இங்கிலாந்தில் பயின்று பாரிஸ்டர் பட்டம் பெற்று, பல ஜீரிக்களை அமர்த்திக்கொண்டு மதுரையில் புகழ்பெற்ற வக்கீலாக இருந்து வந்தார். 1907-ஆம் ஆண்டு திலகரின் சுயாட்சி இயக்கத்தால் கவரப்பட்டார். காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்திற்குச் செவி சாய்த்து வக்கீல் தொழிலைக் கைவிட்டார். மேல்நாட்டு முறையில் அணிந்திருந்த தமது ஆடைகளைத் தூக்கி எறிந்தார். கதர்வேட்டியும், கதர் ஜிப்பாவும், காந்திக்குல்லாவும் அணியத் தொடங்கினார்.
மதுரை புகைவண்டி நிலையத்திற்கு அருகில் உள்ள விக்டோரியா எட்வர்ட் மன்றத்தில் 1918-ஆம் ஆண்டு திலகர், டாக்டர் பி.வரதராஜீலு நாயுடு முதலிய தலைவர்கள் இந்திய விடுதலைப்போர் குறித்து கனல்தெறிக்க உரையாற்றிக் கொண்டிருந்தனர். டாக்டர் பி. வரதராஜீலு நாயுடு மீது ஆங்கிலேய அரசு ராஜதுவேச குற்றம் சுமத்தி சிறையிலடைத்தது. டாக்டர் பி.வரதராஜீலு நாயுடுவிற்காக நீதிமன்றத்தில் இராஜாஜி வாதாடினார். இராஜாஜிக்கு சட்ட உதவியாளராக ஜார்ஜ் ஜோசப் இருந்தார். மதுரை மாவட்ட ஆட்சியர் மன்றத்தில் வழக்கு நடைபெற்றது. வழக்கின் தீர்ப்பை அறிய மாவட்ட ஆட்சியர் மன்றத்திற்கு வெளியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வெள்ளம்போல் திரண்டனர். கூட்டத்தைக் கலைக்கக் காவலர்கள் முன்னறிவிப்பின்றி தடியடிப்பிரயோகம் செய்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தினர். பலர் காயமுற்றனர். நீலமேகம் சுப்பையா என்ற இளைஞன் சுருண்டு விழுந்து துடித்தான், துப்பாக்கிச் சத்தம் கேட்டு இராஜாஜியும், ஜார்ஜ் ஜோசப்பும் வெளியில் வந்தனர், ஜார்ஜ் ஜோசப் நீலமேகம் சுப்பையாவை மடியில் ஏந்தினார். அந்த இளைஞன் உயிர் பிரிந்தது. ஜார்ஜ் ஜோசப் முதலானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
ரௌலட் சட்டத்தைப் பற்றி விவாதிக்க 1919-ஆம் ஆண்டு மார்ச் 18-ஆம் நாள் காந்தியடிகள் சென்னைக்கு வந்தார். ஜார்ஜ் ஜோசப், இராஜாஜி, கஸ்தூரிரெங்க அய்யங்கார், டி.எஸ்.எஸ்.ராஜன் முதலியவர்களுடன் விவாதித்து ரௌலட் சட்ட எதிர்ப்பியக்கத்தை அறிவித்தார். மதுரையில் ஜார்ஜ் ஜோசப்பின் தலைமையில் ரௌலட் சட்ட எதிர்ப்பியக்கம் வெற்றிகரமாக நடைபெற்றது. மதுரையில் இருந்த பஞ்சாலைகளும், கடைகளும் அடைக்கப்பட்டு மதுரை நகரமே அமைதியில் ஆழ்ந்தது.
ஜார்ஜ் ஜோசப் மதுரையில் தொழிலாளர்களுக்கு என்று முதன் முதலில் தொழிற்சங்கம் அமைத்தார். தொழிலாளர்களுக்கு போனஸ், மருத்துவ வசதி, தொழிலாளர்களின் குழந்தைகளுக்குக் கல்வி முதலிய கோரிக்கைகளை முன்வைத்தார். மதுரையில் இருந்த அனைத்துத் தொழிலாளர்களும் விழிப்புற்று ஒன்றுபட்டனர்.
மதுரையில் இருந்த ஹார்வி என்னும் அய்ரோப்பிய பஞ்சாலை நிர்வாகதத்திற்கு, தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி அறிக்கை அனுப்பினார். ஹார்வி மில் நிர்வாகம் தொழிலாளர்களின் கோரிக்கைகளைப் புறக்கணித்தது. அதனால் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜார்ஜ் ஜோசப் வேலை நிறுத்தப் போராட்டத்திற்குத் தலைமை ஏற்றார். நிர்வாகம் கதவடைப்புச் செய்து தொழிலாளர்களை வெளியேற்றியது.
மூன்று மாத காலம் போராட்டம் நீடித்தது. தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்க ஜார்ஜ் ஜோசப்பின் மனைவியும், சிதம்பர பாரதி முதலான தொண்டர்களும் தெருத்தெருவாகச் சென்று, மக்களிடம் அரிசியும், பணமும் சேகரித்துத் தொழிலாளர்களுக்குத் தந்து உதவினர். தொழிலாளர்கள் மில் நிர்வாகத்திற்கு அடிபணியாமல் தொடர்ந்து போராடினர்.
இறுதியில் மில் நிர்வாகம் இறங்கி வந்தது. தொழிலாளர்களின் பிரச்சனை சுமுகமாக தீர்க்கப்பட்டது. ஆனால், வேலை நிறுத்தப் போராட்டம் முடிந்ததும் மில் நிர்வாகம் தொழிலாளர்களைப் பழி வாங்கியது. எண்ணற்றத் தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். ஜார்ஜ் ஜோசப் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்காகப் பொதுமக்களிடம் நிதி உதவியும், பங்கு ஒன்றுக்கு பத்து ரூபாய் வீதம் பங்குகளும் சேகரித்தார். மதுரை மீனாட்சி மில் திறக்கப்பட்டது. ஹார்வி மில்லில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மதுரை மீனாட்சி மில்லில் வேலை வழங்கப்பட்டது.
ஜார்ஜ் ஜோசப் 1921-ஆம் ஆண்டு அலகாபாத்திற்குச் சென்றார். மோதிலால் நேருவின் ‘இண்டிபென்டண்ட்’ (ஐனேநயீநனேநவே) இதழின் ஆசிரியரானார். இச்சூழலில் காந்தியடிகள் ஒத்துழையாமைப் போராட்டத்தை அறிவித்தார். அலகாபாத்தில் நடைபெற்ற ஒத்துழையாமைப் போராட்டத்திற்கு ஜார்ஜ் ஜோசப் தலைமையேற்றார். கிரிமினல் சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு நைனிடால் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் ஜவகர்லால் நேருவுடன் நாட்டு விடுதலைக்குப்பின் அடை ய வேண்டிய வளர்ச்சிகள் குறித்து விவாதித்தார்.
ஜார்ஜ் ஜோசப் விடுதலையடைந்ததும் மதுரைக்கு வந்தார். மதுரை மீனாட்சி மில்லில் பங்குதாரர்கள் பலரும் விலகியதால், மில் தனியார் வசம் சென்றது கண்டு மனம் வருந்தினர்.
கேரளாவில் வைக்கம் போராட்டம் 1925-ஆம் ஆண்டு தந்தை பெரியார் தலைமையில் தொடங்கியது. இப்போராட்டத்தின் அமைப்பாளராக ஜார்ஜ் ஜோசப் விளங்கினார். தந்தை பெரியார் உள்ளிட்ட பல தலைவர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்திய நாடெங்கும் 1928-ஆம் ஆண்டு சைமன் குழு எதிர்ப்பியக்கம் நடைபெற்றது. மதுரையில் சைமன் குழு எதிர்ப்பியக்கப் பரப்புரையில் ஈடுபட்டார். சைமன் குழு செல்லும் இடமெல்லாம் மக்கள் தெருவில் திரண்டு நின்று கறுப்புக் கொடியேந்தி தீவிரமாக எதிர்ப்புத் தெரிவித்தனர். மதுரை திருமலை நாயக்கர் மகாலில் அப்போது நீதிமன்றங்களும், நகராட்சி அலுவலகமும் செயல்பட்டு வந்தன. அந்த அலுவலகங்கள் முன்பு ஜார்ஜ் ஜோசப் தலைமையில் கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மதுரை மற்றும் இராமநாதபுரம் மாவட்டத் தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். காவலர்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தினர். ஜார்ஜ் ஜோசப்பின் தலையிலும், உடலிலும் இரத்தக் காயம் ஏற்பட்டது. தடைச்சட்டம் 144 பிரிவின் கீழ் ஜார்ஜ் ஜோசப் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.
பிரமலைக் கள்ளர் சமுதாயத்தினரின் மீது பிரிட்டிஷ் அரசு ‘குற்றப்பரம்பரை’ என்று விதித்திருந்த ‘ரேகைச் சட்டத்தை’ எதிர்த்து ‘பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்’ போராட்டம் தொடங்கினார். ஜார்ஜ் ஜோசப் திருமங்கலத்தில் இப்போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார். மறியல், கடையடைப்பு எனப் போராட்டம் தீவிரமடைந்தது. காவல்துறையினர் போராட்டம் நடத்திய தொண்டர்கள் மீது தடியடிப் பிரயோகமும், துப்பாக்கிச் சூடும் நடத்தினர். நூற்றுக்கணக்கானவர்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். கர்ப்பிணிப் பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் பலியானார். இறுதியில் போராட்டம் வெற்றியடைந்தது. ‘ரேகைச் சட்டம்’ அகன்றது. இதனால், திருமங்கலம் வட்டாரப் பிரமலைக்கள்ளர் சமுதாய மக்கள் இவரை அன்புடன் ‘ரோசாப்பூ ராசா’ என்று அழைத்தனர். இந்தியச் சட்டமன்றத்திற்குப் போட்டியிட்டு 1937-ஆம் ஆண்டு வெற்றி பெற்றார். தொழிலாளர் நலன், பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களின் நலன் முதலியவற்றுக்காக சட்டமன்றத்தில் வாதாடினார்.
ஜார்ஜ் ஜோசப்பின் குடும்பம் இந்திய விடுதலை வேள்வியில் தியாகம் செய்த குடும்பம் ஆகும். ஜார்ஜ் ஜோசப்பின் இரண்டாவது மகள் 1943-ஆம் ஆண்டு காந்தியடிகள் ஆகாகான் மாளிகையில் உண்ணாவிரதம் இருந்தபோத சென்னையில் மறியலில் ஈடுபட்டு ஆறு மாதம் சிறைத்தண்டனை பெற்றார். இவரது மகனும், மூத்த மகளும் காந்தியவழிப் போராட்டங்களில் ஈடுபட்டார்கள்.
இந்திய விடுதலைக்காகத் தமது இறுதி மூச்சுள்ளவரை பாடுபட்ட ஜார்ஜ் ஜோசப் 1938-ஆம் ஆண்டு மறைந்தார். அவர் மறைந்தாலும், அவரது தொண்டும், தியாகமும் வரலாற்றில் நிலைத்து நிற்கும்.
- பி.தயாளன்