முன்னுரை

 இன்றைய தலைமுறையினரான மாணவர்களும் இளைஞர்களும் தான் உண்ணும் உணவின் தானியப்பெயர் கூட தெரியாது பயிலுகின்றனர் , வாழ்கின்றனர். தான் உண்ணும் உணவு எத்தகைய உணர்வைத் தரும் என்ற அறிவுகூட இல்லாமல் வாழ்கின்றனர். அதுமட்டுமன்றி எந்த மாதிரியான உணவை எந்த நேரத்தில் உண்ண வேண்டும் எனும் உணர்வும் இல்லாது உண்ணுகின்றனர். மேலும் பசியில்லாது உண்ணும் பழக்கம் உடையவர்களாக உலா வருகின்றனர். இந்த அறிவியல் உலகத்திலும் இப்படி வாழ்வது அறியாமையேயாகும். பண்டைய சங்க கால மக்கள் தான் வாழும் சூழலுக்கும் காலத்திற்கும் ஏற்ப உண்ணும் உணவு தானியங்களை உற்பத்திசெய்து உண்டு வாழ்ந்திருக்கிறார்கள். உணவுமுறைக்கு எற்பவே உணர்வுமுறையும் இருந்துள்ளதை சங்க இலக்கியங்கள் வழி அறிய முடிகின்றது. இதை பின் வரும் கட்டுரையின் வழி அறியலாம்.

தொல்காப்பியம்

 உணவே, உணா, சோறு, உண்டி போன்ற சொற்கள் ‘உணவு’ எனும் பொருளுடையன. உணவு என்பதை தொல்காப்பியர் ‘உணாவே’1 எனக் குறிப்பிடுகிறார். இளம்பூரணர் உணா2, உணவு எனக் குறிப்பிடுவதை அறிய முடிகின்றது. தொல்காப்பியர் உணவு எனக் குறிப்பிடாமல் உணாவே எனக் கூறியதற்குக் காரணம் பயிர் உணவும் விலங்கின உணவுமாக எல்லா உயிர்களுக்கும் இருப்பதானாலே அவ்வாறு கூறியிருக்கலாம். உணா என்பதற்பதற்கு ‘அஃறிணைப் பன்மை’3 என்கிறார் வீரமாமுனிவர். (வீரமாமுனிவர், சதுரகராதி,ப.28). சோறு என்பது சூடாக்குதல் அதாவது அவித்தல் (சமைத்தல்) ஆகும். உண்ணும் பொருளை அவித்து உண்டதனால் உண்+அவி உணவி, உணவு என மருவி இருக்கலாம். சமை என்னும் சொல்லை சம்+ஐ எனப் பிரித்தால் சம் என்பதன் பொருள் அன்பு என்பதாகும். உணவின் வழியது அன்பு, அன்பின் வழி உயிர் என்பதாகும்‘அன்பின் வழியது உயிர்நிலை’4 என வள்ளுவர் வரியில் அறியலாம். அன்பின் தோற்றமான முதற்பொருளுக்கு அடுத்து அன்பை வழிநடத்தும் கருப்பொருளைக் கூறி அன்பின் வகையான உரிப்பொருளை அமைத்து முறைப்படுத்துதலே முறை சிறந்தனவாகும் என்பார் தொல்காப்பியர். இளம்பூரணர் தம் உரையில் ஐவகை நிலங்களுக்கும் உரிய உணவு தானியங்களைச் சுட்டிச் செல்கிறார்.

பசியுணர்வும் பாலுணர்வும்

 முதற்பொருளான நிலம்,பொழுது ஆகியவற்றிற்கு ஏற்ப கருப்பொருளான உணவு தானியங்கள் உருவாகின்றன. மக்களின் உணர்வு நிலைகளான பசியுணர்வை வீழ்ச்சியுறச் செய்வதும் பாலுணர்வை எழுச்சியுறச் செய்வதும் கருப்பொருளே ஆகும். பசியுணர்வு மேலோங்கும்பொழுது பாலுணர்வு கீழோங்குகிறது. இதை மணிமேகலை எனும் காப்பியமானது,

 குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்

 பிடித்த கல்விப் பெரும்புணைவிடூஉம்

 நாணணி களையும் மாணெழில் சிதைக்கும்

 பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்

 பசிப்பிணி என்னும் பாவி.5

எனக் மணிமேகலை குறிப்பிடுவதனால் அறியலாம். பாலுணர்வு என்பது ஆண், பெண் சேர்க்கைக்குரிய காதல் உணர்வான காந்த உணர்வே ஆகும். இது உயிர்வுணர்வாகும். இவ்வுயிர் உணர்வு, உயிர் பெறுவதற்காகவே உயிர் பொருளான கருப்பொருளை உணவு பொருள் என்கிறோம். உணவு பொருளான கருப்பொருளானது தலைவன், தலைவிக்கு உணவு பொருளாக மட்டும் அல்லாமல் உணர்வு பொருளாகவும் உணர்வை உணர்வதற்குரிய அல்லது உணர்த்துவதற்குரிய பொருளாகவும் உள்ளது. உணவு நிரைகிறபொழுது உணர்வு நிறைவு பெறுகிறது.

 பசியுணர்வை சரிசெய்வதற்காக பிரிய மனமில்லாது தலைவனும் பாலுணர்வின் பாசத்தால் பிரிய மனமில்லாது தலைவியும் இருவருக்கும் உணர்வுப் போராட்டம் நடக்கிறது. தனக்கும் தலைவிக்குமான உணவை வினைமேல் சென்று தேடுவது என்பது ஆடவரின் கடமையாகவும் அவ்வாறு செல்லும் தலைவனை பிரிய மனமில்லாது இல்லத்தைக் காத்து நிற்கும் தலைவியின் பொறுப்பாகவும் உள்ளன. இவையே பண்டையத் தமிழர் வகுத்துக் கொண்டக் குடும்பக் கட்டமைப்பாகும். இதனையே,

 வினையே ஆடவர்க்கு உயிரே

 மனையுறை மகளிர்க்கு ஆடவர்உயிர்6

எனக் குறுந்தொகை குறிப்பிடுதனால் அறிய முடிகின்றது. இவ்வாறான உணர்வு பொருளுக்கு அடிப்படையான உணவுப் பொருளை ஐவகை நிலங்களுக்கான பின்னணியில் கணலாம்.

முல்லை நில உணவுப் பொருள்கள்

 நிலவியல் சூழலுக்கு ஏற்பதான் மரம், செடி, கொடி எனும் இயற்கையான கருப்பொருள்கள் உருவாகின்றன. அந்த வகையில் ஐவகை நிலவியல் சூழலில் முல்லை நிலச் சூழலில் உருவாகும் கருப்பொருளான உணவுப் பொருள்கள் வரகு, சாமை, முதிரை ஆகியவற்றை இலக்கண நூல்கள் பகர்கின்றன.

 இவை காடும் காடு சார்ந்த பகுதிகளில் விளையக் கூடியத் தன்மையாகும். வரகும் சாமையும் தானியவகையாகும். இதை “முதிரை – பயறு வகை”(தொல், அகத். உரைவளம், பக்.156 – 158) என்பார் ஆ.சிவலிங்கனார். மேலும் விளக்கமாக “எள்ளு, கொள்ளு, பயறு, உழுந்து, அவரை, கடலை, துவரை, மொச்சை என்பன. இவற்றை முதிரைக் கூவமெனவும் கூறுப.”(தொல்.அகத்.உரைவளம்,ப.209.) என்பார் மு.அருணாசலம். இளம்பூரணர் போன்ற உரையாசிரியர்களும் வரகும் சாமையும் முல்லைநிலக் கருப்பொருள்கள் என்றே குறிப்பிடுவர். மேலும் முல்லைக் கருப்பொருளாகப் பால், தயிர் எனும் உணவுப் பொருள்களை அறுவகை இலக்கணம் குறிப்பிடுகிறது.

 பண்டைய அக இலக்கியங்களில் முல்லை நிலத்தில் விளைவிக்கப்படும் உணவு தானியங்களாக வரகு (ஐங்.496, குறுந்.220.) அறியமுடிகிறது. ஈரிலை வரகு என நற்றிணை (நற்.121.) குறிப்பிடுகிறது. கூழ் உணவு இருந்துள்ளதைக் குறுந்தொகை (குறுந்.221)குறிப்பிடுகிறது. கவலைக்கிழங்கு (குறுந்.233) கருணைக்கிழங்கு (நற்.367) ஆகிய கிழங்குகள் உணவாக இருந்துள்ளன. பால், தயிர், மோர், வெண்ணெய் ஆகிய பால் சார்ந்த உணவுப்; பொருள்கள் இருந்துள்ளதைக் (கலி.14,204) குறிப்பிடுகிதை அறியலாம். முல்லை நிலத்தில் வர நெல்லாக (தண்ணீர் இல்லாமல்) விளைவித்திருக்கிறார்கள் இதைக் ‘காய்நெல்’9 (அகம்.294) செந்நெல் (நற்.367) என்பதை இன்று செங்காறு என்பர். இக் கருப்பொருள் எல்லாம் சரிவு நிலமான காட்டில் விளையக் கூடிய கருப்பொருளாகும்.

குறிஞ்சி நில உணவுப் பொருள்கள்

 மலையும் மலை சார்ந்த நிலப்பகுதியில் விளையும் உணவுப்பொருளாக ஐவன நெல் (மலைநெல்), தேன், தோரை (மூங்கில் அரிசி) தினை (ஏனல், இறடி) மலைக்கிழங்கு ஆகியவற்றை இலக்கணங்கள் பகர்கின்றன. சங்க அக இலக்கியங்கள் இவைத் தவிர உழுந்து (ஐங்.211), ‘நறவு’10 (கள்) (குறுந்.165,394) தேக்கொக்கு (மாங்கனி) (குறுந்.201) எனக் குறிப்பிடுவதை அறிய முடிகின்றது. இறைச்சி உணவு பற்றிக் குறிப்பிடும்போது மைஊன் (ஆட்டிறைச்சி) (நற்.83) சேம்புக்கிழங்கு இதை இன்று சேப்பங்கிழங்கு என்பார்கள் (அகம்.178), தேனை இறால் என்று அகநானூறு குறிப்பிடுகிறது. வள்ளிக்கிழங்கு பற்றி (கலி.39) அறிய முடிகிறது. இவையெல்லாம் மலையில் விளையும் உணவாகும்.

மருத நில உணவுப் பொருள்கள்

 நீர்நிலைகள் உள்ள வயலும் வயல்சார்ந்த நிலப்பகுதியில் விளையும் உணவுப்பொருள்களாக செந்நெல், வெண்ணெல், முக்கனி. கன்னெல் ஆகியவற்றை இலக்கண நூல்கள் கூறுகின்றன. செங்காறு, வெண்ணெல் என்பது பொன்னி நெற்களாக இருக்கலாம். நெல்லரிசியின் வடித்த கஞ்சியிலிருந்து கள் தயாரித்திருக்கிறார்கள். கள்ளை அரியல் என்றும் வழங்கி உள்ளனர் பண்டைத் தமிழ் மக்கள். நெல்லின் உணவை சோறு என்றே வழங்கியிருக்கிறார்கள். இதை ‘பெருஞ்சோறு’11 (நற்.60) என்று நற்றிணை குறிப்பிடுவதால் அறிய முடிகின்றது.

 ‘மருத நில மக்கள்தான் சோற்றோடு உப்பு சேர்த்து உண்டுள்ளனர். இதை அகநானூறு (அகம்.366) குறிப்பிடுகிறது’12. உழுந்துகளி உணவு பற்றிய குறிப்புகள் உண்டு. இவை அனைத்தும் மருத நிலச் சூழலில் விளைந்து உண்ணக் கூடிய உணவுமுறைகளாக மருதப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.

நெய்தல் நில உணவுப் பொருள்கள்

 நெய்தல் நிலம் என்பது கடலும் கடல் சார்ந்த பகுதியாகும். இங்கு விளைவிக்கப்படும் உணவுப் பொருள்கள் உப்பு, மீன், உப்பு விலைபொருள், மீன் விலைபொருள் போன்றவையாகும். முதன்முதலில் உணவுப் பொருளில் உப்பிட்டு உண்ட முதல் மக்கள் நெய்தல்நில மக்களேயாவர். கயல்மீனைப் பற்றி ஐங்குறுநூறு (ஐங்.111,184) குறிப்பிடுகிறது. உப்பைக் கொடுத்து வெண்ணெல்லைச் சமமாகப் பெற்றிருக்கிறார்கள் நெய்தல் மக்கள். இறால், ஆரல், அயிரை, சுறாமீன், எறிசுறா, கோள்மீன் (நட்சத்திரமீன்) என மீனின் வகைகளைக் குறுந்தொகைக் குறிப்பிடுகிறது.

இவைத் தவிர மேலும் இரும்பனம்(கள்), மீன்நெய்( மீனிநிணம்) (நற்.215) ஆகியவற்றை அக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. வெண்சோறு(மருதம்), தயிர், நறவு(கள்), செந்தினை (குறிஞ்சி) ஆகியவற்றை அகநானூறு (அகம்.40, 340, 400) குறிப்பிடுவதால் நெய்தல்நில மக்கள் மற்ற நிலங்களின் உணப் பொருட்களைப் பெற்று வந்து உண்டமையை உணர முடிகிறது.

பாலைத்திணையின் உணவுப் பொருள்கள்

 முல்லை நிலமும் குறிஞ்சி நிலமும் சேர்ந்து திரிந்ததே பாலை நிலமாகும். இங்கு உணவுப் பொருள்களாக முல்லையின் பால், பயறு, வரகும்(குறுந்.282) குறிஞ்சியின் தேனும் (குறுந்.211,273) பாலைத் திணையில் இடம் பெற்றுள்ளன. முல்லை, குறிஞ்சி ஆகிய நில உணவுப் பொருள்கள் தவிர மருத நில உணவான நெல் பற்றி அகநானூறு (அகம்.201,211) குறிப்பிடுகிறது.

இலக்கண நூல்கள் பாலைநில உணவுப் பொருள்களாகக் குறிப்பிடும் பொழுது ஆறலைத்தல், ஊர் எறிந்தன, தருப்பணம், பாதியில் கவர்ந் பொருள், சூறைகொண்டு அடைபொருள், வழங்குதி கொண்டன ஆகியவற்றைக் குறிப்பிடுவதை அறியலாம்.

 சங்க அக நூல்களில் குறிப்பிடப்படும் பாலைத்திணை உணவு பொருள்களே பொருத்தமுடையவையாக உள்ளன. ஆனால் அக இலக்கணங்கள் குறிப்பிடும் உணவுப் பொருள்கள் பொருத்தமுடையாகத் தெரியவில்லை. முல்லை நில மக்களையும் குறிஞ்சி நில மக்களையும் (முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்த மக்கள்) வழிப்பறித்து உண்பவர்களாகக் காட்டுவது சிறப்புக்குரியவையாகத் தெரியவில்லை எனலாம்.

முடிவுரை

 நான்கு வகை நிலப் பகுதிகளிலும் விளையும் உணவு தானியங்கள் அறுவகை கால பருவ மாற்றங்களால் உருவானவையாகும். ஆறுவகை பருவ காலங்கள் தோன்றும் நிலப்பகுதிகளில் வாழும் மக்களின் உணவை நிறைவு செய்வது மட்டும் அல்லாமல் காதல் கனவையும் நிறைவு செய்யும் பொருளாகவே உள்ளது உணவே ஆகும்.

 அடிக்குறிப்புகள்

1. தொல்காப்பியம்,நூற்பா,20.

2. தொல்காப்பியம்,இளம்பூரணர் உரை,ப.18

3. வீரமாமுனிவர்,சதுரகராதி,ப.28.

4. திருக்குறள்,80.

5. மணிமேகலை,பாத்திரம்பெற்ற காதை, வரிகள்,76-80.

6. குறுந்.பா.எண்,135.

7. ஆ.சிவலிங்கனார்,தொல்,அகத்.உரைவளம், பக்.156 – 158.

8. மு.அருணாச்சலம்,தொல்.அகத்.உரைவளம்,ப.209

9. அகம். பா.எண்.294.

10. குறுந். பா.எண்,165,394.

11. நற். பா.எண்,60.

12. அகம். பா.எண்,366.

- முனைவர் மு.கருப்பையா, உதவிப் பேராசிரியர் மற்றம் தமிழ்த்துறை ஒருங்கிணைப்பாளர், எஸ்.எஸ்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திண்டுக்கல்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.