முதல் இந்தியச் செவ்வியல் மொழி:

            பண்டைய கால கட்டத்தில், வட இந்தியாவில் பிராகிருதம், பாலி ஆகிய இரு மொழிகள் செல்வாக்குப் பெற்றிருந்தன. தக்காண பகுதியில் தமிழும் பிராகிருதமும் செல்வாக்குப் பெற்றிருந்தன. பண்டைய இந்தியாவில் மகத அரசுகளில் உயர் தரமான இலக்கியம் எதுவும் படைக்கப்படவில்லை எனக்கூற வந்த டி.டி.கோசாம்பி அவர்கள், “சிசுநாகர் அல்லது மௌரியருடைய சமயச் சார்பற்ற படைப்பிலக்கியம் என்று ஏதும் ஒன்று அப்போது இருந்ததாக தெரியவில்லை” என்கிறார்-(13). இந்தியா முழுவதும் தமிழ் மொழியைத் தவிரப் பிற மொழிகளில் செவ்வியல் தரமுள்ள இலக்கிய படைப்புகள் எதுவும் அன்று படைக்கப்படவில்லை என்பதை இக்கூற்று உறுதி செய்கிறது.

           dd kosambi எனவே அக்காலகட்டத்தில், இந்தியாவில், செவ்வியல் தரமுடைய இலக்கியங்களைப் படைத்த தமிழ் மொழியில் தான்  முதன் முதலாக எழுத்து முறை உருவாகி இருக்க வேண்டும்.    பண்டைக் காலம் முதல் கி.பி 2ஆம் நூற்றாண்டு வரையான பண்டைய இந்தியாவில் தக்காணப் பகுதி முழுவதும் தமிழ் மொழி தனியாகவும் பிராகிருதத்தோடும் இணைந்து ஆட்சி மொழியாகவும் மக்கள் மொழியாகவும் செல்வாக்கு பெற்றிருந்ததோடு உன்னதமான, உலகத்தரமான, உலகளாவிய மனித விழுமியங்களைக் கொண்ட செவ்வியல் இலக்கியங்களைப் படைத்த மொழியாகவும் இருந்தது. அதே சமயம் வட இந்தியப் பகுதிகளில் பிராகிருதம், பாலி முதலிய மொழிகள் மக்கள் மொழிகளாக, அரசு மொழிகளாக இருந்த பொழுதிலும் செவ்வியல் இலக்கியங்கள் எதையும் படைக்கும் அளவு அவை வளர்ச்சி பெற்றிருக்கவில்லை.

            சமற்கிருத மொழி கி.பி 2ஆம் நூற்றாண்டு வாக்கில் தான் முதன் முதலாகக் கல்வெட்டுகளில் பயன்படுத்தப்பட்டது. அதன் செவ்வியல் படைப்பிலக்கியங்கள் கி.பி 4ஆம் நூற்றாண்டு வாக்கில் தான் உருவாகின. பண்டைய இந்தியாவில் சமற்கிருதம் வரலாற்றளவில் மக்கள் மொழியாகவோ அரசு மொழியாகவோ கி.பி 2ஆம் நூற்றாண்டு வரை இருக்கவில்லை. ஆகவே பாலி, பிராகிருதம், சமற்கிருதம் போன்ற வட இந்திய மொழிகளில் முதன் முதலாக எழுத்து முறை உருவாகியிருக்க வாய்ப்பில்லை. ஆகவே வரலாற்றுப் படிப்பினையின்படி முதல் செவ்வியல் இலக்கியங்களைத் தோற்றுவித்த தமிழ் மொழியில் மட்டுமே முதல் இந்திய எழுத்து முறை உருவாகியிருக்க வேண்டும். தொல்லியல், கல்வெட்டியல் சான்றுகளும் அதனை உறுதிப் படுத்துகின்றன.

          ஆகவே தமிழ் மொழி மட்டுமே கி.மு. 6ஆம் நூற்றாண்டு முதலே செவ்வியல் இலக்கியங்களைப் படைக்கும் திறன் கொண்டதாக வளர்ச்சி பெற்றிருந்தது என்பதால் அன்றையத் தமிழ்ச் சமூகம் அரசியல், பொருளாதாரம், தொழில், வணிகம், கலை, பண்பாடு, இலக்கியம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் பிற இந்தியச் சமூகங்களை விட உயர் வளர்ச்சி பெற்ற ஒரு சமூகமாக இருந்திருக்க வேண்டும். இந்திய அரசு 5 மொழிகளை செவ்வியல் மொழிகள் என அங்கீகரித்து உள்ளது. முதலில் தமிழ் மொழியும் பின் சமற்கிருதமும் அதற்குப் பின் கன்னடம், தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளும் செவ்வியல் மொழிகளாக இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டன. இதில் தமிழ் மொழியின் செவ்வியல் இலக்கியக் காலகட்டம் என்பது கி.மு. 6ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 1ஆம் நூற்றாண்டு வரையாகும். சமற்கிருத மொழியின் செவ்வியல் இலக்கியக் காலகட்டம் என்பது கி.பி.  4ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.  8ஆம் நூற்றாண்டு வரையான குப்தர் காலமும் அதற்குப் பிந்தைய காலமும் ஆகும்.

கன்னடத் தெலுங்கு மொழிகள்:

           இரேனாடு சோழர்களால் (Renati Cholas), கி.பி 6ஆம் நூற்றாண்டில்  வெட்டப்பட்டத் தெலுங்கு மொழியின் முதல் கல்வெட்டு இராயல் சீமாவில் கிடைத்துள்ளது. தெலுங்கு மொழியின் முதல் இலக்கிய நூலான நன்னய்யாவின் மகாபாரதம் கி.பி 11ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது ஆகும். தெலுங்கு மொழியின் பொற்காலமோ விசய நகர அரசர்களின் காலம் ஆன கி.பி 15ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 17ஆம் நூற்றாண்டு வரையான காலகட்டம் ஆகும். கன்னட மொழியின் முதல் கல்வெட்டு கடம்ப மன்னர்களால் வெட்டப்பட்ட கி.பி 5ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்மிதி கல்வெட்டாகும் (Halmidi  Inscription).  கன்னட மொழியின் முதல் இலக்கியம் கி.பி 9ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கவிராச மார்க்கம் (Kaviraja maarga) என்பதாகும். அதன் பொற்காலம் கி.பி. 10ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 12ஆம் நூற்றாண்டு வரை ஆகும். ஆக தெலுங்கு, கன்னடம் ஆகிய இரு மொழிகளின் இலக்கியங்களும் தமிழ் மொழியில் செவ்வியல் இலக்கியப் படைப்புகள் தோன்றிய பின் சுமார் 1200 ஆண்டுகள் கழித்துத் தோன்றியவை-(14).

            தெலுங்கு மொழியின் முதல் கல்வெட்டை வெட்டிய இரேனாதி சோழர்களும், கன்னட மொழியின் முதல் கல்வெட்டை வெட்டிய கடம்ப அரசர்களும் தமிழ் வழி வந்த அரச வம்சங்களாகவே தெரிகின்றனர். கடம்ப மன்னர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுகின்றனர். இரேனாதி சோழர்களோ, தமிழகச் சோழ அரச வம்சத்தோடு தொடர்பு கொண்டவர்கள்.  தற்பொழுது தெலுங்கு, கன்னட மொழி பேசும் பகுதிகளில் சங்க காலத்தில் கொடுந்தமிழே பேசப்பட்டது எனச் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. வடக்கே செல்லச் செல்ல தமிழ் மொழி திரிந்து, தேய்ந்து கொண்டிருந்ததால் அப்பகுதியை மொழி பெயர் தேயம் எனச் சங்க இலக்கியம் கூறுகிறது.

            சங்க இலக்கியம் உருவாகிப் பல நூற்றாண்டுகள் கழித்து, சமற்கிருத, பிராகிருத, பாலி மொழிக் கலப்புகளால் கன்னட, தெலுங்கு மொழிகள் உருவாகின. ஆனால் அம்மொழிகளுக்கான அடிப்படை தமிழே. அதனால் தான் என்றி ஒய்சிங்டன் 1853 லேயே, “தமிழ் மொழியிலிருந்து உருவான மொழிகளாகவே கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு ஆகிய மொழிகள் கருதப்படுகின்றன” எனக் குறிப்பிட்டுள்ளார். எனவே உலகச் செவ்வியல் இலக்கியங்களுக்கு உரிய வரையறைகளைக் கொண்டு நோக்கினால் தமிழ், சமற்கிருதம் ஆகிய இரு மொழிகள் மட்டுமே செவ்வியல் மொழிகளாகும் தகுதி உடையன. ஆனால் அரசியல் காரணங்களால் தெலுங்கு, கன்னட மலையாள மொழிகளும் செவ்வியல் மொழிகளாக மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் கன்னட தெலுங்கு மழையாள மொழிகளைச் செவ்வியல் மொழிகளாக உலக அறிஞர்கள் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.

            இலங்கையில் சிங்கள மொழி கி.பி. 8ஆம் நூற்றாண்டு வாக்கில்தான் தனக்கெனத் தனித்துவப் பண்புகளைப் பெற்று ஒரு தனி மொழியாக உருவாகியது-(15). இந்தி போன்ற நவீன இந்திய மொழிகளின் எழுத்துக்களும் இலக்கியங்களும் கி.பி. 1000க்குப் பின்னரே உருவாகின்றன. எனவே தமிழில் செவ்வியல் இலக்கியங்கள் தோன்றி 1500 ஆண்டுகள் கழித்தே அவை உருவாகின்றன. ஆகவே உலக இலக்கியங்களோடும், இந்திய இலக்கியங்களோடும் ஒப்பிடும் பொழுது தமிழ்மொழியின் இலக்கியம் மிக மிகப் பழமையானது; உலகளாவிய மனித விழுமியங்களைக் கொண்டது; உலக மொழியியல் அறிஞர்கள் அனைவராலும் செவ்வியல் இலக்கியம் என அங்கீகரிக்கப்பட்டது ஆகும்.

யப்பான் மொழி:

            யப்பான் மொழி கி.பி.5 ஆம் நூற்றாண்டில் சீன எழுத்தைக் கொண்டு எழுதப்பட்டது. அதற்கு முன் அதற்கு எழுத்து இல்லை. கி.பி. 712இல் எழுதப்பட்ட யப்பான் மொழியின் கோசிகி kojiki(Records of ancient matter)- என்கிற நூல்தான் தற்பொழுது கிடைக்கும் முதல் யப்பான் நூலாகும். கி.பி. 5ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 8ஆம் நூற்றாண்டு வரையான பழைமையான கவிதைகளின் தொகுப்பு நூல் “1000 இலைகளின் தொகுப்பு“(Manyoshiu) என்ற பெயரில் கி.பி 759இல் தொகுக்கப்பட்ட நூல் ஆகும்.  இதில் 4000 பழைமையான கவிதைகள் உள்ளன. இதுவே யப்பான் மொழியின் மிக மிகப் பழமையான கவிதைகளின் தொகுப்பு ஆகும். யப்பான்  மொழியின் பொற்கால கட்டமாகக் கருதப்படுவது கி.பி. 9ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 12ஆம் நூற்றாண்டு வரையான இயான்(Heian period) காலகட்டம். இக்காலகட்டத்தில் ஒப்பீட்டளவில் யப்பான் ஒரு வளர்ச்சிபெற்ற சமூகமாக இருந்தது-(16)    ஆகவே யப்பான் இலக்கியம் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் துவங்கிவிட்டது. அதன் பொற்காலமோ கி.பி. 9ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 12ஆம் நூற்றாண்டு வரை ஆகும். எனவே யப்பான் மொழி பல விதத்திலும் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளுக்குச் சமமானது அல்லது அவைகளைவிடப் பழமையானது. மிகச் சிறந்த இலக்கியங்களைக் கொண்டது. எனினும் உலக அறிஞர்கள் யப்பான் மொழியை ஒரு செவ்வியல் மொழியாக அங்கீகரிக்கவில்லை. யப்பானியர்களும் தங்கள் மொழி ஒரு செவ்வியல் மொழி எனக் கூறிக் கொள்வதில்லை. செவ்வியல் மொழிகளாக உலக அறிஞர்களால் அங்கீகரிக்கப்பட்ட கிரேக்கம், இலத்தீன், சீனம், இப்ரூ, சமற்கிருதம், தமிழ் போன்ற மொழிகள் அனைத்துமே 2000 ஆண்டுகள் பழைமையானவை.; தனித்தன்மை மிக்கவை; உயர்தரமான உன்னதமான இலக்கியங்களைக் கொண்டவை; உலகளாவிய மனித விழுமியங்களைப் பேசுபவை; பல கிளை மொழிகளை உருவாக்கியவை ஆகும்.

தமிழிய மொழிக்குடும்பம்:

தமிழும் அதன் கிளை மொழிகளான கன்னடம், தெலுங்கு, மழையாளம், துளு இன்னபிற திராவிடமொழிகளும் முன்பு தமிழிய மொழிக்குடும்பமாகவே கருதப்பட்டு வந்தது. கால்டுவல் காலத்திற்குப்பின்தான் அவை திராவிட மொழிக்குடும்பங்களாயின. கால்டுவலின் நூல் வெளிவருவதற்கு முன்பே 1852 வாக்கிலேயே, என்றி ஒய்சிங்டன் என்பவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய மொழிகள் தமிழில் இருந்து தோன்றியவை என்ற கருத்தை முன்வைத்துள்ளார் என முன்பே பார்த்தோம். 1811ஆம் ஆண்டு எல்லிஸ்(ELLIS) குழு தந்த இளநிலைப் பணியாளர்க்கான கல்வித்திட்டம் குறித்த அறிக்கையில் செந்தமிழ், கொடுந்தமிழ், மலையாளத்தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய ஐந்து இன உறவு மொழிகளின் இலக்கணம், மரபுத்தொடர் முதலியன தமிழிலிருந்து பெறப்பட்டவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது(MPC, 10-12-1811, 67ஆவது பத்தி)-(17) மரபுத்தொடர் என்பது பெரிதும் வாக்கியங்களைக் குறிக்கிறது..

மேலும் இக்குழு இந்தியாவுக்கு வருகிறவர்களுக்கு பயிற்சியளித்த கெர்ட்ஃபோர்டு கல்லூரியின் பாடத்திட்டத்தில் தமிழைச் சேர்க்கவேண்டும் எனக்கூறியது(18). மேலும் தனது நண்பர் எர்ஸ்கினுக்கு எழுதிய கடிதத்தில்(ELLIS TO ERSKINE, 24-3-1817) “தென்னிந்திய எழுத்து முறையில் சிங்களம், பர்மியம், ஜாவா மொழி எழுத்துக்களும் இடம்பெறும். காரணம் இவை தமிழ் எழுத்து முறையிலிருந்து தோன்றியவை என்ற எல்லிசின் நம்பிக்கை” எனச்சொல்லப்பட்டுள்ளது(19). “தென்னிந்திய மொழிகள் ஒன்றோடொன்று உறவுடையன, சமற்கிருத செல்வாக்கு என்பது சொற்களில் உள்ளதே தவிர இலக்கணத்தில் இல்லை, இம்மொழிகள் எல்லாம் ஒரே வினையடிச் சொற்களை உடையவை, தமிழ் மற்ற மொழிகளுக்கு மூலம் என்ற கருத்துக்களை எல்லிஸ் முன் வைத்தார்” என்கிறார் தாமஸ் டிரவுட்மன்(20).

1816 வாக்கிலேயே எல்லிஸ் தென்னிந்திய மொழிகள் தனி மொழிக் குடும்பத்தைச்சேர்ந்தவை எனவும் அவைகளுக்கான மூலமொழி தமிழ் எனவும் கருத்துக் கொண்டிருந்தார். அதன்பின் 40 வருடம் கழித்துத்தான்(1856) கால்டுவல் திராவிட ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதினார். தமிழ் யாப்பியலை உள்ளடக்கிய நான்கு ஆய்வுரைகளை எழுத எல்லிஸ் திட்டமிட்டிருந்தார். அவை

1.தமிழ் பேசும் நாடுகளின் வரலாறு

2.தமிழ்மொழி, அதன் பழைய, புதிய கிளை மொழிகள்

3.தமிழ் யாப்பியல்

4.தமிழ் இலக்கியம்                      -ஆகியனவாகும்.

            இந்த ஆய்வுரைகள் கிட்டத்தட்ட நிறைவுற்றதாகவும், சில திருத்தங்கள் மட்டும் செய்ய வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த நான்கு ஆய்வுரைகளும் வெளி வந்திருக்குமானால் அவை எல்லிசுக்கு பெரும் புகழை தந்திருக்கும் என்பதில் ஐயமில்லை என்கிறார்(21) தாமஸ் டிரவுட்மன். தமிழும் அன்றே பெரும்புகழ் பெற்றிருக்கும். எல்லிசின் திட்டத்தின் மையப்பகுதியும் முதன்மை ஆய்வுரையும் தமிழ் மொழி குறித்தது ஆகும். ஆனால் அவை வெளி வரவில்லை. தமிழுக்கும் தமிழர்க்கும் இது மாபெரும் இழப்பாகும். ஏ. டி. காம்பெல் எழுதிய தெலுங்கு இலக்கண நூலின் முன்னுரைக் குறிப்பாக எல்லிசின் 1816ஆம் ஆண்டு தெலுங்கு ஆய்வுரை வெளியிடப்பட்டது. ‘திராவிடச்சான்று’ எனப் பெயரிட்டு நான் எழுதியதற்கு இந்த ஆய்வுரையே முக்கிய ஆதாரமாகும் என்கிறார் தாமஸ் டிரவுட்மன்(22). ஆகவே திராவிடச் சான்று என்ற பெயர் தாமஸ் டிரவுட்மன் அவர்களால்தான் வைக்கப்பட்டது. எல்லிஸ் எல்லா இடங்களிலும் தமிழ் என்ற பெயரையே வைத்திருந்தார். வீரமாமுனிவர் என்ற பெஸ்கியின் மீது எல்லிஸ் பெரு மதிப்புக் கொண்டிருந்தார். எல்லிஸ் எழுதிய தெலுங்கு ஆய்வுரையும், மலையாள ஆய்வுரையும் வெளியிடப்பட்டுள்ளது(23). ஆனால் தமிழ் பற்றிய ஆய்வுரைகள் கிடைக்கவில்லை. தமிழின் கிளை மொழிகள் என்ற அடிப்படையில்தான் இந்த தெலுங்கு, மலையாள ஆய்வுரைகள் அவரது பெருநூலில் இடம்பெற்றிருக்கும். எட்டுத்தொகை பத்துப்பாட்டு நூல்கள்(2300 பாடல்கள்) 1880-1910 கால அளவில் அச்சிட்டு வெளிவருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே எல்லிஸ்  இந்த ஆய்வு நூல்களை எழுதியிருந்தார்.

எல்லிஸ் 1819இல் எதிர்பாராமல் தனது 41ஆவது வயதில் இறந்து போனார். இது தமிழுக்கு பேரிழப்பாக ஆகியது. அவருடைய கையெழுத்துப்படிகள் அடுப்பெரிக்கப் பயன்படுத்தப்பட்டன(24). அவரது தமிழ் ஆய்வுகள் நூலாக வெளிவரவில்லை. எல்லிசின் ஆய்வு முடிவடைந்து நூலாக வெளி வந்திருக்குமானால் தமிழ் மொழிதான் தென்னிந்திய மொழிகளுக்கு மூலமொழி என்ற கருத்தும், தென்னிந்திய மொழிகள் தமிழிய மொழிக்குடும்பம் என்ற கருத்தும் நிலை பெற்றிருக்கும். அவர் திராவிட மொழிக்குடும்பம் என்ற சொல்லை எங்கும் பயன்படுத்தவில்லை. திராவிடம் என்ற ஒரு மொழி இல்லை. தமிழ் என்ற சொல்தான் திரமிள, திரவிட என உருமாறி ‘திராவிடம்’ என்ற சொல்லாக ஆகியது. ஆகவே திராவிட மொழிக்குடும்பம் என்பது தமிழிய மொழிக்குடும்பமே ஆகும்.

டி.டி.கோசாம்பியும் இந்தியக் கண்ணோட்டமும்:

            தமிழின் வரலாற்றை, தமிழர்களின் வரலாற்றை இரண்டாம் நிலைக்கு உந்தித் தள்ளும் சிந்தனை இந்திய அறிஞர்களிடம் இருக்கிறது. இதற்கு டி.டி.கோசாம்பி அவர்களே ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறார். அவர் ஒரு மார்க்சிய அறிஞர் எனவும் அறியப்படுகிறார். பண்டைக்கால தென்னிந்திய வரலாற்றைப் பேச வந்த அவர், “வரலாற்றைத் தொழிலாகக் கொண்டவர்களுக்குத் தெற்கில் உள்ள அரச வம்சப் பட்டியல் ஒரு இன்பமான பொழுது போக்கு; இட்சுவாகு, பல்லவர்......... சேர, சோழ, பாண்டியர் மற்றும் வேறு பல மன்னர்கள் கொண்ட பட்டியல் கவர்ச்சியாக இருந்தாலும் பொதுவாக அவை அர்த்தமற்றவை” என்கிறார் அவர்-(25).

            பின் சமற்கிருத இலக்கியங்கள் குறித்து பேச வந்த அவர், “ ....... அவ்வாறே பணடைய தமிழ் இலக்கியத்தையும் இந்த ஆய்விலிருந்து நான் விலக்க வேண்டி இருக்கிறது “  எனச் சொல்லிவிட்டு பெரும்பாலான சமயச் சார்பான சமற்கிருத இலக்கியம் குறித்து நிறைய பேசுகிறார்-(26). மதச் சார்பற்ற, அறிவியல் கண்ணோட்டம் உடைய, பொருள் முதல் வாத மெய்யியலைக் கொண்ட, உயர் வளர்ச்சி அடைந்த சங்க காலச் சமூகம் குறித்தோ அதன் இலக்கியம் குறித்தோ 550 பக்கம் கொண்ட அந்த நூலில் எதுவுமே பேசப்படவில்லை.  உயர் வளர்ச்சி அடைந்த தமிழ்ச் சங்ககாலச் சமூகம் குறித்து எதுவுமே பேசாத அவர்,  அந்நிய வரலாற்று ஆசிரியர்கள் அலெக்சாந்தரின் படையெடுப்பை மட்டும் ஒரு மாபெரும் சம்பவமாகச் சித்தரிப்பது குறித்து வருத்தப்படுகிறார்-(27).

            தமிழின் சங்ககால இலக்கியம் குறித்து அறிந்தவர்,  மார்க்சியவாதி, பண்டைய வட இந்திய நூல்கள், கல்வெட்டுகள் அனைத்துமே சேர, சோழ, பாண்டிய அரசுகள் குறித்துக் குறிப்பிடுவதை அறிந்தே இருப்பார். ஆனால் அவைகளை அர்த்தமற்றவை என ஒதுக்கிவிட்டு, தமிழின் சங்ககால இலக்கியங்களை ஆய்வில் இருந்து விலக்கிவிட்டு, வரலாறு எழுதுகிற ஒரு வட இந்திய மார்க்சிய வரலாற்று அறிஞர் குறித்து என்ன சொல்வது?  வட இந்திய வரலாறுகள் குறித்து என்ன சான்றுகள் உள்ளன?  சமயம் சார்ந்த புனிதப் பாடல்களும் புராணங்களும் தான் அதிகம்.  நம்பத் தகுந்த சான்றுகளாக உள்ள அசோகர் மற்றும் கலிங்க மன்னன் காரவேலனின் கல்வெட்டுகள், மெகத்தனிசு மற்றும் சாணக்கியரின் நூல்கள் ஆகிய அனைத்துமே தமிழக அரசுகள் குறித்துப் பேசுகின்றன. மிகப்பெரிய அளவிலான உயர்தரமிக்க சங்க இலக்கியம் இருக்கிறது. எனினும் தமிழர் வரலாறு குறித்து அறிந்து கொள்ள அல்லது அது குறித்துப் பேச அவர் விரும்பவில்லை. அது முக்கியமற்றது என அவர் கருதுகிறார்.

            இங்கு நான் முன்பு குறிப்பிட்ட வரலாற்று விதியினை, வரலாற்றுப் படிப்பினையை நினைவு கூற விரும்புகிறேன். ஒரு மார்க்சியவாதியாக அறியப்படும் டி.டி.கோசாம்பி அவர்கள் செவ்வியல் தரமிக்க சங்க இலக்கியங்களைப் படைத்தத் தமிழ் சமூக வரலாற்றை, அதன் அரசுகளை அர்த்தமற்றவை என ஒதுக்குவது, பொதுவாக வட இந்திய வரலாற்று அறிஞர்களின் ஒரு சார்பு மனப்பான்மையையே காட்டுகிறது. இந்த ஒரு சார்பு மனப்பான்மை வட இந்திய அறிஞர்களிடம் மட்டுமல்ல, தமிழ் அறிஞர்கள் உட்படப் பல தென்னிந்திய அறிஞர்களிடமும் இருக்கிறது. இதுவே வருத்தத்திற்குரிய விடயம் ஆகும். பொதுப்படையான இந்தியக் கண்ணோட்டதில் இருந்து விலகிப் பேசுவது, உண்மையைப் பேசுவது, தன்னைத் தனிமைப் படுத்தித் தனது வளர்ச்சியைச் சிதைத்து விடும் என்ற பயமும் பலருக்கு இருப்பதாகத் தெரிகிறது. இங்கு இந்தியக் கண்ணோட்டம் என்பதுவே ஒரு சார்பான தமிழக வரலாற்றை ஒதுக்குகிற, விலக்குகிற, மறுக்கிற கண்ணோட்டம் ஆகும். இந்நிலை மாறும்பொழுது மட்டுமே உண்மையான வரலாறு வெளிப்படும். தமிழக வரலாற்றின் தனித் தன்மையும், இந்திய வரலாற்றில் தமிழர்கள் ஆற்றிய பங்கும் நிலை நாட்டப்படும்.

பார்வை:

13.இந்திய வரலாற்று அறிஞர் டி.டி.கோசாம்பி, ‘பண்டைய இந்தியா’ தமிழில் ஆர்.எசு. நாராயணன், NCBH பதிப்பகம், செப்டம்பர்-2006, பக்.410.      

14.’இன்றைய இந்திய இலக்கியம்’ சாகித்திய அக்காதெமி வெளியீடு, பக்; 87, 185;  விக்கிபீடியா; Telugu_language, kannada_language.

15.இலங்கையில் தமிழர்-கா. இந்திரபாலா, குமரன் புத்தக இல்லம், அக்டோபர் 2006, பக்:131.

16. A History of Japanese Literature – By William  George  Aston,  pages; 18,34,35,54.

17.திராவிடச்சான்று, எல்லிசும் திராவிட மொழிகளும், தாமஸ் டிரவுட்மன், தமிழில் இராம. சுந்தரம், காலச்சுவடு, மே-2007, பக்: 182, 183.

18. “   “     பக்: 182.

19. “   “     பக்: 186, 187.

20. “   “     பக்: 188.

21 “   “     பக்: 136

22. “   “     பக்: 137

23. “   “     பக்: 137

24. “   “     பக்: 232.

25, 26, 27. இந்திய வரலாற்று அறிஞர் டி.டி.கோசாம்பி, ‘பண்டைய இந்தியா’ தமிழில் ஆர்.எசு. நாராயணன், NCBH , செப்டம்பர்-2006, பக்.396, 410, 293.  

-கணியன் பாலன், ஈரோடு