“ உன் பெயர் என்ன”
“ என் பெயர் ஆசாத் (விடுதலை)”
“ உன் அப்பா பெயர் என்ன”
“ சுதீன் (சுதந்திரம்)”
“ உன் வீடு எங்கே இருக்கிறது”
“ சிறைச்சாலையில்”

இப்படி நீதிமன்றத்தில் பதில் கூறிய இளைஹனுக்கு வயது பதினான்கு. அவர் பெயர் சந்திர சேகர ஆசாத்.

Chandra Shekhar Azadகாசி வித்யா பீடத்தில் சமஸ்கிருத மேற்கல்வி கற்க வந்த போதே விடுதலைப்போரில் - ஒத்துழையாமை இயக்கத்தில் குதித்தவர் சந்திரசேகர ஆசாத். பதினான்கு வயது என்பதால் நீதிமன்றம் அவருக்குப் பதினைந்து கசையடித் தண்டனை அளித்தது. கசையடிகளைத் தாங்கிக் கொண்டு வெளியே வரும்போது “வந்தே மாதிரம்”, “மகாத்மா காந்திஜிக்கு ஜே” என்று முழக்கமிட்டார். இது நடந்தது 1922 ஆம் ஆண்டு.

மத்திய பிரதேச மாநிலம், ஜாபுவா மாவட்டம், சாடுவா தாலுகா, பாவ்ரா கிராமத்தில் பண்டிட் சீதாராம் திவாரி - ஜெகராணி தேவி தம்பதியினருக்கு 1906 ஆம் ஆண்டு ஜிலை 23 ஆம் நாள் பிறந்தார்.

ஆசாத் சிறுவயதில் படிப்பைவிட வில் - அம்பு விடுவதிலும், துப்பாக்கிச் சுடுவதிலும் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அவரது பெற்றோர் வட்டார அலுவலகத்தில் எடுபிடி வேலைக்குச் சேர்த்துவிட்டனர். ஆசாத்துக்கு அங்கு வேலை செய்ய விருப்பமில்லை. சிறுவயதிலேயே ஒரு வியாபாரியின் துணையுடன் பம்மாய் நகருக்குச் சென்றுவிட்டார்.

பம்பாய் நகரில் கப்பல்களுக்கு வண்ணம் பூசும் வேலை செய்தார். அங்கு தொழிலாளர்களோடு வாழ்ந்தார். தொழிலாளர்களின் உணர்வுகளை மதித்தார். உரிமைகளற்ற, நிலையையும், வறுமை நிறைந்த வாழ்க்கைச் சூழல்களையும் நன்கு புரிந்து கொண்டார்.

ஆசாத், காசி வித்யா பீடம் என்ற கல்வி நிலையத்தில் 1922 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். அங்கு பணிபுரியும்போது புரட்சிக் கட்சியில் உறுப்பினரானார்.

காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை திடீரென்று நிறுத்தியதால், இளைஹர்கள் புரட்சிகர இயக்கத்தின்பால் கவரப்பட்டனர். பகத்சிங்கும் அவரது தோழர்களும் உருவாக்கிய இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசுக் கழகத்தில் இணைந்து தீவிர செயல் வீரனாக விளங்கினார்.

காகோரி இரயில் கொள்ளை 1925 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அதில் ஆசாத் பங்கேற்றார். பணமும், ஆயுதங்களும் கொள்ளையடிக்கப்பட்டன. இரயிலில் பயணம் செய்த பயணிகளுக்கு புரட்சியாளர்கள் எவ்விதத் தீங்கும் செய்யவில்லை. காகோரி இரயில் கொள்ளை நிகழ்ச்சி பிரிட்டிஷ் அரசை அதிரவைத்தது. குந்தன்லால், ஆசாத் தவிர மற்றவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆசாத் தலைமறைவானார்.

ஆசாத் தலைமறைவு வாழ்க்கையின்போது கதாகலாச்சேபம் செய்யும் பாகவதராகவும். பணக்கார வியாபாரியாகவும், வீட்டு வேலைக்காரனாகவும், காவல்துறை ஆய்வாளராகவும் சூழ்நிலைக்கேற்றவாறு மாறுவேடம் பூண்டு போலீசாரின் கண்களிலிருந்து தப்பிச் சென்றுவிடுவார்.

“சைமன் குழுவே திரும்பிப் போ” – என்று முழக்கமிட்டு கண்டன ஊர்வலம் நடத்தினார் பஹ்சாப் சிங்கம் லாலாலஜபதிராய்; அவரை நடுச்சாலையில் அடித்து இழுத்துச் சென்ற சாண்டர்ஸ் என்ற வெள்ளைக்காரக் காவல்துறை அதிகாரியை பகத்சிங்கும், ராஜகுருவும் சுட்டுக் கொன்றனர். தப்பியோடிய அவர்களை துரத்திப் பிடிக்க சனன்சிங் என்ற தலைமைக் காவலர் முயற்சி செய்தார். பகத்சிங்கை தாவிப்பிடிக்க முயன்றபோது, சந்திரசேகர ஆசாத் சனன்சிங்கைச் சுட்டு வீழ்த்தினார். பகத்சிங் தப்பினார்.

சாண்டரை சுட்டுக் கொன்ற வழக்கிலும் காவல்துறையினாpடம் சிக்காமல் லாகூரிலிருந்து சாது வேடமிட்டு யாத்திரைக் குழுவினருடன் மதுரா வழியாக ஆக்ராவுக்கு தப்பிச்சென்றுவிட்டார் சந்திர சேகர ஆசாத். பஹ்சாப், பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் காவல்துறை அதிகாரிகள் சந்திர சேகர ஆசாத் பெயரைக் கேட்டாலே அச்சம் அடைந்தனர்.

வெள்ளைக்கார ஆளுநர் (வைஸ்ராய்) பயணம் செய்த சிறப்பு இரயிலில் 1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெடிகுண்டு வெடித்தது. ஆளுநர் மயிரிழையில் உயிர் தப்பினார். இந்நிகழ்வு தொடர்பான வழக்கிலும் காவல்துறையினரால் ஆசாத் தேடப்பட்டார். ஆனால் அவரைப் பிடிக்க முடியவில்லை. ஆசாத் துணிவும், உறுதியும் கொண்டவர். விரைந்து செயலாற்றும் திறன் படைத்தவர். எனவே, புரட்சிக் கட்சி ஈடுபட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் முக்கியப் பங்காற்றியவர்.

லாகூர் காங்கிரஸ் மாநாட்டில், வெள்ளைக்கார ஆளுநர் (வைஸ்ராய்) பயணம் செய்த சிறப்பு இரயிலில் வெடிகுண்டு வைத்தவர்களை கோழைகள், இழிவானவர்கள் என்று கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற காந்தி முயன்றார். தீர்மானம் நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்பட்டது. அப்போது மேற்படி கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்படாவிட்டால் நான் காங்கிரசிலிருந்து வெளியேறிவிடுவேன் என்று காந்தி மிரட்டினார் என்பது வரலாறு.

கங்கைக் கரையில் வசித்த ஒரு சாமியாரிடம் வைரம் இருப்பதாகவும், அதைக் கைப்பற்றி விற்பனை செய்து புரட்சிக்கு ஆயுதங்கள் வாங்கலாம் என்றும், சில தோழர்கள் முடிவு செய்தனர். ஆசாத் மட்டும், “எந்த நிலைமையிலும் கொள்ளைக்காரர்களை நம்முடன் சேர்த்துக் கொள்ளக் கூடாது. அவர்கள் நமது இயக்கத்தை மாசுபடுத்திவிட்டுப் போய்விடுவார்கள். நேரம் வரும்போது நம்மை அவர்கள் களங்கப்படுத்திவிட்டு நழுவிவிடுவார்கள்” என்று தனது தோழர்களுக்கு எடுத்துக் கூறினார்.

ஜான்சிப் பகுதியில் ஒரு ஜமீன்தாரை தீர்த்துக்கட்ட ஆசாத்திடம் சிலர் பேரம் பேசினர். புரட்சிக்கு ஆயுதம் வாங்குவதற்குப் பெரும் பணம் தருவதாக ஆசை காட்டினர். ஆசாத் கோபத்தோடு நிராகரித்துவிட்டார்.

தனது தோழர்களிடம், “நமது கட்சி, லட்சியவாதிகளின் புரட்சிக் கட்சி. புரட்சியாளர்களைக் கொண்ட தேசபக்தர்களின் கட்சி. கொலைகாரர்கள் அல்லது கொள்ளைக்காரர்களின் கட்சியல்ல. நம்மிடம் பணமிருந்தாலும் - இல்லாவிட்டாலும்-கைது செய்யப்பட்டாலும் - பட்டினிக்கிக் கிடந்தாலும்-தூக்கிலிடப்பட்டாலும்-கொலை, கொள்ளை போன்ற தவறான நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டோம்” என்று ஆசாத் அறிவித்தார்.

பகத்சிங் தலைமையில் இயங்கிய இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசுப் படையின் தளபதியாக சந்திர சேகர ஆசாத் நியமனம் செய்யப்பட்டார்.

மாவீரன் பகத்சிங்கை ஆசாத் மிகவும் நேசித்தார். அவரை ‘தம்பி இன்குலாப்’ (புரட்சித் தம்பி) என்று அன்புடன் அழைப்பார்.

ஆசாத்தை உயிருடனோ அல்லது பிணமாகவோ கொண்டு வந்து சேர்த்தால் முப்பதாயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் எனப் பிரிட்டிஷ் காவல் துறையினர் அறிவித்தனர். ஆசாத்தைக் கண்டவுடன் சுட்டுத் தள்ளும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிடப்பட்டது.

ஆனால், இந்திய வரலாற்றில் ஒரு புரட்சிக்காரனைப் பிடிக்க முடியவில்லை என்று காவல்துறையினர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது ஆசாத் வழக்கில் மட்டும்தான். ஆம். ஆசாத்தைப் பிடிக்க முடியவில்லை என்று காவல்துறை தங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டது.

ஆசாத் தனது தோழர்களிடம், “என்னை காவல்துறையினரால் உயிருடன் பிடிக்க முடியாது. என்னைச் சுட்டுக் கொன்றுவிடமுயன்றாலும் நான் என் இறுதி மூச்சுள்ளவரை எதிரிகளைத் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுவேன்” என்றே கூறுவார்.

அலகாபாத்தில் உள்ள ஆல்பர்ட் பூங்காவில் 1931 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் நாள், புரட்சித் தோழர்கள் சிலரை சந்திக்க ஆசாத் காத்திருந்தார். உடன் இருந்த ஒரு துரோகி காவல்துறையினருக்கு தகவல் அளித்துவிட்டான்.

காவல் துறையினர் திடீரென்று சுற்றி வளைத்தனர். தப்பியோட வழி இல்லை. இருந்தாலும் பீதி கொள்ளாமல், தனது கைத்துப்பாக்கியால் சுழன்று சுழன்று சுட்டார். ஆயினும் காவல் துறையினரின் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் பலியானார். ஆசாத் இறந்துவிட்டார் என்று உறுதிபடுத்திக் கொண்ட பிறகுதான், அவரது சடலத்தை சரக்குந்தில் ஏற்றிச் சென்றனர்.

உத்திரபிரதேச காவல்துறை உயர் அதிகாரியாக பணியாற்றிய ரூhர்லிஸ் என்பவர் தனது ‘பணிக்கால நினைவலைகள்’ என்ற தலைப்பில் (1958 அக்டோபர் மாத Men only ஆங்கில மாத இதழில்) ஆசாத்தை சுட்டுக் கொன்ற நிகழ்ச்சி குறித்து கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார். “ஆசாத்தின் முதல் துப்பாக்கிக் குண்டு வெள்ளைக்கார காவல்துறை கண்காணிப்பாளர் நாட்பாவர் கையைப் பதம் பார்த்தது. காவலர்கள் புதர்களில் மறைந்திருந்து ஆசாத்தை குறிபார்த்துச் சுட்டனர். மற்றொரு காவல் துறை கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரர்சிங் குறிபார்த்துச் சுட்டார். தனது உடலில் மூன்று, நான்கு குண்டுகள் துளைத்துக் குருதி ஓடிக் கொண்டிருந்த நிலையிலும், தன்னைச் சுட்ட விஸ்வேஸ்வர்சிங்கின் முகத்தைக் குறிபார்த்துச் சுட்டு அவரது தாடைகளைச் சிதறடித்தார். ஆசாத்தின் கடைசியானதும், ஆனால், பாரட்டுக்குரியதுமான செயல்திறமை அவர் குறி தவறாமல் சுடுவதே” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆசாத்தை சுட்டுத் தள்ளிய ஆல்பர்ட் பூங்காவில் இருந்த மரத்தில் துப்பாக்கிக் குண்டுகள் பதிந்தன. அந்த மரம் மக்களின் தெய்வமானது. பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும், பொதுமக்களும் வந்து மரத்தை வனங்கி மரியாதை செலுத்தினார். எரிச்சலுற்ற பிரிட்டிஷ் அரசு அந்த மரத்தையே வெட்டி வீழ்த்தியது.

ஆசாத்தின் உடல் கங்கைக்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு இறுதி ஊர்வலம் நடத்த பிரிட்டிஷ் அரசு தடை விதித்தது. தடையை மீறி ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஏற்றத்தாழ்வற்றதும், சுரண்டலற்றதும் ஆன, புதிய சமூகம் ஒன்றை அமைப்பதே தனது உயிர் மூச்சாகக் கொண்டவர் ஆசாத்.

பதினான்கு வயதில் இந்திய விடுதலைப் போரில் குதித்தார். பத்தாண்டுகள் இடைவிடாது வீரமுடன் போராடினார். பிரிட்டிஷ் வல்லாதிக்கத்திற்கு பரம வைரியாகவும், சிம்ம சொப்பனமாகவும் திகழ்ந்தார். விடுதலைக்கானப் போரில் தனது இருபத்து நான்காவது வயதில் தியாகியானார். என்றைக்கும் இளைஹர்களின் வழிகாட்டியானார்.

 - பி.தயாளன்

Pin It