இயற்கை தன்னந்தனியாக சுயேட்சையாக உலவுவதாகும். இவ்வியற்கையில் ஓர் குறிப்பிட்ட கிரகமான புவியில் உயிர்கள் தோற்றுவாய்க்குரிய சூழல் அமைந்தது. அஃது நிலை பெற்று உயிர்கள் அச்சூழலுக்கு ஏற்றவாறு வாழ்ந்து வருகின்றது. இவ்வுயிர்கள் தாம் வாழ்வதற்கான அடிப்படைத் தேவை உணவு. அவ்உணவிற்காக நொடி பொழுதும் பல போராட்டங்களை சந்தித்துக் கொண்டே வந்தது, வருகின்றது. இஃது இயல்பு விதியானது. இவற்றுள் மனித உயிரினம் மட்டுமே உற்பத்தி செய்து வாழ பழகிவிட்ட உயிரினம், தினந்தினம் போராட்டமாயினும் இயற்கைக்கு எதிராகவே மனித சமூக வாழ்வு அமைந்து நிற்கின்றது எனலாம். இவ்உயிரினத்தின் தேடல் ஆக்கத்திற்கு மட்டுமின்றி அழிவிற்கே பயன்படுவது தான் வேடிக்கையானது. பொதுநிலையில் கிடைத்ததை உண்டு வாழ்ந்தது வரை மனிதனுக்குள் முரண்பாடுகள் இல்லை. சேமிக்க தொடங்கிய பின்னரே தோன்ற ஆரம்பித்தன முரண்பாடுகள். இம்முரண்பாடுகளே வர்க்கமாய் நிலைபெற்று இன்று வரை இயற்கைச் சமூகத்தை செயற்கையாக்கியிருக்கிறது எனலாம்.

ஒரு புறம் வள்ளன்மையும், மறுபுறம் வறுமையுமாய் இருவேறு தளத்துள் இவ்உலகு இயங்கிக் கொண்டிருக்கின்றது. நவீன வளர்ச்சி உலகிலும் கூட உண்ண உணவின்றி, தவிக்கும் கொடுஞ்சூழலை கண்கூடாகக் கண்டு வருகின்றோம். இச்சூழலில் பண்டைய காலத்திலும் இந்நிகழ்வு இருந்தது என்பதை கருதுகோளாகக் கொண்டு இக்கட்டுரை ஆராய்கிறது.

‘வள்ளல்’ என்றாலே ‘பாரி’ என்போம். பண்டைய தமிழகத்துள் கடையெழு வள்ளல்கள் ஏழு பேர் என்பர். அவர்களுள் முதன்மையானவர் பாரி. அவன் முல்லைக்குத் தேர் கொடுத்தான் என்பர். மயிலுக்குப் போர்வை தந்தவன் பேகன் என வள்ளல்களை புகழாதார் யாருமில்லை.

ஒரு சமூகத்தில் வள்ளல் எப்படித் தோன்ற முடியும். வாரி வாரி வழங்கும் அளவிற்கு அவர்கட்கு பொருட்கள் எங்கிருந்து வந்தன. ஒரு சமூகத்தில் ‘வள்ளல்’ எப்படி உருவாகுகின்றான். முல்லைக்கே தேர் கொடுத்தான் என்றால் மக்களுக்கு எதையெல்லாம் கொடுத்திருக்க வேண்டும். அவனிடமிருந்த அத்தனைப் பொருட்களையுமே கொடுத்திருக்க வேண்டுமல்லவா? அப்படி என்றால் அவனிடம் ஒரு சிறு பொருள் கூட இருந்திருக்க முடியாதே! அப்படியெனில் அவன் எப்படி ‘வள்ளல்’ என்று நினைக்க முடியும், நிலைக்க முடியும்.

வள்ளல் அனைத்து மக்களுக்கும் அள்ளி அள்ளி கொடுத்திருந்தால் யாசகம் கேட்டு மக்கள் நிற்பதற்கு வாய்ப்பே இல்லையே! ஏனெனில் வள்ளல் வாரி வாரி வழங்கியதால் மக்கள் அனைத்து தேவைகளையும் பூர்த்தியடைந்து இருப்பார்கள் தானே! அதன் பிறகு வள்ளல் எனும் ஒருவன் எப்படி இருக்க முடியும் என்பதே வினா? குளிர் தாங்க முடியாமல் நின்ற மயில் கண்டு துயருற்று போர்வை தந்தவனாம். அவன் ஆட்சி செய்த நிலத்துள் மக்கள் வாழ்வு எத்தகு சிறப்புடன் இருந்திருக்க வேண்டும்.

பேகன் மயிலுக்குப் போர்வை தந்தான் என்ற செய்தி,

“கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய அருந்திறல்
அணங்கின ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன் பேகனும்” (சிறுபாணாற்றுப்படை : 85-87)

என்ற பாடலிலும்,

“வால் உளைப் புரவியொடு வையகம் மருள
ஈர நல்மொழி இரவலர்க்கு ஈந்த
ஆழல் திகழ்ந்த இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல்
கழல் தொழத் தடக்கைக் காரியும்” (சிறுபாணாற்றுப்படை : 109-117)

ஒரு சுரபுன்னை நிறைந்த நாட்டைக் கூத்தர்களுக்கு வழங்கிய ஓரி, ஒளவைக்கு நெல்லிக்கனி தந்த ‘அதியமான்’ என அனைவரும் வள்ளலாய் பரிணமித்தனர், என்பதே வரலாறு என்பர். இக்காலத்திலும் மாறுபட்ட சூழலை காண முடிகின்றது.

வறுமையின் உச்சம்

புலவர்களுள் பெருஞ்சித்திரனார் மிகச் சிறந்த புலவருள் ஒருவராவார். அவர் மிக கொடுந் துயரத்தை அடைந்திருக்கின்றார். குடும்பம் மிகுந்த வறுமைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது என்பதை கீழ்கண்ட பாடல் உணர்த்துகின்றது.

“ஆடு நனி மறந்த கோடு உயர் அடுப்பின்
ஆம்பி பூப்ப, தேம்பு பசி உழவா
பாஅல் இன்மையின் தேலொடு திரங்கி
இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை
சுவைத்தொறு அழுஉம் தன்மகத்து முகம் நோக்கி
நீரொடு நிறைந்த ஈர்இதழ் மழைக்கண் என்
மனையோள் எவ்வம் நோக்கி, நினைஇ
நிற் படர்ந்திசினே நல் போர்க் குமண!” (புறநானூறு பா. 164:1-10)

என்ற பாடலில் குமணனிடம் தன் குடும்ப வறுமையை எடுத்துரைக்கின்றார்.

“குடுமி புதல்வன் பல்மான் பால்இல் வறுமுலை
சுவைத்தனன் பெறாஅன்,
கூழும் சோறும் கடைஇ ஊழின் உள்இல்
வறுங்கலம் திரிந்து, அழக் கண்டு” (புறநானூறு பா. 160)

என்ற மேற்கூறிய இரண்டு பாடல்களிலும் குடும்ப வறுமை உச்சம் காட்டப்படுகின்றது. அதாவது,

குடுமியை உடைய தமது புதல்வன் உண்ண உணவில்லாது இருந்த தன் தாயின் மார்பினை சுவைத்துப் பார்க்கின்றது. பால் இல்லாததால் கூழ், சோறு இருக்குமா என பாத்திரத்தைத் திறந்து பார்க்க, உணவு ஏதுமில்லாமல் குழந்தை அழக் கண்டு அதன் மூலம் தந்தையான பெருஞ்சித்திரனார் குடும்ப வறுமை நிலையை உணர்கின்றார்.

இப்பாடலில் அடுப்பினில் பூஞ்சைகள் பூத்துக் கிடக்கிறது என்று ஆசிரியர் குறிப்பிடுவது நோக்கத்தக்கது - இவை யாவும் பெருந்துயருடைய சூழலும் பண்டைய தமிழகத்தில் நிகழ்ந்தது என்பதை உறுதி செய்யும் கருத்தாகும். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்ற மன்னனே சிறுகுடி பண்ணன் என்ற வள்ளலை பின்வருமாறு பாடியதாக கூறுவர்.

“யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய
பாணர்! காண்க, இவன் கடும்பினது இடும்பை;
யாணர் பழுமரம் புள் இமிழ்ந்தன்ன
ஊண் ஒலி அரவம் தானும் கேட்கும்
பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி
முட்டை கொண்டு வன்புலம் சேரும்
சிறு துண் எறும்பின் சில்ஒழுக்கு ஏய்ப்ப,
சோறுடைக் கையர் வீறுவீறு இயங்கும்
இருங் கிளைச் சிறாஅர்க் காண்டும்; கண்டும்
மற்றும் மற்றும் வினவுதும்; தெற்றென
பசிப்பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ? சேய்த்தோ? கூறுமின் எமக்கே” (புறநானூறு பா. 173)

“யான் உயிர் வாழும் நாளையும் பெற்று பண்ணன் வாழ்வானாக, பாணரே! காண்பீராக, இந்த பரிசிலனது சுற்றத்தின் வறுமையை புது வருவாயை யுடைத்தாகிப் பழுத்த மரத்தின் கண்ணே புள்ளினம் ஒலித்தாற் போன்ற ஊணாலுண்டாகிய ஆரவாரந்தானும் கேட்கும் காலம் தப்பாத மழை பெய்யுங் காலத்தைப் பார்த்து தம் முட்டைகளைக் கொண்டு மேட்டு நிலத்தினை யடையும் மிகச் சிறிய எறும்பினது சிலவாகிய ஒழுக்கத்தை யொப்பச் சோறுடைக் கையினராய் வேறுவேறு போகின்ற பெரிய சுற்றத்தோடும் கூடிய பிள்ளைகளைக் காண்போம், கண்டு வைத்தும் எம் பசி வகுத்தத்தானும் வழிவரல் வகுத்தத்தானும் பின்னரும் விதுப்புற்று (மனத்தின் விரைவுற்று)க் கேளா நின்றோம், தெளிய. பசி நோய் தீர்க்கும் மருத்துவனது மனை அணித்தோ? தூரிதோ? எங்களுக்கு நீர் சொல்லுமின்” (புறநானூறு பக். ) என்பதே பாடலின் விளக்கமாகும்.

இதில் (i) மன்னன் பண்ணனை வாழ்த்துகின்றான். (ii) மன்னன் பாணருக்கு வழி சொல்கின்றான் (iii) பண்ணன் உணவு பெறும் இளஞ்சிறார்கள் புதிய வசந்தகாலத்தில் உணவு கிடைத்து மகிழ்ந்து சப்தத்தை பறவைகள் எழுப்புவது போன்று சப்தம் ஒலிக்கிறது (iஎ) அக்கூட்டம் செல்வது எறும்புக் கூட்டங்கள் உணவு கொண்டு செல்வது போல சிறுவர்கள் கையில் கூட்டம் கூட்டமாக சோறு வாங்கிக் கொண்டு செல்கின்றனர். (எ) அப்பசி தீர்க்கும் பண்ணனின் வீடு அருகில் உள்ளதோ? தூரத்தில் உள்ளதோ? என வினா எழுப்பி பாடல் முடிவடைகிறது. ஆக, அடிப்படையில் பாணர்களுக்கு உணவு கூட தர முடியாத ஒரு மன்னன், வள்ளலை புகழ்ந்து வழி சொல்கின்றான் என்பதன் சமூகச் சூழல் என்ன?

சிறுகுடிப் பண்ணன் வீட்டில் எப்போதுமே கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. சிறுவர்கள் கூட்டம் கூட்டமாக கையில் சோற்று உருண்டைகளை வாங்கிக் கொண்டு செல்கின்றனர். அது பார்ப்பதற்கு எறும்புக் கூட்டங்கள் வரிசை வரிசையாக அழகாக பயணிப்பது போல, பார்வையாளனாய் மன்னனே வருணித்து பண்ணனின் புகழையும், வள்ளல் சிறப்பையும் உவமையாய் வருணிக்கிறார்.

‘கொடுமையிலும் கொடுமை இளமையில் வறுமை’ நம் முன்னோரின் முதுமொழி. இளம் வயதில் அதுவும் சிறார்கள் கூட்டம் கூட்டமாக சோற்று உருண்டைகளை வாங்கிக் கொண்டு செல்லும் சூழல் எத்தகைய கொடுமையானது. அதிலும் மன்னனுக்கு எறும்புக் கூட்டங்கள் போல அழகாக வேறு காட்சியளிக்கிறது. இதை எப்படி புகழ்ந்து பாட முடிந்தது. இதே சூழல் அவர்களின் குழந்தை சோற்று உருண்டைகளை கையில் வாங்கிச் சென்றிருந்தால், அதனை அவரால் ரசிக்க முடியுமா? ரசித்து பாடல்வேறு புனைய முடியுமா?

‘காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு’ என்பது பழமொழி. ஆக, யாராயினும் தான் பெற்ற பிள்ளை மற்றவரிடம் யாசகம் கேட்டு நின்று, அதனை பெற்று செல்கின்ற சூழல் எத்தகைய கொடுஞ்சூழல் என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.

சங்க இலக்கியத்துள் பாணர்களின் வறுமை நிலையே உச்சபட்ச வறுமை நிலையாகக் காணப்படுகின்றது. வேந்தர்களுக்குத் துணையாகவும், ஏவலளாராகவும், இருந்த அவர்களின் வாழ்வே கேள்விக் குறியாய் இருந்துள்ளது. அதனையும் புலவர்கள் பாடி பரிசில் பெற்றனரே ஒழிய பாணர்களின் வறுமை நிலையை முற்றிலும் துடைக்கவில்லை. ஒரு சிலர் மட்டுமே பொருள் பெற்றனர் என்பதே திண்ணம். கீரைக்கு உப்பு கூட போட்டு உணவு உட்கொள்ள முடியாத சூழலை பெரும்பாணாற்றுப்படையின் .......... பாடல் உணர்த்துகிறது. ஒரு புறம் வறுமை, மறுபுறம் மன்னனின் கொண்டாட்ட நிகழ்வும் மன்னர்களை துதிபாடுதலும் நிகழ்ந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

சங்க காலத்தில் தான் இந்நிலை என்றால் சங்க மருவிய காலத்திலும் இதே நிலை தான். அக்காலத்தில் வேற்றாரின் படையெடுப்பு பெரும் சிக்கலை உருவாக்கியிருக்கிறது. படையெடுப்புகளால் ஒரு புறம் செல்வம் குவிந்து கிடக்க, மறுபுறம் வறுமையும் நிறைந்திருக்கின்றது. அதன் விளைவே “தர்மம் செய்ய விரும்பு” என்றும் இருப்பவர்கள் இயலாதவர்களுக்கு, இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்ற சிந்தனைகள் எழுந்திருக்கின்றன. அச்சிந்தனையே தர்மமாய், அறமாய் போற்றப்பட்டது. ‘பிறன் மனைநோக்கா பேராண்மை வேண்டும்’ என எல்லோருக்கும் சுட்டப்பட்டது. வறுமையில் வாழ்ந்தாலும் மானத்தோடு வாழ வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இஃது அடிப்படையில் வாழ வழியில்லாதோர் கோபம் கொண்டு மன்னர்களையோ, பெருஞ்செல்வந்தர்களையோ, அவர்களின் சொத்தினை பிறர் அடைந்துவிடக் கூடாது என்பதற்காகவே இக்கருத்துப் பரப்பப்பட்டதா என்ற கேள்வியும் எழுகிறது.

துணை நூல்கள்

1. புறநானூறு, உ.வே. சாமிநாதர் உரை, உ.வே.சா. நூல் நிலையம், சென்னை, மு.ப. 1971.
2. பெரும்பாணாற்றுப்படை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை - 18. மு.ப. 1970
3. சிறுபாணாற்றுப்படை, சை.சி. நூற்பதிப்பு கழகம், சென்னை - 18. மு.ப. 1970.
4. பத்துப்பாட்டு (இரு பகுதிகள்), பொ.வே. சோமசுந்தரனார் உரை, சை.சி. நூற்பதிப்பு கழகம், சென்னை. 1966.

- முனைவர் பா. பிரபு, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுராந்தகம்

Pin It