இசுலாமியர்களிடம் மண்டிக்கிடந்த மூடக் கொள்கைகளையும், கண்மூடிப்பழக்க வழக்கங்களையும் களைந்தெறியத் தமது வாழ்நாள் முழுவதும் போராடிய புரட்சியாளர், புதுமைச் சிந்தனையாளர், சமுதாயச் சீர்திருத்தவாதி, அஞ்சாநெஞ்சம் படைத்தவர். அடிப்படையில் தந்தை பெரியாருக்கு ஈடாக, ‘இசுலாமியப் பெரியார்’ எனப் போற்றப்படுபவர். "இசுலாம் எங்கள் வழி! இன்பத் தமிழ் எங்கள் மொழி!!” என, இன்றைக்கும் இசுலாமிய பெருமக்கள் முழக்கமிடுவதற்கு விதை ஊன்றிய வித்தகர். அவர் தான், தஞ்சை அறிஞர் தாவூத் ஷா!.

dawood shaதஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள நாச்சியார்கோயிலை அடுத்த கீழ்மாத்தூரில், 1885 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 29ஆம் நாள், பாப்பு இராவுத்தர் குல்சூம் பீவி இணையருக்குத் தனயனாகப் பிறந்தார் தாவூத் ஷா.

நாச்சியார்கோயில் திண்ணைப் பள்ளியில் தனது படிப்பைத் தொடங்கினார். பின்னர், கும்பகோணம் `நேடிவ்’ உயர்நிலைப் பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தார். அப்பள்ளியில் தான் உலகப் புகழ் பெற்ற கணித மேதை இராமானுஜமும் படித்துக்கொண்டிருந்தார். தாவூத் ஷாவும், இராமானுஜமும் நெருங்கிய நண்பர்களாக விளங்கினார்கள். அப்பள்ளியில் பணிபுரிந்து கொண்டிருந்த இராமானுச ஆச்சாரியார் என்ற தமிழாசிரியர் தாவூத் ஷாவுக்கு தமிழார்வத்தை ஊட்டினார். மேலும், அவருக்குத் தனியே தமிழ் இலக்கண இலக்கிய வகுப்புகளையும் நடத்தினார். கம்ப இராமாயணமும் கற்பித்தார். கம்ப இராமாயணத்தின் கவிச்சுவை கண்ட தாவூத் ஷா, கம்பனின் பாடல்கள் பலவற்றை மனனம் செய்தார். பின்னாளில் கம்ப இராமாயணக் கதாகாலட்சேபம் செய்யும் அளவுக்கு, தாவூத் ஷாவுக்கு தைரியம் வந்தது. `கம்ப இராமாயண சாயபு’ என்னும் சிறப்புப் பட்டம் பெறவும் இது உறுதுணையாக அமைந்தது.

பள்ளியிறுதித் தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சியடைந்து அனைவரது பாராட்டையும் பெற்றார். தாவூத் ஷா கல்லூரியில் சேர்ந்து பயில வேண்டும் என்னும் விருப்பம் கொண்டார். அப்போது, அவரது தந்தை பாப்பு இராவுத்தர் திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டு இயற்கை எய்திவிட்டார். குடும்பம், பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தது. அச்சூழலில், சென்னையில் வாழ்ந்து வந்த இசுலாமிய செல்வந்தர் ஒருவர், இவர் கல்லூரியில் சேர்ந்து பயில்வதற்கு உதவிட முன்வந்தார். அதுவும் ஒரு நிபந்தனையோடு ஆம்!. அவரது மகளை மணந்து கொண்டு வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்து கல்லூரியில் படிக்கலாம் என்பதே அந்நிபந்தனை.

"சீனாவுக்குச் சென்றாவது கற்றுக்கொள்" என்பது நபிகள் நாயகத்தின் அறிவுரை. "பிச்சை புகினும் கற்கைநன்றே" என்பது அவ்வைத் தமிழின் அமுதமொழி. இவர், கல்வியின் மீது கொண்டிருந்த தீவிரக் காதலால், அச்செல்வந்தரின் நிபந்தனையை ஏற்றார். அந்த இசுலாமிய செல்வந்தரின் மகள் சபூரா பீவியை 1909 ஆம் ஆண்டு மணம்புரிந்து கொண்டார்.

சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரியில் தாவூத் ஷா சேர்ந்து படித்தார். கல்லூரியில் நடைபெற்ற பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி முதலியவற்றில் கலந்து கொண்டு பல பரிசுகளையும், பாராட்டுகளையும் பெற்றார். கல்லூரியில் படித்துக்கொண்டே, மதுரைத் தமிழ்ச் சங்கத் தேர்வு எழுதினார். உயர் மதிப்பெண்கள் பெற்றமைக்காக தமிழ்ச்சங்கம், அவருக்கு வெள்ளிப்பதக்கத்தை அள்ளித்தந்தது.

கல்லூரியில் பயிலும்போது இவருக்குத் தமிழ்ப் பேராசிரியராகத் `தமிழ்த் தாத்தா உ.வே.சா’ இருந்து வழிநடத்தினார். தத்துவத்துறைப் பேராசிரியராக, இந்தியாவின் மேனாள் குடியரசுத் தலைவர், `தத்துவ மேதை’ எனப் போற்றப்படும் டாக்டர் ச.இராதாகிருஷ்ணன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தாவூத் ஷா 1912 ஆம் ஆண்டு பி.ஏ.பட்டம் பெற்றார்.

அப்போது, தாவூத் ஷாவின் வாழ்வில் துயரம் துளிர்விட்டது. அவரது அன்பு மனைவி சபூரா பீவி நோய்வாய்ப்பட்டுக் காலமாகிவிட்டார். பின்னர் பெற்றோர்கள் மற்றும் உற்றோர்கள் வேண்டுகோளை ஏற்று, மைமூன்பீ என்பவரை இரண்டாவது மனைவியாக ஏற்றார்.

கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். பணிபுரிந்து கொண்டே துறைத் தேர்வுகள் எழுதி பதவி உயர்வு பெற்றார். சட்டம் படித்து 1917 ஆம் ஆண்டு கீழமை நீதிமன்ற நடுவராக பண்ருட்டி நீதிமன்றத்தில் பதவி ஏற்றார். தமது பணியில் நீதி தவறாது, நேர்மையுடன் செயல்பட்டு மக்களின் பாராட்டைப் பெற்றார். நீதித்துறையில் பணிபுரிந்தாலும் தூக்குத் தண்டனை அளிப்பதை எதிர்த்தார். அதாவது, "அல்லா கொடுத்த உயிரைப் பாதிவழியில் பறிக்க நாம் யார்?" என வினா எழுப்பினார்.

இந்திய விடுதலைப்போர் உச்சகட்டமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலம் அது. தாவூத் ஷாவின் உள்ளத்திலும் விடுதலை உணர்வு பொங்கி எழுந்தது. விடுதலை வேள்வியில் தன்னையும் இணைத்துக் கொள்ள அவர் உள்ளம் துடித்தது. அப்பொழுது, மகாத்மா காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். `அன்னியப் பொருட்களை புறக்கணியுங்கள்!’ `மாணவர்கள் கல்லூரிகளிலிருந்தும், அரசுப் பணிபுரிவோர் அலுவலகங்களிலிருந்தும் வெளியேறுங்கள்!’ ‘செய் அல்லது செத்து மடி!!’ என்று அனைவரையும் முழங்கச்செய்தார். மகாத்மா காந்தியடிகளின் அறைகூவலை ஏற்ற தாவூத் ஷா, தமது கீழமை நீதிமன்ற நடுவர் பதவியை உதறித் தள்ளினார்.

தாவூத் ஷா பதவியைத் தூக்கி எறிந்தவுடன், தமது சொந்த ஊரான நாச்சியார்கோயிலுக்கு வந்து சேர்ந்தார். இந்திய விடுதலைப் போரில் குதித்தார். அரசியல் போராட்டத்தில் நேரடியாக ஈடுபட்டார். கிராமங்கள் தோறும் சென்று தீவிரமான பரப்புரை செய்தார். மக்களிடம் விடுதலை உணர்வை ஊட்டினார். பட்டி தொட்டியெல்லாம் சென்று மகாத்மா காந்தியடிகளின் அரசியல் கொள்கைகளை மக்களிடம் எடுத்துரைத்தார். கதர்த் துணிகளைக் கை வண்டியில் ஏற்றிக் கொண்டு தானே வண்டியை இழுத்துச் சென்று தெருத்தெருவாக விற்பனை செய்தார்.

சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராகச் செயல்பட்டார். சென்னை மாநகரத் தந்தையாக (ஆல்டர்மேன்) தாவூத் ஷா நியமிக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளைப் பரப்புவதற்காக `தேசகேசவன்’ என்ற வார இதழை நடத்தினார்.

பாகிஸ்தான் பிரிவினைக் கோரிக்கையை முகமது அலி ஜின்னா முன்வைத்தார். ஜின்னாவின் வழியைப் பின்பற்றி 1940 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய‌ தாவூத் ஷா, முசுலிம் லீக் கட்சியில் சேர்ந்தார். தமிழ் நாட்டில் முசுலிம் லீக் கட்சியின் முதன்மையான பரப்புரையாளராக விளங்கினார்.

இடி முழக்கம் போன்ற இவரது சொல்லாற்றலும், இளைஞர்கள் நெஞ்சத்தில் வெடி முழக்கம் ஏற்படுத்திய இவரது எழுத்தாற்றலும், நொடிப் பொழுதும் ஓய்வு அறியாத உழைப்பும், `தமிழ்நாட்டின் ஜின்னா’ என்ற சிறப்புப் பட்டத்தை தாவூத் ஷாவுக்கு பெற்றுத் தந்தது.

சென்னையில் 1941 ஆம் ஆண்டு நடைபெற்ற முசுலிம் லீக் கட்சியின் மாநாட்டில் முகமதுஅலி ஜின்னா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவரது உரையை தாவூத் ஷா அழகு தமிழில் மொழிபெயர்த்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.

இசுலாமிய மக்களிடையே சமுதாயச் சீர்திருத்தத்தை அடிப்படை நோக்கமாகக் கொண்டு, தாவூத் ஷாவினுடைய எழுத்தும், பேச்சும் அமைந்திருந்தன. நாச்சியார்கோயிலில் 1941 ஆம் ஆண்டு `அறிவானந்த சபை’ என்ற பெயரில் நூலகமும், உடற்பயிற்சி நிலையமும் ஏற்படுத்தினார். அச்சபையின் தலைவராக இருந்து சிறப்பாக செயல்பட்டார். பின்னர், அந்தச் சபையை `முசுலிம் சங்கம்’ என்று மாற்றினார். "தென்னாட்டு முசுலிம்களிடம் காணப்படும் மூடக்கொள்கைகளை எல்லாம் களைந்து, அவர்களுடைய மார்க்க ஞானத்தையும் கல்வியறிவையும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் 1921 ஆம் ஆண்டு முதல் `தத்துவ இஸ்லாம்’ என்னும் மாத இதழை, தமது பிரச்சாரத்துக்காகக் கொண்டு வந்தார் தாவூத் ஷா!

தர்காக்களில் வழிபாடு கூடாது; நேர்ந்து கொள்ளுதல் கூடாது; வேப்பிலை அடிக்கக்கூடாது; கறுப்புக் கயிறு கட்டக்கூடாது; மந்திரித்தல் கூடாது; நாள், நட்சத்திரம் பார்க்கக்கூடாது; சகுனம் பார்ப்பது கூடாது; குறி சொல்லுதல், ஆருடம் பார்த்தல் முதலியவை அறவே கூடாது. இவைகள் அனைத்தும் இசுலாம் மார்க்கத்தில் விலக்கப்பட்டவை என்று பாமர மக்களிடம் பலபட எடுத்து விளக்கினார். "சோதிடனிடம் செல்லும் முசுலிம், குரானைவிட்டு விலகிச் சென்றவன் ஆவான்" என்று நபிகள் நாயகம் கூறியதை நயம்பட எடுத்துரைத்தார்.

"பள்ளிவாசல்களில் "குத்பா” (வெள்ளிமேடை) சொற்பொழிவு தமிழில் நடத்தப்பட வேண்டும். தமிழக முசுலிம்கள் பலருக்கும் விளங்காததும் புரியாததும் தெரியாததுமான அரபு மொழியில் `குத்பா’ சொற்பொழிவு செய்தால், தமிழ் நாட்டு முசுலிம்கள் அஞ்ஞானத்தில் உறங்கிவிழாமல் வேறு என்ன செய்வார்கள்?" என்று வினா எழுப்பியதுடன், பள்ளிவாசல்களில் தமிழில் "குத்பா” சொற்பொழிவு நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தினார். அதற்கு ஆதாரமாக, "ஒவ்வொரு தூதரும் தம் மக்களுக்கு மார்க்கக் கருத்துக்களை தெளிவாக விவரித்துக் கூறும்போது, அவர்களின் தாய் (மக்களின்) மொழியைக் கொண்டே விவரித்துக் கூறவேண்டும் என்பதற்காக நாம் தூதர்களை அனுப்பி வைத்தோம்." எனும் திருக்குரான் கருத்துக்களை முன் வைத்து எதிர்ப்பு தெரிவித்த உலமாக்களுக்குப் பதிலடி கொடுத்தார்.

முசுலிம் பெண்களை வீட்டில் பூட்டி வைக்காமல் படிக்க வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். சென்னை உயர்நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி பசீர் அகமது சென்னையில் பெண்களுக்கென்றே தனியாக ஒரு கல்லூரியை நிறுவினார். அப்போது, பழமைவாதச் சிந்தனை கொண்ட முசுலிம் உலமாக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முசுலிம் பெண்களுக்குக் கல்லூரி அமைக்கக்கூடாது எனவும் கல்லூரி ஆரம்பிப்பது இசுலாம் மார்க்கத்திற்கு விரோதமானது எனவும் கண்டனக் குரல் எழுப்பினர். அப்போது, நீதிபதி பசீர் அகமதுவுக்குப் பெரும்துணையாக இருந்து, கல்லூரி திறந்திட முழு ஆதரவு அளித்தவர் தாவூத்ஷா. இப்போது சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எம்.ஐ.இ.டி பெண்கள் கல்லூரிதான் அது என்பது குறிப்பிடத்தக்கது.

சமய, சமுதாயச் சீர்திருத்தத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட தாவூத் ஷாவை, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி முதலிய தலைவர்கள் பாராட்டினார்கள். தமிழக முஸ்லிம் மக்களும், ‘இசுலாமியப் பெரியார் தாவூத் ஷா’ எனப் போற்றினார்கள்.

‘தாருல் இஸ்லாம்’ என்ற இதழைத் தொடங்கி வார இதழாகவும், வாரமிருமுறை இதழாகவும், சிலகாலம் நாளிதழாகவும் நடத்தினார் தாவூத் ஷா. ‘தாருல் இஸ்லாம்’ புரட்சி இதழாக இருந்ததால், அந்த இதழை யாரும் வாங்கவோ, படிக்கவோ கூடாது என்று உலமாக்கள் தடைவிதித்தார்கள். ஆனாலும், முசுலிம் இளைஞர்கள் இதழை வாங்கிப் படித்தார்கள். இதழில் வெளியான ஆசிரியர் தலையங்கங்களும் சிறப்புக் கட்டுரைகளும் பலரின் சிந்தனையைக் கிளறின. ‘தாருல் இஸ்லாம்’ இதழ் கடல் கடந்து பர்மா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை முதலிய நாடுகளிலும் விற்பனையானது.

“இசுலாமிய இதழ்கள் மத்தியில், கொடி கட்டிப் பறந்த இதழ், ‘தாருல் இஸ்லாம்’. முசுலிம்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. இதழின், தெளிந்த இனிய தமிழ் நடைதான் அதற்கு காரணம். பிற சமயத்தவர்களும்கூட இவ்விதழை வாங்கிப் படித்தார்கள்” என்று இதழாளர் அ.மா.சாமி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “பத்திரிகை பிரசுரத் துறையில் தாவூத் ஷா, ஒரு பல்கலைக் கழகம், தமது பத்திரிகைகள் மூலம் பெரும் இலக்கிய அணியை உருவாக்கிய பெருமைக்குரியவர்” என்று ஜே.எம்.சாலி கருத்துரைத்துள்ளார்.

“'தாருல் இஸ்லாம்’ என்ற வாரப் பத்திரிகையையும், அதன் ஆசிரியர் தாவூத் ஷாவையும் நினைக்கும்தோறும் களிபேருவகை அடைகிறோம். ‘தாருல் இஸ்லாம்’ பத்திரிகையும், அதன் ஆசிரியரும் நமது கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்” என்று ‘விடுதலை’ இதழில் தந்தை பெரியார் பாராட்டி எழுதினார்.

“இவரை முசுலிம்களின் தமிழ் மறுமலர்ச்சித் தந்தை” என்று கூறலாம். இவர் தமிழ் இலக்கிய உலகில் தோன்றி, வழுவற்ற தூய தமிழில் பேசவும், எழுதவும் செய்த பின்னர்தான் இசுலாமியத் தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது என்பதை எவராலும் மறுக்க இயலாது” என ‘இஸ்லாமியக் கலைக் களஞ்சியம்’ கூறுகிறது.

“அரசியல் சீர்திருத்தங்கள்” என்ற தொகுப்பு நூலை 1934 ஆம் ஆண்டு தாவூத்ஷா வெளியிட்டார்.

‘எல்லைப்புறக் காந்தி அல்லது கான் அப்துல் கபார் கான்’ என்னும் மொழிபெயர்ப்பு நூலை 1937 ஆம் ஆண்டு வெளியிட்டார். தமது உரைகளை மக்கள் கேட்டு பயன் அடைந்ததைப்போல், படித்தும் பயன்பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் ‘முசுலிம் சங்கக் கமலம்’ என்ற பெயரில் வரிசையாக நூல்களை வெளியிட்டார்.

முசுலிம்களின் கல்வி அறிவு, ஒழுக்கம், மார்க்க உணர்வு முதலியவற்றை மேம்படுத்த, செந்தமிழில் துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டார். ‘இஸ்லாத்தின் இணையில்லா அற்புதம்’, ‘இஸ்லாத்தின் இனிவரும் உன்னதம்’, ‘இஸ்லாமும் இதர மதங்களும்’ ‘எமது கொள்கை’ உட்பட பல தலைப்புகளில் கட்டுரைகள் பல எழுதி வெளியிட்டார்.

இசுலாமிய இலக்கியங்கள் தமிழில் வெளிவர வேண்டும் என்பது தாவூத் ஷாவின் கொள்கை. தமிழில் வெளிவந்தால்தான், தமிழ் முசுலிம்கள் அனைவரும் படிக்க முடியும்; இசுலாத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள இயலும் என்பதில் உறுதியாக நின்று, அதன் வழி செயல்பட்டார். ‘இஸ்லாம் வரலாறு’, ‘நபிகள் வரலாறு’ முதலிய நூல்களை வெளியிட்டார். மேலும் ‘அபூ பக்கர் சித்திக் (ராலி)’ என்று சொல்லப்படும் முதல் கலிபாவின் வரலாற்றையும் எழுதினார்.

‘ஈமான்’, ‘நாயக வாக்கியம்’, ‘நபிகள் நாயக மான்மியம்’ ‘இஸ்லாம் எப்படிச் சிறந்தது’ ‘நபிகள் நாயகமும் நான்கு தோழர்களும்’, ‘இஸ்லாமிய ஞானபேதம்’ ‘முஸ்லிம் முன்னேற்றம்’ ‘குத்பாப் பிரசங்கம்’ முதலிய நூல்களை தமிழில் கொண்டுவந்து எழுத்துத் தொண்டாற்றினார்.

குர்ஆனை தமிழில் மொழி பெயர்க்கக் கூடாது என்று உலமாக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘தமிழ் காஃபீர் (நாத்திக) மொழி’ என்று கூறினார்கள். இந்த எதிர்ப்புகளையும் மீறி குர்ஆனை தமிழில் மொழிபெயர்த்து ஆறு தொகுதிகளாக வெளியிட்டார் தாவூத் ஷா.

‘கள்ள மார்க்கெட்டு மோகினி’ ‘காதலர் பாதையில்’ ‘ரஸ்புதீன்’ ‘ஜீபைதா’, ‘கப்பல் கொள்ளைக்காரி’ ‘காபூர் கன்னியர்’ ‘கரனபுரி இரகசியம்’ ‘காதல் பொறாமையா? ‘மலை விழுங்கி மகாதேவன்’ ‘ஹத்திம் தாய்’ முதலிய புதினங்களையும், ‘சுவாசமே உயிர்’, ‘ஜீவ வசிய பரம இரகசியம்’ ‘மெஸ்மரிசம்’ ‘மண வாழ்க்கையின் மர்மங்கள்’ முதலிய உடல்நல நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். ‘மும்தாஜ்’, ‘நூர்ஜகான்’ முதலியோர்களின் வரலாற்று நூல்களையும், ‘சிம்சனா? சிம்மாசனமா? ‘என்ற காதல் காவியத்தையும் தமிழில் படைத்தார்.

‘அரபுக் கதைகளை’ அரபு மொழியில் இருந்து நேரடியாக தமிழில் மொழிபெயர்த்தார். மேலும், பெண் விடுதலை குறித்து ‘நம் சகோதரிகள்’ என்ற நூலையும், ‘என் மலாய் நாட்டு அனுபவம்’ என்னும் பயண இலக்கிய நூலையும் படைத்துள்ளார்.

முதல் தமிழ் முஸ்லிம் பெண் எழுத்தாளராகக் கருதப்படும், நாகூர் சித்தி ஜீனைதா பேகம் எழுதிய சிறுகதையை தமது ‘தாருல் இஸ்லாம்’ இதழில் முதன்முதலாக வெளியிட்டவர் தாவூத் ஷா.

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முசுலிம் மத பிரச்சாரகர் காஜா கமாலுதீன் என்பவர் தமிழ்நாட்டுக்கு வந்தார். அவர் தாவூத் ஷாவினுடைய ஆங்கில மொழிப் புலமையையும், உரையாற்றும் திறனையும் கண்டு அவரை, தம்முடன் லண்டனுக்கு அழைத்துச் சென்றார். 1922 பிப்ரவரி மாதம் லண்டன் சென்று ஓராண்டுக் காலம் அங்கு தங்கி இஸ்லாமியப் பிரச்சாரம் செய்தார். ‘இஸ்லாமிக் ரீவியூ’ என்னும் ஆங்கில இதழின் நிர்வாக ஆசிரியராகப் பணியாற்றினார்.

இசுலாமிய சமய, சமுதாய சீர்திருத்தங்களுக்காகவும், முசுலிம் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகவும் பெண் கல்விக்காகவும், தமது எழுத்தாற்றலையும், நாவன்மையையும் கொண்டு பாடுபட்டவர் தாம் இசுலாமியர் கண்ட ‘பெரியார்’ தஞ்சை தாவூத் ஷா. அவர் 1969 பிப்ரவரி மாதம் 24 ஆம் நாள் சென்னையில் காலமானார்.

Pin It