ராசராச சோழன் - கேள்வியும் பதிலும்

ராசராச சோழன் தேவாரத்தை தில்லைவாழ் அந்தணர்களிடம்  இருந்து மீட்டு வந்தான் என்பது உண்மையா?

இது தவறான செய்தியாகும். பக்தி இயக்கம் தோன்றி தேவாரம் பாடப்பட்டது கி.பி.7,8-ம் நூற்றாண்டுகளாகும். ஆனால்  ராசராச சோழன் கி.பி 980 முதல் 1024 வரை வாழ்ந்தவன். 200ஆண்டுகள் தேவாரம் பாடப்படாமல் பூட்டி வைக்கப்பட்டிருந்தது என்பதை நம்ப இயலாது. மேலும் தேவாரத்தை தொகுத்தவர் என்று கருதப்படும் திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி காலத்தால்  ராசராச சோழனுக்கு மிகவும் மூத்தவர். அவனுடைய முப்பாட்டனாகிய முதலாம் பராந்தகன் காலத்தை சேர்ந்தவர். பல்லவர்களின் இறுதிக்காலத்திலும் முதலாம் பராந்தகன் காலத்திலும் தமிழ்நாட்டில் உள்ள லால்குடி, ஆத்தூர், திருவள்ளம் ஆகிய ஊர்க் கோவில்களில் தேவார திருப்பதியம் பாடப்பட்டது; அவ்வாறு பாடியவர்களுக்கு நிலமும் நெல்லும் கொடையாக அளிக்கப்பட்டது என்று கல்வெட்டுச்செய்திகள் கூறுகின்றன. உமாபதி சிவாச்சாரியார் என்ற பார்ப்பன சைவ புலவர் பாடிய பாடலின் ஒரு வரியை வைத்துக்கொண்டு இரா.நாகசாமி போன்ற வரலாற்று ஆய்வாளர்கள்  ராசராச சோழன் தில்லைவாழ் அந்தணர்களிடம் வாதம் புரிந்து தேவாரத்தை மீட்டு வந்தான் என்று கூறுவது பொய்யாகும்.  ராசராச சோழன் தன்னுடைய ஆட்சியின் கீழ் உள்ள எல்லா கோயில்களிலும் தேவாரம் பாட ("ஆரியமும் தமிழும்" பாட) ஏற்பாடு செய்தான். அதை மேற்பார்வையிட ஒரு அரசு அதிகாரியை நியமனம் செய்தான் இவையே கல்வெட்டுகள் கூறும் செய்தியாகும்..   

குடவோலை முறையைக் கண்டுபிடித்தது  ராசராச சோழன் என்பது உண்மையா? 

முற்றிலும் தவறான செய்தி. குடவோலை முறை பற்றிய கல்வெட்டுகள் பண்டிய நாட்டில் தான் முதலில் கிடைக்கப் பெற்றுள்ளன. இதன் காலம் கி.பி.760 நூற்றாண்டு. சோழ நாடு என்று வைத்துக்கொண்டாலும் ராசராச சோழனின் முப்பாட்டன் முதலாம் பராந்தகன் காலத்திலேயே  குடவோலை முறை இருந்திருக்கிறது. அந்த மன்னன் காலத்தைச் சேர்ந்த உத்திரமேரூர்க் கல்வெட்டுகள் இதை நமக்கு தெளிவாகவும், விரிவாகவும் தெரிவிக்கின்றன.

குடவோலை முறை மக்களாட்சியின் தொடக்கம் என்பது சரியா?

சரியன்று. குடவோலை முறை ஒரு குலுக்கல் முறையாகும். ஒரு ஊரில் உள்ள 1/4 வேலி நிலம் படைத்த உயர்ந்த குலத்தைச் சேர்ந்தவர்களின் பெயரை ஓலையில் எழுதி அதனை ஒரு குடத்தில் இடுவார்கள். அதை நன்கு குலுக்குவார்கள். பிறகு எத்தனை உறுப்பினர்கள் தேவையோ அத்தனை ஓலைகள் மட்டும் அந்தக் குடத்தில் இருந்து எடுக்கப்படும். அவர்கள் ஊர் சபையினராக இருந்து அந்த ஊரின் நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்வார்கள். பெண்கள் இதில் பங்கு கொள்ள முடியாது. தேர்தலே இல்லாத குலுக்கல் முறையை எப்படி மக்களாட்சி என்று சொல்லமுடியும். 

குடவோலை முறையில் பார்ப்பனர்களுக்கு தனி ஒதுக்கீடு இருந்ததா?

ஆம். பார்ப்பனர்கள் வசித்த ஊர்களில் அவர்கள் மட்டுமே இந்த ஊர் சபையின் உறுப்பினர்கள். அதிலும் வேதம் கற்ற பார்ப்பனர்களுக்கு முன்னுரிமை உண்டு. அவர்கள் 1/8 வேலி நிலம் வைத்திருந்தாலும்  உறுப்பினர்கள் ஆவதற்கு தகுதி படைத்தவர்கள். 

பார்ப்பனர்கள் வேதம் ஒழிந்த வேறு தொழில்கள் புரிந்தது உண்டா?

உண்டு. சோழர்கள் காலத்தில் பார்ப்பனர்கள் படைத்தளபதிகளாகவும், மன்னனுக்கு அமைச்சர்களாகவும் இருந்திருக்கின்றனர். ராசராச சோழனின் படைத்தளபதியின் பெயர் கிருஷ்ணன் ராமன் என்கிற பிரம்மாதிராயன் (அதாவது பார்ப்பனன்)

ராசராசன் தஞ்சைப் பெரிய கோவில் விமானம் முழுவதையும் பொன்னால் ஆன தகடுகளால் மூடினான். இந்தியாவின் முதல் பொற்கோயில் தஞ்சைப் பெரிய கோவிலே- இது உண்மையா?

இது முற்றிலும் ஆதாரம் அற்ற செய்தி. எந்த கல்வெட்டிலும் இது குறித்து பதிவு செய்யப்படவில்லை. ஆனால் குடவாயில் பாலசுப்பிரமணியம் போன்றோர் புதியதாக ஒரு கல்வெட்டை கண்டுபிடித்து இதை நிலைநிறுத்தப் பார்க்கிறார்கள். இந்தக் 'கல்வெட்டு' அய்யத்திற்கு உரியதாகும். 200ஆண்டுகளாக கிடைக்காத கல்வெட்டு திடீரென்று கிடைத்தது நமது அய்யத்தை மேலும் வலுவாக்குகிறது.

ராசராச சோழன் சேரர்களை வென்றது உண்மையா?

உண்மை. அதுவரை சோழ பாண்டியர்கள், சேர நாட்டை வென்றது இல்லை. முதன் முதலில் ராசராச சோழன் தான் சேர மன்னனாகிய பாஸ்கர  ரவிவர்மனை வென்றான். அதனால் 'மும்முடிச் சோழன்' என்ற  பட்டப் பெயரும் பெற்றான். அதற்கு பின்னால் வந்த மற்ற சோழர்களும் இவ்வாறே அழைக்கப்பட்டார்கள். ஆனால் இது குறுகிய காலத்திற்குத்தான். ராசேந்திர சோழன் காலத்திற்குப் பிறகு சேர நாடு மெதுவாக சோழர்களின் கையில் இருந்து  நழுவிப் போயிற்று. ஆனால் பாண்டிய நாடு கடைசி வரை (சோழர்கள் வீழ்ச்சி அடையும் வரை) சோழர்களின் ஆதிக்கத்தின் கீழ்தான் இருந்தது. 

சைவப் பேரரசன் ராசராச சோழன் நாகைப்பட்டினத்து புத்த விகாரத்திற்கு நிலக்கொடை அளித்தது உண்மையா?

உண்மைதான். சோழர் காலத்து வணிகர்கள் பெரும்பாலும் புத்த சமயத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு கடாரம், ஸ்ரீ விஜயம் (தற்பொழுதைய மலேசியா) போன்ற நாடுகளுடன் நெருக்கமான வணிகத் தொடர்பு கொண்டு இருந்தனர். அதற்குப் பரிசாக ஸ்ரீவிஜய நாட்டு மன்னன் நாகைப் பட்டினத்தில் புத்த விகாரம் கோவில் அமைப்பதற்கு உதவி செய்தான். அந்த கோவிலுக்கு ராசராச சோழன் நிலக்கொடை அளித்து உள்ளான். இதை லெய்டன் செப்பேடுகளில் ஒரு பகுதியான ஆனைமங்கலச் செப்பேடுகள்  தெரிவிக்கின்றன. ஆனால் சமணப் பள்ளி எதற்கும் கொடை வழங்கியதாக செய்திகள் கிடையாது. 

இராஜராஜ சோழனுக்கு மட்டும் பிறந்த நாள் விழா எடுக்கப்படுவது ஏன்?

இராசராச சோழன் ஐப்பசி மாதத்தில் சதய நட்சத்திரத்தில் பிறந்ததாக நம்பப்படுகிறது. இதற்கு சில கல்வெட்டு சான்றுகள் இருக்கின்றன. ஆனாலும் அவன் பிறந்ததாக கருதப்படுகின்ற நாளினை, ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட ஒரு நாளினை எப்படி உறுதியாக சொல்ல இயலும்.? கல்வெட்டு ஆய்வாளர்கள் சிலர் கல்வெட்டின் செய்திகளின் அடிப்படையில் இதனை முடிவு செய்கின்றனர். அந்த குறிப்பிட்ட நாளில் இருந்த விண்மீன்களின் அமைப்பு சந்திரனின் சுழற்சி  ஆகியவற்றை கொண்டு (கிட்டத்தட்ட ஜாதகம் பார்ப்பது) ஐப்பசி மாதம் மேஷ ராசி சதய நட்சத்திரம் என்று முடிவு செய்து உள்ளனர். எனவே அந்த நாளை ராசராச சோழனின் பிறந்த நாளாக கொண்டாடுகின்றனர்.

இது தஞ்சை பெரிய கோயிலில் மட்டும் தான் கொண்டாடப்படுகிறதா?

ராசராச சோழன் சேர, சோழ, பாண்டிய நாடுகளை தன்னுடைய ஆட்சியின் கீழ் கொண்டிருந்தான். எனவே மும்முடிச் சோழன் என்ற பெயரையும் உடையவன். தற்பெருமையும், செருக்கும் படைத்த ராசராச சோழன் தன்னுடைய ஆட்சியின் கீழ் இருந்த எல்லா கோவில்களிலும் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடும்படி ஆணை பிறப்பித்தான். அவ்வாறே மூன்று மண்டலங்களிலும் உள்ள கோவில்களில் சதய திருவிழா ராசராசசோழனின் பிறந்த நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. இது இதற்கு முன்னாள் எந்த தமிழ் மன்னனும் செய்யாத ஒரு செயலாகும். இக்காலத்திய அரசியல் வாதிகள், அமைச்சர்கள், சினிமா நடிகர்கள் தங்களுடைய பிறந்த நாள் விழாவை மிக ஆடம்பரமாக கொண்டாடுவதற்கு அடியெடுத்து கொடுத்தவன் ராசராச சோழன் என்பதை நினைத்தால் புல்லரித்துப்போகிறது.  

தஞ்சை பெரிய கோவிலின் விமானத்தின் நிழல் கீழே விழுவது இல்லையா?.

இது தவறான கருத்து ஆகும். மாலை நேரத்தில் சென்று பார்த்தால் கோவில் விமானத்தின் நிழல் கீழே விழுவதை எளிதில் காணலாம். ஆனாலும் தமிழன் இதை கண்டுபிடிப்பதற்கு ஆயிரம் வருடங்கள் ஆகி விட்டது. அதுவரை கோவில் கோபுரம் நிழல் கீழே விழாது என்ற மூடக் கருத்தையே கொண்டிருந்தான். இன்னும் பலரும் அதை நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

Comments

19 comments

19
ambalavanan
200ஆண்டுகளாக கிடைக்காத கல்வெட்டு திடீரென்று கிடைத்தது நமது அய்யத்தை மேலும் வலுவாக்குகிறது.
இது சரியான வாக்குவாதம் அல்ல.
viyasan
தமிழன் என்ற பிறப்புரிமை கடவுள் தந்தது, நீங்கள் தமிழனாக இருந்தால் அந்த உரிமை உங்களுக்கும் தானுண்டு. தமிழர்களின் பாரம்பரிய மதங்களான சைவமும், திருமாலியமும் தமிழர்களின் பிடியிலிருந்து நழுவி, தமிழ்த்தன்மையை இழந்து விட்டன. அதிலும் சிலர் தமிழர்களைத் தமிழர்களின் கோயில்களிலிருந்து வெளிநிறுத்தி, தமிழர்களின் பிறப்புரிமையை தமிழ்நாட்டிலேயே மறுத்து விட்டார்கள். அது உண்மை, அதை நாம் தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும். எங்களின் முன்னோர்களின் கோயில்களை மீண்டும் தமிழாக்க வேண்டுமே தவிர நீங்கள் செய்வது போன்று எமது முன்னோர்களின் கோயில்கள் மீது வசை பாடக் கூடாது. உங்களை வெளியில் விட்டு விட்டார்கள் என்பதற்காக அதைக் கட்டிய தமிழ் அரசர்களின் மீது களங்கம் பூசக் கூடாது. அவர்கள் செய்ததாகக் காலம் காலமாகத் தமிழர்கள் நம்பும், நற்பணிகளை, அவர்களின் தமிழ்த்தொண்டை அரைகுறை ஆதாரங்களுடன் மறுதலிக்கக் கூடாது. அது குழந்தைப் பிள்ளைத்தனம் மட்டுமல்ல, வெறும் கோணங்கித்தனம்.

திருநாரையூர் நம்பியாண்டார் நம்பியும் ராஜராஜ சோழனும் சமகாலத்தவர்களல்ல என்பதற்கு உங்களிடம் என்ன ஆதாரமுண்டு? எந்த ஆதாரங்களைக் கொண்டு நம்பியாண்டார் நம்பி பராந்தக சோழன் காலத்தவர் என்கிறீர்கள். ஏதாவது நூல்கள், internet link தரமுடியுமா?
durai ilamurugu
திருப்பதியம் (தேவாரம்) கோவில்களில் பாடப்பட்டதற்கு சான்றுகள் பல உள்ளன. ராசராச சோழன் காலத்திற்கு முன்பே ( நூறு ஆண்டுகளுக்கு முன்பே} கோவில்களில் தேவராம் பாடப்பட்டு வந்திருக்கிறது முதலாம் பாரந்தகன் காலத்திய கல்வெட்டு ஒன்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை சேர்ந்த லால்குடி, ஆத்தூர் ஆகிய இடங்களில் உள்ள கோவில்களில் தேவாரம் பாடும் பார்ப்பனர்களுக்கு நன்கொடை அளித்த செய்திகள் காணப்படுகின்றன. அதற்கு முன்னரே பல்லவ விஐய நந்தி விக்ரவர்மன் காலத்தில் திருவல்லம் கோவிலில் தேவாரம் பாடியவர்களை பற்றிய குறிப்பு காணப்படுகிறது. எனவே நம்பியாண்டார் நம்பி காலத்தில்தான் ராசராச சோழன் முற்சியினால்தான் தேவார திருமுறைகள் கோவில்களில் பாடப்பட்டன என்ற செய்தி அடிபட்டுப்,போகிறது . ராசராச சோழன் அவ்ற்றை முறை செய்து அவனுடைய ஆட்சியின் கீழிருந்த எல்லாகோவிலகளிலும் பாடவைத்திருக்கலாம். ஆனால் தேவாரத் திருமுறைகளை தில்லை அந்தணர்களிடம் இருந்து மீட்டு வந்து புதியதாக உண்டாக்கினான் எனபது கட்டுககதையே அன்றி வேறு இல்லை.

THE COLAS BY NILAKANAT SATRY VOL 2 PART 1 UNIVERSITY OF MADRAS 1937PUBLISHED BY OXFORD UNIVERSITY PRESS பக்கம்476
viyasan
பேரரசன் ராஜ ராஜ சோழனின் காலத்துக்கு முன்பாகவே தேவாரத் திருப்பதிகங்கள் தமிழர்களால் கோயில்களில் பாடப்பட்டன, என்பதற்கான வரலாற்று ஆதாரங்களும், கல்வெட்டுக்களும் எவ்வாறு திருமுறைகண்ட சோழன் செல்லரித்து அழிந்து போய்க்கொண்டிருந்த திருமுறைகளின் ஓலைச்சுவடிகளை மீட்டான் என்பதை மறுப்பதற்கான ஆதாரமாகும் என்பது இளமுருகு அண்ணாச்சிக்கும் அவரது சகபாடிகளுக்கும் தான் வெளிச்சம். :-)

ஈழத்துச் சைவர்கள் அனைவருக்கும் திருமுறைகண்ட சோழனின் கதை தெரியும், அதன்படி, ராஜ ராஜ சோழனின் அவையில் சில சிவபக்தர்கள் ஒரு சில தேவாரப்பதிகங்களைப் பாடியதைக் கேட்டு அவற்றின் சாரத்திலும், பக்தியிலும் உருகிய பேரரசன் சிவபாதசேகரன், அவர்களிடம் மேலும் சில பதிகங்களைப் பாடுமாறு பணித்தான், அதற்கு அவர்கள் தமக்கு ஒரு சில பதிகங்கள் மட்டுமே தெரியுமெனவும் தாம் அவற்றை வாய்வழிக் கேட்டுப் பாடி வருவதாகவும் கூறினர். அன்றிலிருந்து தேவாரப்பதிகங்கள் முழுவதையும் கேட்க வேண்டும் அவாவினால், யார் அந்த ஓலைச் சுவடிகளை வைத்திருப்பார்கள் என்ற அரசனது தேடுதல் தான் அவரை நம்பியாண்டார் நம்பியிடம் கொண்டு சேர்த்ததாகத் தான் திருமுறைகளை ராஜ ராஜ சோழன் கண்டுபிடித்த வரலாறு கூறுகிறது.

அவ்வரலாற்றின் படி திருமுறைகள் ராஜ ராஜ சோழனுக்கு முன்பாகவே தமிழ்நாட்டு ஆலயங்களில் ஓதப்பட்டன என்பது தெளிவாகிறது அதை யாரும் மறுக்கவுமில்லை. நீங்கள் ஏதோ அதைப் புதிதாகக் கண்டுபிடித்தவர் போல கதை விடுகிறீர்கள். சில ஒதுவார்கள் பரம்பரை, பரம்பரையாக நாயன்மார்களின் மறைவுக்குப் பின்னால், ராஜ ராஜ சோழனின் காலத்துக்கு முன்னரேயே தேவார திருப்பதிகங்களை ஆலயங்களில் ஓதி வந்துள்ளனர். ஆனால் அவர்களிடம் மூவர்களாலும் பாடப்பட்ட எல்லாத் தேவாரங்களினதும் ஓலைச்சுவடிகளுமிருக்கவில்லை, அவர்களுக்கு எல்லாத் திருமுறைகளும் தெரிந்திருக்கவுமில்லை.

ராஜன் ராஜ சோழன் அந்தணர்களிடமிருந்து ஓலைச்சுவடிகளை மீட்டு அவற்றை அழிவிலிருந்து காத்தான் என்று தான் வரலாறு கூறுகிறதே தவிர, அவன் அவற்றைப் புதிதாக உருவாக்கினான் என்று கூறவில்லை. இங்கு தான் நீங்கள் ராஜ ராஜ சோழனை வசைபாடுவதற்காக வரலாற்றைத் திரிக்கிறீர்களென நம்புகிறேன். தமிழ் ஒரு வளமான மொழி, எந்த ஒரு நிகழ்வையும் அழகாக, ஆணித்தரமாக விவரிப்பதற்கு தமிழில் வார்த்தைகள் உண்டு. பேரரசன் ராஜ ராஜ சோழன் கறையான்களால் அரிக்கப்பட்டு அழிவுற்றுக் கொண்டிருந்த திருமுறைகளை மீட்டான் என்றால் அவன் அவற்றைப் புதிதாக உருவாக்கினான் என்ற கருத்தல்ல.

உதாரணமாக ஈழத்தில் யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்து தமிழ்காத்த ஆறுமுகநாவலர் தான் அழிந்து கொண்டிருந்த சங்கத்தமிழ் நூல்களை, சுவாமிநாதையருக்கு முன்பாகவே அச்சு வாகனமேற்றினார் அழிவிலிருந்து மீட்டார் என்பது பலருக்கும் தெரியும், ஆனால் தமிழ்நாட்டில் அந்த உண்மை திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது, நாங்கள், ஈழத்தமிழர்கள், எங்களின் நாவலர் தான் முதலில் சங்கத்தமிழ் நூல்களை அழிவிலிருந்து மீட்டார் என்றால், அவர் தான் அவற்றைப் புதிதாக உண்டாக்கினார் என்பது அதன் கருத்தல்ல. :-))
viyasan
திருநாரையூர் நம்பியாண்டார் நம்பியும் ராஜராஜ சோழனும் சமகாலத்தவர்களல்ல என்பதற்கு உங்களிடம் என்ன ஆதாரமுண்டு? எந்த ஆதாரங்களைக் கொண்டு நம்பியாண்டார் நம்பி பராந்தக சோழன் காலத்தவர் என்கிறீர்கள். ஏதாவது நூல்கள், internet link தரமுடியுமா? இந்தக் கேள்விக்கு நீங்கள் இன்னும் பதில்தரவில்லை. :-)))
durai ilamurugu
THE COLAS BY NILAKANAT SATRY VOL 2 PART 1 UNIVERSITY OF MADRAS 1937PUBLISHED BY OXFORD UNIVERSITY PRESS பக்கம்476 இந்தனூலைப்படித்துப்,பார்த்த பின்பு பின்னுஊட்டம் எழுதவும். ராசராச சோழன் தன்னுடைய எந்த கல்வெட்டிலும் தான் தேவராததை மீட்டு வந்ததாக அறிவிக்க வில்லை சிவன் . திருனாரையூர் நம்பி இவர்கள் இருந்தார்கள் என்பதற்கு எந்த கல் வெட்டு சான்றும் இல்லை . திருமுறைக் கண்டபுராணம் ஒன்றைத்தவிர நீங்கள் சொல்லுகிற ராசராச சோழன் கதைக்கு ஆதராம் வேறு உண்டா? பெரியபுராணத்தில் ஒரு இடத்திலும் ராசராச சோழனைப்,பற்றிய ஒரு வரியோ அல்லது நீங்கள் சொன்ன கதையோ இருக்கிறதா?தில்லைக்கு ராசராச சோழன் கொடை அளித்ததாக கல்வெட்டு ஒன்றை யேனும் காட்ட இயலுமா?
viyasan
இந்தியாவிலுள்ள கல்வெட்டுக்களில் 55% வீதமானவை தமிழர்களின் கல்வெட்டுக்கள். அப்படியிருந்தாலும் கூட தமிழர்களின் நீண்ட வரலாற்றில் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் கல்வெட்டுக்களில்லை, அதற்கு நாம் கவிதைகள், காப்பியங்கள், சங்ககால நூல்களிலும் ஆதாரங்களைத் தேடுவதுண்டு. நம்பியாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திருவந்தாதி என்ற ஆதாரத்தை வைத்துக் கொண்டு, அப்படி ஒருவர் இருக்கவில்லை என்று பேசுவது பாரதியாரின் பாடல்களைக் கையில் வைத்துக்கொண்டு, பாரதியார் என்றொருவர் பிறக்கவேயில்லை என்பது போன்றது தான்.
பெரியபுராணம் 63 நாயன்மார்களின் வரலாற்றைக் கூறவும் அவர்களின் புகழைப் பாடவும் இயற்றப்பட்டதேயல்லாமல் ராச ராச சோழனின் புகழ்பாட இயற்றப்பட்டதல்ல. அதில் போய் ராச ராசனையும், நம்பியாண்டார் நம்பியையும் காட்டும் படி கேட்பது விதண்டாவாதம். சேக்கிழார் பாடியதிருத்தொண்டர் புராணம் அல்லது பெரிய புராணம், சுந்தரரின் திருத்தொண்டத்தொகையையும், நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதியையும் தழுவியது என்பது அறிஞர்களின் கருத்தாகும். தில்லைக்கு ராசராசனின் காலத்தில் சோழப் படைத்தளபதிகளால் கொடை அளித்தமைக்கும், ராசராசனின் முன்னோர்களே தில்லையின் ஆடவல்லானின் மீது ஆழ்ந்த காதல் கொண்டு திருப்பணி செய்தார்கள் என்பதற்கும் கல்வெட்டுச் சான்றுகளுண்டு என்பதை நான் எங்கேயோ படித்தது இன்னும் நினைவிலுண்டு. விரைவில் உங்களுக்குப் பதில் எழுதுவேன்.

அரை குறை ஆதாரங்களுடன், நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று அடம்பிடிக்கும் பழக்கம் எனக்குக் கிடையாது. ஆனால் உங்களின் கட்டுரைகள், பதிவுகளுக்குப் பின்னால் தமிழர்கள் மீதானதொரு காழ்ப்புணர்வும், ராச ராச சோழனைக் களங்கப்படுத்த வேண்டுமெனும் அவா உங்களுக்கிருப்பதையும்,. அதற்காக அரைகுறை ஆதாரங்களுடன் வரலாற்றைத் திரிப்பதையும் என்னால் உணர முடிகிறது.

இன்னும் சில நாட்களில் விடுமுறையில் உங்களுக்குப் பிடித்த 'ஸ்பானிஸ்' தீவுகளிலொன்றுக்குப் போகிறேன். வந்ததும் பதிலெழுதுகிறேன், சரியா? :-))
durai ilamurugu
தில்லைக்கு ராசராசனின் காலத்தில் சோழப் படைத்தளபதிகளால் கொடை அளித்தமைக்கும், ராசராசனின் முன்னோர்களே தில்லையின் ஆடவல்லானின் மீது ஆழ்ந்த காதல் கொண்டு திருப்பணி செய்தார்கள் என்பதற்கும் கல்வெட்டுச் சான்றுகளுண்டு என்பதை நான் எங்கேயோ படித்தது இன்னும் நினைவிலுண்டு நான் கேட்டதுராசராசனின் கொடை! நீங்கள் சொல்லுவது அவன் முன்னொற்களின் தளபதிகளின் கொடைய்ரண்டுக்கும் வேறூபாடு உண்டு விடுமுறையக் கொண்டாடிவிட்டு வாதம் செய்ய வருக!
prakash
வியாசன் அவர்கள் எழுதியதை நானும் வழிமொழிகிறேன் ... ராஜ ராஜன் காலம் வரை தேவரபாடல்களே பாட படாமல் இல்லை ஆனால் , ராஜ ராஜன் காலத்தில் தான் நம்பியாண்டார் நம்பிகள் அந்தபாடல்களையும் மற்றும் எஞ்சி இருந்த பாடல்களையும் திருமுறைகளாக தொகுத்தார் என்பதும் அதில் பதினோரு திருமுறைகளை ராஜ ராஜன் காலத்திலும் பனிரெண்டாவது திருமுறையை ராஜேந்திரன் காலத்திலும் தொகுத்தளித்தார் என்பதும் வரலாற்றாசிரியர் கூற்று தான் ...திருமுறை கண்ட சோழன் என்று தான் அவனுக்கு பட்டமே தவிர தேவாரம் கண்ட மன்னன் என்று இல்லை அதோடு ...இதற்க்கவாவது ஆதாரம் இருக்கிறது ...நீங்கள் சொல்லுவதற்கு ஆதாரமே இல்லை...
jegadheesh.M
In which base you are writting a article like this

do you have any proof

what is your personal vengens with raja raja the great
Guest
THE COLAS BY NILAKANAT SATRY VOL 2 PART 1 UNIVERSITY OF MADRAS 1937PUBLISHED BY OXFORD UNIVERSITY PRESS பக்கம்476
kindly go thro the pages in this book. every word in the article is based on evidence ? do you have any evidence that rarajan collected the thevaram songs except that umapathy siavacariyars single line ?
Guest
வேன்டும் என்ரே ஆதாரம் இல்லாமல் கூரியுள்ளார் இதில் கானபடும் எத்தனயோ விஷயஙல் ஆதாரமாக நிரூபிக்க பட்டுல்லது உஙளால் முடியிமா
Guest
தஞ்சை பெரிய கோவிலின் விமானத்தின் நிழல் கீழே விழும் மாலை நேரத்தில் சென்று பார்த்தால் கோவில் விமானத்தின் நிழல் கீழே விழுவதை எளிதில் காணலாம். ஆனாலும் தமிழன் இதை கண்டுபிடிப்பதற்கு ஆயிரம் வருடங்கள் ஆகி விட்டது. அதுவரை கோவில் கோபுரம் நிழல் கீழே விழாது என்ற மூடக் கருத்தையே கொண்டிருந்தான். இன்னும் பலரும் அதை நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
Please issue that photo
Guest
இவர் எந்த விததில் ராஜராஜ சோழனால் பாதிக்கப்பட்டார் என தெரியவில்லை. மொடா குடியர்கலான வட இந்திய மன்னர்கலை கொன்டடும் அலவு கூட நம் தமிழர்கலை தமிழன் கொன்டாடுவதில்லை. அதில் சேர்ந்தவர் இவர் போல
raj
கோயில் அடிமுதல் உள்ள கோபுர நிழல் தரையில் விழும். ஆனால் அந்தக் கோபுரத்தின் உச்சியில் இருக்கும் கலசத்தின் நிழல் தரையில் விழாது. தவறாக புரிந்து கொண்டு அதில் குறை கண்டு பேசுவது முறையல்ல. தமிழரின் வாழ்வில் குறைகண்டு நீங்கள் பெறப் போவது என்ன? மற்ற மன்னர்களைப் போல தனக்கென பெரும் அரண்மனைகள் இல்லாமல் இறைவனுக்கு பெரும் கோவில்களை நிறுவிய தமிழ் மன்னர்கள் உங்கள் கண்களுக்கு தவறானவர்களாக தெரிந்தால் என்ன செய்வது?
பாலா
நண்பரே உங்கள் பதிவுகளை நிறைய நபர்கள் படிக்க வேண்டும் என்றால் உண்மையான தகவல்களை தந்தால் சிறப்பு அதைவிட்டு இப்படி நம் நாட்டு அரசியல்வாதிகள் பொய்யான பிரச்சாரம் செய்து விளம்பரம் தேடிக்கொள்வதுபோல் விளம்பரம் தேடுவது அழகள்ள
rajarajacholan
Indhiya perarasaigalil, mudhan mudhalaga, kappal padai nadathi nallatchi purindhavar rajaraja cholan oruvare.avar kaalamdhan thamilargalin poarkaalam.varalaru theiyathavargal thaan avarai kurai soalvarkal.
chithamchandru
நல்ல விவாதம் ,welcome true
Guest
ராஜராஜன் எனது பாட்டன்.அவர் தான் தற்போது நமது மானத்தை காபாற்றீ கொண்டு இருக்கிறார்.அவரை விளம்பரவாதி என்பது அசிரியரின் வரலாற்றுத் தவறு.கோவிலின் நிழல் கிழே விலாது என்று ராஜராஜன் கூறவில்லை அது புரலி.அது கோவிலின் சுற்று சுவரில் தான் விழுகிறது.எனவே அசிரியர் வரலாற்றை ஒரு முறை கவனிக்க வேண்டும் என்று கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.