தேடிவரும் கவிஞர்களின் தேவை அறிந்து வாரி வழங்கும் பெருங்குணம் படைத்தவர், ‘கொடை கொடுத்த வித்தகர்’ எனப் போற்றப்பட்டவர்! காரைக்காலில் வாழ்ந்தவர்! தமிழ், அரபு, மலாய் முதலிய மூன்று மொழிகளிலும் திறம் பெற்றுத் திகழ்ந்தவர்! அவர்தான் ‘சாயபு மரைக்காயர்’ எனும் பெயருடைய பெருந்தகை! தமிழ்க் கவித்திறத்தால் ‘அமுதகவி’ என அழைக்கப் பெற்றார்! ‘கலைவளப் புலவர் போற்றும் காரையில் நிலைவளச் செல்வன், நிறைவளக் கல்வியின் அமுதகவி சாயபு மரைக்காயர்’ எனப் புகழ்ப் பெற்றார்.
பொது மக்களாலும், புலவர் பெருமக்களாலும் மதித்துப் போற்றப்பட்ட அமுதகவி சாயபு மரைக்காயர், இசுலாம் மார்க்கக் கல்வியை ஈடுபாட்டுடன் கற்றார். அமுதத் தமிழ் மொழியில் அப்பெருமகனார் எழுதிய கீர்த்தனைப் பாடல்கள் புகழ் வாய்ந்தவை. தமிழின் அனைத்து வகை யாப்புகளிலும் பாடல்களை இயற்றி அளித்துள்ளார். மேலும், தமிழில் வழக்கொழிந்த, ‘முடுகு வெண்பா’, ‘சவலை வெண்பா’ போன்ற யாப்புகளிலும் பாடல்களை எழுதிப் பரவசம் எய்தியவர்!
இவரது படைப்புகள் அனைத்தும் பாடல் பனுவல்களே! இலக்கணப் புலமையும், இசை நுட்பமும், இசுலாம் மார்க்கத்திடம் கொண்டிருந்த ஈடுபாடும், எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்மொழி மீது கொண்டிருந்த ஈடிணையற்ற பற்றும் காரணமாக விளங்கின.
அமுதகவி சாயபுமரைக்காயரின் பாடல்கள் எளிமையும், இனிமையும் கொண்டவை. குறைந்த படிப்பறிவு கொண்டோரும் பொருளுணர்ந்து கொள்ளும் அருமையும் பெற்றுத் திகழ்வன. “கவிதை, கற்றவரை மட்டும் களிப்படையச் செய்வதால், நோக்கமும், ஆக்கமும் முழுமை பெறுவதில்லை; மற்றவரையும் அதன் மையக் கருத்து மகிழ்ச்சி அடையச் செய்கிறபோதுதான் கவியின் குறிக்கோள் நிறைவு பெறுகிறது” - எனும் கோட்பாட்டின்படி, சாயபு மரைக்காயரின் பாடல்கள் அனைத்து மனங்களையும் பற்றிக் கொள்ளும் தன்மை படைத்தவை!
‘மனோன்மணிக்கும்மி’, ‘உபதேசக் கீர்த்தனம்’, ‘மும்மணிமாலை’, ‘காரை மஸ்தான் காரணக் கீர்த்தனப்பா’, முதலிய நூல்கள் அமுதகவிராயரின் தமிழாற்றலையும், இறையுணர்வையும் தெளிவாகப் புலப்படுத்துகின்றன. அவரது பாடல்கள் சந்தச் சீர்மையும், சொற்களின் கூர்மையும், எந்த மனத்தையும் வயப்படுத்தும் ஆற்றலையும் பெற்றவையாகும். அவரது கவிதைகளை ஒருமுறை படித்தால் போதும் அப்படியே கல் எழுத்தாய் உள்ளத்தில் பதிவாகிவிடும்.
சித்த மருத்துவம், யுனானி மருத்துவம் முதலியவற்றில் சிறந்து விளங்கினார் அமுதகவி. மானுட நேயத்துடன் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகத் தம் மருத்துவ திறத்தைப் பயன்படுத்தினார். மருத்துவத் துறையின் பல நுட்பங்களையும், கண்டுபிடிப்புகளையும் அறிந்திட, பல நூல்களை, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வரவழைத்துப் படித்து தமது மருத்துவ அறிவை நாளும் விரிவுபடுத்திக் கொண்டேயிருந்தார். எளிய வைத்திய முறையால், கடுமையான நோய்களையும் போக்கிடும் இயல்புடையவர்.
“புதுச்சேரி மாநிலத்தின் இரண்டாவது பெரு நகரம் காரைக்கால்; காரைச் செடிகள் அடர்ந்த காடாக இருந்ததாலும், உப்பளங்கள் நிறைந்திருந்ததாலும், ‘காரைக்காயல்’ எனப் பெயர் பெற்றிருந்த இப்பேரூர், காலப்போக்கில் மருவி, `காரைக்கால்’ என வழங்கப்பெற்றதாக’’- பேராசிரியர் மு. சாயபு மரைக்காயர் கூறுகிறார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டிலும், இருபதாம் நூற்றாண்டிலும் காரைக்காலில் வாழ்ந்த இசுலாமியப் புலவர்கள், தமிழ்மொழிக்குப் புதிய புதிய இலக்கியச் செல்வங்களை வழங்கி உள்ளனர்.
“காரைக்காலில் வாழ்ந்த இசுலாமிய தமிழ்ப் புலவர்களுள் முதன்மையானவராக அமுதகவி சாயபு மரைக்காயரை குறிப்பிட்டுக் கூறலாம்”- என்பார் ‘கலைமாமணி’ கவி கா.மு. ஷெரீப். இசுலாமிய நெறிமுறைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு விளங்கிய லெப்பை மரைக்காயருக்கும் - ஆயிஷா அம்மையாருக்கும் மகனாக, 1873-ஆம் ஆண்டு காரைக்காலில் பிறந்தார். மார்க்கக் கல்வியை வேலூரில் தங்கிக் கற்றார். புலவர் முகமது மஸ்தானிடம் தமிழ் இலக்கிய இலக்கணங்களை முறையாகக் கற்றார். சிங்கப்பூர் சென்று சிலகாலம் வணிகராக வாழ்ந்தார். அங்கு மலாய் மொழியை மிகுந்த ஆர்வத்துடன் கற்றார்.
தமிழிசையின் புகழ் பரவ இருபதாம் நூற்றாண்டின் உதய காலத்தில் அதற்குத் தமது கீர்த்தனைப் பாடல்களால் ஊக்கமும், உற்சாகமும் ஊட்டி பேருதவி புரிந்தவர் அமுதகவி சாயபு மரைக்காயர்.
அமுதகவி சாயபு மரைக்காயர் தமிழ்மொழிக்கும், இசுலாம் நெறிக்கும் பெருந்தொண்டாற்றித் தமது எழுபத்திரண்டாம் வயதில் 1950-ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். தமிழ் இலக்கிய வரலாற்றில் ‘அமுதகவி’யின் தமிழ்ப் பணி சிறப்பிடம் பெற்றுத் திகழும்.
- பி.தயாளன்