஆய்வுத் துறை உருவாயிற்று. தமது வருமானத்தில் பாதியை பல்கலைக் கழகத்தின் ஆய்வுப் பணிகளுக்கு வழங்கினார்.

இந்திய அரசு, “அறிவியல், தொழிலக ஆய்வு வாரிய”த்தின் இயக்குநராக பட்னாகரை நியமித்தது. மேலும், ‘தேசிய இயற்பியல் ஆய்வுக்கூடம்’, ‘இந்தியத் தேசிய ஆய்வு மேம்பாட்டு மன்றம்’ ‘தொழிலக ஆய்வுச் சங்க இயக்கம்’ முதலிய பல நிறுவனங்கள் இவரது முயற்சியினால் உருவாக்கப்பட்டன.

அணுக்கருக் கனிமங்கள், கந்தகத் தாதுக்கள் மட்டுமின்றி, பெட்ரோலிய படிவங்கள் தோண்டுவதற்கு, ‘இந்திய அபூர்வக் கனிம நிறுவனம்’, ‘எண்ணெய் சுத்தகரிப்பு நிலையங்கள்’ இவரது முயற்சியால் எழுந்தவைகளாகும்.

இந்தியக் கல்வித்துறை அமைச்சகம் மற்றும் கல்வி ஆலோசகத் துறைகளின் செயலாளராகவும், இந்திய இயற்கை வளம் மற்றும் அறிவியல் ஆய்வு அமைச்சகத்தின் முதலாவது செயலாளராகவும், அணு ஆற்றல் ஆணையத்தின் செயலாளராகவும் சிறப்பாகப் பணிபுரிந்தார். மேலும், இலண்டன் வேதமத் தொழில் கழகத்தின் இணைத் தலைமைப்பதவி, இலண்டன் அரசவைக் கழகத்தின் சான்றோன் (FRS) அங்கீகாரம், இந்திய வேதியியல் கழகம், இந்திய தேசிய அறிவியல் நிறுவனம், இந்திய அறிவியல் பேரவை முதலிய அமைப்புகளின் தலைமைப் பதவிகளையும் வகித்தார்.

இந்திய அரசின் ‘ஓ.பி.இ.விருது’ முதலிய விருதுகளை வழங்கி பாராட்டப்பட்டார்.

இந்திய அரசின் ‘பத்ம பூஷண்’ விருது, ஆக்ஸ்போர்டு, பஞ்சாப், தில்லி, பனாரஸ், லக்னோ, அலகாபாத், பாட்னா, ஆக்ரா, சௌகார் முதலிய பல்கலைக் கழகங்கள் இவரது அறிவியல் பணியைப் பாராட்டின.

இவரது மணிவிழா 1954 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்றது. அவ்விழாவில், பரிணாமக் கோட்பாட்டு மூலவர் சர்.சார்லஸ் டார்வின், சர்.ஆல்ஃபிரெட் ஈகர்டன் முதலிய அறிஞர்களும், இந்திய பிரதமராக விளங்கிய ஜவகர்லால் நேருவும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

அறிவியல் துறையில் பல சாதனைகள் புரிந்த பட்னாகர் மாரடைப்பினால் 1955 ஆம் ஆண்டு சனவரி 1 ஆம் நாள் காலமானார். இவரது பெயரால் நிறுவப்பெற்றுள்ள ‘பட்னாகர் விருது’ 1957 ஆம் ஆண்டு முதல் தேசிய அளவில் சிறந்த அறிவியல் சாதனையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

Pin It