தென்தமிழகத்தின் விடுதலைப் போராட்டக் களத்தில் மறந்துபோன சுவடுகளாய் பல வரலாறுகள் உள்ளன. அதில் வில்பிரெட் லோன் என்ற ஆங்கிலேய அதிகாரியின் கொலை வழக்கு முக்கியமானது. தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது குலசேகரன்பட்டணம் கிராமம். தற்போது இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையால் (ISRO) செயற்கைக்கோள் ஏவுதளமாகப் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டுவரப்படவுள்ள இடம் குலசேகரன்பட்டணம். இதே குலசேகரன்பட்டணத்தில் விடுதலைப் போராட்டக் காலத்தில் நடந்தது ஒரு முக்கியமான நிகழ்வு. லண்டன் பிரிவிக் கவுன்சில் வரை சென்ற வழக்கு அது.
1942-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மகாத்மா காந்தி "செய் அல்லது செத்துமடி" என்ற தனது சுதந்திரத்திற்கான வீர உரையைப் பம்பாயில் நிகழ்த்திய தருணமது. "வெள்ளையனே வெளியேறு" இயக்கம் மிகத் தீவிரமடைந்த காலகட்டம். காந்தி உள்ளிட்ட தலைவர்கள் ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டதால் இந்தியா முழுவதும் போராட்டம் தீவிரமடைந்தது.
இந்த போராட்டத் தருணத்தில்தான் குலசேகரன்பட்டணத்தில் ஆங்கிலேயர்கள் நடத்திய உப்பள ஆலையில் வில்பிரெட் லோன் என்ற ஆங்கிலேய அதிகாரி போராட்டக்காரர்களால் கொலை செய்யப்பட்டான். உப்பள ஆலை ஆய்வாளர் லோன் என்ற அதிகாரி மிகவும் கொடுமைக்காரனாக இருந்தான். ஆலையில் பணிபுரியும் இந்தியத் தொழிலாளர்களைக் கருணையின்றி கொடுமைப்படுத்தினான். அவனது மோசமான நிர்வாகத்தால் தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்பட்டனர்.
அக்காலத்தில் குலசேகரன்பட்டணத்தில் சிறிய அளவிலான துறைமுகம் செயல்பட்டது. அங்கிருந்து தூத்துக்குடி முதன்மைத் துறைமுகம் வாயிலாக உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் கப்பல்கள் மூலம் உப்பு கொண்டு செல்லப்பட்டது.
குலசேகரன்பட்டணம் உப்பள ஆலையில் நடக்கும் கொடுமைகளைக் கண்டு அப்பகுதி மக்கள் கொதித்துப் போயிருந்த தருணமது. அந்நேரத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கமும் தீவிரமடைந்ததால், குலசேகரன்பட்டணத்தின் பக்கத்து ஊரான ஆறுமுகநேரியைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரான 'தூக்குமேடை' ராஜகோபாலன் தன் சகாக்களுடன் ஒரு திட்டம் தீட்டினார். குலசேகரன்பட்டணம் உப்பள ஆலைக்குள் அதிரடியாக நுழைந்து அங்குள்ள ஆயுதங்களைக் கைப்பற்றுவது எனத் திட்டம் தீட்டப்பட்டது.
'தூக்குமேடை' ராஜகோபாலனின் திட்டப்படி இரு பிரிவாகப் போராட்டக்காரர்கள் உப்பள ஆலையில் நள்ளிரவில் நுழைந்தனர். அங்கே பாதுகாப்புப் பணியில் இருந்த ஆங்கிலேய சிப்பாய்களுக்கும் போராட்டக் குழுவுக்கும் இடையே கடும் தாக்குதல் நடந்தது. அந்தத் தருணத்தில் தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியைக் கொண்டு போராட்டக்காரர்களைச் சுட ஆரம்பித்தான் அதிகாரி லோன். தோட்டாக்கள் தீர்ந்த நிலையில் உப்பள ஆலையிலிருந்து தப்பித்து ஓட்டம் பிடித்தான் அதிகாரி லோன். அந்த நேரத்தில் 'தூக்குமேடை' காசிராஜன் தன் கையில் இருந்த கோடரியால் அதிகாரி லோனின் தலையில் வெட்டினார். அதிகாரி லோன் மரணமடைந்தான். ஒரு மணி நேரத்திற்குள் போராட்டக்காரர்கள் அதிகாரி லோனைக் கொன்றுவிட்டு ஆயுதங்களை எடுத்துச் சென்றனர்.
ஆங்கிலேய அதிகாரி லோன் கொலை, ஆங்கிலேயர்களின் நிர்வாகத்தில் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது. சம்பவம் நடந்த 3 நாட்கள் கழித்து 1942 செப்டம்பர் 22-ஆம் தேதி 'தூக்குமேடை' ராஜகோபாலன் தனது சகாக்களுடன் சாத்தான்குளம் வனப்பகுதியில் கைது செய்யப்பட்டார். இந்திய மக்களைத் துன்புறுத்திய ஆங்கிலேய அதிகாரியின் கொலைக்குப் பழிவாங்க ஆங்கிலேய அரசாங்கம் உடன்குடி பகுதியில் காவலர்களைக் குவித்தது. ஆங்கிலேயக் காவலர்கள் உடன்குடி பகுதி மக்களைத் தாக்கியும் அவர்களின் உடைமைகளைச் சூறையாடவும் செய்தனர். காலம் காலமாக நடந்துவரும் அரசு வன்முறைக்கு அன்றைக்கு இலக்கானது உடன்குடி பகுதி மக்கள்.
அதிகாரி லோன் கொலை வழக்கில் 115 போராட்டக்காரர்கள் ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டனர். அதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 26 பேர். அந்த 26 பேரில் தூக்குமேடை தியாகிகளான ராஜகோபாலனும் காசிராஜனும் அடங்குவர். நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று, ராஜகோபாலன் மற்றும் காசிராஜன் முதன்மை குற்றவாளிகள் எனத் தூக்குத் தண்டனை விதித்து ஆங்கிலேய நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டது. செஷன்ஸ் கோர்ட்டிலும் (மாவட்ட நீதிமன்றம்), உயர் நீதிமன்றத்திலும் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டதால், லண்டன் பிரிவிக் கவுன்சிலில் தேசபக்தர் வெங்கடகிருஷ்ணன் மற்றும் மூதறிஞர் இராஜாஜி ஆகியோரின் முயற்சியால் மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு நடத்தப்பட்டது. இறுதியில் மதராஸ் மாகாணத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த தருணத்தில், தூக்குமேடை காசிராஜனும் ராஜகோபாலனும் 1946-ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
வரலாறு பல சுதந்திரப் போராட்டக் களங்களை நமக்கு நினைவுபடுத்துகிறது. அத்தகைய தீரமிகு போராட்டக்களமாக, தொழிலாளர்களின் துயர் போக்க நடைபெற்ற குலசேகரன்பட்டணம் உப்பள ஆலை கொலை வழக்கு வரலாற்றில் பதிந்துள்ளது.
சும்மாவா வந்தது சுதந்திரம் என்பது!
- சுதேசி தோழன்