பகவத் கீதைக்கு ஏராளமான உரைகள் வெளி வந்துள்ளன. ஆயிரக்கணக்கான பக்கங்கள் அடங்கிய உரைநூல்களும் இதில் அடங்கும். கீதையின் சார்பாளர்கள் இந்த உரைநூல்களை லட்சக்கணக்கில் அச்சாக்கி இலவசங்கள் மூலம் பரப்பச் செய்கின்றனர். வெற்றியும் பெற்றுள்ளார்கள். மறுப்பதற்கில்லை. அமோக விளைச்சலும் உண்டு.
இந்நிலையில் தமிழில் தோன்றிய பக்தி இலக்கியங்களில் முதன்மை பங்கு வகிக்கும் தேவாரம், திருவாசகத்திற்கு உரைகள் எழுதப்படவில்லை. எழுத ஆட்கள் இல்லை என்பதால் இல்லை. இவைகளுக்கு உரைகள் எழுதக்கூடாது என்ற சட்டமே இருந்திருக்கிறது. இந்தச் சட்டங்களை அமுலாக்கியவர்கள் சைவ, வைணவ, பிராமணியப் புரோகிதர்கள் தான். தமிழ் மறைகளுக்கு உரை எழுதினால் அவற்றின் புனிதத் தன்மை கெட்டுவிடும் என்று மூடாக்கு போட்டு இருக்கும் ரகசியத் தன்மையை இந்த கட்டுரையில் எழுத இயலாது. அது வேறு தளத்தில் எழுதப்படவேண்டும்.
இந்த நூல்களுக்கு உரைகள் வெளிவந்திருந்தால், ஐந்தாம் வேதம் என்று போற்றப்படும் ‘பகவத்கீதை’ கேள்விக்கணைகளுக்கு தாங்க முடியாமல் கரைந்து போயிருக்கும். இப்படியான பூடகத்தன்மையோடு கீதையின் மெல்லிய இழைகள் கூட அறுபடாமல் காத்து வருவதில் இந்து மதத்திற்கு முழு பங்கு உண்டு. வெகுவாக ஒடுக்கப்பட்டுக்கிடக்கும் மக்களைத் திரட்டி வைத்து தங்களது மேலாதிக்கத்தில் தக்க வைத்து வரும் பிராமணிய புரோகிதர்கள் அரசாளும் தகுதி உடைய அறிவாளிகள் என்ற அடையாளத்திற்கு உட்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். இதனுள்ளே அவர்களின் சூட்சமங்கள் பொதிந்து கிடக்கின்றன.
வேதத்தை ஏற்றுக்கொண்ட அரசும் ஏற்றத்தாழ்வுள்ள வர்ணமும் ஒழுங்குப்படுத்தி வைத்திருக்கும் சூத்திர சாதியினுள் பிறந்த, வே.இந்திரசித்து சம°கிருதத்தை முறையாக பயின்றவர். சமஸ்கிருத பண்டிதர்களுடன் விவாதித்தவர். இன்றும் விவாதத்திற்கு தயாராக இருப்பவர். தமிழ் இலக்கியங்களிலும் பயிற்சி உடையவர் என்றும் அறியமுடிகிறது. அவர் ‘பகவத்கீதை ஒரு பார்வை’ என்ற ஆய்வை வெளி யிட்டுள்ளார். இந்நூல் வெளிவந்து மூன்று ஆண்டுகள் ஆயினும் பரவலாக அறியப்படவில்லை. இந்த ஆய்வினுள் பயணிக்கும்போது நமக்கு ஏராளமான தரவுகள் கிடைக்கின்றன.
இந்நூலுள் சொல்லப்பட்டுள்ள அனைத்துத் தகவல்களும் மாறுபட்டவை. இன்றைய காலகட்டத்தில் கவனத்துக்குரியவை. இந்து மதம் இந்தியாவின் பெரிய மதம் என்ற ஒரே காரணத்துக்காக அதற்குத் தனி மதிப்பும் முதன்மையும் அளிக்கப்படவேண்டும் எனும் ஒரு கோரிக்கையையே அரசியல் கோரிக்கையாக மக்கள் முன்வைத்து அதிகாரத்தை வென்றெடுக்க முயலும் அரசியல் சக்திகளின் உள்நோக்கத்தைத் தோலுரித்துக் காட்ட இந்நூல் பேரளவில் பயன்படும்.
இந்நூல் பத்தொன்பது உட்தலைப்புகளைக் கொண்டுள்ளது. அதில் ‘தமிழ் வைணவ நெறியும் கீதையும்’ எனும் தலைப்புள் காணப்படும் தகவல்கள் உற்று நோக்கத்தக்கவை. வைணவத்தின் பன்னிரு ஆழ்வார் களும் இயற்றிய எந்த ஒரு நூலிலும் கிருஷ்ணன் அர்ச்சுணனுக்கு ஓதியதாகச் சொல்லப்படும் பகவத் கீதை ஒரு இடத்தில்கூட குறிப்பிடப்படவில்லை என்று சுட்டிக் காட்டியுள்ளார். பன்னிரு ஆழ்வார்களும் கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கும் கி.பி. பத்தாம் நூற்றாண்டுக் கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘ஓம் நமோ நாராயணாய’ எனும் எட்டெழுத்து மந்திரம் வைணவர்களுக்கு உயிர்மூச்சானது. அதைக்கூறாத எதையும் வைணவச் சார்பானதாக வைணவர்கள் கருதுவதில்லை. தொல் காப்பியர் காலமுதலே மாலியம் என்று சொல்லப்படும் வைணவம் தமிழகத்தில் நிலவி வருவதைத் தொல் காப்பிய வரிகளை எடுத்துக்காட்டிக் கூறியுள்ளார்.
‘திருமால் சீர் கேளாத செவியென்ன செவியே’,
‘கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே’,
‘நாராயணா எண்ணா நா என்ன நாவே’
என்னும் சிலப்பதிகார வரிகளை எடுத்தாண்டு எட்டெழுத்து மந்திரம் சிலப்பதிகார காலத்திலேயே தமிழ்மக்களிடம் வேர்கொண்டுள்ளதை நிறுவியுள்ளார். அவரே பிற்காலத்திலே எழுதப்பட்ட கம்பராமாயணத்துள் எட்டெழுத்து மந்திரம் வரவில்லை என்பதால் வைணவர்கள் கம்பராமாயணத்தை வைணவநூலாக ஏற்க மறுத்ததால் கம்பர் பிறகு இரணியவதத்தைக் கம்பராமாயணத்துள் நுழைத்து அதனுள் எட்டெழுத்து மந்திரத்தை போதித்துள்ளார் என்று காட்டியுள்ளார். இதனால் வைணவர்கள் எட்டெழுத்து மந்திரத்தை எத்துணை உயிர் மூச்சாகக் கருதினர் என்பதை விளக்கியுள்ளார்.
பகவத்கீதையுள் கடவுள் நாற்பத்தைந்து பெயர்களால் அழைக்கப்படுவதைக் குறிப்பிட்டு அவற்றுள் நாராயணா என்னும் பெயர் குறிப்பிடப்படவே இல்லை என்று காட்டியுள்ளார். (பக்கம் 93) ஆகவே கீதை வைணவப் பெரியார்கள் வணங்கும் பகவான் கிருஷ்ணன் அல்லது கண்ணனால் அர்ச்சுணனுக்கு ஓதப்பட்டிருந்திருக்குமானால் உறுதியாக அதனுள் நாராயணா எனும் பெயர் வந்திருக்கும். வரவில்லை என்பதால் வேறு யாரோ ஒரு கண்ணனால் அல்லது கிருஷ்ணனால் கீதை சொல்லப்பட்டிருக்க வேண்டும் எனத் தெளிவான முடிவிற்கு வருகிறார். இதை மறுக்க முடியாது. பகவான் கண்ணனை மறுப்பது நூலாசிரியர் நோக்கமன்று. பிராமணியத்தை மறுப்பதும் சனாதனத்தை மறுப்பதுமேயாகும். ஆகவே, வைணவ நூல்களை வேதசாரத்தை எதிரொளிப்பவை என்று இட்டுக்கட்டி எழுதும் எழுத்துக்களைக் கடுமையாகச் சாடுகிறார்.
அடுத்துக் கவனத்தில் கொள்ளவேண்டியது பன்னிரண்டாவது உட்தலைப்பாகும். இதனுள் கீதை பத்துக் குற்றங்களும் நிரம்பிய நூல் என்று நிறுவியுள்ளதாகும். பவனந்தி முனிவரின் நன்னூல் நூற்பாவை மேற்கோள் காட்டி நிறுவியுள்ளார். ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும் வேறுவழியில்லை.
‘கீதை காட்டும் இந்துமதக்கடவுள்’, ‘இந்துமதக் கடவுள் இரக்கமற்றவன் அறநெறி அறியாதவன்’, ‘இந்துமதம் காட்டும் கடவுள் - கருணையற்றவன்’, ‘இந்துமதக் கடவுள் குறுகிய மனம் படைத்தவன்’, ‘இந்துமதக் கடவுள் - சொல்வன்மையற்றவன்’, என்னும் தலைப்புகளில் மிகச்சரியாக ஆய்வை மேற்கொண்டு உள்ளார் என்பது புலனாகிறது. இவற்றைப் படிப் போர்க்கு இந்துமதக் கொடுங்கோன்மை கடவுளிடமிருந்தே தொடங்குகிறது என்பது புலனாகும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
‘ஆத்மாவைப்பற்றி - பகவத்கீதை’ எனும் தலைப்புள் பகவத்கீதையுள் ஆத்மக்கோட்பாடு குழப்பப்பட்டுள் ளதை நன்கு எடுத்துக்காட்டியுள்ளார். மேலும் ஆன்மா இல்லை. அழிக்கப்படுவதும் இல்லை. உடல்கள் மட்டுமே அழிகின்றன அல்லது அழிக்கப்படுகின்றன எனும் கோட்பாடு நன்றாகக் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இந்திய விடுதலைப்போரில் மதன்லால் திங்க்ரா முதல் காந்திவரை ஆத்மா அழியாது உடல் தான் அழியும் எனும் கோட்பாடு மதவாதிக்கும், வினை மறவர்க்கும், அஹிம்சாவாதிக்கும் அச்சத்தை அகற்ற உதவிய கோட்பாடு என்பதில் ஐயமில்லை என்றாலும் தற்காலக் குற்றவியல் சட்டம், தண்டனைச் சட்டம் ஆகியவை ஆன்மா அழியாது உடல்தான் அழியும் என்பதால் ஒரு கொலையை கொலையன்று என்று ஒப்புக்கொள்ளுமா? ஒப்புக்கொள்ளா. ஆனால் பிராமணத்தியோடு உறவுகொண்ட சூத்திரன் கொல்லப்படவேண்டும் என்பதும் அது கொலையன்று என்பதும் மனுநீதி என்பதை மறந்துவிடுவதற்கில்லை. ஆகவே மனுநீதியை மக்கள் நீதியாக்க உயர்த்திப் பிடிக்கப்பட்ட கீதையின் ஆன்மக்கோட்பாட்டின் உடல்தான் அழியும்; ஆன்மா அழியாது எனும் பகுதி கொலையை நியாயப்படுத்த உதவுவதாகும் என்பதை உணரவேண்டும்.
‘மரணமில்லா பெருவாழ்வு குறித்து இந்துமதம்’ எனும் தலைப்பில் மனிதன் இறக்கும் நேரமே முதன்மையானது என்று குறிக்கப்பட்டுள்ளது. மனிதன் இறக்கும் நேரம் நல்ல நேரமாக இருந்தால் எவ்வளவு பெரிய அயோக்கியனும் பிறவிப்பெருங்கடல் நீந்தியவனாகிப் பேரின்பம் அடைவான். கெட்ட நேரத்தில் இறப்பவன் எவ்வளவுதான் நல்லவனாக இருந்தாலும் அவன் பிறவி அறுபடாது; மறுபிறவி எடுக்கவேண்டியதாகிவிடும் என்று கிருஷ்ணன் வாய்மொழியாகப் பகவத்கீதையில் ஒலிக்கும்போது பிராமணர்களின் புரோகிதத்துக்கு முதன்மை வந்து விடுகிறது. எண்குணத்தான் தாளை வணங்காதத் தலை என்று வள்ளுவர் குறிப்பிடுவதில் வரும் எட்டு குணங் களும் இந்நூலுள் 63ஆம் பக்கத்தில் (கீதை ஓஐஏ: 24-25) குறிப்பிடப்பட்டுள்ளன. இவை பௌத்தக் கோட்பாடு. கீதையால் உள்வாங்கப்பட்டுள்ளதற்கு எடுத்துக் காட்டாகும். அதற்கு இந்நூலாசிரியர் கூறியுள்ள விளக்கம் பொருந்துவதாய் இல்லை. எப்படி இருப் பினும் கீதை புரோகிதத்துக்கு வக்காலத்து வாங்குவதன் மூலம் பிராமணியத்தை ஊக்குவிக்கிறது என்பது நன்கு உணர்த்தப்பட்டுள்ளது.
இனி ஐந்தாவது வேதம் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள மகாபாரதம் கீதை இடம் பெறாதிருந்தால் அப்பெயர் பெற்றிருக்க முடியுமா? முடியாது என்றே தோன்றுகிறது. இந்தியாவில் சொத்தும், சாதியும் கூடப்பிறந்தவை. அரசும் ஏற்றத்தாழ்வுள்ள வர்ணமும் உடன் பிறந்தவை. அதனால்தான் முதலாளித்துவ சனநாயக காலகட்ட அரசு கூட வர்ணத்துக்கு மாறாக வகுப்பை உயர்த்திப்பிடிக்க வேண்டியதாகிவிட்டது. ஆர்.எஸ்.எஸ். வர்ணத்தை மறுவுயிர்ப்பு செய்ய எண்ணினாலும் பாரதீய ஜனதா கட்சி வகுப்புகளை உயர்த்திப்பிடிப்பதன் நோக்கம் இதில்தான் அடங்கியுள்ளது.
மகாபாரதப்போர் குலக்குழு (சாதி) ஆட்சிக்கு மாறாக ஒரு தனி ஆள் ஆட்சிக்கு வித்திட்டுச் சொத்து வளர்ச்சிக்கும் சமூக வளர்ச்சிக்கும் வித்திட்ட போராகும். இதைத் தொடர்ந்தே பேரரசுகள் உருவாகி வளர்ந்தன. சிற்றரசுகளை ஒழித்துக்கட்டி மகதப்பேரரசு உருவானதும், பாரி போன்ற இனக்குழுத் தலைவர்களை ஒழித்துக்கட்டி சேர, சோழ, பாண்டியர்கள் எனும் முடிமன்னர்கள் உருவானதும் இதன்பிறகே. வடக்கே சமண பௌத்த மதங்கள் தலையெடுத்து பௌத்தம் அரச மதமானதும் தெற்கே களப்பிரர் ஆட்சியைப் பிடித்து பிரம்மதேயம், சதுர்வேதி மங்கலம் முதலான வற்றை அழித்து மக்கள் சொத்தாக்கியதும் நிகழ்ந்து முடிந்தபின் பல நூற்றாண்டுகள் கழித்துப் பக்தி இயக்கங்கள் தலையெடுக்கின்றன.
அவற்றால் பௌத்தம் பின்னுக்குத் தள்ளப்பட்டு மீண்டும் பிராமணியம் அரியணை ஏறுகிறது. இவ்வாறு மீண்டும் பிராமணியம் அரியணை ஏற முயற்சி செய்த காலத்தில் அல்லது அரியணை ஏறிய கொஞ்ச காலத்திலேயே கீதை எழுதப்பட்டிருக்க வேண்டும். இதற்கான ஆதாரம் ஒன்றை கீதையிலிருந்தே காட்டியுள்ளார். ‘சாதித் தொழிலை செய் கூலியை எதிர்பாராதே’ எனும் தலைப்பில் 103ஆம் பக்கத்தில் உள்ளது.
“இந்த அழிவற்ற யோகத்தை (வழியை) நான் முன்னர் வி°வானுக்குப் (சூரியனுக்கு) பகர்ந்தேன். வி°வான் மனுவுக்குச் சொன்னான். மனு இக்ஷ்வாகு வுக்குச் சொன்னான்” (பகவத்கீதை IV: 1)
“இவ்வாறு பரம்பரையாகக் கிடைத்த இதனை ராஜரிஷிகள் உணர்ந்திருந்தனர். அந்தயோகம் கால மிகுதியால் அழிந்தது”. (பகவத்கீதை IV: 2)
“அந்தப் பழைய யோகத்தையே இன்று நான் உனக்குச் சொன்னேன். இது மேலான மறையாகும்.” (பகவத்கீதை IV: 3)
இதில்வரும் மேலான மறையும் யோகமும் வர்ண முறையையும் வர்ணத்துக்குரிய தொழிலைச் செய்யும் படி வற்புறுத்துவதுமேயாகும்.
‘சாதுர் வர்ணயம் மயா சிருஷ்டம்’ (பகவத் கீதை IV: 13) என்பது ‘நான்கு வர்ணங்கள் என்னால் படைக்கப்பட்டன’ என்று கீதை ஆசிரியன் பகவான் கிருஷ்ணன் கூறுவதாக அமைந்தது.
‘அந்தயோகம் காலமிகுதியால் அழிந்தது’ என்று ‘அந்தப் பழைய யோகத்தையே இன்று நான் உனக்குச் சொன்னேன்’ என்று சொல்லப்பட்டதால் நால் வர்ணமும் குலத்தொழிலும் அழிந்துபோனதால் அவற்றை மீண்டும் உருவாக்க வேண்டி சொல்லப் பட்டது என்றே பொருள்படுகிறது. பௌத்தத்தாலும் களப்பிரராலும் அழிக்கப்பட்டதாகச் சொல்லப்பட வில்லை. காலமிகுதியால் அழிந்தது என்று சொல்லப் பட்டுள்ளது என்றாலும் உண்மை அதுவன்று என்பதை வரலாறு நமக்கு எடுத்துக்காட்டுகிறது. பௌத்தமும், களப்பிரரரும் சிதைத்தனர்; அழித்தனர் என்பதே சரியாக இருக்கும். எனவே கீதை, மகாபாரதம் தோன்றி நீண்ட நெடுங்காலம் கடந்தே எழுதிச் சேர்க்கப் பட்டிருந்திருக்க முடியும்.
‘ஆராய்ச்சியாளர் பார்வையில் கீதை’ எனும் தலைப்பினுள் ஜோசப் இடமருகு குறிப்பிடும் அறிஞர்களின் மேற்கோள்கள் இடம்பெற்றுள்ளன என்றாலும் நூலாசிரியர் பகவத்கீதை இறைவனால் படைக்கப்பட்டது என்பது அறிவுக்குப் பொருத்தமானதாக இல்லை என்றும் பகவத்கீதையில் காணப்படும் 18 அதிகாரங்களும் ஒரே புலவனால் எழுதப்பட்டிருக்கலாம் என்பதற்கு இடமில்லை. ஏனெனில் முரண்பட்ட கருத்துக்கள் மிகுதியும் காணப்படுகின்றன. பல்வேறு காலங்களில் வாழ்ந்த வெவ்வேறு புலவர்களின் பாடல் களின் தொகுப்புத்தான் பகவத்கீதை என்று எழுதியுள்ளார்.
ஆக, பகவத்கீதை பகவான் என்று அறியப்பட்ட கண்ணனால் செய்யப்பட்டது அன்று பெயர் தெரியாத யாரோ ஒரு புலவரால் அல்லது வெவ்வேறு புலவர் களால் வெவ்வேறு காலங்களில் செய்யப்பட்டுச் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். பகவத்கீதை இலக்கணப்படி ஓர் ஒழுங்கான நூலன்று என்று தெளிவாக்கி விடுகிறார்.
பிராமணியத்தை மிக நுட்பமாக அம்பலப்படுத்துகிறார். வேதம் சிறுதெய்வ வழிபாட்டினை உயர்த்திப் பிடிப்பது என்பதை மொழி நூலறிஞர் ஞா. தேவ நேயப்பாவாணர் அவர்கள் கூற்றை மேற்கோளாகக் காட்டி நிறுவியுள்ளார். எனவே, வேதத்தின் சாரமாக உபநிஷதங்களைக் காட்டுவது பித்தலாட்டம் என்று கூறியுள்ளார். ‘உபநிஷதங்களும் கீதையும் சேர்ந்து பிரம்ம சூத்திரத்தில் அடக்கம். பிரம்மசூத்திரத்தில் வேதவியாசர் சுருதி என்று குறிப்பிடும் இடங்களில் உபநிஷதங்களையும் °மிருதி என்று குறிப்பிடும் இடங்களில் அநேகமாய் பகவத்கீதையையுமே கருத்தில் வைத்து பேசுகிறார்’ என்று (பக்கம் 27) ஒரு மேற்கோளை காட்டுவதன் மூலம் பிரம்மசூத்திரத்திற்கு மூலமே உபநிஷதங்களும் கீதையும் என்றாகி விடுகிறது. இவை மூன்றுமே இந்துக்களுக்கு வேதநூல்களாகும். இவற்றுக்கான ஒட்டுமொத்த பெயரே ‘பிர°தான திரயம்’ என்றெல்லாம் சொல்லப்பட்டுள்ளது. இதில் வராத இன்றியமையாத செய்தி ஒன்று உண்டு.
ஸ்ருதி என்பது ஒரு வழிபாட்டுமுறையாக நெருப்பில் ஆகுதி செய்து வழிபடும் முறை. ஆகமம் உருவவழிபாட்டை வலியுறுத்துவது ஸ்ருதி என்பது ஆரிய வழிபாட்டு முறை. ஆகமம் என்பது இந்தியத் தொல்குடி மக்களுக்கு உரியது. இரண்டும் இணைந்தே வேதாகமம் ஆனது. ஆரியரும் இந்தியத் தொல்குடி மக்களும் இணைந்ததன் பண்பாட்டு வெளிப்பாடே வேதாகமம். ஆனால் பிராமணியம் ஆகமத்தைக் கைப்பற்றிக்கொள்ள வேதமே அனைத்திற்கும் மூலம் என்று கதைகட்டுகிறது. அதையே பிராமணர்கள் ஆரியர் வழித்தோன்றி யவர்கள் என்று கூறவும் செய்கிறது. உண்மை மறைக்கப்படுகிறது. ஆனால், உபநிஷதங்கள் சத்திரியர் களால் உருவாக்கப்பட்டவை. அதனாலேயே அரசு உருவாக்கத்தில் யாகங்களுக்கு முதன்மை அளிக்கப்பட்டது. அதனால் தான் வேதகாலத்திற்குப் பிறகு ஸ்ருதி வழிபாட்டுமுறை முதன்மைப்பட்டது. ஸ்ருதி வழி பாட்டு முறைக்கும், வேதகால வழிபாட்டு முறைக்கு மான முட்டல் மோதலை ரிக்வேதத்தில் வரும் மீமாம் சகனின் பாடல்கள் மூலம் அறியலாம்.
ஸ்மிருதியாகக் கருதப்படும் பகவத்கீதை மகாபாரதத்தில் இணைக்கப்பட்டதால்தான் மகாபாரதம் ஐந்தாவது வேதம் என அழைக்கப்படும் நிலையைப் பெற்றது. இது திட்டமிடப்பட்ட ஓர் உருவாக்கமே என்பதில் ஐயமில்லை. அது பிராமணர்களாலும் சத்ரியர்களாலும்தான் நிகழ்ந்திருக்கமுடியும். ஆகவே, இந்துமதத்தைப் பிராமண வர்ணத்தில் மதம் என்று மட்டும் கருதமுடியாது. இன்றைய நிலையில் பிராமணர் மற்றும் ஆளும் வர்க்கமதமாகத்தான் அதைப் பார்க்க முடியும். பிராமணியத்தை ஏற்காதவர்களையும் கடவுள் நம்பிக்கை இல்லாவர்களையும் கூட இந்துக்கள் என்று கணக்கெடுக்கும் மோசடி நடந்து வருகிறது.
‘கீதை நூலாசிரியர் நெஞ்சம்’ (பக்கம் 95) எனும் 12வது உள்தலைப்புத் தேவையில்லாதது மட்டும் இல்லை, ‘ஆராய்ச்சியாளர்களின் பார்வையில் கீதை’ (பக்கம் 33) எனும் 4வது உட்தலைப்புக்கு மாறானது. இந்தத்தலைப்புத் தேவைதான் என்று நூலாசிரியர் கருதுவாராயின் அங்கதமாகச் சொல்லப்படும் கருத்துக் கள் கொடுங்கோன்மையை வளர்க்கவும் பயன்படுத்த முடியும் என்றாகிவிடும். அங்கதத்தின் தேவை அடிப் பட்டுப்போகும்.
மேலும் அங்கதம் என்பது புகழ்வதுபோல் இகழ்வதாகும். கீதையின் தலைவன் தன்னைப்பற்றித் தானே கூறுவதாகும். தன்னைத் தானே புகழ்ந்து கொள்வதையும் மிகைப்படுத்திக் கூறிக்கொள்வதையும் தறுக்குரை என்றுதான் கூறவேண்டுமே தவிர அங்கத மென்று கூறமுடியாது. ஐம்புலன்களால் உணர முடியாத சாதாரண அறிவாலும் உணரமுடியாத ஞானநிலையிலேயே அறியமுடியும், உணர முடியும் என்று சொல்லப்படுகிற கடவுள் தன்னைப்பற்றிக் கூறிக்கொள்ளாவிட்டால் ஞானிகள் கூற்றை மட்டுமே நம்பவேண்டியிருக்கும். கடவுளே அர்ச்சுணனுக்குக் கூறுவதால் எளியமக்களுக்கு நம்புவதைத் தவிர வேறுவழியில்லை. அது தறுக்குரையாகவும் தோன்றாது.
ஆகவே, கீதையை எழுதியவர் ஒருவரோ, பலரோ மக்களை ஏமாற்றும் நோக்கில் நயவஞ்சக உணர்வோடு கடவுளே கூறுவதுபோல் எழுதிச் சேர்த்துள்ளனர் என்பதே உண்மை. எனவே 12வது உள்தலைப்பு இந்த நூலின் உள்ளடக்கத்திலிருந்து மாறுபட்டதாக அமைந்துள்ளதை உணர்ந்து நூலாசிரியர் திரும்பப் பெற்றுக்கொண்டால் குழப்பமற்ற ஒரு நல்ல ஆய்வு நூலாகவே விளங்கும் என்பதில் ஐயமில்லை.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
சஞ்சாரம் - மார்ச் 2008
ஐந்தாவது வேதமும், புரோகிதக் கூத்தும்
- விவரங்கள்
- கோவை சுந்தரபெருமாள் - சி.அறிவுறுவோன்
- பிரிவு: சஞ்சாரம் - மார்ச் 2008